ண்மையில் தெலுங்கானா தேர்தல் பரப்புரையில் மோடி பேசும் போது தமிழ்நாடு அரசு கோவில்களை கைப்பற்றி கோவில் நிதிகளை முறைகேடு செய்வதாகவும், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதாகவும், இன்னும் பிற மத வணக்கத் தலங்களை எதுவும் செய்யாமல், இந்து மத கோவில்களில் மட்டும் இது போன்ற அநீதிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். மோடி ஓர் அரசியல்வாதி எனும் அடிப்படையில் இதுபோன்ற நான்காம்தர குற்றச்சாட்டுகளை நாம் அசட்டை செய்து விடலாம். பிரதமராக நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது கொஞ்சமும் ஏற்புடையதில்லை.

அறநிலையத் துறையின் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது இது முதன்முறையன்று, பல முறை இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மோடி மட்டுமல்ல, பாஜகவில் உள்ள ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் பார்ப்பனர்கள் பலரும் இந்த குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு சரியானது தானா? இதன் உட்பொருள் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்னால் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு உண்மைகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பாஜக மோடியின் பொய்கள்!
வெறுப்பு அரசியலின் உச்சம்!

நன்கறியப்பட்ட இந்தி எழுத்தாளர் அர்ச்சனா அக்னிஹோத்ரி என்பவர் மோடி பேசியவைகளை தொகுத்து வைத்துக் கொண்டு, அவைகள் ஒவ்வொன்றாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளாக எழுப்பி, கிடைத்த பதில்களை வைத்து சான்றுகளின் அடிப்படையில் மோடியின் பொய்கள் என்று ஒரு நூலையே எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி என்பவரால் மோடி சொன்ன பொய்கள் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகின் எந்த தலைவருக்கும் கிடைக்காத இப்படி ஒரு இழி புகழின் வெளிச்சத்தில் இருந்து தான் மோடியின் அந்த குற்றச்சாட்டை அணுக வேண்டும்.

இவை வெறுமனே பொய்கள் மட்டுமல்ல, வெறுப்பு அரசியலின் உச்சம். கொரோனா காலத்தில் ஜமாத் அமைப்பு தான் கொரோனா பரவலுக்கு காரணம் என்று ஒன்றிய அரசு துறைகளே பரப்புரை செய்தன. பலரும் கண்டித்த பிறகும் திருந்தாமல், ஜமாத் அமைப்பு என்ற சொல்லை மட்டும் பொருள் மாறாமல் சிங்கிள் சோர்ஸ் என்று மாற்றிக் கொண்டார்கள். எச்சில் ஜிஹாத் என்றெல்லாம் உளறினார்கள். இது மட்டுமா மோடியே நேரடியாக தீவிரவாதம் செய்வோர்களை அவர்களின் உடைகளை கொண்டே அடையாளம் காணலாம் என்றார். நாட்டின் நிர்வாக அமைப்புகளும் அதன் தலைவரும் தங்களின் அறுவெறுக்கத்தக்க வாக்கரசியல் வெற்றிக்காக தன் குடிமக்களில் ஒரு பகுதியினரையே பிரித்து வைத்து வெறுக்கவைக்கும் நடவடிக்கைகளில் தயங்காமல் ஈடுபடுபவர்கள் என்பது இதன் மூலம் எளிதாக விளங்கும்.

இதன் ஒரு பகுதியாகத் தான் தங்கள் அரசியலுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, அறநிலையத் துறை என்பது அரசியலமைப்பின் மூலம் சட்ட ஏற்பு பெற்ற ஒரு துறை என்பதையும் மறந்து, பிரதமராக இருப்பவரே நிர்வாக முறைக்கு அப்பாற்பட்டு பொய்யாக குற்றம் சாட்டி வெறுப்பைத் தூண்டுகிறார்கள். இந்த இரண்டு உண்மைகளின் அடிப்படையில் தான் அறநிலயத்துறை குறித்த குற்றச்சாட்டை அணுக வேண்டும்.

