கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் அரசு தரும் தகவலின் அடிப்படையிலேயே 50 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் மரண ஓலங்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தகப்பனை இழந்த மகனும், தாயை இழந்த மகளும், ஆதரவாக இருந்த அண்ணன் தம்பிகளை இழந்த உறவுகளும் கதறி அழுகின்றனர்.
எதிரி நாட்டில் இருந்து குண்டு வீசும் போது கூட இப்படி திடீரென்று மரணம் ஏற்படுவதில்லை. போர் துவங்கப் போகிறது என்பதை அறிந்து, மக்கள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்ட பிறகு அதை மீறி படுகொலை செய்வது தான் போரின் கொடூரம். ஆனால் கள்ளக்குறிச்சியிலோ கள்ளச்சாராயத்திற்கு எமது மக்கள் பலியாகி பிணவாடை தமிழகமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சியின் நடுமையத்தில் போலீசு நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அருகில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கின்ற கோவிந்தராஜ் மற்றும் சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதிகளை பற்றி போலீசுக்கு இப்போது தான் தெரிந்தது போல கதையளக்கிறார்கள்.
மாமூல் பெற்றுக்கொண்டு போலீசு கள்ளச்சாராயத்தை விற்பதற்கு அனுமதிப்பது, அந்தப் பகுதி மக்கள் மட்டும் இன்றி உலகமே அறிந்த உண்மை. இதற்கு ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்- போலீஸ்- சாராய வியாபாரி கூட்டு முக்கிய காரணம் என்பதை தற்போது கிடைத்துள்ள விவரங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்தப் பகுதியின் கவுன்சிலர் விடுதலை சிறுத்தைகளை சேர்ந்தவர், ’இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று வருத்தப்படுகிறார் ஆனால் எங்கள் கட்சி கவுன்சிலர் தான் இதற்கு தார்மீக பொறுப்பு என்று விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கூறுகின்றார்.
திமுகவின் எம்எல்ஏ-க்கள் வசந்தன் கார்த்திகேயன், உதய்சூரியன், அமைச்சர் எ.வ. வேலுவின் ஆதரவாளர்கள் தான் சாராய வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கிறார்கள் என்று ஊடகங்களிலும் பகுதியிலிருந்து வரும் செய்திகளும் நிரூபித்துக் கொண்டுள்ளது.
ஆனாலும் திமுக ஆட்சியில் மதுராந்தகம் மரக்காணம் ஆகியவற்றை தொடர்ந்து நடந்துள்ள மூன்றாவது மிகப்பெரிய சாராய சாவு பற்றி, ”இது போலீசு- சாராய வியாபாரி கள்ளக் கூட்டு என்று பொதுவாக பூசி மொழுக பார்க்கிறார்கள். போலீசு, உள்துறை மந்திரியாக உள்ள திமுகவிற்கும், திமுகவின் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் இதில் எந்த விதமான தார்மீக பொறுப்பும் இல்லை என்பதை போல சாமியாடுகிறார்கள்.
இது போன்ற சம்பவத்திற்காகவே காத்து கிடந்த அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகள் 24 மணி நேரமும் மக்கள் நலனில் இருந்து சிந்திப்பதை போல கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று திமுக பதவி விலக வேண்டும் என்று கூச்சலிடுவது துவங்கி அமித்ஷாவிடம் சொல்லி ஆட்சியை கலைப்பேன் என்று மிரட்டுவது வரை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது.
அரசியலை தனது சொந்த லாபத்திற்கு பார்க்கும் பிழைப்புவாதிகள், கேடுகெட்ட சாவு வியாபாரிகளான இத்தகைய அரசியல் வியாபாரிகளுக்கு மத்தியில் எமது மக்கள் தனது உயிரை இழந்து நடுத்தெருவில் குடும்பத்தை நிறுத்தி சென்றிருக்கிறார்கள்
கள்ளச்சாராயமும், உழைப்பாளிகளும்
கள்ளச்சாராயச் சாவு இல்லாத இந்தியாவை நாம் இதுவரை பார்த்திருக்க மாட்டோம். அந்த இந்தியாவில், தனது உழைப்பு சக்தியை அன்றாடம் விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தும் தொழிலாளி வர்க்கம்தான் சாராயத்தினால் செத்து மடிகிறது.
