பிரேசிலில் உள்ள அமேசான் ஆற்றின் கிளை நதியில் 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கிடந்தன. கடும் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரிப்பதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். கடுமையான வறட்சியின் போது குறைந்த ஆற்றின் நீர்மட்டம், டால்பின்களுக்கு தாங்க முடியாத வெப்பநிலைக்கு நீரை சூடாக்குகிறது. தண்ணிரில் ஆக்சிஜனும் குறைகிறது.

வியாழனன்று டீஃபே ஏரியின் நீரின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை (102 டிகிரி பாரன்ஹீட்) எட்டியபோது குறைந்தபட்சம் 70 டால்பின்கள் செத்து மிதந்து கொண்டிருந்தன. இது ஆண்டின் இந்த நேரத்திற்கான வழக்கமான சராசரியை விட 10 டிகிரி அதிகமாகும்.

உலகை எச்சரிக்கும் அமேசானின் வறட்சி!
பிரேசிலின் அமேசான் ஆற்றில் செத்து கரை ஒதுங்கிய டால்பின்

பிரேசிலின் முக்கிய நகரமான மனாஸில் கடந்த ஆண்டு இதே சமயம் நீர்மட்டத்தின் அளவு 17.60 மீட்டராக இருந்தது. இது தற்போது 13.59 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது என்று பிரேசில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமேசானின் இரண்டாவது துணை நதியான நெகரோ ஆறு ஏறக்குறைய வரண்டு விட்டது. இங்குள்ள கிராமங்களுக்கு சாலைகள் கிடையாது. ஆற்றின் நீர்வழிப்பாதைதான் உண்டு. ஆற்றில் படகுகள் போகும் அளவு நீர் ஓடாததால் அதுவும் இப்போது உதவவில்லை. பல ஊர்களுக்கு அத்தியாவசிய பொருட்களே கிடைப்பதில்லை. பெரும்பாலான பொருட்கள் டிராக்டர்கள் மூலமாகவோ அல்லது கால்நடையாகவோ விநியோகிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:

6 லட்சம் பேர் வசிக்கும் அமேசானாஸ் மாகாணம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 62 நகராட்சிகளில் 59 இல் நெருக்கடி நிலை நிலவுகிறது. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

காடழிப்புக்கு தந்துள்ள விலை!

அட்லாண்டிக் பெருங்கடலின் அசாதாரண வெப்பமயமாதல் தொடர்ந்தால், அமேசானில் கடுமையான வறட்சி 2024 நடுப்பகுதி வரை நீடிக்கும். இது எவ்வளவு உயிர்களை காவு வாங்கும் என கணக்கிட முடியாது.

அமேசான் காடுகளில் சட்டவிரோத மர கடத்தல் தொடர்கிறது. காட்டுத்தீ அல்லது கார்ப்பரேட்தீ வனப்பரப்பை பொசுக்கி – சுருக்கி, சோயா தோட்டங்களாக உருமாற்றி வந்துள்ளது. இதன் விளைவாகத்தான் தற்போது 6 மாதமாக மழையே பெய்யாமல் ஆறுகள் வறண்டு வருகின்றன. உலகின் மிகப்பெரும் மழைக்காடுகளான இவற்றை இனி மீட்டெடுக்க முடியாதபடி பாலைவனமாகவும் மாறக்கூடும்.

உலகை எச்சரிக்கும் அமேசானின் வறட்சி!
அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் கும்பலால் பயிரிடப்பட்ட சோயா தோட்டம்

தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது; மழைக்காடுகளோ தாகத்தால் துடிக்கிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தீவிர சுரண்டலால் நிகழம் பருவநிலை மாற்றமும், அதிகரிக்கும் புவி வெப்பமும் இன்னுமா நமக்கு புரிபடவில்லை.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here