
ஏகாதிபத்தியமாக உருவெடுத்துள்ள முதலாளித்துவ சமூகத்தில் மனநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இத்தகைய மனநோயின் சமூக அடிப்படையை உயிரியலாளர்களும், மனநல மருத்துவர்களும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் மனநோய் என்பதை தனிமனித குறைபாடாகப் பார்க்கின்றனர்.
சமூகக் காரணிகளை புறந்தள்ளி தனிமனித மூளையின் வேதியியல் மாற்றங்களை கையாளுதல் மற்றும் நடத்தைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கே இன்றைய நவீன மருத்துவம் முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. உளவியல், உளப் பகுப்பாய்வு, உளச்சிகிச்சை, மருத்துவம், மரபியல் மற்றும் பெரும்பாலான பிறத் துறைகள் தனிநபரை சமூக சூழலில் இருந்து தனியாக பிரித்து அணுகுகின்றன.
ஆனால் மார்க்சிய முறையானது ஒவ்வொரு மனிதனையும் சமூக வரலாற்று சூழலில் அணுகுகிறது. முதலாளித்துவக் கோட்பாடுதான் ஒரு தனி மனிதனுக்கு, அவனது திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக அவனை சமூகத்தில் இருந்து பிரித்துக் காட்டுகிறது. இப்படித் தனிப்பட்ட காரணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது சமூக அமைப்பின் பொறுப்பை புறக்கணிப்பதாகும்.
ஒரு தவறு நிகழும் போது தனிநபர் மீது பழி போட்டு சமூகம் தப்பித்துக் கொள்ளும். தனிநபரும், சமூகமும் ஒன்றையொன்று வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்பதே உண்மை. பெரும்பாலான புற்று நோய்களுக்கு சுற்றுப்புற நச்சுக்களேக் காரணமாகின்றன. ஆனாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமற்ற வகையில் உண்ணுபவர்கள் என்றோ, புற்றுநோய் மரபணுக்களை கொண்டிருந்தார்கள் என்றோ பழிக்கப்படுவார்கள்.
இதே போலத்தான் மனநோய் என்பதும் தவறான சிந்தனைப் போக்கு, மரபணு ரீதியான மூளையின் குறைபாடு என்பதாக கூறப்படும் சூழல் உள்ளது. இப்படித் தனிநபர்களை குறை கூறுவது நிலவுகின்ற அமைப்பின் பிரச்சனையை புறந்தள்ளி அதை பாதுகாப்பதாக அமைகிறது.
மனநோய் என்பது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனையாகும். இது அனைத்து வர்க்கத்தினரையும் பாதிக்கிறது என்றாலும், மற்ற ஒடுக்கு முறைகளைப் போலவே இதன் சுமையும் உழைக்கும் வர்க்கத்தின் மீதுதான் மிகக் கடுமையாக விழுகிறது. முதலாளித்துவத்துக்கு ஒடுக்குமுறை இன்றியமையாதது. அதாவது ஒரு சிறிய முதலாளி வர்க்கம், ஒரு பெரிய தொழிலாளி வர்க்கத்தை அடிபணியச் செய்து ஒடுக்குகிறது. இதேபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த ஒட்டுமொத்த சமூகத்தில் ஒடுக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
மார்க்ஸின் அந்நியமாதல் கோட்பாடு!
மார்க்சியம் என்பது சமூகப் பொருளாதார அமைப்புகளின் அடிப்படையில் மனித நடத்தையை பகுப்பாய்வு செய்யும் ஒரு தத்துவமாகும். மார்க்சிய உளவியல் என்பது சமூகச் சூழலே மனித மனத்தை வடிவமைக்கிறது என்று வரையறுக்கிறது. இது சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகள் மற்றும் பொருளாதாரக் காரணிகள் மனிதனின் உளவியலை எப்படி வடிவமைக்கிறது என்பதை விளக்குகிறது.
படிக்க:
♦ இசுலாமியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்!
♦ Hustle culture: முதலாளித்துவ உழைப்புச்சுரண்டலின் மற்றுமொரு நவீன வடிவம்!
மனிதனின் உணர்வுகள் சமூகச் சூழலால் தீர்மானிக்கப் படுவதாகவும், முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அந்நியமாதல் (Alienation) என்பது மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு முக்கியக் காரணமாக அமைவதாக மார்க்சியம் கருதுகிறது. அந்நியமாதல் குறித்து மார்க்ஸ் விரிவாக ஆராய்ந்து, ஒரு முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர்கள் தங்களின் சொந்த இயல்பிலிருந்து எப்படியெல்லாம் அந்நியப்படுத்தப் படுகிறார்கள் என்று விளக்குகிறார்.
