டைபெற்று வருகின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இறுதி கட்டமாக மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்பாக வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்யும் பணியைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்.

ஏற்கனவே பீகார், கர்நாடகா மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செய்யப்பட்ட போதே அதன் அரசியல் நோக்கமும், குளறுபடியான வழிமுறையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அதனை பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்த “Vote Chori- வாக்குத் திருட்டு” எனக் கடுமையாக விமர்சித்ததோடு அல்லாமல் பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். மேலும் சிலர், தேர்தல் ஆணையம் தற்போது நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது பணமதிப்பு நீக்கம் ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கி மக்களைத் தெருவில் நிறுத்தியது போன்றே வாக்குரிமையைச் செல்லாதது ஆக்கி சாதாரண மக்களைத் தெருவில் நிற்க வைக்கும் செயல் என்று விமர்சித்தனர்.

2001 வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை‌ வழங்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை ஏற்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்தும் தற்பொழுது அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது, அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படைகளுக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டதில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆதார் அட்டையை ஒரு சான்றாக ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். அப்போதே உயிரோடு இருந்தவர்கள் பலர் இறந்தவிட்டதாக நீக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர்களில் பலரை நேரடியாக நீதிமன்றங்களுக்கே அழைத்து வந்தனர் எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் திமுக SIR ஐ எதிர்த்தாலும் வருகின்ற ஆபாயத்தை உணர்ந்து தனது கட்சித் தொண்டர்களை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் BLA வாக முழுமையாக ஈடுபடுத்தியது. விளைவு, பெரும் எண்ணிக்கையில் தவறுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுதவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மொத்தம் இருந்த 7.6 கோடி வாக்காளர் எண்ணிக்கை 90 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.புதிய வாக்காளர்கள் சேர்த்த பின் 6.82 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை மாறியது. நீக்கப்பட்ட பெயர்களில் 27 லட்சம் பெயர்கள் “Logical Discrepancy” காரணமாக நீக்கப்பட்டுள்ளது. அதாவது, பெயரில் எழுத்துப்பிழை, உறவினர் விவரங்கள் ஒத்துவராதது, Surname மாறுபடுவது போன்ற காரணங்களால் நீக்கப்பட்டுள்ளது.

படிக்க:

 மோசடி SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகள் போதுமானதா? 

 ”SIR” எனும் பாசிச தாக்குதல்! பீகாரை அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு!

எடுத்துக்காட்டாக, மைக்கேல் என்பவருடைய அப்பா பெயர் முருகன் என்று இருந்தால் அது நீக்கப்பட்டது. அதேபோல் மைக்கேல் வயது 20ஆக குறிப்பிட்டு அவருடைய அப்பா வயது 38 என்று இருந்தால் அதுவும் நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாழ்நிலை, மதங்கள் இணைந்து வாழும் நாட்டில் இவை குறித்து எந்த விசாரணையும் இன்றி எப்படி முடிவுக்கு வர முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் பெயர்களை சந்தேகத்துக்குரியது எனக் குறிப்பிட்டு நீக்கிவிட்டது. அதில் மூன்றில் இரண்டு பங்கு சிறுபான்மை மக்களின் பெயர்கள் என்பது ஒன்றிய மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

மேற்கு வங்கத்தில் “Logical discrepancy” என்ற பெயரில் 27 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே நேரில் சென்று வாதிட்டார்.

உச்சநீதிமன்றம் இப்படி அநியாயமாக பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டது குறித்தோ, அதில் பாதிக்கப்படும் மக்களின் வாக்குரிமை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் ஆணையம் தீர்ப்பாயங்கள்‌ அமைத்து இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறி நழுவிக் கொண்டது. சாதாரண மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வாக்குரிமையைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபடுத்த வேண்டியதில் இருந்து தவறியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 19 தீர்ப்பாயங்களைச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் அமைத்தது. அதில் 34 லட்சம் பேர் தங்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1607 பேர்களை மட்டும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் 14 பெயர்கள் மட்டுமே போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி நீக்கப்பட்டது.

மீதமுள்ள 33 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியான வாக்குரிமைப் பறிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறுபான்மை மக்கள். இந்த வாக்குரிமைப் பறிப்பில் ஒன்றிய மோடி அரசு, இந்திய தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் கூட்டாக செய்த குற்றச் சதியாகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமை, மத வழிபாட்டு உரிமை, உணவு உரிமை போன்றவை பறிக்கப்படுவது போல வாக்குரிமையும் இன்று பெருந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த பெருந்தாக்குதலைத் தடுத்த நிறுத்த தேர்தல் உள்ளிட்ட அனைத்துப் போராட்ட வழிகளையும் ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் பயன்படுத்த வேண்டியுள்ளது.

  • திருமுருகன்

1 COMMENT

  1. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக உள்ளது.
    இதில் நாம் யார் என்பதை நிரூபிக்க நாம் தான் சான்றுகள் வழங்க வேண்டும் அதைவிட கொடுமை ..
    நம் கேள்வி என்னவென்றால்?
    அனைத்து சான்றுகளையும் சரியாக வழங்கினால் உணவு உடை இருப்பிடம் அரசு வேலை எல்லாம் பாசிச மோடி கும்பல் வழங்கிவிடுமா?
    உரிமை பறிக்கப்பட்டோர் பறிக்கப்படாதோர் என அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here