ருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெட்ரந்த் ரஸ்ஸலை பிபிசி நேர்காண்கிறது – ஐம்பது நிமிடக் காணொளி – யூடியுபில் கிடைக்கிறது. இப்படியொரு கேள்வி – ‘இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பின்னரான தலைமுறையினருக்கு அக்காலத்திற்கும் பொருந்துவதாக என்ன சொல்ல விரும்புவீர்கள்?’. பதிலை ரஸ்ஸல் இரு பகுதிகளாகப் பிரிக்கிறார். அறிவுசார் கருத்தாக, ‘கிடைக்கும் தரவுகளின் மெய்வடிவத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் எப்படியாக அவற்றை நம்ப விரும்புகிறீர்கள் என்பதோ, அப்படி நம்புவதால் கிட்டக்கூடிய ஆதாயங்களோ உங்களின் சிந்தனையை மடைமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார். இரண்டாவதாக இதைச் சேர்க்கிறார் ‘சகிப்பைப் பழகுங்கள். நம்மைச் சுற்றியிருப்பவர் நமக்கு ஒவ்வாத ஒன்றைச் செய்யும் விதத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு இயங்கமுடியும். இதன் அடிப்படையில் பூமியில் மனிதகுலம் நீடித்திருக்க வேண்டுமெனில் கருணையையும் சகிப்பையும் மனிதன் தக்கவைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.’

மேற்குலகின் சிக்கல்களாக எவையெல்லாம் இருக்கக்கூடுமென அவர் கருதினாரோ, அவற்றைத்தான் மேற்கத்திய கலாச்சாரத்தைப் பிரதியெடுக்க முனையும் இன்றைய நம் தலைமுறை அனுபவிக்கிறது. காலனிய ஆதிக்கத்திற்கு பின் மெல்ல தலையெடுத்த இந்த அடையாளச் சிக்கலை இன்றைய துரித வாழ்க்கைமுறை இன்னுமே மலினமாக்கியிருக்கிறது.

கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்து வரும் உறவுமுறிவுகளைப் பற்றி ஆய்வாளர்கள் நிறையவே விசனப்பட்டுவிட்டார்கள். அநேகம்பேர் எளிதான பொதுப்புரிதலின் வழியாகவே இதை விளக்க முயல்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று கல்வி – பெரும்பாலான பெண்கள் கல்வியறிவு கிடைத்து மேம்பட்டுவிட்டதாகவும், பொருளாதாரச் சுதந்திரத்தை எட்டிவிட்டதாகவும் மணவாழ்விலிருந்து விலகும் முடிவை மிகத் தீர்க்கமாக அவர்களால் எடுக்கமுடிவதாகவும் இந்த அலசல்கள் சொல்கின்றன. அப்படியான பொருளாதாரச் சுதந்திரமற்றவர்கள் முந்தையத் தலைமுறையின் கட்டுப்பெட்டித்தனமான குடும்ப அமைப்பிற்குள் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் கருத்து வரையப்படுகிறது. சற்று ஊன்றிப்பார்த்தால், இன்றைய பெரும்பாலான உறவுமுறிவுகளை பெண்தான் ஆணிடமிருந்து விடுதலையடைய முன்னெடுக்கிறாள் என்பதான கருத்தை இது முன்வைக்கிறது. இது முழுக்கவே உண்மையல்ல எனினும் பொருட்படுத்தத்தக்க முதல் காரணமாக இதை ஏற்கவேண்டும்.

உரிமைகள் குறித்த புரிதலுடன் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுவது அதிகரித்துள்ளது. எத்தனை குடும்பங்களில் ஆண்பிள்ளைகள் பெண்களின் உரிமைகளைப் பற்றிய புரிதலுடன் வளர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. அம்மாவே தோசை வார்த்து, அம்மாவே ஜட்டியலசிக்கொடுத்து, அம்மா சாப்பாட்டின் ருசி என நாஸ்டால்ஜியா பேசி.. அப்படியான வளர்ப்பிலேயே வந்தவன் ‘அம்மா மாதிரி பொண்ணு வேணும்’ என முந்தையத் தலைமுறை எதிர்ப்பார்ப்புடனே மணவாழ்க்கைக்குள் வந்து நிற்கும்போது, தன்னுரிமை பற்றிய தெளிவுடன் வந்து நிற்கும் பெண்ணை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இப்படியான கட்டத்தில், பெண் தெளிவாகிவிட்டாள் என்பதை பிரிவுக்கு காரணமாக எப்படி சொல்லமுடியும்? விரும்பத்தகாத ஒன்றிற்கு, ஒரு முன்நகர்வின் மீது பழிபோடும் அபத்தம் அது.