இப்படி பொய்களை, வெறுப்பரசியலை கூசாமல் கூறுவது என்பதுதான் பார்ப்பனியத்தின் வரலாற்று ரீதியான செயல்பாடாகும். காந்தியை கொல்ல வந்த கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான் என்பதும், விருத்தசேதனம் செய்திருந்தான் என்பதும் பொய்களின், வெறுப்பரசியலின் அசிங்கமான பக்கங்கள். பார்ப்பனிய புரணங்களிலும் இது இருக்கிறது. மகாபாரதத்தில் துரோணரை வெற்றி கொள்ள ஒரு யானையை கொன்று விட்டு அசுவத்தாமனை கொன்றுவிட்டோம் என்று பொய் கூறினார்கள். அசுவத்தாமன் துரோணரின் மகன். மகாபாரத நாயகர்கள் பலரின் வீழ்ச்சியில் இது போன்ற பொய்களும் புனைவுகளும் இழைந்திருக்கின்றன. இந்த வரலாறின் தொடர்ச்சி தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அறநிலையத் துறை மீதான குற்றச்சாட்டு
ஏன் இப்போது முன் வைக்கப்படுகிறது? 

அறநிலையத் துறை என்பது இப்போது உருவாக்கப்பட்டதல்ல. கடந்த அதிமுக ஆட்சியிலும் அறநிலையத் துறை இருந்தது, அதன் செயல்பாடுகளும் இருந்தன. அறநிலையத்துறையின் மீது இப்போது இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், கடந்த எடப்பாடி ஆட்சியில் அந்த துறையையே இல்லாமல் ஆக்கி இருக்க முடியும். தமிழ்நாட்டுக்கு எதிரான எத்தனையோ திட்டங்களையும், திருத்தங்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். அரசின் உயர் பதவிகளில் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்புடையவர்களை கொண்டு நிரப்பி இருக்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் பலவற்றில் அறநிலையத் துறை போன்ற துறைகள் இருக்கின்றன. அத்துறைகள் கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு நடத்தி வருகின்றன. அண்மையில் மராட்டியத்திலும் ஜார்கண்டிலும் அரசு கோவிலை கையகப்படுத்தி, அதற்கு எதிரான வழக்குகள் தீர்ப்பு மன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இரண்டிலும் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. இவை குறித்து மோடியோ பாஜகவோ எதுவும் பேசவில்லை.

தமிழ்நாட்டு இந்து அறநிலையத்துறை ஏன் எப்போதும் குறிவைக்கப்படுகிறது? இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வரலாற்றுக் காலத்திலிருந்து தொடங்க வேண்டும். மோடியின் குற்றச்சாட்டில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டு அறநிலையத்துறையின் மீதான குற்றச்சாட்டு ஒன்றென்றால், ஏனைய மத வழிபாட்டுத்தலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, இந்து மத கோவில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? என்று இந்துக்களிடம் வைக்கப்படும் கேள்வி மற்றொன்று. இந்துக்களுக்கும் கோவில்களுக்கும் என்ன தொடர்பு?

இதையும் படிக்க: அரசே, அறநிலையத்துறையை காப்பாற்று! அறநிலையத்துறையே, கோவில்களை காப்பாற்று!!

கோவில் என்றால் இன்று வழிபாட்டுத் தலமாக மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் பண்டைய காலத்தில் கோவில் என்றால் (கோ+இல்; கோ – மன்னன். மன்னனின் இல்லம்) களஞ்சியம், கோவில் என்றால் கருவூலம், கோவில் என்றால் நிர்வாகம் நடக்கும் இடம் கூடவே வழிபாட்டுத் தலமும். இன்றும் கூட பல கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் இருக்கிறது. கேரள பத்மநாபசாமி கோவிலில் தங்க நகைகள் குவியல் குவியலாக கிடைத்தன. இதனால் தான் மன்னர்கள் படையெடுத்து கோவில்களை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தினார்கள்.

