தீவிர மன நோய்கள் உருவாகும் விதம்!
சாதகமற்ற சமூக சூழ்நிலைகளே மன உளைச்சலையும், பதட்டம் மற்றும் மனச்சோர்வு, அதீத நம்பிக்கை, ஒன்றின் மீதான வெறி மற்றும் கற்பனாவாதம் உள்ளிட்ட உணர்ச்சிக் கோளாறுகளையும் (விஜய் கட்சியின் ரசிகர்கள்) ஏற்படுத்துகின்றன. எனவே மனிதனின் புலனுணர்வு இந்த சமூகத்தால் தான் கட்டமைக்கப்படுகிறது என்ற உண்மையை உணர முடிகிறது. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள்தான் மக்கள் எதை விரும்ப வேண்டும், யாரை நம்ப வேண்டும், எது ஏற்கத்தக்கது, எது தீங்கானது போன்றவற்றை வடிவமைக்கின்றன.
நிலவுகின்ற முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்க உளவியலாளர்கள், விளம்பர ஆலோசகர்கள் மற்றும் மேலாண்மை வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள். மக்களில் சிலர் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாததை எதிர்த்து வெளிப்படையாக கிளர்ச்சி செய்கிறார்கள். மற்றவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவர்களில் சிலர் போதைப் பழக்கத்திற்கும், சிலர் தற்கொலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
தீவிரமான உளவியல் பிரச்சனைகள் பொதுவாக நடுத்தர வயதைத் தாண்டி முதிர் பருவத்திற்கு மாறும் காலகட்டத்தில் உருவாகின்றன. அப்போதுதான் வாழ்வின் முரண்பாடு தீவிரமாக உணரப்படுகிறது. இந்த முரண்பாட்டைத் தீர்க்க இயலாமையே சிலரை மனச்சிதைவுக்கு ஆளாக்குகிறது. அந்த நிலையில்தான், உலக யதார்த்தத்திலிருந்து விலகி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவற்றை கற்பனை உருவகங்கள் மூலம் வெளிப்படுத்தும் மாய உலகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்குள் பேசிக் கொள்கிறோம். ஆனால் ஸ்கிசோஃப்ரினியா எனும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உள் மனக் குரல்கள் வெளியிலிருந்து வருவதாக தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். காட்சி சார்ந்த அம்சங்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, உண்மையில் இல்லாத உருவங்கள் மற்றும் பொருட்களின் வடிவங்களாக – மாயத் தோற்றங்களாக தெரிகின்றன.
குழந்தைகளும் தப்புவதில்லை!
குடும்பங்களில் ஏற்படும் நெருக்கடிகளின் மூலம், குழந்தைகளின் உணர்ச்சித் தேவைகள் நிறைவேற்றப்படாமல் போகின்றன. இந்நிலையில் குழந்தைகளின் வாழ்க்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, தகவல்களை மனப்பாடம் செய்வதற்காக அவர்களை நீண்ட நேரம் மூடிய அறைகளில் அடைத்து வைப்பதன் மூலம் பள்ளிகள் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் வன்முறையாக நடந்து கொள்ளும் போது, அவர்களை மனநல குறைபாடு உடையவர்களாக வல்லுனர்கள் முத்திரை குத்துகின்றனர். 2013 ஆம் ஆண்டிலேயே 17 வயதுக்குட்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கக் குழந்தைகளுக்கு மனநல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில் 10 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்கும் உட்பட்டவர்கள் என்பதுதான் கொடுமை.
நெருக்கடியில் தள்ளும் முதலாளித்துவம்!
நம்மை நோய்களுக்கு ஆட்படுத்தாத ஒரு உலகம் நமக்குத் தேவை. முதலாளித்துவம் முழு உலகத்தையும் மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. அது மனிதத் தேவைகள் என்பவற்றை அகற்றப்பட வேண்டிய தடைகளாகக் கருதுகிறது. முதலாளிகள் விரும்பும் வகையில் உற்பத்தியில் ஈடுபடாமல் சுணக்கம் காட்டுபவர்கள் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
படிக்க:
♦ மனநோய்: ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெற்றெடுத்துள்ள கொடிய நோய்!
♦ முதலாளித்துவம் உருவாக்கும் உளவியல் பிரச்சனைகள் – சோசலிச சமூகமே தீர்வு!
முதலாளித்துவத்தின் கீழ் ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியமற்றது. முடிவில்லாதப் போரின் கொடூரங்களும், சுற்றுச்சூழல் அழிவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துயரத்தை மேலும் கூட்டுகின்றன. முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனம் உலகெங்கும் வாழும் மக்களுக்கு மன அதிர்ச்சியை உருவாக்குகிறது. அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றால் மனிதத்தன்மையை இழக்க வேண்டியிருக்கும்.
கடந்த 45 ஆண்டுகளில் சர்வதேச அளவில் தற்கொலை விகிதம் 60% உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உலகெங்கும் ஆண்டுக்கு சுமார் 7.5 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் கிட்டத்தட்ட 75 % பேர் வறிய அல்லது வளரும் நாடுகளில் உள்ளனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சோசலிச சமூகமே நோய் தீர்க்கும் மருந்து!
