எச்சரிக்கை: பாசிச எதிர்ப்பில் முன்னணியாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல் திசை மாற்றப்படுகிறது?!

தமிழ்நாட்டில் பாசிச எதிர்ப்பு அரசியல் திசை மாறுகிறது
இவர்கள் அரசியலில் வரம்புக்கு உட்பட்டு செய்கின்ற சில மாற்றங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூக அமைப்பிலும், பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டதாகவும் இதனால் புரட்சி, சமூக மாற்றம் போன்ற காத்திரமான, அடிப்படையான அம்சங்களுக்கு வேலையே இல்லை என்பதைப் போலவும் மேற்கண்ட ‘அரசியலற்ற அரசியல்’ தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது.

மிழகத்தில் அரசியல் நிலைமை தற்போது ஒரு அசாதாரணமான நிலையில் உள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவிற்கு எதிராகவும், தமிழகத்தில் பாசிச பாஜகவின் கூட்டணி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக திமுக தலைமையில் கூட்டணியாக நின்று போட்டியிட்ட காங்கிரஸ், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியவை மட்டுமின்றி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்துள்ளனர். இதற்கு புதிய பெயர் வைக்க இருக்கின்றோம் என்கிறார் காங்கிரசின் மாணிக் தாக்கூர். இடது கம்யூனிஸ்டுகள், வலது கம்யூனிஸ்டுகள் அந்தக் கூட்டணியில் இல்லை; நாங்கள் மக்கள் நலனுக்கான கூட்டணிதான் என பலவாறாக ஜம்பமடிக்கின்றனர்.

“தேர்தல் வரை தான் கூட்டு; அது தேர்தல் கூட்டு. அதன்பின்னர் அனைவரும் தனித்தனியாக முடிவெடுக்கலாம்; அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தரப் பகைவனும் இல்லை”

போன்ற சொல்லாடல்கள் மீண்டும், மீண்டும் ஊடகங்களில் வந்து கருத்து பரப்புகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மற்றும் வர்க்க அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொண்டாலும் தற்போதைக்கு ஓடுகின்ற குதிரை என்ற அடிப்படையில் அவர்களுடன் சேர்ந்து பயணப்படுகின்ற மேற்கண்ட கட்சிகள் முன்வைக்கின்ற வாதம் அதைவிட ஆபத்தானது.

தமிழகத்தில் ஊழல் ஒழிந்து விட்டதாகவும்; சாதி ஒழிந்து விட்டதாகவும்; அதிகார வர்க்க முறைகேடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும்; கட்டிப் போடப்பட்ட அதிகாரத்தின் கைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும்; போலீசு உள்ளிட்ட அரசின் அடக்குமுறை கருவிகள் அனைத்தும் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவையெல்லாம் திருவாளர் விஜய் ஆட்சியின் சாதனைகள் என்று மேற்கண்ட கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கின்றன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான வை.கோபால்சாமி அனைத்திற்கும் மேலே ஒரு படி சென்று, “கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுகவுடன் சுயமரியாதையை இழந்துதான் நீடித்தேன் என்றும், அவர்கள் செய்த ஊழல்களை கூட்டணியில் இருந்த போது அம்பலப்படுத்துவது சந்தர்ப்பவாதம் என்றும், தற்போது அதிலிருந்து வெளியேறி விட்டதால் திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவதாகவும், இதை எதிர்த்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை அங்கேயே உதைத்து துரத்துங்கள்” என்றெல்லாம் பேசுகின்ற அளவிற்கு ‘ விஜய் ஜனநாயகம்‘ பூத்துக் குலுங்குகிறது.

திமுகவை தீய சக்தி; தூரசக்தி; பாரசக்தி; கோர சக்தி; தூர்ந்த சக்தி என்றெல்லாம் வசைபாடிய தமிழக வெற்றிக் கழகத்தின் பாசிச கோமாளி விஜய் தூய சக்தி ஆட்சி தருவதாக முன் வைப்பதை அப்படியே ஏற்று கொள்கிறார்கள்.

