டந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரையும், திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை தலைவரான மு. அப்பாவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை, அப்பாவு உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணும்போது தபால் வாக்கு எண்ணுவதை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

அதன் பிறகு அதிமுகவினருடன் சேர்ந்து அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டனர். திடீரென அப்பாவுவையும் திமுக முகவர்களையும் வாக்கு என்னும் மையத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். எனக்கு கிடைத்த 203 தபால் வாக்குகளை தலைமை ஆசிரியர் சான்றொப்பும் செய்துள்ளதாக கூறி செல்லாது என அறிவித்து நிராகரித்தனர்.

இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 599 வாக்குகள் அதிகம் பெற்று நான்தான் (அப்பாவு) வெற்றி பெற்றேன். ஆனால் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது சட்டவிரோதம் என்பதால் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். நான் (அப்பாவு) வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019 அக்டோபர் 1 அன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அதன்படி 2019 அக்டோபர் 4 அன்று உயர்நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து விட்டதால் 2016-ல் தொடரப்பட்ட தேர்தல்கள் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது தேவையற்றது எனக் கூறி அந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் 3.6.2026 அன்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- தபால் வாக்குகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பும் அளிக்க முடியும் என்பதால் மறுவாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தபால் வாக்குகளில் அப்பாவு 153 வாக்குகளை பெற்றுள்ளார். அதன் மூலம் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். எனவே அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது.

தற்போதைய சூழலில் இன்பதுரையை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றாலும், 2016 – 2021 காலகட்டத்தில் சட்டப்பேரவை பதிவேடுகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ என்ற இடத்தில் இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு, அப்பாவு பெயரை இடம்பெறச் செய்ய சட்டப்பேரவை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இன்பதுரை எம் எல் ஏ என்ற முறையில் பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை கோர முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே இந்த தேர்தல் வழக்கில் முடிவு எடுக்க 10 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் இதுபோன்ற தேவையற்ற தாமதங்கள் ஜனநாயகத்தின் ஆன்மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காலம் கடந்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு அநீதியே!

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே இந்த வழக்கு பத்து ஆண்டுகள் தாமதமானது என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை காலம் 5 ஆண்டுகள் தான் என்றாலும், 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய, அவசரமாக தீர்க்க வேண்டிய வழக்கை சட்டப்பேரவை காலம் முடிந்து, அடுத்த சட்டப்பேரவை காலம் முடிந்தபின் தீர்ப்பு வழங்கியது அநீதியானது. இந்த அநீதியான தீர்ப்பு தமிழக மக்களுக்கு இழைத்த துரோகம்.

சாதாரண மக்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் தற்போதைய நிலை!

இந்திய நீதிமன்றங்களில் தற்போது (2026-ஆம் ஆண்டு தரவுகளின்படி) அனைத்து நிலைகளிலுமாக சுமார் 4.9 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் சாதாரண மக்கள் தாக்கல் செய்யும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்குத் தீர்வு கிடைக்க பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சாதாரண மக்களின் வழக்குகள் தொடர்பான தற்போதைய நிலையின் முக்கிய அம்சங்கள்

உச்ச நீதிமன்றத்தில் 88,000, உயர் நீதிமன்றங்களில் 60 லட்சம் மற்றும் மாவட்ட/கீழ் நீதிமன்றங்களில் 4.2 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாதாரண சொத்து தகராறு, விபத்து இழப்பீடு மற்றும் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராமல் இழுபறியாகவே இருக்கின்றன. குற்ற வழக்குகளில் தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிலர் சிறைகளில் வாடும் நிலையும் தொடர்கிறது.

படிக்க:

 நீதித்துறையில் ஊழல்: கரடியே காரித் துப்பியது போல் நீதிபதிகளே ஒப்புதல் வாக்குமூலம்!

 வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வழக்கையே 10 ஆண்டுகள் கழித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்படியென்றால் சாதாரண மக்களுடைய வழக்கின் நிலைமை எப்படி இருக்கும்? பல பத்தாண்டுகள் அல்ல பல தலைமுறைகள் ஆனாலும் சாதாரண மக்களின் வழக்கு நீதிமன்றத்தால் தீர்க்க முடியாது என்பதை உணர்த்துகிறது.

நமக்கு தேவை மக்கள் மன்றங்கள்!

சாதாரண மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம். எந்த பிரச்சனை என்றாலும் நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் நீதிமன்றம் பல 10 ஆண்டுகள் என காலம் கடத்தி கொண்டே செல்கிறது. காலம் தாழ்த்தி கொடுக்கின்ற நீதியும் அநீதியே. இப்படிப்பட்ட (அ)நீதிமன்றங்கள் மக்களுக்கானது அல்ல. ஜனநாயகக் கூட்டரசு அமைப்பதன் வழியாக மக்கள் பங்கேற்கும் வகையிலான பொது விசாரணை மன்றங்களை உருவாக்குவோம்.

  • ஆனந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here