ந்தியாவில் விவசாய உற்பத்தியின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) வருகின்ற வருமானம் கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிவிட்டதாக ’ஆய்வாளர்கள்’ சிலர் கருதுகின்றனர். அது தனியே விவாதிக்கப்பட வேண்டிய விடயம் தான்.

ஆனால் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு செலுத்துகின்ற துறை எது என்று கேள்வி எழும்புகிறது. அதற்கு சேவை துறையின் மூலம் தான் இந்தியாவின் 55 சதவீத பொருளாதார கட்டுப்படுத்தப்படுகிறது என்று பதிலளிக்கப்படுகிறது.

சேவைத் துறை என்றால் என்ன? வழக்கமாக அனைவரும் புரிந்து வைத்திருக்கின்ற வகையில் தபால், தந்தி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளிட்ட சேவைத்துறை என்பது தான். ஆனால் ஏகாதிபத்திய நிதி மூலதனமும், நிதியாதிக்க கும்பல்களும் சேவை என்பதற்கு புதிய வரையறுப்பை முன்வைத்து சில தசாப்தங்கள் ஆகின்றது. ’மனித குலத்திற்கு எவையெல்லாம் தேவையோ, அவற்றை செய்து கொடுக்கின்ற வேலை தான் சேவை’ என்று புதிய வரையறையை முன் வைத்துள்ளனர்.

இந்தியாவில் இந்த சேவைத் துறையில் ஒன்றாக தற்போது அதிகரித்து வரும் GIG (God is Good. Get in Gear. Growing in Grace) பொருளாதாரமும், GIG Workers என்று அழைக்கப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

இந்த துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பற்றி துல்லியமான தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை என்பது வெட்கக்கேடானது என்ற போதிலும், ஒரு தகவலின் படி 15 மில்லியன் தொழிலாளர்கள் இந்தியாவில் மட்டும் கிக் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்து 50 மில்லியன் தொழிலாளர்கள் உள்ள மிகப்பெரிய துறையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

’முதலாளிகள் அற்ற உலகம்’ என்று எண்பதுகளில் கலைமகள் சபா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கும்பல் ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிந்தது. அதேபோல ஏகாதிபத்திய முதலாளித்துவ காலகட்டத்தில் ’முதலாளிகள் அற்ற உலகம்’ என்ற பெயரில் அல்கரிதங்களால் இயக்கப்படும் இது போன்ற தொழில்கள் பல்லாயிரம் கோடி வழங்குகின்ற முக்கியமான துறையாக மாறியுள்ளது.

இந்தியாவில் உள்ள உணவு வாங்கி சப்ளை செய்கின்ற நிறுவனங்களான ஸ்விக்கி, சொமட்டோ போன்றவை ஆண்டுக்கு 455 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இது போன்ற சேவை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்ல இது போன்ற நிறுவனங்கள், ”இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இரவு நேர உணவை நாங்கள்தான் கட்டுப்படுத்துவோம்” என்று பகிரங்கமாக அறிவித்து செயல்படுகின்றனர்.

அப்படி என்றால் என்ன விளக்கம்? ”வீட்டிலேயே அமர்ந்து கொண்டு இரவு உணவை தயாரித்து உண்பதற்கு பதிலாக இது போன்ற நிறுவனங்களின் ஆப் மூலம் உணவை ஆர்டர் செய்து உண்கின்றவர்களில் எண்ணிக்கை பல கோடி ஆகப் போகிறது என்பதுதான் இதன் பொருளாகும்.

படிக்க:

♦ முகம் காட்டாத முதலாளிகளின் கொடூர சுரண்டல் வடிவமே கிக் பொருளாதாரம்!

♦ சமூக பாதுகாப்பற்ற கிக் தொழிலாளர் முறை: வளர்ந்து வரும் பேரபாயம்!

காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கடுமையாக வேலையில் ஈடுபடுகின்ற மளிகை கடை தொழிலாளர்கள், ஷாப்பிங் மால்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள், நிதி நிறுவனங்கள், ஹோட்டல்கள், துணிக்கடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள் போன்ற பல்வேறு வகையில் நிரந்தரமான வேலையின்றி தினம் ஒரு வேலை செய்து அல்லது வாரத்திற்கு ஒரு வேலை என்ற அளவில் பல்வேறு தொழில்களின் மூலம் வாழ்க்கை நடத்துகின்ற அரை பாட்டாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள், ஊடக, திரைப்பட தொழிலாளர்கள் போன்ற பிரிவினரும் தமக்கு தேவையான உணவை வீட்டில் தயாரித்து கொள்வது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதற்கான நேரமும், காலமும் இல்லை என்ற காரணத்தினால் வெளியில் வாங்கி சாப்பிட்டுக் கொள்வது என்பது ஒரு பழக்கமாகவே மாறி உள்ளது.

இந்தப் பழக்கத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள உணவு ஆர்டர்&சப்ளை செய்கின்ற நிறுவனங்கள் படிப்படியாக இந்தியர்களின் உணவு பழக்க வழக்கத்தை மாற்றி வருகின்றனர் என்பதுதான் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

நீங்கள் எந்த வகையான உணவை உண்ண விரும்புகிறீர்கள் என்பதை காட்டிலும், சந்தையில் எந்த உணவு அதிகமாக நுகரப்படுகிறது என்பதை நோக்கி உங்களது கவனம் திருப்பப்படுகிறது. அதன்பிறகு அதிலேயே நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் அதாவது ஹோட்டல்களின் பெயர்கள் உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சில நொடிகளில் உங்களது கைபேசி மூலம் உங்களது மூளைக்குள் திணிக்கப்படுகிறது.

ஆங்கில செய்தித்தாள்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இதற்கென்று சில பக்கங்களை ஒதுக்கி, ”இந்த ஹோட்டலில் சாப்பிடுகின்ற பிரியாணி அல்லது விரைவு உணவு மிகவும் சுவையாக இருக்கும் என்பதைப் போலவும், இந்த பேக்கரிகளில், ஹட்டுகளில் தயாரிக்கப்படுகின்ற பீட்சா, பர்கர் போன்றவை மிகவும் தரமாக இருக்கும் என்பதை போலவும்’ விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன.

செய்தித்தாள்களை படிக்கின்ற நடுத்தர வர்க்கம் துவங்கி ஆண்ட்ராய்டு போன்களின் மூலம் விளம்பரங்களை பார்க்கின்ற அரைபட்டாளிகள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கின்ற இது போன்ற விளம்பரங்கள் குறிப்பிட்ட சுவைக்கு அவர்களின் நாவை பழக்குகின்றன.

இதனால்தான், ”பிரியாணியா அந்த கடையில் இருந்து ஆர்டரை போடு, சைவ உணவா இந்த ரெஸ்டாரண்டில் இருந்து வரவழைத்து சாப்பிடு, சப்பாத்தி அல்லது புரோட்டாவா இந்த தாபாவில் இருந்து வரவழைப்பது நல்லது, அசைவ உணவுகளா இது போன்ற ரெஸ்டாரண்டுகளில் இருந்து வரவழைப்பது பொருத்தமானது” என்று புதிய கண்ணோட்டத்திற்கு இந்தியர்களை தயாரித்து வருகிறது இது போன்ற நிறுவனங்கள்.

அறுசுவை உணவு, சைவ உணவு, அசைவ உணவு, சிறுதானிய உணவு, ஃபேலியோ டயட் என்று எந்த வகையில் உணவை விரும்பினாலும் அதனை தயாரித்துக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தயாராக உள்ளன என்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட வகையிலான சுவைக்கு நுகர்வாளர்களை ஆட்படுத்தி மீண்டும், மீண்டும் அவர்களேயே நாடுவதற்கு பொருத்தமான வழிமுறைகளை அந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன. அது மட்டுமின்றி இது போன்ற உணவு ஆர்டர் செய்து கொடுக்கின்ற நிறுவனங்கள் இதனை அவர்களுக்கு பரிட்சையப்படுத்துகிறது என்பது மட்டுமின்றி அவர்கள் தலையில் கட்டுகிறது என்பதுதான் நிதானமாக யோசித்தால் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

