“எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக! (மனு 8:379) என்று சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பனுக்கு ஒரு நீதி என்பதை நியாயப்படுத்துகிறது மனுநீதி!

இந்தப் பாதுகாப்பு 1837 வரை பிரிட்டிஷ் அரசாலும் அளிக்கப்பட்டு வந்தது. 1837 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தில்தான் முதன்முதலாகப் பார்ப்பனர் மரண தண்டனைக்குட்பட்டவராக்கப்பட்டனர். இந்திய சமஸ்தானங்களில் பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை என்ற பாதுகாப்பு நீடிக்கின்றது. இந்தச் சலுகை அளிப்பதை எதிர்த்த பொது மக்களைச் சமாதானப்படுத்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் பார்ப்பனரான திவான் ஒரு சாமர்த்தியமான வழியைக் கண்டார். பார்ப்பனர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிப்பதைத் தவிர்ப்பதற்காகத் தூக்குத் தண்டனையையே ஒழித்துவிட்டார் என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மேற்கண்ட கூற்றை நிரூபித்து வருகிறது. இதனாலேயே ஜனநாயக ச்க்திகளிடம் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பாசிச் ஜெயலலிதா நீதிபதிகளை எப்படியெல்லாம் ஆட்டுவித்தார், நீதிமன்றங்களை எவ்வாறெல்லாம் ஏய்த்தார் என்பதை நாம் அறிவோம். அவர் கையூட்டு கொடுத்தோ அல்லது மிரட்டியோ தனக்குச் சாதகமான தீர்ப்புகளை வாங்கினார்.

இப்போது நீதிபதிகள் நியமன ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றிருக்கும் ஒன்றிய அரசு, தனக்குச் சாதகமான நீதிபதிகள் நியமனத்துக்கு, அதாவது ’நாக்பூர் த்யாரிப்புகளுக்கு’ ஒப்புதல் வழங்குவதன் மூலமும், வழக்குகளைக் குறிப்பிட்ட நீதிபதிகளின் முன் பட்டியலிடுவதன் மூலமும் கூடுதல் அதிகாரத்தோடு நீதித்துறையை கபளீகரம் செய்து வருகிறது. நீதிமன்றங்களில் இப்போதெல்லாம் மிக அரிதாகவே நீதி வழங்கப்படுகிறது. நீதிக்குப் பதிலாக வெறும் தீர்ப்புகள் வழங்கும், அதிலும் குறிப்பாக ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக தீர்ப்புகள் வழங்கும்  (அநீதி)மன்றங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் இத்தகைய நீதித்துறையின் காவலனாக, நீதியை நிலை நாட்ட வந்துள்ள அவதார புருஷனாக ஒரு சில நீதிபதிகள் பார்க்கப் படுகின்றனர். அப்படியான ஊடக வெளிச்சம் சமீப நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது பாய்ச்சப்படுகிறது. இவர் எத்தகைய அதிகாரங்களுக்கும் அடிபணியாமல் துணிச்சலோடு செயல்படுவதாகவும், இன்றைய அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதாகவும் வர்ணிக்கப்படுகிறார்.

ஊழலை ஒழிக்காமல் ஓயமாட்டாராம்
ஆனந்த் வெங்கடேஷ்!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 6 அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவ்வழக்குகளை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தார் ஆனந்த் வெங்கடேஷ்.  அந்த ஆறு பேரில் நால்வர் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் தவிர அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி போன்றோர் இதில் அடங்குவர். இந்த ஜனவரி மாதம் முதல் நீதிபதி. வெங்கடேஷுக்கு இன்னாள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகள் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக அமைச்சர்கள் மூவர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசுத் தரப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய மூன்று பங்குதாரர்களும் இணைந்து குற்றவியல் நீதித்துறை நிர்வாகத்தை முழு கேலிக்கூத்தாக்கி உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும், கீழமை நீதிமன்றங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார். கூடுதலாக அந்தத் தீர்ப்புகளைப் பார்த்த பின்பு மூன்று நாட்களாக தூக்கமே வரவில்லை எனவும் கூறினார்.