‘இதுக்குத்தான் பொட்டக்கலுதைக்கு படிப்பு வேணாம்ன்னு சொல்றது’ என்ற ஸ்லோகத்தில்தான் இது போய் நிற்கும். பெண்ணின் வளர்ச்சி காரணமில்லை; அதை ஏற்கும் உளப்போக்கு ஆணுக்கு இன்னும் கூடிவரவில்லை என்பதையும் பெற்றோர்கள் அதற்கு சிரத்தையெடுக்கவில்லை என்பதையும் அழுத்தமாக சொல்லவேண்டும்.
முக்கியக் காரணமாக இதை ஏற்றுக்கொள்ளும் வேளையில், குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி மட்டும் கைக்காட்டக் கூடாது என்றும் தோன்றுகிறது.

தொழிற்துறையில் மேலெழுவதும் பொருளீட்டுவதும் பெண்ணுக்கு தனக்கேற்ற ஆணைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் சேர்த்தேதான் கொடுக்கிறது. வீட்டாரால் அரங்கேற்றப்பட்ட திருமண உறவிற்குள் வருபவருக்கு இருக்கும் புதிர்களும் சவால்களும் ஒப்பீட்டளவில் சுயத்தேர்வின் பேரில் மணம் முடிப்பவர்களுக்கு குறைவு என்பதை உத்தேசமாக புரிந்துகொள்ளமுடியும். சவால்களும் அழுத்தங்களும் இருக்கும் இடத்தில் நிகழும் முறிவுகளுக்கு இணையாக, சுயத்தேர்வின் வழியான பந்தத்திலும் நிகழுவதற்கு அந்தச் சுதந்திரத்தையே காரணமாக சொல்லுமிடத்தில் ஏதோவொரு சிறிய இழையைக் கவனிக்கத் தவறுகிறோம் என்றே படுகிறது. அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு நசுங்கி வாழும் ஒரு கூட்டத்தை முற்போக்கின் அளவுகோலைக் கொண்டு இடித்துரைக்கும் அதேவேளை, முடிவெடுக்கும் உரிமத்தின் பேரில் சட்சட்டென முறித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் மறுமுனையை ஆராயாமல் விட்டுக்கொண்டிருக்கிறோம்.

‘வேணான்னு முடிவு பண்ணிட்டா யோசிக்காம வெளில வந்துடணும்.. ரொம்ப காம்ப்ளிக்கேட் பண்ணி ஜவ்வு மாதிரி இழுத்துட்டிருக்கக்கூடாது.. அவசியமே இல்ல..’ ஆறாண்டு கால திருமணப் பந்தத்திலிருந்து வெளிவர ஆயத்தமாகியிருந்த நண்பர் இப்படிச் சொன்னார். அப்படி வெளியேறியும்விட்டார். மூன்றாண்டு காதலுக்கு பின்னர் இருவீட்டு ஒப்புதலோடு நிகழ்ந்த மணம். ‘பிரிவதென்று ஆகிவிட்டது.. என்னதான் பிரச்சனை இருவருக்கும்?’ என்றால், இன்னதென அவருக்கு சொல்லத் தெரியவில்லை. சுற்றிவளைத்து ‘ஒத்துப்போகல’ என்றார்.

 

வெறுமனே ‘மேற்க்கத்திய பாதிப்பு’ என இதனைச் சுருக்கமுடியவில்லை. உறவுகள் சார்ந்த மேற்கத்திய உளவியல் மேலோட்டமாகவே இங்கே தருவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதேசத்துக்கான எதார்த்ததுடன் அதைப் போட்டு குழப்பிக்கொள்கிறோம். பிரிவு என்பது அங்குமே அத்தனை லேசில் நிகழ்வதில்லை. Fixing the issue என்ற இடத்தில் நிதானிக்கிறார்கள். பிரிவில் வலிகள் உண்டு. கடந்து மீள ஆலோசனைகளும் சிகிச்சைகளும் உண்டு. சிலர் அவ்விடத்தில் தடம் மாறுகிறார்கள். அவர்களுடைய கலாச்சாரச் பின்னணியில் அவர்களுக்கேயான தீவிரம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு தளங்களில் கொண்டு நிறுத்துகிறது. கடந்துசென்று அடுத்த புதிய உறவுக்குள் போவதை மட்டும் இங்கிருந்து பார்த்துவிட்டு ‘அடடே’ என அதையொரு எளிய வடிவமாக நம்முடைய எதார்த்தத்திற்குள் கொண்டுவர நினைக்கிறோம்.

