மே 10, 2026-ல் நடந்த TVK தலைவர் விஜயின் பதவியேற்பு விழாவில் தேசிய கீதமும் வந்தே மாதரமும் இசைக்கப்பட்ட பின்னர் மூன்றாவதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.

ஜோசப் விஜய் தலைமையேற்ற தமிழக வெற்றி கழகமானது 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்று இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளை, கூட்டணிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெளிப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி!

தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை பெறாத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து நின்றது தவெக.  முதலில் ஒடிவந்து காங்கிரசு ஆதரவுக்கரம் நீட்டியது. அடுத்த உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் வரை தவெக-வுடனான தமது கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது.

மறுபுறம் திமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகளும் அடுத்து என்ன நடக்கும் என்பதை உற்று கவனித்தன. தமிழகத்தில் ஒருவரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை வந்தால், அது கவர்னர் ஆட்சிக்கு வழியமைக்கும். கவர்னர் ஆட்சி என்பது நேரடியாக பாஜகவின் ஆட்சியாகவே அமையும். அதை தடுத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு மதசார்பற்ற கூட்டணியினர்வந்தனர்.

ஆளுநர் ஆட்சி எனும் நிலையை தவிர்ப்பதற்காக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரலாம்; ஆனால் ஆட்சியில் பங்கு பெறுவதோ, அமைச்சரவையில் இடம் பெறுவதோ இல்லாமல், வெளியிலிருந்து தரும் ஆதரவாக மட்டுமே இருக்கும் என்று இடதுசாரிகள் தெளிவு படுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமது ஆதரவை தந்ததன் மூலம் தற்போது விஜய் தமிழகத்தின் முதல்வராகியுள்ளார்.

விஜயை அலைய வைத்த கவர்னர்!

முதலில் விஜய் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி கவர்னரிடம் கடிதம் தந்தார்.  ஆனால் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முன் வரவில்லை. பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் முயற்சித்த போதும், பெரும்பான்மைக்கான “118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் எங்கே?” என்று கேட்டு சுத்த விட்டார்.

பொதுவில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருகிறது என்றால், அதை அங்கீகரித்து பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் கவர்னரின் வேலை. பின்னர் தனது அரசுக்கான பெரும்பான்மை இருப்பதை சட்டமன்றத்தில் நிரூபிக்கும் படி முதல்வருக்கு கால அவகாசம் தருவது தான் வழக்கம். இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பினால் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து கவர்னர் கேட்கலாம் தான்.

ஆனால் காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்  கட்டிலில் ஏறுவதை பாஜக நியமித்த கவர்னர் -1989இல் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் – அர்லேகர்  அனுமதிக்க தயாராக இல்லை. “என்னிடம் பெரும்பான்மையை நிரூபி” என்று மல்லு கட்டினார் கவர்னர்.

கவர்னரின் மறுப்புக்கு தமிழக சங்கிகள் ஓடி வந்து முட்டுக் கொடுத்தனர். குறிப்பாக வானதி சீனிவாசன் “கவர்னர் தனது  கடமையைத்தானே செய்கிறார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டியது விஜயின் பொறுப்பு தானே” என்று தலையைச் சுற்றி காதை தொட்டார்.

தடம் புரண்ட தமிழக காங்கிரஸ்!

கூட்டணியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஒரு மரியாதைக்கு கூட திமுகவை வந்து காங்கிரஸ் சந்திக்கவில்லை.  முதுகில் குத்தும் வகையில் தவெகவுடன் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணியை கட்டிக் கொண்டது. இதை பாஜகவின் ஐடி விங்குகள் ஊதி பெருக்கி வருகின்றன. மோடி காங்கிரசை திமுகவின் முதுகில் குத்தி விட்டதாக விமர்சிப்பதாகவும் செய்தியை பரப்புகின்றன.

திமுகவோ தாங்கள் “எதிர்க்கட்சியாக  கடமையை நிறைவேற்றுவோம்” என்று தெளிவாக அறிவித்து விட்டனர். அந்த வகையில்  மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தந்து ஆட்சி அமைவதற்கு தடையாக நிற்கவில்லை.