நமக்கும் தான். பாசிச பாஜகவின் தமிழகத் தலைவர் திருவாளர் அண்ணாமலை முன்மொழிகின்ற திமுக பைனல்ஸ் என்பதில் குறிப்பிடப்படும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பெயர்கள் இருப்பதற்கும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதித்துறையை  காப்பாற்ற புறப்பட்டு, முன்பு நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களை, சூமோட்டோ வழக்குகளின் மூலம் கைது செய்வது, அவர்களின் மீது உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிப்பதிலும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பெயர்கள் இருப்பதற்கும் இடையில் வலுவான ’நூல் இணைப்பு’ உள்ளது என்பதை நினைத்துப் பார்க்கும்போது நமக்கும் தூக்கம் வருவதில்லை.

ஆர்.எஸ் பாரதியின் எதிர்வினை!

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, “2018 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேட்டில் 4800 கோடி ஊழல் நடந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மீது நான் வழக்கு தொடர்ந்தேன்.  உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தப் பிறகு, மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கானது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடியது என்று கூறி ஜூலை மாதம் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அடுத்த இரண்டு வாரத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் வருமானத்திற்கு அதிகமாக 44 லட்சம் சொத்து குவித்து விட்டார் என்ற வழக்கிலும், தங்கம் தென்னரசு 74 லட்சம் சொத்து சேர்த்த வழக்கிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டு தனது பொன்னான நேரத்தை இவர் செலவழிக்கலாமா” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும்  அமைச்சர் பொன்முடி வழக்கு பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று அவ்வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் தானாக முன்வந்து விசாரிக்கிறார். ஆனால் இதே போல விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் மற்றும் வளர்மதி ஆகியோரது வழக்கை இதுவரை விசாரிக்காதது ஏன் எனவும் கேட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது வேண்டுமென்றே ஒருதலைப் பட்சமாக பழிவாங்கும் நோக்கோடு பாகுபாடு காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி
வழக்கின் பின்னணி!

கடந்த 1996 – 2001 காலகட்டத்தில் அமைச்சராக பொன்முடி பணியாற்றிய போது, வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை 2002 – ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் நீதிமன்றத்திலும், அதன் பிறகு வேலூருக்கும் மாற்றப்பட்டு விசாரணை முடிந்து கடந்த ஜூன் 28 ல் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அமைச்சர் பொன்முடி கூறியதை ஆனந்த் வெங்கடேஷ் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அங்கு நீதிபதி சந்திரசூட் வழக்கை தள்ளுபடி கூட செய்திருக்கலாம். மாறாக நீதிபதி ஆனந்தைப் பாராட்டினார். இது சரியான உத்தரவுதான் என்றும், நீதித்துறையில் இவரைப் போன்ற நீதிபதிகள் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்த வழக்கில்தான் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், அவர்கள் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி இந்தத் தீர்ப்புக்கு தடை விதிக்க  மறுத்துள்ளது. எனவே அவரது அமைச்சர் பதவி திரும்பக் கிடைப்பது சிக்கலாகி உள்ளதோடு சிறை செல்லவும் வாய்ப்புள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின்
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு!

திமுக – வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி 2018 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதன் மூலம் 4800 கோடி ஊழல் செய்திருப்பதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கினார். மேலும் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் அதை மீண்டும் உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என்றும் கூறியது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசின் சீலிடப்பட்ட கவரில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட  விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு, ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிய விசாரணை தேவையில்லை எனக் கூறி ஆர்எஸ் பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து  தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இறுதியாக ‘நீதி’ வழங்குவதில் புகழ் வாய்ந்த நீதிபதி பேலா திரிவேதி அமர்வு முன்பு முறைகேடாகப் பட்டியலிடப்பட்டு மீண்டும் விசாரணை தேவையில்லை என்ற ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு  மனுவைத் தள்ளுபடி செய்தது. எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் வழக்கு இவ்வாறாக ஊத்தி மூடப்பட்டது.

