இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர மாநிலமான ஒடிசாவில் கிடைக்கின்ற பாக்சைட் கனிமவளத்தை கொள்ளையடிப்பதற்கு, இந்தியாவின் ஆறாவது பணக்காரனான ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லா கொக்கரித்துக் கொண்டுள்ளார்.

ஹிண்டால்கோவும்
அலுமினியக் கொள்ளையும்!

“நீங்கள் கடைசி மனிதனாக நின்று மதிப்பு கூட்டும் வரை நீங்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பீர்கள். கடைசியில் இருக்கும் மனிதனுக்கு முதல் மனிதனாக முன்னோக்கி வளர சிறந்த வாய்ப்பு உள்ளது” என்று குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் முழங்குகிறது.

உலகம் முழுவதும் 50 இடங்களில் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளையும், பத்து நாடுகளில் 40 ஆயிரம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, கசக்கி பிழிகின்ற கார்ப்பரேட் நிறுவனமான ஹிண்டால்கோவின் உரிமையாளரான குமாரமங்கலம் பிர்லா உலகில் 109 ஆவது பணக்காரனாகவும், இந்திய தேசங்கடந்த தரகுமுதலாளிகளில் 16.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த முதலாளி தனது சொத்துக்களை குவித்துக் கொள்வதற்கு பொருத்தமான நாட்டை மறுகாலனியாக்கும் பொருளாதாரக் கொள்கையை, கார்ப்பரேட் பாசிசத்தின் வழியாக இந்திய மக்கள் மீது ஏறி தாக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக காடுகள், மலைகளில் வசிக்கின்ற பழங்குடி மக்களை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து துரத்தி அடிக்கும் கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கை, ஒடிசா மாநிலத்தில் கோராபுட் மாவட்டத்தில் மாலி பார்பத் மலைகளில் உள்ள கொதாவா, பர்ஜா மற்றும் டோங்ரியா, கோண்டு போன்ற பழங்குடிகள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. ஒடிசாவின் மாலி பார்பத் மக்கள் தற்போது இந்த வெறியாட்டத்திற்கு இலக்காகி உள்ளனர்..

இந்தியாவில் ‘மைனிங் ஜெயண்ட்’ என்று அழைக்கப்படும் ஹிண்டால்கோ நிறுவனம் மாலி பார்பத் மக்களிடமிருந்து 268.1 ஹெக்டர் நிலத்தை கைப்பற்றுவதற்கு இரண்டு தசாப்தங்களாக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதற்கு எதிராக பழங்குடி மக்கள் சார்பில் ‘சுரக்க்ஷா சமீதி’ என்ற அமைப்பின் கீழ் திரண்டு போராடி வருகிறார்கள்.

வேதாந்தாவிற்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள்

காங்கிரஸ் ஆட்சியின் போது நியாம்கிரி மலையை கொள்ளையடிப்பதற்கு, முயற்சித்த வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட்-கனிம வள கொள்ளைக்காக, அதற்கு தடையாக உள்ள மாவோயிஸ்டுகள் மீது “ஆபரேசன் கீரீன்ஹண்ட்” என்ற பெயருடன் தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல, நியாம்கிரி மலையை பாதுகாத்து வந்த பழங்குடி மக்களை எவ்வாறு ராணுவ ஒடுக்குமுறையின் கீழ் மிரட்டி பணிய வைத்தார்களோ, அதுபோல மாலி பார்பத் மக்களை வெளியேற்றுவதற்கு பிர்லா குழுமத்தின் அடியாள் படையாக மோடியின் இராணுவம் தனது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்: இரண்டு மகன்கள், இரண்டு நீதி கட்டமைப்புகள். இவை இரண்டும் விடுக்கும் ஒரே ஒரு செய்தி: பணிந்து போ.”

மக்கள் தங்கள் கோரிக்கையாக முன் வைக்கின்ற கிராம சபையை கூட்டுவதற்கு கூட இந்த பாசிச பயங்கரவாத அமைப்பு தயாராக இல்லை. 2003 முதல் இந்த சுரங்கத்தை துவங்கி கொள்ளையடிப்பதற்கு முயற்சித்தாலும், 2006 ஆம் ஆண்டில்தான் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனம் இந்த மலையை உடைத்து கனிமங்களை கொள்ளையடிப்பதற்கு அனுமதி பெற்றது. ஆனால் மக்களின் போராட்டத்தால் அனுமதியை அமுலாக்க முடியாத நிலையில், சட்டவிரோதமாக சுரங்கங்களை துவக்குவதற்கு போலியான முறையில், இராணுவத்தின் துப்பாக்கி முனையில் இரண்டு முறை கிராம சபைகள் கூட்டப்பட்டது. ஆனால் இந்த போலி கிராம சபை தீர்மானத்தை வைத்துக் கொண்டு மக்கள் ஆதரவுடன் தான் இந்த சுரங்க அகழ்வு நடப்பதாக பித்தலாட்டத்தை புரிந்து வருகின்றனர்.