படிக்க:

 தூய்மைப் பணி தனியார்மயம்: ‘தீய சக்தி’யின் வழியில் ‘தூய சக்தி’!

 சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: சேலம் மக்களின் குடிநீர் உரிமை பறிப்பு!

மேற்கண்ட கட்சிகளில் உள்ள தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தூய சக்திக்கு பின்னால் அணி திரள்வது மட்டுமின்றி, ‘திராவிட கட்சி’ என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அனைத்து இந்திய அண்ணா திமுகவில் இருந்து கணிசமான எம்எல்ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம் ஆகிறார்கள்.

பதவியை ராஜினாமா செய்து விட்டு இணைபவர்கள் அனைவரும் தங்கள் பதவியில் இருந்த போது, ‘அக்மார்க் பாணியிலான’ நேர்மையாளர்கள் என்பதைப் போலவும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு மேலும் தூய்மையாகி விட்டதாகவும் தூய சக்தியின் தலைமை தொடர்ச்சியாக பரப்பி வருகிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது ஊடகங்கள் அனைத்தும் அவர்களின் பிடிக்குள் உள்ளது; சமூக வலைதளங்கள் அனைத்தும் திமுகவின் கொத்தடிமைகளாக மாறிவிட்டனர் என்பதில் துவங்கி திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுகவின் சொம்பு, 200 ரூபாய் உபி என்றெல்லாம் நக்கல் நையாண்டி செய்த பார்ப்பனக் கும்பல் மற்றும் கருப்பு பார்ப்பனக் கும்பல் தற்போது நடக்கின்ற தேர்தல் அரசியல் கழிசடைத் தனத்தை பார்த்து அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர் என்பது சகிக்க முடியாத அளவிற்கு சென்றுக் கொண்டுள்ளது.

படிக்க:

 தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்

 13 லட்சம் கோடி கடன்: இப்போது ஏன் ஒப்பாரி வைக்குது தவெக அரசு!

மற்றொருபுறம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், அதிலிருந்து அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பின்னணி ஏழை-எளிய மக்களின் பின்னணி என்றெல்லாம் கதையளந்த நிலைமை ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. சாராய ரவுடிகள்; கிரிமினல் குற்றம் புரிந்த கொலைகார்ர்கள்; பாலியல் வக்கிர பேர்வழிகள்; கஞ்சா-போதை போன்றவற்றை அன்றாடம் உட்கொண்ட பொறுக்கிகள்; பெண்களிடம் ஆபாசமாக வக்கிரமாக நடந்து கொண்டவர்கள் என்றெல்லாம் பல்வேறு வகைகளில் சமூகவிரோத, கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என ஒவ்வொன்றாக அம்பலமாகிய நாறிக் கொண்டுள்ளது.

பாசிச கோமாளி விஜய்யையும், அவரது கட்சியினரையும் தற்குறி என்று அழைக்காதீர்கள் என்பதில் துவங்கி அவர்கள் ஏதோ ஒரு கொள்கையை சொல்ல வருகிறார்கள் அதைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு திராணி இல்லை என்ற விமர்சனம் முதல் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது அவற்றையெல்லாம் நீங்கள் பார்க்க தவறுகிறீர்கள் என்ற கரிசனங்கள் வரை கொடிகட்டிப் பறக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மற்றும் வர்க்க பின்னணி குறித்து 2026 மே மாத  புதிய ஜனநாயகம் இதழில் இவ்வாறு எழுதியது.

