நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிகை திரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள “கருப்பு” திரைப்படத்தில், நீதித்துறையும் – நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ் வேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், வி.லஷ்மி நாராயணன் ஆகியோர் நீதித்துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது, நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியம் இல்லை என கருத்து தெரிவித்து, கருப்பு திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் ஒப்புதல் வாக்குமூலம்!
‘கருப்பு’ படத்தில் வரும் நீதிபதி ஊழல்வாதியாகவும், செல்வாக்கும் மிக்க வழக்கறிஞர் நீதிமன்ற நடைமுறையில் அதீத அதிகாரம் செலுத்தும் மையப்புள்ளியாக திகழ்வதாகவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. நீதித்துறையில் ஊழல் இல்லை என்று யாரும் இங்கு மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டிலுள்ள 20 சதவீத நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பருச்சா கேரளாவில் நடைபெற்ற ஒரு சட்ட கருத்தரங்கில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றம் தொடர்பான ஒரு வழக்கில் ஊழல் என்னும் புற்றுநோய் செல்கள் நீதித்துறையின் உயிர் நாடிக்குள் தொடர்ந்து ஊடுருவி வருவதாக உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த அபாயகரமான செல்களை அறுவைச் சிகிச்சையின் மூலம் வேரோடு கலைய வேண்டும் என்றும் நடவடிக்கைகள் மூலமாக நீதித்துறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் எடுத்துரைத்துள்ளது.
கருத்து சுதந்திரம் யாருக்கானது!
கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் படைப்பாளியான திரைப்பட கலைஞருக்கும் பொருந்தும். தனது அதீத கற்பனையால் அரசியல் ரீதியாக கருத்து சித்திரம் வெளியிடும் ஒரு கார்டூனிஸ்டுக்கு என்ன பரந்த உரிமை உள்ளதோ அதே உரிமை திரைப்பட கலைஞர்களுக்கும் உள்ளது.
‘கருப்பு’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியமே சான்று அளித்திருக்கும்போது நீதிமன்றம் அதன் கருத்தை மாற்றி அமைக்க முடியாது. நாம் இப்போது சமூக ஊடகங்களின் முகத்தில் இருக்கிறோம் யார் வேண்டுமென்றாலும் எதையும் சொல்லி எளிதாக தப்பித்து விடலாம் கூற்றுக் கொஞ்சம் கொடூரமானதாக இருந்தாலும், அதை புறக்கணித்து நீதித்துறையின் பயணம் முன்னோக்கி செல்லும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீதித்துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது, நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியம் இல்லை என்று நீதிபதிகளே சொல்லி உள்ளனர். ஆஹா ஓஹோ நீதித்துறை எப்படி வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதைப் போல நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளார்கள். ஆனால் உண்மையில் நீதித்துறை அப்படித்தான் இருக்கிறதா?
கருத்து சுதந்திரம் படைப்பாளிக்கு இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த வருடம் துவக்கத்தில் கீழைக்காற்று வெளியிட்டகம் சார்பில் திருப்பரங்குன்றம் விவகாரம் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ்.எஸ் ரவுடியா? என்கின்ற தலைப்பில் புத்தகத்தின் அட்டைப் படத்தை மட்டும் கார்ட்டூன் வடிவில் சித்தரித்து முகநூலில் வெளியிட்டது. புத்தகத்தின் அட்டைப் படத்தை பார்த்த உடனே, ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் நீதிமன்றத்திலும் காவல்துறையிலும் வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் சுமோட்டோ வழக்கு எடுத்து, அந்த புத்தகத்தை கொண்டு வராமல் தடுத்து நிறுத்தினார்கள். ஆஹா ஓஹோ இவர்கள் கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள்.
படிக்க:
♦ ‘ நீதிபதி’ ஜிஆர் சுவாமிநாதன்: சட்டவாதியா? சனாதனவாதியா?
♦ அடிப்படை அறிவற்றவர்கள்… நீதிபதி களாக…!
படைப்பாளிக்கு கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்றால், அதே உரிமை கீழைக்காற்று வெளியீட்டகத்துக்கும் உள்ளது. ஆனால் அட்டை படம் மற்றும் அதன் தலைப்பை பார்த்தவுடன் புத்தகத்தை கொண்டு வருவதற்கு தடை செய்வது என்பது கருத்து சுதந்திரத்துக்கு வேட்டு வைப்பதாகாதா?