பாக்சைட் தாதுவும்,
கார்ப்பரேட் பாசிசமும்!

இந்தியா பாக்சைட் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்த பாக்சைட் கனிமத்திலிருந்து மின்னியல் பகுப்பு மூலம் தயாரிக்கப்படும் அலுமினியமானது, மின்சார பொருட்கள், மின்சார ஒயர்கள், வீட்டு உபயோக பாத்திரங்கள், விமான கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு உதவுகின்றது. இந்த அலுமினிய தாதுப் பொருளான பாக்சைட் உலகில் வெப்பமண்டல நாடுகளில் இருந்து கார்ப்பரேட்டுகளால் அகழ்ந்து எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் பாக்சைட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ என்ற கார்ப்பரேட் நிறுவனம், 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட பகாசுர கார்ப்பரேட் நிறுவனமாகும். 27 குத்தகை சுரங்கங்களின் மூலமாகவும், நேரடியான சுரங்கங்களின் மூலமாகவும் 1940 முதல் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் மெட்ரிக் டன் அலுமினிய உற்பத்தி செய்து லாப வேட்டையாடி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 9மலைகள் மட்டும் இன்றி ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பாக்சைட் தாதுவை அகழ்ந்து எடுத்து இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்து பெரும் பணக்காரராக உருவாகியுள்ள குமாரமங்கலம் பிர்லா, பழங்குடி மக்களின் மீது தனது கார்ப்பரேட் பாசிசத்தை கொண்டு வெறியாட்டம் நடத்தி வருகிறார்.

கார்ப்பரேட்டுகளின் வாடிக்கையான பங்கு சந்தை சூதாட்டத்தை கொண்டு தனது மூலதனத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது ஹிண்டால்கோ. 2022-23 காலத்தில் மேலும் 700 கோடி “மாற்றிக் கொள்ள முடியாத டிவெஞ்சர்ஸ்” (NCD) மூலமாக பங்குகளை வெளியிட்டு மூலதனத்தை திரட்டி வருகிறது. அதாவது கையில் இருந்து காசு போடாமல் மக்கள் மத்தியில் இருந்து மூலதனத்தை திரட்டும் நிதி மூலதன மோசடித்தனத்தையும் சேர்த்தே செய்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களை அணிதிரட்டி போராடிவரும் ‘சுரக்க்ஷா சமீதி’ அமைப்பின் 28 முன்னணியாளர்களை சிறையில் அடைத்தும், போராடுவதற்கு முன்வருகின்ற பிற சமூக செயல்பாட்டாளர்கள் மீது மாவோயிஸ்டுகள், தேசவிரோதிகள் என்று பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அடக்கி ஒடுக்குவதற்கும், கார்ப்பரேட் பாசிசம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

நாடு மறுகாலனி!
பாசிசமே அதன் படையணி!

1990-களில் கொண்டுவரப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுவிடும் என்று ஆளும் வர்க்க ஒநாய்கள் ஊளையிட்டனர். அதன் ஆதரவாளர்களான அரசியல் கட்சிகள், ஊடக கழைக்கூத்தாடிகள் கூச்சலிட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் வேகமாக அமல்படுத்த விடவில்லை என்பதால், காங்கிரசின் பிரதமரான மன்மோகன் சிங் ஒரு ‘அண்டர் பெர்ஃபாமர்’ என்று அவரை தூக்கி அடித்த கார்ப்பரேட்டுகள், தங்களது விசுவாச – ஏவல் நாய்களான ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்த மோடியை பிரதமர் ஆக்கியது. 2014 முதல் கார்ப்பரேட்டுகளின் கனிம வளக் கொள்ளை நாட்டை படு வேகமாக சூறையாடிக் கொண்டிருக்கிறது. இயற்கை வளங்களை துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது.

‘வளர்ச்சி, முன்னேற்றம்’ என்ற போர்வையின் கீழ் ஏகாதிபத்திய நிதி மூலதன கொள்ளைக்கு நாட்டை பலி கொடுக்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், மோடி ஆட்சியில் பாசிச பயங்கரவாத முறையில் மக்களின் மீது, குறிப்பாக கனிம வளங்களை பாதுகாத்து நிற்கின்ற பழங்குடிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மீது பாசிச அடக்கு முறையை ஏவுவதன் மூலம் தனது எஜமானர்களின் கொள்ளைக்கு சேவை செய்கின்றனர்..

ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் லாப வேட்டைக்கு இந்தியாவை பலி கொடுப்பதற்கு எதிராக மண்ணையும், காட்டையும், மலையையும் பாதுகாத்து நிற்கின்ற மாலி பார்பத் பழங்குடி மக்கள் போராட்டத்துடன் நாமும் ஒன்றிணைவோம். கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்கின்ற மகத்தான தேசபக்த விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நிற்போம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here