ஒருநாள் விற்ற உழைப்பு சக்தியை மீண்டும் பெறுவதற்கு விலைவாசி உயர்வு ஒத்துழைப்பதில்லை. அதனால், மலிவு விலையில் கிடைக்கும் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து தனது உழைப்பின் வலியைப் போக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, பிறப்பு முதல் இறப்புவரையுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் மது அருந்திக் கொண்டாடுவதை அல்லது துக்கம் அனுசரிப்பதை மக்கள் தங்களின் பண்பாடாக வைத்திருக்கிறார்கள். அந்தப் பண்பாட்டிலும் கடைநிலை தொழிலில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கம்தான் செத்து மடிகிறது.
அப்படித்தான் கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்த 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கூலித் தொழிலாளர்கள்தான். சுமார் 125 திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 பேர் இதுவரை இறந்துள்ளனர். இறந்தவர்களையும், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் எண்ணி கணவனை இழந்த மனைவி, தந்தையை இழந்த குழந்தைகள், உற்றார் உறவினர்கள் என ஒட்டுமொத்த தமிழகத்தின் நெஞ்சையும் இந்த சம்பவம் உலுக்கி வருகிறது.
”எனது கணவன், எனது பிள்ளை கள்ளச்சாராயம் குடித்ததால்தான் கண் பார்வை குறைவு, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு இறந்துள்ளனர்” என சாதாரண மக்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், மெத்தப் படித்த மேதாவியான கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் நாங்கள் கள்ளச்சாராயத்தை ஒழித்து விட்டோம். நீங்கள் தேவையில்லாமல் பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் மட்டுமே பொய்ப் பேசத் தகுதியுள்ளவன் என்று பேட்டிக் கொடுத்து இருக்கிறார். முதல்நாள் இருநபர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்களும், மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் கவனத்தில் எடுத்திருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும். உழைக்கும் மக்களின் உயிரை துச்சமாக நினைத்ததும் அதிகாரத்திமிரும், தனது நிர்வாகத்தை, பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும்தான் இவ்வளவு பெரும் துயரத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ”போலீசாரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும், தவறு செய்துள்ள யாருக்காகவும் இந்த அரசு பரிவுகாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், காவல் நிலையத்திற்கு அருகில்தான் இந்த சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்திருக்கிறது. ஆனாலும், அதை கவனக்குறைவு எனும் சொல்லாடலால் தனது ஆட்சியின் கீழுள்ள போலீசாரையும், மாவட்ட நிர்வாகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கிறது திமுக அரசு.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்ட 16 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒன்றும் அவ்வளவு பெரிய தண்டனை இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ’அவ்வளவு பெரிய தண்டனையை’ அரசு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இவர்கள் 65 வயது வரை பணிசெய்யப் போகிறார்கள். சாகும் வரை ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வாழப் போகிறார்கள். இவர்களுக்குப் பணியிடமாற்றமும், தற்காலிகப் பணி நீக்கமும் பெரும் தண்டனையாக ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஆனால் கணவனை இழந்த, தந்தையை இழந்த குடும்பம் என்னவாகப் போகிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
மணல் கொள்ளைக்கு எதிராக, டாஸ்மார்க்கிற்கு எதிராக, தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக என அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போராட விடாமல் தடுக்கிறது போலீசும் அதன் உளவுத்துறையும். ஆனால், 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளைக் கொண்ட கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ் எனும் சாராய வியாபாரியின் அன்றாட நடவடிக்கைகளை போலீசார் கண்காணிப்பதை நிறுத்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர் திமுக கட்சிக்காரர் என்பது மட்டுமின்றி லஞ்சம் பெற்றுக் கொண்டோ அல்லது கடமையை செய்யத் தவறியோ சாராய வியாபாரிக்கு உதவி இருக்கிறது போலீசு துறை. நம்புங்கள் ’போலீசு உங்கள் நண்பன்’ என்று.
புராணத்தில் சோமபானம், சுராபானம் – இன்றோ மதுபானம்.
இந்தியாவில் யாகங்கள், வேள்விகள் போன்றவற்றிலும் பிற கொண்டாட்டங்களிலும் போதை பொருட்களை பயன்படுத்தி சுயநினைவை இழக்கின்றவரை ஆட்டம் போடுவது என்பதற்கு சோம பானம், சுராபானம் போன்றவை சுவைக்கப்பட்டது சாட்சியாக உள்ளது.
