தூய்மைப் பணி தனியார்மயம்: ‘தீய சக்தி’யின் வழியில் ‘தூய சக்தி’!
‘தளபதி’ ஆட்சிக்கு வந்தால் நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையிலேயே வாக்களித்து இன்று முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். ஆனால் மக்கள் நினைத்தது வேறு நடந்து கொண்டிருப்பது வேறு.

டந்த திமுக ஆட்சியில் கடைசி காலத்தில் தூய்மை பணியாளர்களின் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. 13 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு போராடிய தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டயமாக கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். அதன் பின்பும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக திமுக அரசு தூய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்தது. ஆனாலும் தனியார்மய நடவடிக்கைகள் நிற்கவில்லை. சென்னை மட்டுமல்லாமல் மதுரை போன்ற நகரங்களிலும் போராட்டம் தொடர்ந்தது. இது திமுக அரசுக்கு பலவீனமாகவும் அமைந்தது.

ரிப்பன் மாளிகை போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே போராடிய தூய்மை பணியாளர்களை பனையூருக்கு வரவழைத்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து ஆதரவை தெரிவித்தார் இன்றைய முதலமைச்சரும் நேற்றைய நடிகருமான விஜய். மக்களும் ‘தளபதி’ ஆட்சிக்கு வந்தால் நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையிலேயே வாக்களித்து இன்று முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். ஆனால் மக்கள் நினைத்தது வேறு நடந்து கொண்டிருப்பது வேறு.

தமிழ்நாட்டில் முக்கியமான சில மாநகராட்சியின் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளதாக கடந்த சனிக்கிழமை (20.6.2026) தகவல் வெளியாகின. தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டு பங்களிப்பு (PPP) public – private – partnership மாதிரியின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க தற்போதைய தவெக அரசு டெண்டர் கோரி உள்ளது.

விஜய் தலைமையிலான இந்த தவெக அரசின் முடிவானது, அது கொடுத்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. “எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த ஒரு தனியார்மயமாக்கல் திட்டத்தையும் தவெக ஏற்காது. தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பிற்கு தவெக என்றும் துணை நிற்கும்” என வாக்குறுதி அளித்த ‘தூய சக்தியான’ விஜய் இன்று அதிகாரத்தில் அமர்ந்த பின் தூய்மை பணியாளருக்கு ‘தீய சக்தியாக’ மாறிவிட்டார்.

கொரோனா, மழை வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல்  பணியாற்றியவர்களில் தூய்மை பணியாளர்கள் முக்கியமானவர்கள். பல இடங்களில் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கூட பணியாற்றினார்கள். அவர்களை தான் துரத்தி அடிக்கின்றன ஆளும் அரசும் ஆண்ட அரசும்.

ஏற்கனவே ராயபுரம் மற்றும் திருவிக நகர் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததன் விளைவாகவே போராட்டம் வெடித்தது. தற்போது மீண்டும் தனியார்மய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

படிக்க: தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!

தனியார்மயத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள், தனியார் நிறுவனங்களுக்கு போட்டி சூழல் ஏற்படுவதால் வேலைகள் துரிதமாக நடைபெறும் என்றும், குப்பை சேகரிப்பு, கழிவு மேலாண்மை போன்ற சேவைகளின் தரம் மேம்படும் என்று வாதிடுகின்றனர். ஆனால் அதில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் குறித்த கவலைகள் அவர்களுக்கு இல்லை.

தூய்மை பணியாளர்களின் அச்சமும் போராட்டமும் நியாயமானது. தூய்மைப்பணி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தங்களது உரிமைகளை போராட்டத்தின் மூலம் பெற முடிகிறது. இதுவே தனியார்மயமாக்கப்பட்டால் அதற்கு துளியும் வாய்ப்பில்லாமல் போகும்.

தூய்மை பணி தனியார் மயமாவதால் 10 வருடங்களுக்கு மேல் அப்பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அரசு பணி வாய்ப்பை இழக்க நேரிடும். அதாவது நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் அதிகரிக்கலாம். லாப நோக்கத்தை கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்கள் சம்பள குறைப்பை அமல்படுத்தும். ஊதிய உயர்வு அகவிலைப்படி போன்ற சலுகைகள் இல்லாமல் போகும்.

படிக்க: தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!

ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, விடுப்புகள் போன்ற தொழிலாளர் பாதுகாப்பு நலன்கள் குறையக்கூடும். PF, ESI போன்ற திட்டங்கள் முறையாக வழங்கப்படாத அபாயம் ஏற்படும். குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு அதிக வேலை வாங்குவார்கள். வேலை நேரத்தை நீட்டிக்கும் வாய்ப்பும் உண்டு. சங்கம் வைத்து உரிமையை கேட்டால் மிரட்டப் படுவார்கள்.

செலவை குறைப்பதற்காக பாதுகாப்பு உபகரணங்களை முழைமையாக வழங்காமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவார்கள். இதனால் உடல்நல பாதிப்பு பிரச்சினைகளை தொழிலாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

படிக்க: பஞ்ச் டயலாக் மட்டும் போதாது முதல்வரே!

இப்படியாக தனியார்மயத்தின் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தூய்மைப்பணி தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனியம் உருவாக்கி இருக்கும் சாதிய அடுக்கில் கீழ்நிலையில் உள்ளவர்களே. மூச்சுக்கு முந்நூறு தடடை நாங்கள் பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபடும் அதே பட்டியலின மக்களுக்கு எதிராக தனியார்மய நடவடிக்கையில் ஈடுபடுவதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்.

ஆகையால் அடித்தட்டு மக்களின் வாழ்வை பாதிக்கும் தூய்மைப்பணி தனியார் மய மாக்கப்படும் நடவடிக்கைகளை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றிவரும் தூய்மைப்பணியார்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற சுகாதார பணிகளில் லாப நோக்கு கண்ணோட்டத்துடன் அணுகும் மனநிலையை தவெக அரசு கைவிட வேண்டும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here