ஒரு தொழிலாளி உருவாக்கும் பொருட்கள் அவருக்கு சொந்தம் இல்லாமல் முதலாளியின் சொத்தாக மாறுவது; தொழிலாளி செய்யும் வேலை என்பது ஒரு படைப்பாற்றல் மிக்க செயலாக இல்லாமல் பிழைப்பிற்கான கட்டாய உழைப்பாக மாறுவது; தான் ஒரு சுதந்திரமான மனிதனாக அல்லாமல், இயல்பு சிதைக்கப்பட்டு இயந்திரத்தோடு இன்னொரு இயந்திரமாக மாற்றப்படுவது; சக தொழிலாளர்களுடன் ஒத்துழைப்பிற்கு மாறாக, வேலைக்காக போட்டியிடும் நிலையும் – இதனால் சமூகத்தில் இருந்து தனிமைப்பட்டு இருப்பது என நான்கு வகைகளில் அந்நியமாதல் நிகழ்கிறது.
முதலாளித்துவத்தை ஒழித்து, வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கும் போதுதான் இந்த அந்நியமாதல் பிரச்சனை தீர்க்கப்பட்டு மனிதன் தன் இயல்பில் சுதந்திரமாக படைப்பாற்றலுடன் விருப்பப்பூர்வமான வேலையில் ஈடுபட முடியும்.
இத்தகைய சுதந்திர செயல்பாட்டுக்காக, அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் சோசலிஸ்ட்டுகளே.
போலியான அறிவியல் வாதங்கள்!
அறிவியல் என்ற பெயரில் “பெண்கள் தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஏனெனில் மரபணு ரீதியில் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர்களாக படைக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்” என்ற வாதத்தை நாம் நிராகரிக்கிறோம். அதேபோல “கருப்பின மக்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திசாலித்தனம் குறைவு” என்பதையும் ஏற்பதற்கில்லை.
இத்தகைய பிறப்பு அடிப்படையிலான உயிரியல் ரீதியான வாதங்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக அறிவியல் வேடமிட்ட போலியான வாதங்கள் என்பதே உண்மை. முதலாளித்துவம் அறிவியலையும் போலி அறிவியலையும் திட்டமிட்டே குழப்புகிறது. உண்மையானதை, உண்மை எனக் கூறப்படும் சொற்களால் மாற்ற முயல்கிறது.
படிக்க:
♦ மனநோய்: ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெற்றெடுத்துள்ள கொடிய நோய்!
♦ இடம்பெயர்வு தந்த மனநோய்கள் – கண்ணகி நகரில் ஒரு மருத்துவ ஆய்வு!
மனநோய் என்பது உயிரியல் தன்மை வாய்ந்தது என்ற கூற்று போலி அறிவியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதன் விளைவுதான் உளவியலானது, உயிரியல் மாதிரியின்(Biological model) அடிப்படையில், மன நோய்களுக்கு ஆளாகும் மனதை மூளையாக சுருக்கி விடுகிறது. (ஃபிராய்டின் வாதம் மனதை பிறப்புறுப்புகளுக்குள் சுருக்கி விடுவதைப் போல) எனவே மூளையே ஆய்வு மற்றும் சிகிச்சையின் பொருளாகிறது.
மனநோய் – மார்க்சிய அணுகுமுறை!
மேற்கண்ட கொச்சையான, பக்குவமற்ற பொருள் முதல்வாதத்தை மார்க்சியப் பொருள் முதல்வாதத்தோடு போட்டு குழப்பிக் கொள்ள கூடாது. மார்க்சியம் மன நோய்களை அதன் சமூக விளைவாகப் பார்க்கிறது. அதாவது உழைப்பு சுரண்டலால் நோயுற்ற ஒரு சமூகத்தின் தனிப்பட்ட வெளிப்பாடாக அது பார்க்கிறது. சமூக சூழல்கள் மனநோய்கள் உருவாகக் காரணமாகின்றன என்பதே வெளிப்படையான உண்மை.

ஆனால் இதற்கு மாறாக நம்மை நம்ப வைக்க ஒரு மனநல மருத்துவத்துறையே தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மனக்கோளாறுகளுக்கான நோயறிதல் கையேட்டில் (DSM) 1952 ஆம் ஆண்டு வரை மனநோய் என்பது ஏதேனும் ஒரு வெளிப்புற நிகழ்வு, சூழல் அல்லது உயிரியல் நிலைக்கான எதிர்வினை என்று விவரித்து இருந்தது. ஆனால் இந்த விளக்கம் அதன் பிறகு நீக்கப்பட்டது. காரணம் மன நோய்க்கு ஒரு வெளிப்புற காரணத்தை DSM அடையாளம் காணத் தவறியது.
அந்தக் காரணம் தனிநபருக்கு உள்ளேயே உள்ள தவறான எண்ணங்கள், நடத்தைகள், வேதியியல் அல்லது மரபியல் பிரச்சனைகள் என்பதையும் அதற்கு சிகிச்சை என்பது சூழலை மாற்றுவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்குவதாகவும் மாறி விட்டது. இன்றைய மனநோய் மருத்துவம், பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை மாற்றும் வழி முறையைக் கொண்டுள்ளது. இது மையமான பிரச்சனையான சூழலை தவிர்த்து விட்டு, தனி மனிதனின் செயல்பாட்டு தோல்வியாக கட்டமைக்கப்படுகிறது.
– (தொடரும்…)
- குரு






