இந்திய ஒன்றியத்தின் எண்பதாவது சுதந்திர தினத்தின் போது பிரதமர் பாசிச மோடி ஆற்றிய உரையில், “தாங்கள் திட்டமிட்டபடி மார்ச் 2026 ஆம் ஆண்டுக்குள் மாவோயிச அமைப்புகளை முற்றாக ஒழித்து விட்டதாகவும் நக்சல்பாரி என்பதற்கு இனி இந்தியாவில் இடமில்லை என்பதைப் போல பேசினார்.

2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை ஆர்எஸ்எஸ் பாஜக கைப்பற்றியது முதல் தனக்கு எதிரான கருத்து கூறுபவர்கள்; ஜனநாயக விழுமியங்களுக்காக போராடுபவர்கள்; மாற்றுக் கருத்து உடையவர்கள், சுருக்கமாக சொன்னால் பாசிச பாஜகவை விமர்சிப்பவர்கள் அனைவரின் மீதும் ‘ நகர்புற நக்சல்கள்’ (urban naxals) என்ற முத்திரை குத்தி ஒடுக்குவதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வந்தனர்.

பீமா கோரக்கான் வழக்கு மூலம் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள்; தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை முன்வைத்து தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் போராடுகின்ற வழக்கறிஞர்கள்; உண்மையான ஜனநாயகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று கருத்துரைக்கின்ற பேராசிரியர்கள்; கருப்பு சட்டங்களுக்கு அடிபணியாமல் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரின் மீதும் இந்த நகர்புற நக்சல் முத்திரை குத்தப்பட்டு கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.

1947 முதல் சில ஆண்டுகள் தவிர இந்திய ஒன்றியத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி நாட்டின் பெரும்பான்மை மக்களின் மீது புதிய தாராளவாத கொள்கை என்ற மறுகாலனியாக்க கொள்கையை திணித்து கடுமையான ஒடுக்கு முறையை மேற்கொண்டது. பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மார்க்சிய லெனினிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆகிய அனைவரின் மீதும் கொடூரமான ஒடுக்குமுறைகளை நடத்தி வந்தது

இதன் உச்சகட்டமாக மத்திய இந்திய பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடிய பழங்குடி மக்களின் மீது மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தியும், பழங்குடிகளின் பாதுகாவலர்களாக இருந்து வந்த மாவோயிஸ்டுகளின் மீதும் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொள்வதற்கு, ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்ற அனைவரையும் ஒடுக்குவது, நசுக்குவது என்ற முறையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் எமர்ஜென்சி காலத்தில் கிடைத்த அனுபவத்தின் காரணமாக, அதாவது நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பாசிச பயங்கரவாதத்தை ஏவுவதில் சிறிது தயக்கத்துடனே செயல்பட்டு வந்தது.

2014 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் பாஜக படிப்படியாக கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் ஒழித்து கட்டுவது, கம்யூனிச சித்தாந்தத்தை இந்திய மண்ணிலிருந்து அகற்றுவது என்ற குறிக்கோளுடன் முதல் சுற்றில் மாவோயிஸ்டுகள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவினர். அதற்கு ‘ஆப்ரேஷன் ககர்’ என்று பெயர் வைத்து, ஆயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தும், நர வேட்டையாடியும், படுகொலை செய்தும் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது சுற்றில் மாவோயிச அமைப்புகளை ஆதரிப்பவர்கள் மட்டுமின்றி கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அனைவரின் மீதும், இடதுசாரி தத்துவத்தை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகள் அனைவரின் மீதும் ஒருங்கிணைந்த முறையில் தாக்குதலை நடத்துவதற்கு அவர்களுக்கு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பாசிச மோடி சுற்றியுள்ள பெயர்தான் திமாகி நக்சல் என்பதாகும்.

படிக்க:

 மார்ச் 31-க்குள் இந்தியா “நக்சல்” இல்லாத நாடாக மாறும்…! அரச பயங்கரவாதி அமித்ஷா கொக்கரிப்பு…!

 நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.

பாசிச மோடி இதனை அறிவிப்பதற்கு முன்பாகவே டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மூலம் இதனை முன்னோட்டமாக விட்டுப் பார்த்தனர். “2025-ஆம் ஆண்டளவில், டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் யோகேஷ் சிங், பல்கலைக்கழகங்களுக்குள் இருக்கும் “நக்சலைட்டுகள்” குறித்துப் பேசியதோடு, பேராசிரியர்கள் “மனங்களைக் கெடுக்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்”.

இந்த எச்சரிக்கை விடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிராக பேசுகின்ற போராடுகின்ற அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் ஒடுக்கி பணிய வைக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் இந்த திமாகி நக்சல் என்ற பட்டப் பெயர்.

திமாகி நக்சல் என்று அழைக்கப்படுகின்ற நக்சல்பாரி அரசியலின் ஆதரவாளர்கள் குறித்து, அவர்கள் முன்வைக்கின்ற வரையறுப்பு என்ன என்பதை நியூஸ் கிளிக் கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

“ஒரு மனதை நக்சல் என்று வரையறுப்பது எது?

கடுமையான சமத்துவமின்மை மீதான விமர்சனம் தகுதி பெறுமா? ஆதிவாசிகளின் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகளைப் பற்றி என்ன? ஒரு சுரங்கத் திட்டத்திற்கான எதிர்ப்பைப் பற்றி என்ன? மார்க்சியப் புலமையைப் பற்றி என்ன? மாவோயிசத் தொடர்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடும் வழக்கறிஞரைப் பற்றி என்ன? அரசு வன்முறைக் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தும் ஒரு பத்திரிகையாளரைப் பற்றி என்ன? நில அபகரிப்பு, உடைமைப் பறிப்பு மற்றும் ஆளுகையின் தோல்விகள் ஆகியவை கிளர்ச்சிகள் ஏன் ஆதரவைப் பெறுகின்றன என்பதை விளக்க உதவுகின்றன என்று வாதிடும் ஒரு பொருளாதார நிபுணரைப் பற்றி என்ன?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளன?

மேற்கண்ட வரையறுப்பின் அடிப்படையில் பார்த்தால் சுருக்கமாக நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள், செயல்படுகின்ற சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கேள்வி எழுப்புகின்ற ஜனநாயக சக்திகள் ஆகிய அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கின்ற அடிப்படையில் தான் நக்சல்பாரி அரசியலுடன் தொடர்பு படுத்தி திமாகி நக்சல் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

மோடியின் இந்த அறிவிப்பு மற்றும் வரையறை குறித்து பல்வேறு தரப்பினரும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் பல்வேறு அம்பேத்கரிய, இடதுசாரி இயக்கங்களும் வன்மையாக கண்டித்து உள்ளனர். அது மட்டுமின்றி பாசிச மோடி ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக கேள்வி எழுப்புகின்ற அனைவரையும் திமாகி நக்சல் என்ற முத்திரை குத்தி கடுமையாக ஒடுக்குவதற்கு வழிகின்றது என எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்று அறிவியல் பூர்வமாக சுட்டி காட்டினார் அறிவியலாளர் ஐசக் நியூட்டன்.

அது போல தான் 90களில் கொண்டுவரப்பட்ட மறுகாலனியாக்கம் இந்தியாவில் தற்போது தீவிர தன்மையை அடைந்து, கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமாக பல கட்ட தாக்குதல்களை அனைத்து பிரிவினரின் மீதும் தொடுத்து வருகிறது.

இதனை படிப்படியாக விரிவுபடுத்தி வருவதை எதிர்த்து சமமான எதிர்வினையை உருவாக்குவதற்கு உழைக்கும் மக்களை பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தற்போதைய மிக மிக அவசிய கடமையாக மாறியுள்ளது.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் (தினசரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here