17 நாட்கள் நடந்த நீண்ட மீட்புப் பணியின் முடிவில் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கபட்டுவிட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா பகுதியில் நடந்துள்ள இந்த மீட்பு பணியின் வெற்றிக்காக இந்தியாவே கவலையுடனும் பிரார்த்தனையுடன் எதிர்நோக்கி காத்திருந்தது.

சாதித்த ஹீரோக்கள்!

இதில் சாதித்துக் காட்டியவர்களாக நம் நாட்டில் உள்ள முன்னணி சுரங்க நிறுவனத்தின் ஆலோசகர்கள், துளையிடும் கருவிகளை இயக்கி காட்டிய தொழில்நுட்ப வல்லுநர்கள், நாமக்கலில் இருந்து போர்வெல் இயந்திரத்தை கொண்டு சென்று செங்குத்தாக துளையிட்ட பணியாளர்கள், வெளிநாடுகளில் இருந்து மீட்புப் பணியில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களாக நம் நாட்டில் உதவிக்காக வந்து களப்பணியாற்றியவர்கள் என பலரின் பங்களிப்பும் மக்களால் பாராட்டப்படுகிறது.

கோப்பையை வென்ற அணி!

இந்த குழுக்களின் முயற்சிகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முன்னேற முடியாமல் தேங்கி நின்றபோது, எந்திரங்கள் இதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்ற நிலை வந்த போது, எளிய கருவிகளைக் கொண்டு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஆபத்தான வழி முறையில் சரிந்து விழுந்துள்ள குவியல்களுக்கு இடையே துளை ஏற்படுத்திச் சென்று மீட்பு பணியை சாதித்துக் காட்டிய எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் தான் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றனர்.

மோடியின் தொண்டையில் சிக்கிய முள்!

இப்படி கடைசி நேரத்தில் களமிறங்கி, தன் உயிரை துச்சமாக மதித்து 41 பேர்களை உயிரோடு மீட்டுக் காட்டிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்களை உச்சி முகர்ந்து பாராட்ட மோடியால் முடியாது. ஏனென்றால், இப்படி சாதித்து காட்டியவர்களில் பெரும்பான்மை இஸ்லாமிய சகோதரர்கள். மேலும் எளிய மனிதர்களான இவர்கள் தமது இந்த மீட்பு பணியில் உதவுவதற்கு  ஊதியம் எதுவும் வேண்டாம் என அறிவித்துள்ளனர். சக மனிதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக துணிந்து செயல்பட்டு வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து சாதித்துள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் எப்படி இந்தியாவை இந்தியர்களை நேசிக்க முடியும்? இதை அங்கீகரித்தால் தனது இருப்புக்கே ஆபத்தல்லவா? எனவே தான் மோடி இவர்களை உச்சி முகர்ந்து பாராட்ட தயாராக இல்லை.

இந்த எலி வளை சுரங்க தொழிலாளர்கள் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் இவர்களை இப்படிப்பட்ட தொழிலாளர்களாக மாற்றியவர்களை நாம் ஒருபோதும் கொண்டாட முடியாது.

கனிமக்கொள்ளையர்கள் உருவாக்கும் எலி வளைகள்!

நம் நாட்டின் கனிம வளங்களை முறையாக டெண்டர் எடுத்து பகற் கொள்ளையடிக்கும் அதானி போன்ற மீப்பெரும் கார்ப்பரேட்டுகள் ஒரு புறம். இவர்களே சட்டவிரோதமாக குறுக்கு வழிகளில் நம் நாட்டின் வளங்களை திருட்டுத்தனமாக அபகரிப்பதற்காக, மலைப்பிரதேசங்களில் ஆதிக்க நிலையில் உள்ளவர்களை ஊக்குவித்து சுரங்கம் அமைக்க தூண்டியதால் உருவாகும் கனிம கொள்ளையர்கள் மறுபுறம்.

