த்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகப்படியான அவநம்பிக்கைப் பதிவுகளை பார்க்க முடிந்தது. சனாதனத்தை இன்னும் வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பும், சனாதனத்தை பற்றி பேசுவதை தற்காலிகமாக நாம் கைவிட வேண்டும் என்று ஒரு தரப்பும் விவாதிக்கிறது. வடக்கர்கள் சரியில்லை, காங்கிரஸ் சரியில்லை என்பதான விமர்சனங்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றிலும் உண்மை இருக்கலாம். இந்த அவநம்பிக்கை வெளிப்படையாக பதிவு செய்வதற்கான நியாயமும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இழந்து அமர்வதற்கான சூழலில் தான் நாம் இருக்கிறோமா எனும் கேள்வியை நாம் நம்மை நோக்கி கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம் 2024 தேர்தல் என்பது சாதாரண மக்கள் பிழைத்து இருப்பதா அல்லது பாஜக மட்டும் பிழைப்பதா எனும் ஒற்றை பிரச்சனையின் அடிப்படையில் ஆனது. எளிய மக்கள் தங்களிடம் மிஞ்சி இருக்கும் எல்லாவற்றையும் இழப்பதா அல்லது குறைந்தபட்சம் இந்த நாட்டில் தங்கள் பிள்ளைகள் வாழ்வதற்கு உண்டான சூழலையாவது மீட்டெடுப்பதா என்பதை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு. ஒருவேளை புரட்சி செய்து நாட்டை மீட்டெடுப்பது என்று முடிவு செய்தாலும் அதற்கு ஆள் சேர்ப்பதற்காக மக்கள் பிழைத்திருக்க வேண்டும் அல்லவா?

கணக்கீட்டின் அடிப்படையில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு குறைவுதான் எனும் முடிவுக்கு நீங்கள் வந்திருந்தாலும் அந்த குறைந்தபட்ச வாய்ப்பை நோக்கி பணியாற்றுவதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. தன் குழந்தை பிழைக்க பத்து சதவீதம் வாய்ப்பு இருக்கிறது எனும் நிலை வந்தால் ஒரு தாயோ தகப்பனோ அந்த பத்து சதவிகிதத்தை சாத்தியமாக்க வேலை செய்வானா அல்லது 90% அவநம்பிக்கையின்படி சிகிச்சையை கைவிடுவானா? சாமானிய மக்களின் மீது குறைந்தபட்ச கரிசனம் கொண்ட மனிதர்கள் கூட இன்று அந்த தாய்க்கும் தகப்பனுக்கும் இணையான சூழலில்தான் இருக்கிறோம்.


இதையும் படியுங்கள்: 5 மாநில தேர்தல்கள்: பற்றிப் படரும் பாசிசம் ’இந்து ராஷ்ட்டிரத்தின்’ முன்னறிவிப்பா?


சோமாலியாவை போன்ற அல்லது அதனைக் காட்டிலும் மோசமான ஆப்பிரிக்க நாடுகளை நீங்கள் youtube வழியே பார்த்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பாஜக தயங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளே தேவைக்கு அதிகமான அவகாசமாக அவர்களுக்கு இருக்கும். அத்தகைய ஒரு நாட்டில் நம் பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தை செலவிட வேண்டுமா? வடக்கர்கள் திருந்தவில்லை, காங்கிரஸ் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனும் சமாதானங்களை மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை கைவிட நீங்கள் தயாரா? இப்போதே பெரும் பணக்காரர்கள் லட்சக்கணக்கில் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். வங்கதேச நாடு கூட பல மதிப்பீடுகளில் இந்தியாவை விட சிறப்பாக இருக்கிறது. பெரிய வசதி வாய்ப்பு இல்லை எனில் நம் அடுத்த தலைமுறை இனி வெளிநாட்டுக்கு ஓட கூட வாய்ப்பு கிடைக்காது என்பதே நம் கண் எதிரே நிற்கும் எதார்த்தம்.

தரவுகள் அடிப்படையில் தேடினால் இந்த நான்கு மாநில தேர்தல் கூட நமக்கு நம்பிக்கை அளிக்கும் பல செய்திகளை கொடுக்கக்கூடும். ஆனால் அதையும் கடந்து நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டியது “பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து வீரியமாக செயல்படுவதை தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை”. எதிர்காலத்திற்கான எந்த செயல்பாட்டையும் ஒரு உத்திரவாத கடிதத்தோடு நம்மால் துவங்க முடியாது. எனவே அவநம்பிக்கை கொள்ளாமல் முடிந்த எல்லா வழிகளிலும் பாஜக எதிர்ப்பை தொடர்வோம். ஒற்றுமை, நிதானம், தொடர் முயற்சி ஆகியவை உறுதியான வெற்றியை கொடுக்கும் என்பதை வரலாறு பல சமயங்களில் பார்த்திருக்கிறது. அதனை இன்னொரு முறை நிரூபிப்பது என்பது கடினமானதுதான் ஆனால் முடியாதது அல்ல.

 Villavan Ramadoss

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here