முதலாளித்துவத்தின் கீழ் நோய்க்கான சமூகக் காரணிகளை அகற்றுவது கடினம். ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை குறைத்து விடும். மாறாக தற்போதுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த சூழலில் மக்களின் செயல் திறன் அதிகரிக்க வேண்டும் என்று இப்போது நிலவும் அமைப்பு விரும்புகிறது. அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சமூக ஆய்வைத் தவிர்த்துவிட்டு, தனிப்பட்ட காரணிகளைப் பற்றிய ஆய்வு என்ற அளவில் வரம்பிடப்படுகிறது.
மன நோய்க்கான சிறந்த சிகிச்சை சமூக ஆதரவு ஆகும். அமெரிக்கா மற்றும் கனடாவில் நடத்திய ஆய்வுகளில் வழக்கமான மருந்து சார்ந்த சிகிச்சையை பெற்ற நோயாளிகளை விட, குறைவான மருந்துகளையும் அதிக குடும்ப ஆதரவையும் பெற்ற மனநோயாளிகள் விரைவில் குணமடைந்தனர் எனக் கண்டறியப்பட்டது. சமூக ஆதரவால் புலனுணர்வு கோளாறுகளை சரி செய்ய முடியும் என்ற உண்மை, கோளாறுகள் சமூக அடிப்படையிலானவை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
மேலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் மனநோயை குணப்படுத்த முடிகிறது. அமெரிக்காவில் 8 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில், வறுமையில் வாடாத குழந்தைகளை விட ஏழைக் குழந்தைகளுக்கு நான்கு மடங்குக்கும் அதிகமாக மனநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோர்களின் வருமானம் அதிகரிக்கும் நிலையில், தங்களது குழந்தைகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்பதால் அப்போது மன நோய் பாதிப்பும் வெகுவாகக் குறையும்.
முதலாளித்துவத்தை ஒழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சமூகத்தை நிறுவிய பிறகு, எஞ்சியிருக்கும் பிரச்சினைகளில் உயிரியல் எத்தகையப் பங்கு வகிக்கிறது என்பதை தீர்மானிப்பது எளிதாகிவிடும். அதுவரை சமூகப் பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வுகளை வலியுறுத்த வேண்டும். அவற்றை விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்களால் தனிப்பட்ட அளவில் தீர்க்க முடியும் என்ற மாயையில் மூழ்கக் கூடாது.
வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தனிப்பட்ட பிரச்சனைகளை கூட்டாக தீர்ப்பதற்கான கதவுகளை திறந்துள்ளது. பல பத்தாண்டுகளாக கூட்டுத் தீர்வுகள் மீதான நம்பிக்கைகள் குலைந்துள்ளது. இத்தகைய மனச்சோர்வுக்கு சோசலிஸ்ட்டுகளும் தப்பவில்லை. இன்று போராட வேண்டும் அல்லது நாளை நசுக்கப்படுவோம் என்ற நிலையில் உள்ள பெரும்பான்மையினருக்கு போராட்டம் தான் ஒரே வழி.
அந்தப் போராட்டங்களில் வெற்றி பெற நாம் சோசலிச கருத்தாக்கங்களை உழைக்கும் வர்க்கத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். விருப்பமான வேலை மற்றும் சிறப்பான வாழ்க்கை நிலைமைகளுக்காக போராடும் போதுதான் நாம் ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும். அனைவரின் திறமைகளையும் பயன்படுத்தி அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு சோசலிச சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் செயல்பாட்டில் தான் உளவியல் பிரச்சனைகள் அற்ற ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
- குரு







முதலாளித்துவம் உருவாக்கும் உளவியல் பிரச்சனைகள் ! சோசலிச சமூகமே தீர்வு !
முதலாளித்துவம் உருவாக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகளில் உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது புள்ளிவிவரத்தோடு கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் ஐந்து வயது குழந்தைகளும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது ஆகவே முதலாளித்துவத்தின் கொடூரம்தான் ஒளிவிளக்கான காரணம் என்பதை இந்த கட்டுரை தெளிவாக உணர்த்துகிறது தீர்வு செலக்சன் சமூகமே மாற்று என்பதை முன்வைக்கிறது
கட்டுரை ஆசிரியர் குரு அவர்களுக்கு நன்றி
கட்டுரையாளர் தோழர் குரு கட்டுரையின் முதல் பகுதியின் துவக்கம் முதல் கட்டுரையின் இறுதி வரை சீரான முறையில் – ஆழமாகப் பரிசீலித்து நிலவுகின்ற சமூக சூழல்களையும் – சீர்கேடுகளையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பித்து, அனைத்துவித நோய்களுக்கும் மற்ற பிற சீரழிவுக் கலாச்சாரத்திற்கும் தீர்வு சோசலிச சமூக அமைப்பில்தான் அடங்கியுள்ளது என்பதனையும் அதற்காக களம் இறங்கி உழைக்கும் மக்கள் போராட வேண்டிய அவசியத்தையும் பரந்து விரிந்த தன்மையில் கட்டுரையாளர் படைத்துள்ளார். கட்டுரை மிகவும் சிறப்பு. தோழருக்கு வாழ்த்துக்கள்!