அரசுடன் எவ்வித ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்ளாமல்,அதிகார வர்க்கத்திற்கு லஞ்சம் தந்து, கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்களை வாரி வழங்கி, சட்டவிரோதமாக மலையை,  மண்ணை குடைந்து கனிமங்களை அதிலும் குறிப்பாக நிலக்கரியை வெட்டி எடுக்கும் சட்டவிரோத கிரிமினல் மாஃபியாக்களால் உருவாக்கப்படுபவர்கள் தான் எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் உயிர் – கார்ப்பரேட்டுகளுக்கு வெறும் மயிர்!

கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்கும் போது இந்தந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சர்வதேச அளவில் வரையறைகள் உள்ளன. நம் நாட்டிற்கும் இது பொருந்தும். ஆனால் சட்ட விரோத சுரங்கம் தோண்டுபவர்கள் இதை தமது கூந்தல் அளவுக்கும் மதிப்பதில்லை. அதாவது சுரங்கத்திற்குள் இறங்கும் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரக்கூடிய வகையிலான எந்த விதிமுறைகளையும் அமுல்படுத்த தயாராக இல்லை.

எலி எப்படி தனக்கான வளையை தன் விருப்பத்திற்கு ஏற்ப தோண்டிக் கொள்கிறதோ, அந்த வளையில் ஒரு நேரத்தில் ஒரு எலிதான் உள்ளே நுழைந்து வெளியே வர முடியுமோ, அதுபோலத்தான் தனித்தனி நபர்களாக ஒரு சிறு பெட்டியை இழுத்துக் கொண்டு, மண்ணை குடைந்து கொண்டு உள்ளே சென்று, நிலக்கரியை வெட்டி அந்த பெட்டியில் நிரப்பி  ஊர்ந்தப்படியே இழுத்து வெளியே கொண்டு வந்து குவிக்க வேண்டும்.

இப்படி எலிவளை சுரங்கம் தோண்டும் வேலை செய்வதற்காக சுரங்க மாஃபியாக்கள் யாரை தேர்வு செய்கிறார்கள்? பெரியவர்களை அல்ல; துடிப்பான சிறுவர்களே விருப்பத்தேர்வாக இருக்கிறார்கள். அதாவது அப்பன் உள்ளே நுழைந்து நிலக்கரியை வெட்டுகிறான் என்றால் , மகன் சிறு பெட்டியை இழுத்தபடி தவழ்ந்தே சென்று நிலக்கரியை நிரப்பி கொண்டு திரும்பவும் வெளியே வந்து கொட்ட வேண்டும். இதுவே ஒரு 14 வயது பையனாக இருந்தால் அவன் சுயமாக ஒரு வளையை தோண்டிக் கொண்டே செல்ல வேண்டியது தான்.

உயிருக்குத் துணிந்தால் தான் கால் வயிற்றுக்கு சோறு!

இப்படி எலிவளை சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்து மேற்பரப்பில் கொண்டு வந்து குவிப்பதற்கு அவர்கள் வாங்கும் கூலி கால் வயிற்று கஞ்சிக்கானது மட்டுமே.

உள்ளே சென்றவர்கள் ஒருவேளை திரும்பி வரவில்லை என்றால், குடும்பத்தினர் சுரங்கத்திற்கு சென்று தேட வேண்டும் என்றால், அதற்கு வாய்ப்பே இருக்காது. எந்த வளையில் எந்த திசையில் எப்படி நுழைந்தார்கள்? எங்கே சரிவு ஏற்பட்டது? அல்லது எங்கே விபத்து ஏற்பட்டது? உயிரோடு இருப்பார்களா – இருக்க மாட்டார்களா? இதைப்பற்றி எந்த விவரமும் வெளியில் இருப்பவர்களுக்கு தெரிய வராது.

அதனால் சுரங்கத்திற்குள் சென்றவர்கள் மீண்டும் வந்தால் உண்டு. இல்லையேல் அப்படியே கைவிடப்படுவார்கள். அதாவது அப்பனோ பெரியப்பனோ அப்படி சுரங்கத்திற்குள் புதையுண்டு விட்டாலும், சிறுவனான மகன்கள் தொடர்ந்து வேலையை தொடர்வார்கள். இதுவே அவர்களின் தலையெழுத்தாக ஆளும் வர்க்கங்களால் திணிக்கப்பட்டுள்ளது.