நம்முடைய அடையாளம் குழுமனப்பான்மை மரபை அடிப்படையாகக் கொண்டது; குடும்ப அமைப்பை அதீதமாக முன்னிலைப்படுத்துவது. நம் சிந்தனைமுறையுமே கூட்டை நோக்கியே மையமிடும் வகையது – இது மேற்குலகின் சுயம்சார்ந்த சிந்தனைமுறைக்கு கிட்டத்தட்ட நேரெதிரானது. தனிமனிதனின் அகவெளிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உளரீதியான சின்ன சின்னக் காயங்களையும்கூட மிக உன்னிப்பாக அணுகும் போக்கு அங்கிருப்பது. அடிப்படைச் சலனங்கள் கூட சமநிலையைச் சீண்டிப் பார்க்கும். தன்னை முன்னிலைப்படுத்தியே ஓர் உறவை அவர்களால் அணுகமுடியும். மாறாக, தன்னுடைய குடும்பம், அணி, நண்பர் குழாம் என்ற அமைப்பு நம்முடையது. இப்போது நாமும் மெல்ல இந்த ‘தான்’ என்ற நிலைக்கு நீந்த ஆரம்பித்திருக்கிறோம். அது தத்தளிப்பு என்ற அளவிலேயேதான் நிற்கிறது. பதிந்த ஒன்றுக்கும் பழக நினைக்கும் ஒன்றுக்குமிடையில் அல்லாடும் தலைமுறை நாம். மேற்கைப் பின்பற்றுவதாக நினைத்துக்கொண்டு, இந்தப் புள்ளியில் அவர்களிடமும் இல்லாத ஏதோவொரு நடைமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.

எந்த இரு தலைமுறைகளுக்கும் இடையிலிருக்கும் தூரத்தை விடவும் அதிகமாக, இந்த முதல் சைபர் தலைமுறை தனக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து மனதளவில் அந்நியப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளே கூட மிகப்பெரிய சிந்தனை இடைவெளியை விதைக்கிறது. 90ஸ் கிட்ஸ் 2k கிட்ஸ் என்பதெல்லாம் வெறும் கேளிக்கை வார்த்தைகளல்ல. மிகக் குறுகிய காலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெறும் உளவியல் நகர்வு அது – தீவிர ஆய்வுக்கு உகந்த களம். தொழில்நுட்பத்தின் உடனடித்தன்மைக்கு பதிலீடாக நம்முடைய மென்னுணர்ச்சிகளின் சிறுபகுதி காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி மெல்ல மெல்ல மரத்துப்போவதை பரிணாமத்தின் பகுதியாகவே நம்புகிறோம்; உறவுகளும் உணர்வுகளும் கேலிப் பொருட்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. எதையும் எதிர்மறையாக அணுகி எள்ளி நகைத்து பிம்பங்களை மிக எளிதாக காலி செய்யும் சமூக வலைதள தோற்றம் மட்டுமே இந்தத் தலைமுறையின் குறுக்குவெட்டு மனோபாவம் இல்லையெனினும், குடும்ப அமைப்பு சார்ந்த ஓர் அதமச் சிந்தனை பெருகிவருவது கண்கூடு.

பொருளாதார நகர்வுகள் உண்டாக்கியிருக்கும் கொதிநிலை ஒரு பக்கம், கலாச்சார அடையாளக் குழப்பங்கள் மறுபக்கம் என ஒரு கிடுக்குப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் தலைமுறையில் உறவுகள் குறித்த விழுமியங்கள் எப்படியாக இருக்கமுடியும் என்பதைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. வேளாண்மை அல்லது அரசுப்பணி சார்ந்திருந்த போன தலைமுறையின் பொருளீட்டும் முறை இப்போது தனியார் துறைகளின் பக்கமாக பெருமளவு மாறிப்போயிருக்கிறது. சம்பாதிக்கும் எல்லைகளை இது விரிவுப்படுத்தி, வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொடுத்திருக்கிறது. அடித்தட்டிலிருந்த குடும்பங்கள் பலவும் முதல் தலைமுறை பட்டதாரிகளால்தான் மேலெழுந்து வந்துள்ளன. இவ்விடத்தில் இந்தப் பணிச்சூழல் திரிபு உண்டாக்கும் உளப்போக்கு மாற்றங்களையும் சேர்த்தே கவனிக்க வேண்டியிருக்கிறது.