இன்றைக்கு இரவு வரும்போது கையில் புரோட்டா வாங்கி வாருங்கள் என்று கூறுகின்ற குடும்ப இணையர்கள் துவங்கி, இன்று இரவு ரெஸ்டாரண்டில் அல்லது தாபாவில் சாப்பிடலாம் என்று முன்வைக்கின்ற இணையர்கள், வாரம் ஒரு முறை குறிப்பிட்ட விடுதிக்கு சென்று உண்ணுகின்ற குடும்பம் இவற்றைத் தாண்டி அன்றாடம் ஒவ்வொருவரும் சாப்பிடுகின்ற உணவை கட்டுப்படுத்துகின்ற புதிய வகையிலான கார்ப்பரேட்டுகளாக வளர்ந்து வருகின்றனர் இந்த ஸ்விக்கி, சொமட்டோ நிறுவனங்கள்.

அன்றாடம் 12 முதல் 14 மணிநேர வேலை என்று ஆகிவிட்ட சூழலில் பொறுமையாக உட்கார்ந்து சமைப்பதற்கோ, அதனை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்கின்ற அளவிற்கு கால அவகாசமோ இல்லாத சூழலில் உங்கள் மனதிற்கும், நாவிற்கும் பிடித்தமான உணவை, பிடித்த நேரத்தில் வாங்கி உண்பதற்கு உங்களை பழக்குகின்ற இந்த நிறுவனங்கள் தான் மிகப் பெரும் அளவில் லாபத்தை குவித்து வருகின்றன.

இதனால்தான் 2K கிட்ஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய தலைமுறை உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது, நீங்கள் எதையோ சிந்தித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அங்கலாய்ப்பதற்கும் வழி வகுக்கின்றது.

தொழிலாளி வர்க்கமோ நாங்கள் நிரந்தர வேளையிலும் இல்லை. நிரந்தரமாக ஒரு ஊரிலும் தங்குவதில்லை, எங்களை சங்கமாக்க முயற்சிப்பது தங்களின் சாதனைதான் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

பல்வேறு தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்துகின்ற அரை பாட்டாளிகளோ எங்களுக்கு உழைப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமே 24 மணி நேரம் போதுமானதாக உள்ளது. பொது விவகாரங்களில் ஈடுபடுவதற்கு நேரமே இல்லை. ஆனால் நீங்கள் செய்வது சரியானது தான் என்று கூறுவதற்கும், அவர்கள் அமைப்பாக்கப்படாமல் நீடிப்பதற்கும் இந்த உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் உருவாக்கும் புதிய வகையிலான உணவு பண்பாட்டிற்கும், இதனை பயன்படுத்தி கொண்டு கொள்ளை லாபமீட்டும் உணவு கார்ப்பரேட்டுகளுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது,

உங்கள் உணவு என்ன என்பதிலிருந்து உங்கள் வேலை நேரம் என்ன என்பது வரை அனைத்தையும் ஒரு சில கார்ப்பரேட்டுகள் தீர்மானிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ள சூழல்தான் தற்போது நிலவுகிறது.

  • ஆல்பர்ட்.

1 COMMENT

  1. தோழர் ஆல்பர்ட்டின் கட்டுரை, எப்படி கார்ப்பரேட் மயமாக்கப்படுகிறது உணவு உற்பத்தி, விநியோகம், எதை உண்பது என்ற வரையரை, தொழிலாளிகளின் வரன்முறையற்ற கொத்தடிமைத்தனமான உழைப்புச் சுரண்டல், சங்கம் கட்டி உரிமை கோர இமலாத நிலையில் தொழிலாளர்கள்…
    என் அனைத்து அம்சங்களையும் சுருக்கமாக, அதே வேளையில் ஆழமாக, பாட்டாளி வர்க்கம் விழிப்புணர்வு கொள்ள வழிகாட்டி உள்ளார்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் தோழர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here