ஜி ஆர் சாமிநாதன் என்கின்ற நீதிபதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி, அதில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று சங்கிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதி, அதை நடைமுறைப்படுத்த துடிக்கிறார். தமிழகத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் யோக்கியதை அம்பலப்படுத்தி வெளியிட்ட நூலின் அட்டை படத்தை கண்டு நடுங்கி , அந்த புத்தகத்தை கொண்டு வராமல் தடுத்து நிறுத்திய நீதிபதிகள், கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
நீதித்துறையின் ஊழல் குறித்து NCERT புத்தகம் வெளியிட தடை! கருத்து சுதந்திரத்திற்கு வேட்டு!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் (NCERT) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், “நீதித்துறையில் ஊழல்” என்று வெளிப்படையாகப் பெயரிடப்பட்ட ஒரு துணைப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தக் கொள்கை முடிவின் மூலம் நீதித்துறையை “அச்சுறுத்துவதற்கோ” அல்லது “பலவீனப்படுத்துவதற்கோ” ஒரு “ஆழமாக வேரூன்றிய சதி” இருப்பதாக நம்பக்கூடும்—அப்படி இருக்கவும் கூடும்—ஆனால் இந்த சர்ச்சை, இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய தரப்பினருக்கு விரும்பிய விளைவையே ஏற்படுத்தியுள்ளது: அது நீதித்துறையை அதன் சொந்தத் தோல்விகளுக்கு முன்பாக தேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளது.
புத்தகத்தின் பிப்ரவரி 2026 பதிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளை முதன்மையான சவாலாக அடையாளம் காட்டிய பின்னர், நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக ஊழலை முன்னிலைப்படுத்தியது.
படிக்க:
♦ வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!
♦ நீதிமன்றங்கள் புத்தகங்களுக்கு தடை விதிக்க முடியுமா?
அந்த அத்தியாயத்தை ஆய்வு செய்ததில், அது 2016 முதல் 2021 வரை நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களையும் (மத்தியப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு வழிமுறையின் மூலம் 1,600-க்கும் மேற்பட்டவை) அளிப்பதுடன், வெளிப்படையான, உறுதியான நடவடிக்கை மூலம் சரிசெய்யப்படாவிட்டால் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்று அவர் கருதிய “ஊழல் மற்றும் முறைகேடுகளின் நிகழ்வுகள்” குறித்து இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியதாகக் கூறப்படும் ஒரு மேற்கோளையும் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 24 அன்று ஒரு ஊடக அறிக்கையாகத் தொடங்கிய இந்த சர்ச்சை, பிப்ரவரி 25 அன்று நீதிமன்ற நடவடிக்கைக்கு நகர்ந்தது. அன்று, மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், அந்த அத்தியாயம் தொடர்பான தங்கள் கவலைகளைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன் எழுப்பியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அதே நாளில் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
2026, பிப்ரவரி 26 அன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு விரிவான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது: அந்த முழுப் புத்தகத்தையும் மேலும் வெளியிடுவதற்கும், மறுபதிப்பு செய்வதற்கும், பரப்புவதற்கும் ஒரு “முழுமையான பொதுத் தடை”; அச்சுப் பிரதிகளைப் பறிமுதல் செய்து அகற்றுவதற்கான உத்தரவுகள்; டிஜிட்டல் பதிப்புகளை நீக்குதல்; மேலும், NCERT இயக்குநருக்கும், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளருக்கும், அவர்கள் மீதும் மற்றும் பொறுப்பான மற்றவர்கள் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு உட்பட ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு விளக்கம் கோரும் அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை ஒரு வழக்கமான விமர்சனமாகக் கருதாமல், “எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களின்” மனதில் நிறுவனத்தின் சட்டப்பூர்வத் தன்மையைக் குலைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகக் கருதியது. அது நியாயமான விமர்சனத்தை நசுக்கவில்லை என்றும், ஜனநாயகத்திற்கு அடிப்படையான ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும் வலியுறுத்தியது.
ஆயினும், இந்த நிகழ்வு ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகிறது: நிறுவன அங்கீகாரம் என்பது விமர்சனங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதினால் ஏற்படுகிறதா, அல்லது சங்கடமான உண்மைகளை வெளிப்படையாக எதிர்கொள்வதினால் ஏற்படுகிறதா?
நீதித்துறையின் ஊழல் என்று பாட புத்தகத்தில் துணை தலைப்புயிட்டதற்கு உச்சநீதிமன்றமே இவ்வளவு பதறுகிறது என்றால், இவர்களது யோக்கிதையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நீதித்துறையின் ஊழல்! அதை நீதித்துறை எதிர்கொண்ட விதம்!
கடந்த 21.3.2025 உச்ச நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் 100 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. முறையான விசாரணைக்குழுவை எதிர்த்து நீதிபதி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த பணம் சிக்கிய விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்த விசாரணைகளை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அவருக்கு எந்தவித விசாரணையும் இல்லை; தண்டனையும் இல்லை.
அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால், அந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசு பதவிகள் வழங்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையான ஊழல் தான். இப்படி ஊழல் செய்து அதன் மூலம் அரசுப்பதவிகள் அனுபவிக்கும் இவர்கள் சொல்கிறார்கள் நீதித்துறையில் ஊழல் இல்லை என இங்கு மறுக்க முடியாது. இதையே சாமானிய மக்கள் அல்லது முற்போக்கு அமைப்புகள் சொன்னால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது.
இப்போது சொல்லுங்கள் கருத்து சுதந்திரம் யாருக்காக இருக்குது?
- ஆனந்தன்