கோவில்களின் சொத்து இரண்டு விதங்களில் வந்தன. ஒன்று அரசு நிர்வாக வழியாக விவசாயத்துக்கு விதிக்கப்படும் வரி கோவில் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டு, பொன்னாக, பொருளாக மாற்றப்பட்டது. இரண்டு, அரசு பணிகளுக்கு, கடவுட் பணிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடை நிலங்கள். இந்த இரண்டு வகை சொத்துகளும் கோவில்களில் தான் குவிந்து கிடந்தன. இந்த சொத்துகள் எந்த மதத்தினருக்கும் தனிப்பட்ட உரிமையினால் ஆனதல்ல, மாறாக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள்
பொதுச் சொத்தேயாகும்.

கோவில்கள் இப்படி அரசு களஞ்சியங்களாக, கருவூலங்களாக, மக்கள் சொத்துகளாக இருந்த காலத்தில் இந்து என்றொரு மதமே இருந்தது இல்லை. அன்றைய காலத்தில் வேத எதிர்ப்பு மதங்களாக சமண மதங்கள் என பொதுவாக குறிக்கப்படும் ஆசீவக, ஜைன, பௌத்த மதங்களும், வேத மதங்களாக சைவம், வைணவம், கௌமாரம், காணபத்யம், சௌரம், சாக்தம் ஆகிய மதங்களும் இருந்தன. சங்கரர் முதன் முதலில் வேதமதங்கள் ஆறையும் ஒன்றாக இணைக்க முயன்றார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் காலனியாதிக்க காலத்தில் தான் இந்து எனும் பொதுப் பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டு ஆறு மதங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

அன்றைய காலங்களில் பெரும்பான்மை மதங்களாக இருந்தவை சமண மதங்களே. இன்றைய இந்து கோவில்களாக கருதப்படுவை பலவும் சமணக் கோவில்களாக இருந்து இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டவையே. ஏனென்றால் வேதங்களில் உருவ வழிபாடோ, கோவில்களோ கிடையாது. எனவே, இன்று இருக்கும் கோவில்களும் அதன் சொத்துகளும் அரசுக்கு, மக்களுக்கு சொந்தமானவையே தவிர இன்று இந்து என்று கருதப்படும் மதத்துக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சொந்தமானது அல்ல.

அரசியல் மாற்றங்களையும், பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் பயன்படுத்தி படிப்படியாக கோவில்கள் இந்து மதத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டன. இந்து மதத்தின் பிடிக்குள் என்பதன் மெய்யான பொருள் இந்து மதத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவாக என்பது அல்ல. மாறாக, இந்து மதத்தின் சாதியப் படிநிலையின் மேல் அடுக்குகளில் இருக்கும் பார்ப்பன, மேல்சாதிகளில் உள்ள சிலரால் கணக்கற்ற முறையில் சொந்த பயன்பாட்டுக்கும் அதன் வழியே வகைதொகையின்றி சூறையாடப் பட்டதே அதன் மெய்யான பொருள்.

இந்து மதத்தின் கோவில்களை அரசு நிர்வகிக்கலாமா? என்று பிரதமர் முதல் சாமியார்கள் வரை இன்று கேள்வி கேட்கும் எவரும், மக்களுக்கு சொந்தமான கோவில் சொத்துகளை இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் சூறையாடினார்களே அது குறித்து மறந்தும் பேச மாட்டார்கள். ஆனால், அன்று அதை கேட்பதற்கு நீதிக்கட்சி வரவேண்டி இருந்தது. 1925ல் அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த நீதிக் கட்சியின் பனகல் அரசர் தான் முதன் முதலில் அறநிலையத்துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரையும் பொறுப்பாக்கி கோவில் சொத்துக்களை முறைப்படுத்த தொடங்கினார். ஐந்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தமிழ்நாட்டு கோவில்களின் சொத்துகளை வகைப்படுத்தி சட்டவிரோதமாக யாரும் ஆக்கிரமித்துவிடாமல் பாதுகாத்தார்.