போதை என்றவுடன் வெறும் மதுபானம் மட்டுமல்ல. அரசு சாராய ஆலை முதலாளிகளிகள் மூலம் தயாரித்து விற்கும் மதுபானம் துவங்கி சட்டவிரோதமாக விற்கப்படும் கள்ளச்சாராயம் போதை பொருட்களான கஞ்சா, அபின், ஹெராயின், ஹசீஷ் மட்டுமின்றி பான்பராக், குட்கா வரை அனைத்தும் போதையூட்டும் வேலையை செய்கிறது.
ஹைடெக் பார்களுக்கு செல்லும் மேட்டுக்குடிகள், சாராயக்கடையில் குடிக்கும் உழைப்பாளியை பார்த்து குடிகார என்று வசைபாடுகிறார். இத்தகைய பார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கின்ற குடிவெறியாட்டம் வெளியுலகத்தில் தெரிவதில்லை. ஆனால் மலிவான விலையில் கள்ளச்சாராயத்தை குடித்து மக்கள் கொத்து கொத்தாக பலியாகும் போது தான் சாராய போதை பற்றிய செய்தி வெளியில் பேசப்படுகிறது.
கள்ளச்சாராயம் விற்கும் வியாபாரிகள் எவரும் பெறும் கார்ப்பரேட்டுகள் இல்லை. ஆயுதம் தாங்கிய படைகளை வைத்திருக்கவில்லை. பிழைப்பிற்கு வேறு வழி தெரியாமல் சாதாரண மக்களில் இருந்தே அவர்கள் தோன்றுகிறார்கள். அவர்களை அடக்குவதற்கு இரண்டு கான்ஸ்டபிள்களேப் போதுமானது ஆனாலும் அவர்களின் தொழிலை முற்றிலும் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விரும்புவதில்லை. ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினர்களும் கார்ப்பரேட்டுகளுக்கு செய்யும் சேவையை மூடி மறைக்கவும், தாங்கள் செய்யும் ஊழலை திரையிட்டுக் கொள்ளவும் மக்களை பல்வேறு வகையான போதைகளிலேயே வைத்திருக்கிறார்கள்.
மற்றொருபுறம், மக்கள் பயன்பாட்டிற்கான தரமான பொருட்கள் எல்லாம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்க முடியாத மக்களுக்கு போலியான கலப்படப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதைப் போன்று உயிருக்கு ஆபத்து இல்லாத மொலாசஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சாராயத்தின் அடக்க விலை 12 ருபாய் ஆகும். ஆனால், ஒரு லிட்டர் பிராந்தி ரூ 800க்கு மேல் விற்கப்படுகிறது. ஆகையால் மெத்தனால் கலந்த சாராயத்தையோ, தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் சாராயத்தையோ விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கி குடித்துவிட்டு சாதாரண ஏழை எளிய மக்கள் இறந்து போகிறார்கள்.
சாராயம் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் போலியான கலப்பட பொருட்கள் உற்பத்தியாவதையும், விற்பனை செய்வதையும் அரசு பெரும்பாலும் தடுப்பதில்லை. ஏனென்றால், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இதுபோன்ற பொருட்கள் கிடைப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கூலி உயர்வு போராட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புக்கான போராட்டம் என எதைபற்றியும் யோசிக்க விடாமல் தடுப்பதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகின்றன. ஆதலால் அவைகளை தடுப்பது போல தடுத்து பாதுகாத்துக் பாதுகாத்துக் கொண்டே இருக்கிறது.
கள்ளக் குறிச்சி மட்டுமல்ல! இந்தியாவே போதையில் சாகிறது.
கள்ளக்குறிச்சியில் மட்டும்தான் கள்ளச்சாராயத்தை போலீசு உள்ளிட்ட அரசு நிர்வாகம் தடுக்க வில்லையா என்றால், இந்தியா முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழை எளிய மக்களின் உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக் கணக்கான கள்ளச்சாராய சாவுகள் நடந்துள்ளன. 1976- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் பலி. 1984- ஹரியானாவில் 44 பேர் பலி. 1981- கர்நாடகாவில் 308 பேர் உயிரிழப்பு. 1982- கேரளாவில் 78 பேர் மரணம். 1986- குஜராத்தில் மேலும் 108 பேர் பலி. 1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு. 1992- ஒடிஷாவில் 200க்கும் அதிகமானோர் மரணம்.