வேளாண்மை அல்லது அரசுப்பணியில் இருக்கும் அடிப்படை சுதந்திரமானது பணிநிரந்தரம் என்ற கேந்திரத்தை மையப்படுத்தியது. இந்தப் புள்ளியிலிருந்து மட்டும் பார்த்தால், ஒப்பீட்டளவில் தனியார் நிறுவனம் சார்ந்த பணிகளை விட இவற்றில் அழுத்தங்கள் குறைவு. தனியார் நிறுவனங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் வதைக்கிறது. அலுவலக அனுசரிப்புகளைப் பல்லைக் கடித்துக்கொண்டாவது கடைபிடிக்கவேண்டும். Diplomatic ஆக இருப்பதற்கான மனமுதலீடுகள் வேறு விதமாக Displace ஆகின்றன. அடிப்படை சகிப்புணர்வு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. இதன் விளைவுகள் குவியும் இடம் நம் உறவாக இருப்பதுதான் துரதிருஷ்டம். ஓர் இடத்தில் அடங்கி இளகும் மனம் மறுவிடத்தில் எளிதில் அதிர்வடைகிறது. பொறுமை இழக்கிறது. சின்னச் சின்ன கசப்புகளைக் கூட பூதக் கண்ணாடி கொண்டு அலசுகிறது. நேர்க்கோட்டிலிருந்து சிறு வழுவலையும் காயமாக பார்க்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என்ற பதத்தை அளவிற்கு அதிகமாகவே உறவுகளுக்கு நடுவில் உபயோகப்படுத்துகிறார்கள். எவையெல்லாம் அந்தக் கணக்கில் வரும் என புதிய விளக்கங்களைப் படிக்கிறார்கள்; உருவாக்குக்கிறார்கள்.

முசுடு, முன்கோபி, இறுக்கம்.. போன்ற எளிய வடிவங்களெல்லாம் இப்போது ‘டாக்ஸிக்’ என்ற அடைப்பிற்குள் கொண்டுபோய் நிறுத்தப்படுகின்றன. உறவுகளைக் கையாளுவதில் ‘சகிப்பு’ என்ற விஷயத்தையே மிகவும் பழைய முறையாக பார்க்கிறார்கள். ‘மூடிமறைத்து சுமக்கவேண்டிய அவசியமே இல்லை; சின்னச் சிடுக்கைக் கூட பகிரங்கமாக உடைத்துப் பேச வேண்டும்’ என்ற பார்வை கேட்க ஆரோக்கியமாகத்தான் தெரிகிறது. அப்படி அலசிப் பேசித்தீர்ப்பது சரிதான். தீர்வை நோக்கி பேசுவது ஒரு விதம். குற்றம்சாட்டி வாக்குவாதத்தை வளர்க்கவே பேசுவது இன்னொன்று – அதுதான் இன்றைய சுயம் சார்ந்த சிந்தனைப்போக்கில் அதிகம் காணக்கிடைக்கிறது. உட்கார்ந்து பேசித் தீர்க்கலாம் என்பவர்களை உதாசீனப்படுத்துகிறது.விட்டுக்கொடுத்துப்போவதை அவமானமாகப் பார்க்கிறது.

கீழ்படிதலையும் அனுசரிப்பையும் ஒரே நிறுவையில் வைத்துக் குழப்பிக்கொள்கிறது.
பிணக்குகளின்போது, அறிவுரைகளுடன் வீட்டிலிருக்கும் முந்தையத் தலைமுறை ஆட்கள் உள்ளே வருவார்கள். நம்முடைய நியூ ஏஜ் உறவு வடிவங்களிருந்து பல நூற்றாண்டுகள் பின்தங்கிய ஜீவராசிகளைப் போல அவர்கள் தோற்றமளிப்பார்கள். ‘பூமர்’ என்ற பதம் சமீபப் புழக்கத்தில் ரொம்பவே பிரசித்தமாகியிருக்கிறது. ஒரு பந்தத்திற்குள் சிக்கி, ‘அனுசரிப்பு’ என்ற மந்திரவார்த்தையால் தனக்குத்தானே விலங்கிட்டுக்கொண்டவர்கள்; மீளத் தெரியாமல் அகப்பட்டிருக்கும் தன் முட்டாள்த்தனத்தையே வாழ்க்கைச் சூத்திரமாக அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்கள் – முந்தைய தலைமுறையினர் இப்படித்தான் நம் முன் நிற்கிறார்கள். ஒரு தலைமுறையின் நெறிகளை புதுத் தலைமுறையின் மீது திணிப்பவர்களாக இவர்களைப் பார்க்கிறோம்.