சேர, சோழ, பாண்டிய, பல்லவ, வேளிர் மன்னர்களின் காலத்தில் தமிழ்நாட்டு கோவில்களில் இருந்த நிலங்கள், பொன் நகைகள், களஞ்சியங்கள் எவ்வளவு என்பதற்கு முறையான கணக்குகள் கண்டடையப்படவில்லை. இப்போதும் கோவில்களில் மீதமிருக்கும் நகைகளின் ஒட்டு மொத்த அளவு என்ன என்பது கணக்கிடப்படவில்லை. நிலங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. என்றால் இவ்வளவு நிலங்களையும், நகைகளையும் வகைதொகையில்லாமல் திருடிக் கொழுத்தவர்கள் யார்? இன்று இந்துக்கள் என்று தம்மை நம்பிக் கொண்டிருக்கும் அனைவரும் தமக்குள்ளே விடை தேட வேண்டிய கேள்வி இது.

அந்த திருட்டும் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிதம்பரம் கோவிலின் அண்மைய திருட்டுக் கதைகளை கேட்டாலே விளங்கும், சங்கரராமன் தொடங்கி எத்தனை கோவில்களில் என்னென்ன கொலைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடந்திருக்கின்றனவோ அங்கெல்லாம், இன்னும் எத்தனை கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப் படவில்லையோ அங்கெல்லாம் மிக அதிகமான நிலத் திருட்டுகள் நடந்துள்ளன எனக் கொள்ளலாம்.

கோவில்களை பார்ப்பானிடம் ஒப்படை!
அதுவே இந்து தர்மம்.

இப்போது பாஜகவும் ஏனையோரும், சாமியாரும் எழுப்பும் கேள்விகளுக்கு வரலாம். கோவில்களை நிர்வகிப்பதில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்றால் அந்த இடத்தில் இருந்து கோவில்களை நிர்வகிப்பது யார்? இந்துக்களுக்கென்று பொதுவான ஒரு அமைப்பு இல்லை. இருப்பதெல்லாம் சாதி அமைப்புகள் தான். சாதி இல்லை என்றால் இந்து எனும் மதமே இல்லை. பார்ப்பனிய மேலாதிக்கமும், மேல்சாதி ஆதிக்கமும் தான் கோவில்களை நிர்வகிக்குமா? என்றால் அதன் பொருள் என்ன? மீண்டும் எங்களை வகைதொகையின்றி திருட அனுமதிக்க வேண்டும் என்பது தானே? இதை ஏற்க முடியுமா?

இந்துக் கோவில்களை தவிர ஏனைய மதங்களின் வழிபாட்டுத்தலங்களை அரசு நிர்வகிக்கவில்லை என்று கூறப்படுவது உண்மையா? அப்பட்டமான பொய். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கலை நிர்வகிக்க வக்பு வாரியம் என்றொரு துறை இருக்கிறது, அதற்கு ஒரு அமைச்சரும் இருக்கிறார். கிருஸ்தவ வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க அவ்வாறான அரசுத் துறை ஏதும் இல்லை. ஏன் இல்லை என்பதை புரிந்து கொள்ள நுணுக்கமாக பார்க்க வேண்டும். அண்மையில் இறந்த மேல்மருவத்தூரார் நிறுவனம் நிர்வகிக்கும் ஆதிபராசக்தி கோவில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. இது போன்ற ஜக்கி வாசுதேவ் போன்ற கார்பரேட் வணிகச் சாமியார்கள் நிர்வகிக்கும் பல கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இது போன்ற கோவில்களையெல்லாம் அரசு நிர்வகிக்கவும் இல்லை, நிர்வகிக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் இவைகலெல்லாம் பிறகாலத்தில் தனியார்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. பண்டைய காலங்களில் அரசர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களைத் தான் அரசு நிர்வகிக்க அறநிலையத்துறை கொண்டு வரப்பட்டதேயன்றி, வழிபாட்டுத் தலங்களை எல்லாம் நிர்வகிக்க உருவாக்கப்பட்டதல்ல. இஸ்லாமிய பழமையான பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தின் கீழ் அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. புதிய பள்ளிவாசல்கள் அவைகளை உருவாக்கிய தனியார்களோ, அமைப்போ நிர்வகிக்கின்றன. இதுபோல கிருஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் பழமையானவை இல்லை பெரும்பாலும் புதியவைகளே என்பதால் (வெள்ளையர் வருகைக்கு முன்பு இங்கு கிருத்தவம் பெரிய அளவில் அறிமுகமாயிருக்கவில்லை) அரசு நிர்வகிக்கும் தேவையே எழவில்லை.