“விஜய்யின் அமைச்சரவையில், தமிழகத்தில் இனி பார்ப்பனிய எதிர்ப்பு செல்லாக்காசாகி விட்டது என கூறிய பார்ப்பனர் வெங்கடரமணன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான நிர்மல் குமாரும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அமைச்சராக பதவியேற்றுள்ள முன்னால் வருமான வரித்துறை அதிகாரியாகிய அருண் ராஜ், விஜய் வீட்டிற்கு 2020-ஆம் ஆண்டில் ரெய்டு நடந்த போது விஜய்க்கு சிக்கல் இல்லாமல் ‘சரி’ செய்து கொடுத்ததால் நட்பானவர் இவர். ஏற்கனவே, சேகர் ரெட்டி வீட்டுக்கு ரெய்டு போன முக்கியமான அதிகாரிகளில் ஒருவராவர். ரெய்டில் சிக்கிய பணத்தை மறைக்க தனது உறவினருக்கு எம்.எல்.ஏ சீட்டு வேண்டும் என கேட்டதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களை கொண்ட அமைச்சரவை கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு பாதை அமைக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் பிடியிலே முதல்வர் விஜய் உள்ளார். முதல்வர் பிடியில் இவர்கள் இல்லை. இது கரூர் விஷயத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டதை அனைவரும் கண்கூடாக பார்த்தோம். மேலும், ஆளுநரை முதல் முறையாக சந்திக்க திருவாளர் விஜய் சென்ற போது ஆந்திர கிரானைட் அதிபர் விஷ்ணு ரெட்டி, பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் ஆகியோரை அழைத்துச் சென்றதன் மூலம் தனக்கு பின்னால் மிகப்பெரும் கார்ப்பரேட் பண முதலைகள் உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். விஜய்யின் ஆட்சி மூலம் கார்ப்பரேட் கொள்கையை எளிதில் அமல்படுத்த முடியும் என முதலாளிகள் கருதுவதால் விஜய்யின் ஆட்சியை கார்ப்பரேட்டுகள் விரும்புகின்றனர் என பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கை தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு எழுதியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.”

என எழுதியிருந்தது.

அதுமட்டுமல்ல! 90களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய காலகட்டத்தில் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் களத்தில் குதித்த அடையாள அரசியல் பேர்வழிகள், தற்போது மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை அதிகரித்துள்ள காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை, ஆளும் வர்க்கங்களின் மீது ஏற்பட்டுள்ள கோபம் ஆகியவற்றை திசை திருப்புவதற்கு புதிய அவதாரம் எடுத்துள்ளனர். “ஊழல் ஒழிப்பு; லஞ்ச ஒழிப்பு; சாதி ஒழிப்பு; சுத்தமான ஆட்சி; கறைபடாத ஆட்சி; ஆறு மாதம் அனுமதி கொடுங்கள், அதன் பிறகு தமிழகத்தை பூத்துக் குலுங்க வைப்பார்கள்” என்றெல்லாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

படிக்க:

 தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

 கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!

முதலாளித்துவத்தின் ரத்தக் குழாய் ஊழல் தான் என்பதை வெட்டிச் சுருக்கி இந்தியன் தாத்தா பாணியில் சாதாரண அரசு ஊழியர்கள் வாங்குகின்ற லஞ்சம் என்பதை பற்றி தீவிரமாக பேசுகின்ற மேற்படிக் கட்சிகள் அந்நிய முதலீடு முதல் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அளக்கின்ற கார்ப்பரேட் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு வழங்குகின்ற நன்கொடைகள் வரை ஊழல் என்று ஏற்றுக் கொள்வதில்லை.

அவையெல்லாம் தொழில் தொடங்குவதற்கு அந்த கட்சிகளுக்கு கொடுக்கின்ற சன்மானங்கள் என்பதைப் போலவும், அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை செலவு என்ற பெயரில் அங்கீகரிக்கிறது என்பதால் இவையெல்லாம் ஊழல் இல்லை என்பதைப் போல சண்டமாருதம் செய்து வருகின்றனர்.  அது மட்டுமல்ல1 அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளும் அப்படியே நீடிக்கும் போது ஆட்சி மாற்றம் வந்ததையே அனைத்து மாற்றமும் வந்து விட்டதைப் போல நம்ப வைக்க முயல்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் தேசங்கடந்த தரகு முதலாளிகளான ஸ்டெர்லைட் கொலைகார நிறுவன அனில் அகர்வால், அதானி முதல் தமிழகத்தின் ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வரை வரிசை கட்டி நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான சட்ட திட்டங்கள் அப்படியே நீடிக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற வகையில் மக்கள் போராடி வருகின்ற கன்னியாகுமரி அணு கனிம மணல் சுரங்கத் தொழில், ஜவ்வாது மலை நீரேற்று புனல் மின் திட்டம் முதல் அனுமதிக்காக காத்திருந்த கடற்கரை பரப்புகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கின்ற திட்டங்கள் வரை அனைத்தும் விஜய் ஆட்சியில் அமலுக்கு வருகின்றன.