நீதித்துறையில் ஒரு அன்னா ஹசாரே!

மேற்கண்ட இரண்டு வழக்குகளை ஒப்பிட்டு பார்த்தாலே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பாரபட்சமான அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியும். திமுக அமைச்சர்களுக்கு எதிராக அறச்சீற்றம் கொண்ட அவர் எடப்பாடி பழனிச்சாமியின் இமாலய ஊழல் வழக்கில் மட்டும் அன்றைய லஞ்ச ஒழிப்புத்துறை உறையில் ரகசியமாக அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்கிறார். இதன் மூலம் திமுக அரசுக்கு வளைந்து கொடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அதிமுக ஆட்சியில் கறாராக இருந்தது என நம்மை நம்பச் சொல்கிறார்.

இவர் உரிய சட்ட நெறிமுறைகளை பின்பற்றி இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  ஒப்புதல் வாங்கினாரா என்பதை தெரிவிக்க இப்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம், “எதை வேண்டுமானாலும் அப்படி எடுக்க முடியாது. அப்படியான அதிகாரம் யாருக்கும் கிடையாது. அப்படி எடுத்தால் இதன் மூலம் எழுகிற சர்ச்சை நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து விடும். சட்டத்தின் ஆட்சியை மதிப்பிழக்கச் செய்யும்” என்று கூறியுள்ளது.

தி பிரிண்ட் இணைய இதழுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த பதிலில், “உச்ச நீதிமன்றம் எதைச் செய்ய வேண்டும் என்று கேட்கிறதோ அதை மட்டுமே செய்ய முயற்சிக்கிறேன். இருக்கும் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி இதைச் செய்கிறேன்” என்று கூறினார்.  மேலும் சமுதாயம் மாறும் வரை என்னால் கட்டிடத்தை கட்ட முடியாது. எனவே எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு செங்கல்லை சேர்க்க முயல்கிறேன் என்றார்.

இதையும் படியுங்கள்:

இப்படி நீதியை நிலைநாட்ட தமிழகத்தில் வெம்பாடுபட்டு ஒவ்வொரு செங்கலாக சேர்ப்பதற்கு பதில் இவரை 2000 இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த மோடியின் குஜராத்திற்கும், இஸ்லாமியர்களின் வீடுகளை குறிவைத்து புல்டோசர் தாக்குதல் நடத்தும் யோகியின் உத்தரபிரதேசத்திற்கும், பட்டப் பகலில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சுதந்திரமாக நடமாடும் மணிப்பூருக்கும் அனுப்பி வைத்தால் சில மாதங்களிலேயே தன் கணக்கில் செங்கல்கள் கிடைக்கும் என்று பரிந்துரைக்கலாம்.

தனது அதிரடி ஆட்டங்களின் மூலமாக தன்னை நீதித்துறையின் இரட்சகனாக காட்டிக்கொள்ள முயல்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.  ஆனால் உண்மையில் அவர் யார் என்பதை அவரது செயல்பாடுகள் நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு போராளியாக வேடம் போட்ட அன்னா ஹசாரேவை நாம் மறக்கவில்லை. அதேபோல நீதித்துறையின் அன்னா ஹசாரேவாகவே ’திடீர் அவதாரம்’ எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இதனையும் மீறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதித்துறை அவலங்களை ஒழிப்பதற்கும், ஊழல் செய்கின்ற யாராக இருந்தாலும் பிடித்து உள்ளே தள்ளுவதற்கும் தயாராக உள்ளார் என்று நம்புபவர்கள் ஒன்று கூமுட்டையாக இருக்க வேண்டும் அல்லது கடைந்தெடுத்த சங்கியாக இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றுதான் என்று கூறுகிறீர்களா? மை லார்ட்! அப்படியே ஆகட்டும்.

  • அன்புச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here