இந்து வழிபாட்டுத் தலங்களில் பழமையானவைகளில் பல கோவில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன, இன்னும் பல பழமையான கோவில்கள் அரசின் கீழ் கொண்டுவர வேண்டியுள்ளது. புதியவை தனியார்களின் அமைப்புகளின் கைகளில் உள்ளன. இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் பழயவை அரசின் கட்டுப்பாட்டிலும் புதியவை தனியார்களின் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிருஸ்தவ வழிபாட்டுத்தலங்களில் பழமையானவை இல்லை என்பதால் இருப்பவை தனியார், அமைப்புகளின் காட்டுப்பாட்டில் உள்ளன. நிலமை இப்படி இருக்க மத வெறியூட்டும் நோக்கில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அரசு நிர்வகிக்கவில்லை, இந்து மத வழிபாட்டுத்தலங்களை மட்டும் அரசு நிர்வகிக்கிறது கொள்ளையடிக்கிறது என்று பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது?

பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவானவரா?
அகண்ட பாரதத்தின் தூதுவரா?

நாட்டின் பிரதமரே மேற்கண்டவாறு பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்? இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றாலும், வெறுப்பு அரசியல் அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருவதுதான் என்றாலும், குறிப்பாக இப்போது அதை பரந்த அளவில் செய்வதற்கு முதன்மையான காரணம் ஒன்று இருக்கிறது. கடந்த 2014 தேர்தலை ஊழலுக்கு எதிரான முழக்கத்துடன் எதிர் கொண்டார்கள். 2019 தேர்தலை வளர்ச்சி எனும் முழக்கத்தை முன்வைத்து எதிர் கொண்டார்கள். இப்போது வளர்ச்சியும் இல்லை, ஊழல் ஒழிப்பு என்று பேசவும் முடியாதபடி அனைத்து துறைகளிலும் ஊழல் கரைபுறண்டோடுகிறது என்பதால் இந்துப் பெரும்பான்மை வாதத்தை கையிலெடுத்து, சிறுபான்மையினர், பழங்குடிகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதாக பிளவுவாதத்தை கையிலெடுத்து கடைபரப்புகிறார்கள். அதனால் தான் மோடி இந்த ஆண்டு ஆக்ஸ்ட் 15 உரையில் பேசும்போது கூட, 1300 ஆண்டுகளாக நாம் அன்னியர் கைகளில் சிக்கி இருந்தோம் என்று இஸ்லாமிய ஆட்சியையும் காலனிய ஆட்சிக் கணக்கில் சேர்த்து பேசியிருந்தார்.