கட்சி துவங்கிய பின்னர் தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஒரு கூட்டணியை தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கி, அதன் மூலம் ஆட்சி கட்டிலில் ஏறி ஒரு ‘சாதனையை’ செய்துள்ளார் விஜய். இச்சாதனையானது தமிழக மக்களுக்கு வேதனையானதாக மாறாமல் இருந்தால் சரி தான்.

படிக்க:

 திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!
 மாற்றம் வேண்டும் என்பவர்கள் தேர்தலைத் தாண்டி சிந்திப்போம்!

புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள  தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் தமிழகம் இதுவரை பயணித்த பாதையிலேயே தொடர்ந்து வழி நடக்குமா? அல்லது மோடி-அமித்சாவின் விருப்பத்திற்கிணங்க, மோடி அமித்சாவின் ஆசி பெற்ற செங்கோட்டையின் வழிகாட்டுதலுக்கு இணங்க, பாஜகவின் B-Team என்று பலரும் வைத்திருந்த விமர்சனத்தை உறுதி செய்யும் வகையிலான ஆட்சியாக இருக்குமா?

இதற்கான பதிலை எதிர்பார்த்து ஊடகங்களும்  அரசியல் நோக்கர்களும் காத்து கிடந்தனர். பதவியேற்பு விழாவிலேயே அதற்கான பதில் கிடைத்துவிட்டது. பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ள தமது கட்சியை ஆட்சி அமைக்க அனுமதி மறுத்து அலையவிட்ட கவர்னரை எதிர்த்து ஒரு பஞ்ச் டயலாக் கூட விஜயோ தவெக – வினரோ பேசவில்லை. அவ்வளவு ஏன் ஒரு முணுமுணுப்பை கூட வெளிப்படுத்தவில்லை.  அதுவே ஊடகங்களில் விமர்சனமாகவும் மாறியது.

இந்தி சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமையில் (10.09.26) ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

படிக்க:

 பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!
 தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!

விஜய் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும், அடுத்ததாக நடந்த தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் கூட இதே கதை தான் திரும்பவும் நடந்தது. தேசிய கீதம் – ஜன கன மன – பாடப்பட்ட பின்னர் வந்தே மாதரம் வந்தது. அதற்குப் பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர். விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவில் நிறைவில் தேசிய கீதமும் பாடுவதுதான் இதுவரை கடைபிடித்து வரும் மரபாக இருந்தது. “வந்தே மாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளைப் போற்றி பாடப்படுவது. எனவே ஒரு மதசார்பற்ற நாட்டில் அப்பாடல் தேசிய கீதமாக இருக்க முடியாது என (போலி)சுதந்திரம் வாங்கிய காலத்திலேயே சரியாக  தீர்மானிக்கப்பட்டது. அதில் தமிழகம் இதுவரை ஊன்றி நின்றிருந்தது.

சுயமரியாதையையும், தமிழையும் உயர்த்திப்பிடித்து,  ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் நடத்திய போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.

முதல் கோணல் முற்றும் கோணலாக மாறாமல் காக்க வேண்டியது நாட்டு நலனில் அக்கறையுள்ள உள்ள தமிழ்ப் பற்றாளர்களின் கடமை.

“புலிப்பதுங்கித்தான் பாயும்” என்ற அடைமொழிக்கேற்ப தவெக-வினர் நமது தலைவர் கெத்தை காட்டுவார் என்று காத்திருக்க கூடும். ஜோசப் விஜய் ஒரு புலியா – எலியா என்பதை அடுத்து வரும் வரும் நாட்களில் இன்னும் தெளிவாகவே நிரூபிப்பார்.

தமிழகத்தை ஆக்கிரமித்து,  தமிழக மக்களின் மொழிப் பற்றி, இனப்பற்றை, சுய மரியாதை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக போராட போகிறோமா? அல்லது பாஜகவின் பி டீம்களுக்கு எதிராகவும் சேர்த்தே போராட வேண்டி வருமா என்பதை நடப்பு நிகழ்வுகள் விரைவிலேயே தெளிவுபடுத்தும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here