நேற்று கடைவீதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். உலகக் கோப்பை கிரிக்கெட் பார்க்க வசதியாக, சில கடைகளில் அகன்ற திரைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கெல்லாம் இளைஞர்கள், நடுத்தரவயதினர் குவிந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கப்பியிருந்தது.

காலனி ஆதிக்க அடிமை மனநிலை உருவாக்கியது இந்த கிரிக்கெட் மோகம்.
இங்கு யாரும் விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்பதில்லை. சினிமாவை சினிமாவாகப் பார்ப்பதில்லை.

இந்தியாவுக்கு கிரிக்கெட் வந்து, மூன்று நூற்றாண்டுகளாகி விட்டது.
1721 இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளை மாலுமிகள் கட்ச் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினார்கள். அதை வேடிக்கைப் பார்த்த இந்திய ஆதிக்க சமூகங்கள், தங்கள் எசமானர்களின் விளையாட்டை தாமும் விளையாடத் தொடங்கின. அன்றிலிருந்து இந்தியர்களிடையே இந்த கிரிக்கெட் அடிக்ஷன் வளரத் தோடங்கியது.

கிரிக்கெட்டை இந்தியாவின் மதம் என்கிறார் டெண்டுல்கர். மதத்தை அபின் என்றவர் மார்க்ஸ்.

விளையாட்டு, கலை போன்றவை, ரசனையையும் நல்ல பண்புகளையும் வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு கிரிக்கெட் மதமாகப் பார்க்கப்படுவதால் வெறியை வளர்த்திருக்கிறது.

இதன் வளர்ச்சியைதான் நேற்றைய இறுதிப் போட்டியின்போதும் கவனிக்க முடிந்தது.

உலகில் அதிக அளவு கிரிக்கெட் பார்வையாளர்களைக் கொண்டது இந்தியா. ஐநா அமைப்பில் அமெரிக்கா போன்ற நாடுகள் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறதோ, அந்த அளவு ஐசிசியில் இந்தியாவால் செல்வாக்கு செலுத்த முடிகிறது .

இந்திய வர்த்தகத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் விளையாட்டாக
கிரிக்கெட் திகழ்கிறது.

மொபைல், குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்ஸ், வாகனங்கள், காஸ்மெடிக்ஸ் அனைத்தையும் விற்பதற்கு ஏதுவாக, கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது நட்சத்திர அந்தஸ்த்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அவர்களை லட்சியவாதிகளாக காட்டும் பயோபிக்ஸ் தயாரிக்கப்படுகின்றன.

சந்தை நலனுக்காக மட்டும் அல்லாமல் கிரிக்கெட் ரசனை, தேசிய வெறியாகவும் மாற்றப்படுகிறது.

நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு ஸ்பான்ஸர் செய்த, நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பீடு 20% அளவில் உயர்ந்தது.
நட்சத்திர விடுதிக்கட்டணம், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பெருமளவில் உயர்ந்தன. இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கு செல்லும் விமானக் கட்டணம் 400% அதிகரித்தது.

இதையும் படியுங்கள்: 

“ஜெய் ஸ்ரீராம்” தேசிய அவமானம்! “ஜெய் ஆசாதி” தேசிய முழக்கமாகட்டும்!
 அரங்கெங்கும் ஒலித்த ஜெய் ஶ்ரீ ராம் கோஷம்; அஹமதாபாத் ரசிகர்கள் செய்தது அநாகரிகத்தின் உச்சம்!

இந்தியாவில் கிரிக்கெட் வர்த்தகத்துக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கும் உதவக்கூடிய விளையாட்டாகவும் மாற்றப்படுகிறது.

ஷரத்பவார், அருண் ஜெட்லி, மோடி போன்றோர் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்தனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாகக் கருதப்படுகிற பிசிசிஐ இல் சக்திவாய்ந்த பொறுப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா இருக்கிறார்.

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு ஜெட்லி பெயரும், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயரும் சூட்டப்பட்டன.

சந்திராயன் 3, ஜி 20 உச்சிமாநாடு போன்றவற்றை முன்நிறுத்தி,ஊடகங்கள், மோடியை இந்தியாவின் மறுமலர்ச்சி நாயகனாக காட்டின.

ஒருவேளை நேற்று இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அது ரோஹித் ஷர்மாவின் வெற்றியாக, விராட் கோலியின் வெற்றியாக, முகமது ஷமியின் வெற்றியாக காட்டப்பட்டிருக்காது.

அது, மோடியின் வெற்றியாக மாற்றப்பட்டிருக்கும். ஆனால்,
இப்போது அது இந்திய அணியின் தோல்வி!

ஆட்டத்தில் வெற்றி தோல்வி இயல்பானது! எனும் படிப்பினையைதான், விளையாட்டின் பார்வையாளர்கள் பெற வேண்டும். ஆனால் இங்கு வெற்றியோ தோல்வியோ அது டாஸ்மாக்கில் முடிவதாக இருக்கிறது .

அதனால்தான், ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்பது ஓர் அரசியல் சொல்லாடலாக உருப்பெறுகிறது.

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here