கசப்பையும் அச்சத்தையும் விதைக்கும் பண்பாட்டுக் காவலர்களின் தீவிரவாதம் ஒரு முனை என்றால் குழப்பவாதிகளின் அவசரமும் நிலையாமையும் மறுமுனையில் நிற்கின்றன. எந்நேரமும் ஏதோவொரு கருத்தியல் அதிர்வை உருவாக்கிக்கொண்டிருப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் போலி ஆவேசக் கும்பல் இது. முறிவு நிகழ்ந்த இடத்தில், Bold move என்பதோ, more power to u என்பதோ கசப்புகளைக் களையும் திசையை நோக்கி அல்லாமல் இதையேதோ புதிய வேள்வியைப் போல தோற்றம் கொள்ளச் செய்கிறது. குழப்பங்களுக்கு கலகம் என பெயர் வைத்துக்கொள்கிறது. இவர்களின் அவசரம் நவீனத்தின் சாயத்தால் பூசிமெழுகப்பட்டிருக்கிறது. தழுவிக்கொள்ள ‘மேற்கத்திய’ கவர்ச்சிகர அம்சங்கள் இருக்கின்றன. இடையில் நின்று இரண்டு பக்கங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் சாய்வு இந்த இரண்டாம் கூட்டத்தை நோக்கி நிகழ்கிறது.

இறக்கைகள் முளைத்து மேம்பட்ட ஒரு தலைமுறையின் அகக்கட்டுமானம் மிக ரகசியமாக அதிர்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கல்வியறிவில் பின்தங்கிய அதன் இன்னொரு பிரிவு மீசையை முறுக்கிக்கொண்டு அரிவாளைக் காட்டிக்கொண்டு டிக்டாக்கில் சாதிவெறி பேசிக்கொண்டிருக்கிறது. இரண்டாமதைப் பரிகசத்து மேலெழ முனையும் தடுமாற்றத்தில், முந்தைய கூட்டம் தன்னுணர்வின்றி அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கை மேம்படும்போது அதற்கு ஒத்திசைத்து உறுதிப்பட வேண்டிய அகத்தையும் அடையாளங்களையும் புறமயக்கங்களில் தவறவிடும் விளிம்பிலேயே இருக்கிறார்கள்.

குடும்பநல ஆலோசகர்களாக இருக்கும் நண்பர்கள் சிலர், முரண்களைக் களைய நினைப்பதைவிட இன்றைய சமூகம் அவற்றை அடிக்கோடிட்டு பூதாகரப்படுத்தவே முயல்வதாகவும் பிரிவை ஆதரிக்கும் குரல்களையே இவர்கள் தேடுவதாகவும் அவதானிக்கிறார்கள். பிரிவு என்பது ஒருசிலருக்கு நிஜமான விடுதலையாக இருக்கலாம். உறவுகளின் பல திசைகளில் அதுவும் ஒன்றுதான். அதற்காக அதுதான் ஒவ்வொரு சலனத்திற்கும் தீர்வு என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொள்வது ஆபத்தானது.

சகிப்பு என்பது கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதல்ல; தாங்கிக்கொண்டு கடந்துபோவதும் அல்ல. அடுத்தவரின் தரப்பிலிருந்து யோசித்து அவருக்கான நியாயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை இருவருக்கும் இடையிலான தளத்திற்கு கொண்டுவந்து இருவருக்கும் ஏற்புடைய வடிவமாக அதனை மாற்ற முயல்வது. இது இருபாலாருக்கும் பொருந்தும் நெறி. ‘இதெல்லாம் எதுக்கு பண்ணனும்’ என்றால், உறவுகளுக்கான முழுமையே இப்படியான efforts இல் அடங்கியிருக்கிறது.
’எங்க அப்பா அம்மா வழவழான்னு பண்ணிட்டிருந்த தப்ப நான் பண்ண விரும்பல.. இத ப்ரேக் பண்ணிக்கிறதுதான் ஐடியல்..’ எனுமிடத்தில் மிகத் திட்டவட்டமாக அப்பா அம்மாக்களின் கண்மூடித்தனமான சகிப்புணர்வைக் கொச்சையாகத்தான் இவர்களால் பார்க்கமுடிகிறது. ஒரு தலைமுறை வாழ்க்கைநெறி என நம்பிய ஒன்றை, மொத்தமாக அபத்தம் என புறந்தள்ளும் புள்ளிக்கு அடுத்த தலைமுறை வந்துநிற்கிறது. எத்தனை பெரிய கருத்தியல் பிளவு இது. ஆனால், இந்த இரு புள்ளிகளுக்கும் இடைப்பட்ட வெளியில்தான் தீர்வு எங்கேயோ இருக்கிறது.

மயிலன் சின்னப்பன், எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here