2001- மகாராஷ்டிராவில் 27 பேர் பலி. 2001 – தமிழ்நாட்டின் பண்ருட்டியில் 53 பேர் பலி. 2004- மகாராஷ்டிராவின் மும்பையில் 87 பேர் மரணம். 2006- ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி. 2008- கர்நாடகா, தமிழ்நாட்டில் 148 பேர் உயிரிழப்பு. 2009- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் இறந்தனர். 2009- உ.பி.யில் 29 பேர் பலி. 2009- குஜராத்தில் 136 பேர் மரணம். 2010- உ.பி.யின் 2 மாவட்டங்களில் 35 பேர் பலி. 2010- கேரளாவிம் மலப்புரத்தில் 23 பேர் உயிரிழப்பு. 2011- ஆந்திராவில் 17 பேர் மரணம். 2011- மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி. 2012- ஆந்திராவில் மீண்டும் 17 பேர் உயிரிழப்பு. 2012- ஒடிஷாவில் மேலும் 31 பேர் மரணம். 2012- பஞ்சாப்பில் 18 பேர் உயிரிழப்பு. 2013- உ.பி.யில் 40 பேர் மரணம். 2015- மகாராஷ்டிராவின் மும்பையில் 90 பேர் இறப்பு. 2019- உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் மரணம். 2019- அஸ்ஸாமில் 156 பேர் பலி. 2023- தமிழ்நாட்டின் மரக்காணம், செங்கல்பட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலி. தற்போது கள்ளக்குறிச்சி வரை கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
படிக்க:
♦ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி! திமுக அரசின் அலட்சியமே காரணம்!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போது போதை இல்லா தமிழகம் என்ற வாக்குறுதி கொடுத்து தான் தேர்தல்களில் வெற்றி பெற்றது தமிழகத்தின் தாய்மார்களின் தாலியறுக்கும் டாஸ்மாக் படிப்படியாக இழுத்து மூடப்படும் என்று வாக்குறுதி அளித்து. ஆனால் அதற்கு நேர் மாறாக ஒவ்வொரு ஆண்டும் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு தீர்மானித்துக் கொடுப்பது, குடிகாரர்களை மது பிரியர்கள் என்று பெயர் மாற்றியது வரை திமுகவின் சாதனையாகவே உள்ளது.
அரசே சாராயம் விற்கின்ற கேடுகெட்ட வேலையை செய்கின்ற போது டாஸ்மாக்கு வெளியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுப்பதில் எந்த அளவிற்கு சமூக பொறுப்புடன் செயல்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதனை நாம் இப்படியே அனுமதிக்க முடியாது.
கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு பின்னால் அரசின் ஆதரவும், போலீசின் பலமும் இருக்கிறது. அதை குடிப்பவர்களுக்கு பின்னால் ஏழ்மை மட்டும்தான் இருக்கிறது. இந்த ஏழ்மையை ஒழிக்காமல் இருப்பதற்கு அரசிடம் ஒரு கொள்கை இருக்கிறது. அதுதான் மறுகாலனியாக்கக் கொள்கை ஆகும். இந்தக் கொள்கையை அமல்படுத்தப்பட்ட பிறகுதான் நாட்டில் ஏழ்மை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது பல்வேறு வழிகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, உள்ளூர் பகுதிகளில் இருக்கும் சாராய ரவுடிகள், போதை மருந்து வியாபாரிகள், உள்ளிட்ட அனைத்து சமூக விரோதிகளையும் எதிர்கொண்டு உதைத்து விரட்டியடிப்பதற்கானப் பயிற்சியை உழைக்கும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். போலீசு-அதிகார வர்க்கம்,-அரசியல் கட்சிகள் இந்த வேலையை ஒருபோதும் செய்யாது. அதை கம்யூனிச கொள்கை பிடிப்புள்ள புரட்சிகர அமைப்புகள் தான் செய்ய வேண்டும் செய்வோம்.
(புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள் உதவியுடன்),
- கனகசபை.