ஏப்ரல்-29,2026, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136-வது பிறந்த நாளில் அவரது சமூகக் கருத்துக்களோடு ஒன்றிணைந்து பயணிப்போம்!
புரட்சிக் கவிஞரின் பாடல் தொகுப்பினை முழுவதும் கற்போமாக! மார்க்சிய-லெனினிய நமது கோட்பாட்டு பயணத்தில் அவரது பாடல் வரிகளையும் பிணைத்துக் கொள்வோமாக!

ல்வேறு பிற்போக்கு கருத்துக்களோடு பிணைத்துக் கொண்டிருந்த பாரதியைத் தூக்கி உயர்த்தி விட்ட அளவுக்கு,  உழைக்கும் மக்களுக்கான எண்ணற்ற முற்போக்குக் கவிதைகளை – கட்டுரைகளை படைத்தளித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை – இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோர் உட்பட – ஏனோ அந்த அளவிற்கு உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் பலவும் நமது நாடி நரம்புகளைச் சுண்டி இழுக்கத்தக்கவை! செயலுக்கு உந்தித் தள்ளுபவை!

அவரது பாடல் வரிகள் சிலவற்றை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்!

“… நாய் என்று பெண்ணை நவில் வார்க்கும் இப்புவிக்குத் தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!

எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய வந்தவளே!

வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!

… என்ற பெண் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலில் பெண்ணினத்தை சகல அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கத்தக்க வரிகள் சிலவற்றிலும் சரி;

“சுயமரியாதை கொள் தோழா-நீ துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால்- நீ உலகினில் மக்கள் எல்லாம் சமம் என்பாய்;

துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று சொல்லிடுந் தீயரைத்தூவென்றுமிழ்வாய்!

அயலொரு கூட்டத்தார் ஆள்வோர்- சிலர் ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்  பயமின்றி நீ திருந்தச் சொல் – சிலர் பழமை சொன்னால் புது நிலை நலம் காட்டு!

சேசு முகம்மது என்றும் – மற்றும் சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும் பேசி வளர்க்கின்ற பேரில் – உன் பெயரையும் கூட்டுவர், நீ ஒப்ப வேண்டாம்.

படிக்க: 

 ஏப்ரல் 29 கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினம்.
 புரட்சிக் கவிஞரின் நினைவு நாள் ஏப்ரல் 21! அவர் புகழ் நீடு வாழ்க! 

காசைப் பிடுங்கிடு தற்கே – பலர் கடவுள் என்பார். இரு காதையும் மூடு!

கூசி நடுங்கிடு தம்பி!- கெட்ட கோயிலென்றால் ஒரு காதத்திலோடு!

கோயில் திருப்பணி என்பர் – அந்தக் கோவில் விழா வென்று சொல்லி யுன் வீட்டு வாயிலில் வந்துனைக் காசு –  கேட்கும் வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!

வாயைத் திறக்கவும் சக்தி – இன்றி வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட்கே  நீ தாயென்ற பாவனையோடும் – உன் சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்!

உழைக்காத வஞ்சகர் தம்மை-மிக உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக்கும் போதிலேயே-நாட்டில் விளையாடும் திருடரைச் ‘சாமி’ என்கிறார்! அழியாத மூடத்தனத்தை- ஏட்டில் அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் –  இவர் முதலெழுத்தோதினும் மதி யிருட்டாகும்!

… என்ற “வாழ்வில் உயர்வு கொள்” என்ற தலைப்பிலான பாடல் வரிகளிலாயினும் சரி;

“காணு மானிடரைக் கனம் செயல் முறையா?

கடவுள் எனும் மயக்கில் கவிழ்ப்பது முறையா?

மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா? வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

நாயிலும் கடையாய் நலிவது மேலா?

நல்ல கூட்டுத் தொழில்கள் நாட்டிடல் மேலா? ஓய்வறியார் உறங்க இடந்தரல் உயர்வா?

ஊரை வளைக்கும் குருமார் செயல் உயர்வா?

ஆழ்வுறும் ஆத்திகம் வைதீகம் சுகமா?

சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?

சுயமரியாதையால் உயர்வது வாழ்வோ?

… என்ற “ஆய்ந்து பார்!” என்ற தலைப்பிலான பாடல் வரிகளிலும் சரி;

“தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!…”

… என்ற புதிய உலகத்தில்”உலக ஒற்றுமை” தலைப்பில் சமூகத்திலிருந்து எதிலும் தலைக்காட்டாமல் பிரிந்தோடும் கதைக் கொவ்வாதோரை இடித்துரைப்பதிலும் சரி;

“கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள்!

கடவுள் என்ற நாம தேயம் கழரிடாத நாளிலும் உடைமையாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்;

‘கடையர்’ ‘செல்வர்’ என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே!…”

…. என்ற “தளை  அறு” என்ற தலைப்பில் மூடத்தனத்தை ஒழிப்பதிலும், வர்க்க பேதத்தை ஒழிப்பதிலும் விழிப்புணர்வூட்டுவதிலும் சரி!

“…குக்களும் காகமும் கோயிலிற் போவதில் கொஞ்சமும் தீட்டில்லையோ? – நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் – அந்த வகையிலும் கூட்டிலையோ?

திக்கட்டுமே ஒரு கோயிலன்றோ? அதில் சேரி அப்பால் இல்லையே – நாளும் பொய் கட்டுரைப்பவர் புன்மையும் பேசுவர் நம்புவதோ சொல்லையே?

தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுவதற்குத் தனிக்கோயில் காட்டுவதோ? – அவர் வாழ்ந்திடுதற்கும் தனித் தேசம் காட்டிப்பின் வம்பினை மூட்டுவதோ?

தாழ்த்தப்பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச் சாற்றிடும் தேச மக்கள்-அவர் வாழ்த்தி அழைக்கும்  “சுதந்திரம்” தன்னை மரித்திடும் நாச மக்கள்

தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் இத் தாய்நிலம் சொந்தம் அன்றோ?- இதில் சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர் க்கே என்று சொல்லிடும் நீதி நன்றோ?…”

… என்ற சமத்துவப் பாடல் வரிகளிலும் சரி;…

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நெருப்புப் பிழம்புகளை – பொது வாழ்வில் ஒதுங்கி இருப்போரையும் சுண்டியல்லவா இழுக்கின்றன!

ஆம், புரட்சிக் கவிஞரின் பாடல் தொகுப்பினை முழுவதும் கற்போமாக! மார்க்சிய-லெனினிய நமது கோட்பாட்டு பயணத்தில் அவரது பாடல் வரிகளையும் பிணைத்துக் கொள்வோமாக!

இதுவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதி மொழியாகும்!

தொகுப்பு: எழில்மாறன்

1 COMMENT

  1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 வது பிறந்தநாள் கவிதை மற்றும் பாடல்கள் சிறப்பாக உள்ளது
    கட்டுரை வடிவமைத்த ஆசிரியர் தோழர் எழில் மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here