நம்மை விட கடுமையாக உழைக்கும்  “ஹிந்திகாரர்கள்”!

முன்னேறிய மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி வரும் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு நம்மை காட்டிலும் பல மடங்கு கடின உழைப்பை கொடுத்து விட்டு, கார்ப்பரேட்டுகள் தரும் 10,000 என்ற சொற்ப சம்பளத்தை பெரும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்கின்றனர். இந்த மகிழ்ச்சி எதிலிருந்து உருவாகிறது என்றால், இங்குள்ள தொழில் நகரங்களில் வேலை செய்வதை விடவும் பல மடங்கு கடினமாக, உயிருக்கு உத்தரவாதமற்றதாக, மிக மிகக் குறைந்த கூலியை ஈட்டக்கூடியதாகத்தான் தமது சொந்த மாநிலத்தில் எலிவளை சுரங்கத்தில் உழைத்து வருகிறார்கள் என்ற எதார்த்தத்தில் இருந்து உருவாகிறது.

எலி வளை சுரங்க வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, தொழில் நகரங்களுக்கு வந்துள்ள வட மாநிலத்தவர்களின் நவீன கொத்தடிமை வாழ்க்கை கூட சொர்க்கமாகவே தோன்றுகிறது. பாதுகாப்புக்காக தரப்படும் ஹெல்மெட், ஷீ,  சீருடை உள்ளிட்டவை எலி வலை சுரங்கத்துக்குள் செல்பவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை.

இப்படி சட்டவிரோத கனிமக் கொள்ளையர்களால் உயிருக்கு உத்திரவாதமற்ற வகையில் உழைக்க நிர்பந்திக்கப்பட்ட சாதாரண சுரங்க தொழிலாளர்கள் தான் தமக்கான பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்திக் கொண்டு, மண்ணைக் குடைந்து கனிமத்தை வெளியே கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அப்படி தம் உயிரை பணயம் வைத்து தலைமுறையாய் தலைமுறையாக உருவாக்கிய நுட்பத்தை கொண்டு இன்று சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டும் காட்டியுள்ளார்கள்.

எனவேதான் சொல்கிறோம் மீட்பு பணியில் ஈடுபட்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை நாம் கொண்டாடலாம். ஆனால் இவர்களை இப்படிப்பட்ட தொழிலாளர்களாக ஆக்கிய கார்ப்பரேட் கிரிமினல்களை சுரங்க மாஃபியாக்களை நாம் ஒருபோதும் கொண்டாட முடியாது.

சோரம் போகும் ஊடகங்கள்!

பெரும்பாலான ஊடகங்கள் இத்தகைய இருண்ட பக்கங்களை வசதியாக மறைத்து விட்டு, மீட்பில் ஈடுபட்டவர்களுக்கு புகழ் மாலை சூட்டி புளங்காகிதம் அடைகின்றன. இது அந்த எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதி அல்லவா?

குறிப்பாக தினமணி பத்திரிக்கையின் 01.12.23  தலையங்கம் தொழிலாளர்களின் அவலத்தை வசதியாக மறைத்து விட்டு, அப்பட்டமாக மோடிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு  முட்டுக் கொடுக்கிறது. 140 கோடி பேர் உற்றுப் பார்த்த ஒரு மீட்பு பணியை மோடி எட்டியே பார்க்கவில்லை.

மோடி நேரில் பார்வையிட சென்றிருந்தால் அது மீட்பு பணியை பாதிக்கும் என்ற கண்ணோட்டத்தில் தான் புத்திசாலித்தனமாக தவிர்த்து உள்ளதாக கருத வேண்டும் என முட்டுக் கொடுக்கிறது தினமணி.