இவற்றை அனுமதிப்பதற்கு எழுதப்படாத விதியாக குறிப்பிட்ட சதவீதம் லஞ்சமாக கொடுக்கப்படுவது பற்றியெல்லாம் மேற்கண்ட, ‘இந்தியன் தாத்தாவின்’ பேரர்களான மேற்படிக் கட்சிகள் எந்த விதமான விமர்சனங்களையும் முன் வைப்பதில்லை.

மொத்தத்தில் நிலவுகின்ற சமூக கட்டமைப்பில் தேர்தல் அரசியலில் ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்ததை வைத்துக் கொண்டு மாற்றம் நிகழ்ந்து விட்டதாக முன் வைப்பது அதை மீண்டும், மீண்டும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்வது; அனைத்து கட்சியினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அணியில் நின்று கொண்டு ஒரே குரலில் சேர்ந்திசை பாடுவது ஆகியவை அனைத்தும் சமூக மாற்றம் ஆட்சி மாறியவுடன் நிகழ்ந்து விட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதில் வெற்றி பெற முனைகின்றனர்.

இதற்கு நிகராகவே கம்யூனிசம், திராவிடம், தலித்தியம், தமிழ் தேசியம், இன உரிமை, பாசிசம் போன்ற அரசியலைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது; மக்களுக்கு நல்லது நடக்கட்டும்; இளமையான, கவர்ச்சியான முதல்வர் கிடைத்துள்ளார் என்பதால் விமர்சனங்களை தவிர்த்து விட்டு அவருடன் இணைந்து கொண்டு நல்ல காரியங்களில் ஈடுபடுங்கள் என்றெல்லாம் வர்க்க அடிப்படையில்லாத ‘நல்லெண்ண அரசியலை’ முன்வைத்து தமிழக அரசியல் களத்தை கார்ப்பரேட் காவி பாசிசத்தை வழிபடும் பஜனை மடமாக மாற்றி வருகின்றனர்.

சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் பாசிச பாஜகவை விமர்சனம் செய்வது; கடந்த இரண்டு மாதங்களாக பின்னுக்கு தள்ளப்பட்டு விஜய் அரசியல்×அதற்கு எதிராக திமுகவின் அரசியல் என்ற வகையில் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் உப விளைவாக பாசிச பாஜகவின் பயங்கரவாத ஆட்சி மற்றும் குதிரை பேரம் முதல் வாஷிங் மெஷின் வரையிலான ஆட்சி வடிவம் தமிழகத்திலும் நடத்தப்படுவதை நைச்சியமாக, சந்தர்ப்பவாதமாக மக்களை ஏய்கின்ற வகையில் தவிர்த்து வருகின்றனர்.

இவர்கள் அரசியலில் வரம்புக்கு உட்பட்டு செய்கின்ற சில மாற்றங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூக அமைப்பிலும், பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டதாகவும் இதனால் புரட்சி, சமூக மாற்றம் போன்ற காத்திரமான, அடிப்படையான அம்சங்களுக்கு வேலையே இல்லை என்பதைப் போலவும் மேற்கண்ட ‘அரசியலற்ற அரசியல்’ தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இவற்றையும் தமிழக வெற்றிக் கழகத்தின் வர்க்கப் பின்னணியையும் பற்றி பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் தேர்தல் அரசியல் கட்சிகளில் மூலம் வருகின்ற மாற்றம் ஒருபோதும் நிரந்தரமல்ல என்பதையும் அது பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லி நாட்டின் பேரபாயமாக உள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு முன்னணியாக தமிழகம் செயல்பட வேண்டும் என்பதே தற்போது முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியலாகும்.

புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

தலையங்கம் ஜூலை 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here