Hunt for Veerappan ஆவணத்தின் கடைசி அத்தியாயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர், ‘வீரப்பன் மரணத்தில் (எப்படி நடந்தது என்ற அர்த்தத்தில்) நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. ஆனால் அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை அல்லவா? இதற்கு ஊடாக உங்களுக்கு விருப்பமான கதைகளை எழுதிக் கொள்ளுங்கள். எனக்கு அவை பொருட்டல்ல’ என்று சொல்கிறார். போலீஸ்தனமான பதில்தான்; ஆச்சரியமில்லை. ஒட்டுமொத்த ஆவணத்தின் integrity’ஐ இடையிடையே வரும் இதுபோன்ற தடித்தனங்கள் பொத்தல் போட்டு காட்டின. முழு படமும் முடிந்தபிறகு யோசித்தால், புதிதாக எதுவும் அறியக் கிடைக்கவில்லை. துண்டு துண்டாகவும் பூடகமாகவும் அறிந்த செய்திகளின் தொகுப்பாக மட்டுமே அந்த series அமைந்தது. முக்கியமான நெருடல், நக்கீரன் கோபாலை ஒரே வரியில் கடந்து சென்ற இடம். கோபால் எதுவும் YouTube பேட்டியில் எதிர்வினை ஆற்றுவார் என்று எதிர்பார்த்தேன்.

கூசெ முனியசாமி வீரப்பன் – அவ்விதத்தில் ஒரு நேரடி எதிர்வினைதான் – நான்காவது அத்தியாயத்திற்கு ‘The Hunt for?’ என்று பெயரிட்டது வரை. முந்தையதை எதிர்க்க வேண்டும் என்ற ஈகோ உரசலில், போலீஸ் தரப்பை தோலுரித்துக்காட்டவேண்டும் என்ற பதைப்பில் வீரப்பனுக்கு கதாநாயக அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. யானைகளைக் கொன்றதையும், சந்தன மரங்களை வெட்டியதையும் சாகசத் தொனியில் சித்தரிக்கிறது. வீரப்பனுக்கு ஒருவித ஈர்க்கும் உடல்மொழியும் அசட்டையான பேச்சுப்பாணியும் இருப்பதால் நாயகப் பிம்பம் எளிதில் அதிகமாகிவிடுகிறது.

நிறைய பேர் அவனை மன்னிக்கும் தொனியில் பேசி அல்லது அவன் தரப்பில் மன்னிப்பு கேட்டு, இன்னுமே அந்தப் பிம்பத்திற்கு தூபம் போடுகிறார்கள். போலீஸ்தான் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பி இப்படி ஆக்கிவிட்டது என்ற சித்திரத்தை மிக நூதனமாக வரைந்து முடிக்கிறார்கள். அங்கே வீரப்பன் மீது வெறுப்பை உண்டாக்க அவனை சாகசக்காரனாக காட்டும் மனைவியைக் கொண்டுவந்தார்கள் என்றால், இங்கே பிம்ப வார்ப்பிற்காக அப்பாவின் தவறுகளுக்கு வருந்தும் மகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இரண்டுமே, series ஆசிரியர்கள் நம்மிடம் எதை விதைக்க நினைக்கிறார்களோ அதை அழுத்தமாக செய்யத் துடிக்கும் முயற்சிகள்தான்.

ரோஹினி இடையில் ஒரு வரி சொல்கிறார்; ‘அவன் செய்த நல்லவை எல்லாம் நல்லவைதான், கெட்டவை எல்லாம் கெட்டவைதான். அவனை ஹீரோ அல்லது வில்லன் என்று ஒரு பக்கத்தில் நிறுத்துவது சரியாக இருக்க முடியாது’. சிலர் அவனை எல்லைச்சாமி என்கிறார்கள். பத்திரிக்கையாளர் ஒருவரே அப்படிச் சொல்கிறார். பன்னிரெண்டு வயது பாலகனை நோக்கி துப்பாக்கியை நீட்டியவன் மனிதனே இல்லை. அவனுக்கு என்ன ரெண்டு விரலில் ஒன்றைத் தொடுவது; பொது மன்னிப்பு ஒரு கேடு. அந்தக் கொடூரத்தையுமே ‘அன்னிக்கு ஏன் அவசரப்பட்டாருன்னு தெரியல’ என்று ஒருவர் வருத்தத்துடன் தாடையை தேய்த்துக்கொண்டு சொல்கிறார். ஆனால் வீரப்பன் அதை விவரிக்கும்போது சின்ன குற்றவுணர்ச்சி கூட இருக்கவில்லை. அந்த மிருகத்தாலும் அதைத் தேடிச் சென்ற போலீஸ் மிருகங்களாலும் செத்து அழிந்தவர்கள் பாவப்பட்ட சாமானியர்கள்தான். இவர்கள் இங்கே series எடுத்து மாற்றி மாற்றி இரு தரப்பிற்கும் சொரிந்துகொண்டிருக்கிறார்கள்.

முந்தயதைவிட கூசெ’வில் மக்கள் படும் அவஸ்தைகள் வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பதாக ஒரு பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரப்பன் செய்தவை யாவும் காவல்துறையின் அட்டூழியங்களுக்கான retaliationதான் என்று நிறுவி அவனுடைய அயோக்கியத்தனங்களை மட்டுப்படுத்தவே இந்த சோகக் காட்சிகளை ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில் இந்த வருடம் தமிழில் எடுக்கப்பட்ட seriesகளில் செய்நேர்த்தியில் மிகச்சிறப்பாக வந்திருப்பவை இந்த இரண்டும்தான். இவற்றைப் போன்ற ideology driven, manipulative ஆவணங்கள்தான் மிகவும் அபாயமானவை. இப்படி எழுதப்பட்ட வரலாறுகளைத்தான் பெரும்பாலும் நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சாயலில், இவை இரண்டும் விருமாண்டியின் பசுபதி/கமல் versions போல தெரியும். சந்தேகமில்லை; இரண்டு வெர்ஷன்தான். ஆனால் இரண்டு வெவ்வேறு பசுபதிகளின் வெர்ஷன்.

நன்றி.

முகநூல் பதிவு

Mayilan G Chinnappan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here