2023 ல் உத்தரகாண்டின் சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட போது, அவர்களை காப்பாற்றிய எலிவளை சுரங்க தொழிலாளிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அப்படி பாராட்டப்பட்டவர்களில் ஒருவரான டெல்லியில் உள்ள வஹீல் ஹசன் என்ற தொழிலாளியின் வீடு  இடித்து தள்ளப்பட்டுள்ளது. நீதி கேட்டு கடந்த வியாழக்கிழமையிலிருந்து தனது குடும்பத்தினருடன்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

செய்நன்றி மறக்கலாமா?

சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் 17 நாட்களாகியும் மீட்கப்படாத நிலையில், நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கிய பன்னாட்டு நிபுணர் குழுவினர் உள்ளிட்டவர்கள் செயல் இழந்த போது, நாமக்கல் ரிக் வண்டிகள் உள்ளிட்ட துளையிடும் கருவிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தனது இயக்கத்தை நிறுத்திய போது களமிறக்கப்பட்டவர்கள் தான் இந்த எலிவளை சுரங்க தொழிலாளர்கள்.

ஒட்டுமொத்த இந்திய மக்களே நெஞ்சம் பதப்பதைத்து உற்றுப் பார்த்த சூழலில் தான் இவ்வீரர்கள் துணிந்து களமிறங்கினர். சரிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் துளையை ஏற்படுத்தி, நுழைந்து சென்று 41 பேரை உயிருடன் மீட்டும் கொண்டு வந்தனர்.

அரசு என்ன கைமாறு செய்துள்ளது?

டெல்லியை ஒட்டியுள்ள கஜோரி ஹாஸ் கிராமத்தில் உள்ள வஹீல் ஹசனின் வீடு டெல்லி வளர்ச்சி கழகத்தால் பத்தோடு பதினொன்றாக புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த 2016 இல் ஒரு முறை இப்பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. ஹசனைப் போன்றே வாழ வேறு வழியில்லாத நிலையில் இருக்கும் உழைக்கும் மக்கள், பல கோடிகளை வாரி இறைத்து வீட்டு மனைகளையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் விற்கப்படும் வீடுகளையோ வாங்க முடியாத  நிலையில், மீண்டும் அதே இடத்திலேயே தமது வீடுகளை கட்டிக் கொண்டுள்ளனர்.

அதிகார வர்க்கத்தால் தொடர்ச்சியாக 2018 மற்றும் 2022ல் மீண்டும் வீடுகளை இடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இப்படி ஒரு புறம் தான் குடியிருக்கும் வீட்டை பாதுகாத்துக் கொள்ளவே போராடும் நிலையிலிருந்த ஹசனைப் போன்ற தொழிலாளர்கள்தான், அரசு 41 தொழிலாளர்களை மீட்க முடியாமல் நிலைகுலைந்து நின்ற போது, தாமாக ஓடிச் சென்று உதவியுள்ளனர்.

இந்த இடத்தை 2012 ஆம் ஆண்டில் 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் ஹசன். அதில்  12 லட்சம் ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. டெல்லியின் வருவாய்த்துறை அமைச்சர் அதிசி உழைக்கும் மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்துள்ளார். அம்பானி அதானிங்களுக்காகவே துடிக்கும் இதயத்தை கொண்ட மோடி அரசுக்கு உழைக்கும் மக்களின் வலி எங்கே தெரியப்போகிறது.

இப்படிப்பட்ட உழைக்கும் மக்கள் தமது வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் போட்டு, தமக்கான ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டு வாழ்வதையும் பொறுக்க முடியாமல் தான் அதிகார வர்க்கத்தினர் திமிரெடுத்து பாய்கிறார்கள்.

வகீல் ஹசனைப் போலவே சில்க்யாரா சுரங்க மீட்பில் ஈடுபட்ட முன்னா குரேஷி என்ற தொழிலாளி புல்டோசர் தகர்ப்பை – இத்தகைய அநீதியை தட்டி கேட்டுள்ளார். அதற்கு பரிசாக திமிரெடுத்த அதிகார வர்க்கத்தின் அடியாப்படையான போலீசாரால் அவர் தாக்கப்பட்டார்.

இதுதான் 41 பேரை தம் உயிரை பணயம் வைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டதற்கு கிடைத்த பலன்.

ஏன் வீடுகள் இடிக்கப்படுகின்றன?

நாம் எந்த ஊரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அது நமக்கு சொந்தமில்லை. உழைக்கும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாம். அவர்களின் குடியிருப்புகள் சட்டவிரோத கட்டுமானங்களாம். அதிகாரவர்க்கம் இப்படி சொல்லித்தான் புல்டோஸரால் இடித்து தள்ளுகிறது.