அதேநேரம், இது குறுகிய கால தேர்தல் வெற்றிக்காக செயல்படுத்தப்படும் திட்டம் என்று குறைத்து மதிப்பிட்டு விடவும் கூடாது. கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் எனும் நரித்தனத்தின் மற்றொரு பக்கமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடுத்தாக வேண்டும் என்று முனைந்து வருகிறார்கள். இதற்கு தீர்ப்பு மன்றங்களும், தீர்ப்புரைஞர்களும் (நீதிமன்றம் என்பது பொருத்தமான சொல்லாக தோன்றவில்லை என்பதால் தீர்ப்பு மன்றம் என்றும், நீதிபதியை தீர்ப்புரைஞர் என்றும் பயன்படுத்தலாம்) பக்கப்பாட்டு பாடி ஒத்துழைத்து வருகிறார்கள். ஒருபக்கம் ஏராளமான சொத்துகளைக் கொண்டிருக்கும் கோவிலிகளில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்கிறார்கள். மறுபக்கம், வேறு யாரும் கோவிலுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் எந்த எல்லைக்கும் செல்ல ஆயத்தமாக இருக்கிறார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் பண்டைய காலத்தைப் போல் பார்ப்பன மேலாதிக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனும் வெறி தெரியவரும்.

இவ்வாறு கூறும் நேரத்தில் சமூகநீதி அரசு, நீதிக்கட்சியின் நீட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கத்தின் கீழுள்ள அறநிலையத் துறை சீரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். 1. அறநிலையத் துறையின் கீழுள்ள கோவில்களில் அர்ச்சகர்களும், ஏனையோரும் செய்த குற்றங்கள், முறைகேடுகள் குறித்து ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவைகளை எடுத்து நடத்துவதற்கும், விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கும் எந்த முயற்சிகளையும் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது அறநிலையத் துறை. 2. தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்புகளின் படியே அர்ச்சகர்களாக நீடிக்க முடியாத தகுதியில்லாத அர்ச்சகர்கள் ஏராளமானோர் இன்னும் அர்ச்சகர்களாக பணி புரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்துசாதி அர்ச்சகர்களை பணியில் அமர்த்த வாய்ப்பிருந்தும் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது அறநிலையத் துறை? 3. அனைத்து சாதி அர்ச்சர்கள் பணியமர்த்தும் வழக்குகளில் போதிய அக்கரையின்றி மேலெழுந்தவாரியான வாதங்களை வைத்து வழக்குகளில் தோற்கும் நிலை ஏற்படும் அளவுக்கு அறநிலையத் துறை ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது? அறநிலையத்துறை தன் தூக்கத்தை கலைத்து சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்க வேண்டும்.

திமுக ஆட்சியில் 2000 கோயில்களை குடமுழுக்கு செய்துள்ளோம் என்ற பெருமை பட்டுக் கொள்வதற்கும், தாங்களும் இந்துக்களின் பிரதிகள் தான் என்பதை நிலைநாட்ட படாத பாடுபடுகிறார்கள். திமுக அண்ணாதுரையின் காலத்திலிருந்து ”ஒன்றே குலம்> ஒருவனே தேவன்” என்ற கொள்கைக்கு மாறிவிட்டது என்பதால் அது நாத்திக கட்சி அல்ல. அதுமட்டுமல்ல, கட்சியின் கொள்கையே அரசாங்கத்தின் கொள்கையாக கடைபிடிக்க இந்த அரசமைப்பின் கீழ் முடியாது.

பாசிச மோடி தமிழகத்தில் அறநிலைத்துறை மீட்கப்பட வேண்டும் என்று பேசுவதை முறியடிக்க வேண்டுமென்றால், சிதம்பரம் உள்ளிட்டு பொதுச் சொத்தான கோவில்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். கோவில்களில் நடக்கின்ற கொலைகள், கொள்ளைகள், பாலியல் சீரழிவுகள், சொத்துக்களை திருடும் முறைகேடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கோயில்களில் திரண்டுள்ள சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்குவது மட்டுமின்றி படிப்படியாக நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்து முடிக்க வேண்டுமென்றால் கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதே தற்போதைக்கு தீர்வாகும்.

  • செங்கொடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here