ஏற்கனவே 2019 இல் விபத்து நடந்த அதே மலைப்பகுதியில்தான் இப்பொழுது சில்க்யாரா சுரங்கம் தோண்டப்பட்டு மீண்டும் இரண்டாவது முறையாக விபத்து நடந்துள்ளது என பதிவு செய்துள்ளது தினமணி. இதிலிருந்தாவது பாடம் கற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

இனியாவது உறுதியற்ற பாறைகளை கொண்ட இமயமலைகளில் இப்படிப்பட்ட கட்டுமானத்தை எல்லாம் தவிர்த்து விட்டு, இயற்கையை சிதைக்காமல் வாழ வேண்டும், நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று கார்ப்பரேட் ஆதரவு  காவி பாசிஸ்ட்டுகளின் அரசுக்கு புத்தி சொல்வதற்கு ஊடக மாமாக்கள் தயாராக இல்லை.

பதிலாக, தான் மோடியின் அடியாள் என்பதை நிரூபிக்கும் விதமாக, சுரங்கத்தை ஆய்வு செய்து மீண்டும் கட்டி முடிக்க வேண்டும் என்றுதான் முன்வைக்கிறது. மோடி அரசு  எதற்காக இந்த சுரங்கத்தை கட்டுகிறது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் இருப்பதாக வலிந்து எழுதி, சீனாவை கட்டுப்படுத்த சீன எல்லைக்கு இந்திய தொகுப்புகளை விரைவாக கொண்டு சென்று சேர்க்க இத்தகைய நவீன கட்டுமானங்கள் அவசியப்படுகிறது என்பதை மோடியின் சார்பாக நமக்கு வகுப்பெடுக்கிறது தினமணி.

நமது 56 இன்ச் மோடிக்கு ஏன் உண்மையை துணிந்து சொல்லும் நெஞ்சுரம் இல்லை? ஆமாம் நாங்கள் சீனாவை கட்டுப்படுத்தவே விரும்புகிறோம் அது அத்துமீறினால் பாடம் கற்றுத் தரவே விரும்புகிறோம் அதற்காகத்தான் எல்லை பகுதியில் இத்தகைய கட்டுமானங்களை உழைக்கும் மக்களின் உயிரையும் பணயம் வைத்து உருவாக்க துடிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டியது தானே! யாரை, எதைக்கண்டு மோடிக்கு அச்சம்?


இதையும் படியுங்கள்:  41 உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய நவயுகா இஞ்சினியரிங் கம்பெனி!


பாசிஸ்டுகளிடம் உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லும் துணிவோ – நேர்மையோ இருக்காது. அதை நாம் எதிர்பார்ப்பதும் பொருத்தம் ஆகாது.

இதற்கு மேலும் சுரங்கப்பாதையை அமைத்தே தீருவேன் என மோடி ஏற்றைக்காலில் நிற்கலாமா? அவர் அப்படி விரும்பினால் தனது சங் பரிவார கூட்டத்தினரை கட்டுமான பணிக்கான களமிறங்கட்டும். அல்லது, தனது கட்சியின் வட்ட மாவட்ட செயலாளர்களை அனுப்பி, அண்ணாமலை போன்றோரை மேற்பார்வையிடவும் பணிக்கட்டும்.

ஒப்பந்தம் எடுத்த நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது பிள்ளைகளையும், குடும்பத்தினரையும் கட்டுமான பணிக்கு சுரங்கத்திற்குள் அனுப்பட்டும்.

இதை விடுத்து உழைக்கும் மக்களை பலி கொடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எலிவளை சுரங்கம் மட்டும் உயிரை குடிப்பது அல்ல. இத்தகைய உறுதியற்ற மலையை குடைந்து அமைக்கும் சுரங்கங்களும் உயிரைக் குடிக்கும். எனவே தவறில் இருந்து பாடம் கற்போம். பழமையான எலிவளைகளையோ அல்லது சில்க்யாரா போன்ற நவீன எலிவளைகளையோ அமைக்க விடாமல் தடுத்து பாடம் கற்பிப்போம். இதுவே 41 உயிர்களை மீட்டுக் கொடுத்த எலிவளை தொழிலாளர்களுக்கு நாம் செய்யும் பிரதிபலன் ஆகும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here