அதாவது கார்ப்பரேட்டுகளும் அதிகார வர்க்கத்தினரும் வாழ்வதற்காகவே பெரு நகரங்கள் அழகு படுத்தப்படுகின்றன. அவர்களின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையே உழைக்கும் மக்களான, ஏழைகளான நம் ஒண்டு குடித்தன வீடுகள் அவர்களின் கண்ணை உறுத்துகின்றன. அவர்களுக்கான சாலை, மேம்பால, ரயில் பாதை விரிவாக்கங்களுக்கு நம் நிலம் தேவை.

இதையும் படியுங்கள்:

நாடெங்கும் கார்ப்பரேட் சேவைக்காகவும், அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காகவும்தான் உழைக்கும் மக்களின் குடியிருப்புகள்  அதற்றப்படுகின்றன. இப்படித்தான் உழைக்கும் மக்கள் பெருநகரங்களில் இருந்து புறநகர் பகுதியில் உருவாக்கப்படும் நவீன சேரிகளுக்கு வீசி அடிக்கப்படுகின்றனர்.

காவிகளின் ஆட்சி இஸ்லாமியர்கள், எதிர்த்து போராடுபவர்கள் ஆகியோரின் கடைகளையும், வீடுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் அதிகம் குறிவைக்கிறது இது இந்திய தலைநகர் டெல்லிக்கு மட்டுமல்ல அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் பொருந்தும்.

இது யாருக்கான வளர்ச்சி?

பெருநகரங்களில் தொடர்ச்சியாக உள்கட்டுமான வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. திரும்பத் திரும்ப சாலைகள் மறு சீரமைப்பு செய்யப்படுகின்றன.

பெருநகரங்கள்  ஆறு வழி, எட்டு வழி சாலைகள், அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள், மேம்பாலங்கள் என உறுமாற்றம் பெறுகின்றன. சபர்பன் ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் என பல வசதிகள் உருவெடுக்கின்றன. ஆங்காங்கே கண்ணை கவரும் பூங்காக்களும், நடைபாதையோர புல்வெளிகளும், மலர்ச்செடிகளும் முளைக்கின்றன.

இவற்றை கட்டி எழுப்பி பராமரிப்பதற்கு மட்டுமே உழைக்கும் மக்களான நாம் தேவை. இவற்றை பயன்படுத்தவோ, அனுபவிக்கவோ நாம் இங்கு இருக்க முடியாது.

நகர்புறத்தின் அடித்தட்டு உழைக்கும் பிரிவினர் புறநகர் பகுதிக்கு விரட்டியடிக்கப்படுவது முடிவுக்கு வருவதே இல்லை. தற்போது வரையறுக்கப்பட்ட நவீன சேரிகளிலிருந்தும் அடுத்த 20 ஆண்டுகளில்  மீண்டும் விரட்டப்படுவார்கள். இதுவே தொடர்கதை ஆகிறது.

உண்மை சுடுகிறது!

தம் உயிரை பணயம் வைத்து 41 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட வகீல் ஹசன் இதை எதிர்பார்க்கவில்லைதான். துளியும் சுயநலன் இல்லாமல், மனித உயிரைக் காக்க துணிந்து களமிறங்கி சாதித்து காட்டிய போது, இவர்கள் தமக்காக எதையும் கோரவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது “எனது வீட்டை மட்டும் எனக்கு தாருங்கள்” என்று தான் அன்று அவர் கோரி இருந்தார்.

சொன்னதை செய்யும் நேர்மையோ, நாணயமோ, துளியும் இல்லாதவர்கள் தான் அதிகார வர்க்கத்தினர் என்பதை மீண்டும் இச்சம்பவம் நிரூபித்துள்ளது.

இவர்களை சட்டவிரோதமாக  எலிவளை சுரங்க தொழிலாளர்களாக வாழும்படி கை கழுவி விட்டதும் இதே அரசுதான். மோடி அரசானது தான் அம்பலப்படுவதை தவிர்ப்பதற்காக சிறிதும் கூச்சநாச்சம் இல்லாமல் அவர்களின் காலை பிடித்து காரியத்தை சாதித்துக் கொண்டு,  உதைத்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது? உண்மையிலேயே ஆட்சியாளர்களின் பார்வையில் இவர்கள் மனிதர்கள் அல்ல ; வளைக்குள் இருக்கும் எலிகள்தான்!

அப்பாவி தொழிலாளர்களான வஹீல் ஹசன் போன்றோருக்கு அவர்களின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கியிருப்பதன் மூலம் டெல்லி வளர்ச்சி கழக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நிரூபித்துள்ளனர்.

இத்தகைய கேடுகெட்ட அரசுக்கு நாம் எவ்வளவுதான் கீழ்ப்படிந்து உழைத்தாலும் இவர்களிடமிருந்து கருணையை துளியும் எதிர்பார்க்க முடியாது என்பதை இடித்துத் தள்ளப்பட்ட செங்கற்கள் உணர்த்தி நிற்கின்றன. குடும்பத்தோடு தெருவில் நின்று போராடி வரும் வகீல் ஹசன் இந்த கசப்பான உண்மையை உணர்ந்திருப்பார் மற்றவர்களும் உணர்வது எப்போது?

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here