பாசிச பாஜக அரசின் பத்து ஆண்டுகால ஆட்சியால்  மோடி மீது மக்களுக்கு இருந்த மயக்கம் தற்பொழுது போய்விட்டதே என்ற அச்சம் பாஜகவினருக்கு வந்து விட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க  பாஜகவினரின் தோல்வி பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் பாஜகவினரின் தலை மீது மிகப்பெரிய இடியாக இறங்கி இருக்கிறது காங்கிரசின் தேர்தல் அறிக்கை.

இந்த இடியை சமாளிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மதவெறி நஞ்சைக்  கக்க ஆரம்பித்து விட்டார்.

மோடி கக்கிய விசத்தை பார்க்கும் முன்பாக மோடி தலையில் இறங்கிய இடியை கொஞ்சம் பார்த்து விடலாம்.

விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் 750 க்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்திலேயே உயிர் விட்ட நிலையில் வட மாநில விவசாயிகள் பாஜக-வினர் மீது மாபெரும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், விவசாய விளைபொருளுக்கு (எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த) குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்து புதிய சட்டம் இயற்றப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உயிர் கொடுத்து வேலை செய்ய வேண்டியுள்ள ராணுவத்தில்  ராணுவ வீரர்களை நிரந்தரமாக சேர்ப்பதற்கு பதிலாக அக்னிபத் என்ற பெயரில் (ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் பணி என்ற அடிப்படையில்) கூலிக்கு ஆள் சேர்ப்பதால் ஆத்திரமடைந்த வட மாநில இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, முப்படைகளிலும் பழைய நடைமுறைப்படி வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விக்கடனை திருப்பி செலுத்துவதற்கு  வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மகிழும் வகையில், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாததால் கொதிப்படைந்து போயிருக்கும் இளைஞர் பட்டாளம் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இவை மட்டுமின்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். தேசிய சமூக உதவிதிட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். என்பன போன்ற  மக்கள் மனங்களை கவரும்  ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதால் தலை கிறுகிறுத்துப் போய்  மோடி செய்வதறியாது தவித்துக் கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது.

காங்கிரசின் இடியால் தலை கிறுகிறுத்துப் போன மோடி, தனது பத்தாண்டு கால ஆட்சியில் செய்த அயோக்கியத்தனத்தை, மக்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு நாட்டு மக்களை இந்து – முஸ்லிம் என்று பிரித்து வெறுப்பை வளர்ப்பதற்கு முயன்று வருகிறார்.

காங்கிரஸ்  தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளின் மீது மக்களின் கவனம் சென்று விடக்கூடாது என்பதற்காக, கீழ்த்தரமான முறையில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தாக்கத் தொடங்கி இருக்கிறார் மோடி.

இதையும் படியுங்கள்:

காங்கிரசின் தேர்தல் அறிக்கை என்பது பொய்களின் மூட்டை என்றும் அதன் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக் கொண்டிருந்த கருத்துக்களைத்  தான் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தற்பொழுது பிரதிபலிக்கிறது என்றும் அந்தக் கருத்துக்களை தற்போது இந்தியாவில் திணிக்க காங்கிரஸ் முயல்கிறது என்றும்  மோடி மதவெறி நஞ்சைக் கக்கி உள்ளார்.

அதாவது முஸ்லிம்களின் நலனுக்காகத்தான் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறது, இந்து மக்களின் நன்மைக்காக அல்ல என்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியாவே துண்டு துண்டாக உடைந்து விடும் என்றும் கூவிக் கொண்டிருக்கிறார் 56 இன்ச் பாசிச  மோடி.

நாளுக்கு நாள் தனது செல்வாக்கு சரிந்து வருவதைக் கண்டு துடித்துக் கொண்டிருக்கும் மோடி மீண்டும்  ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை மக்களுக்கு உணர்த்தி  நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதற்கான போராட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here