‘கவுண்டர் பையனைத்தான் கலியாணம் செய்துக்குவேன்’ என்று எவ்வித தாளத்துக்கும் அடங்காத அபத்த லயத்தில், ஒரு நபர் இளம் பெண்களிடம் சத்தியம் வாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகியிருக்காவிட்டால், வள்ளிக்கும்மி என்ற ஒரு வகை நடனம் இருப்பதே எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.

‘ரோஜாவின் மின்னல்கள், உனதழகினை’ பாடலோடு அருமையாக இணைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கண்ணடிப்பும், நளினமும் சத்தியம் வாங்கிய அருவருப்பிற்குப் பின்னர் ரசிக்கவில்லை.

வள்ளிக்கும்மியின் வரலாறைத் தேடினால், தெளிவான குறிப்புகள் இல்லை. சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் வள்ளிக் கூத்து என்ற கூத்து வகை குறிப்பிடப்படுகிறது. வள்ளிக்கும்மி வரலாறில் கட்டமைக்கப்படுவது போல வள்ளிக்குறத்திக்கும் சிலப்பதிகார வள்ளிக்க்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

சிலப்பதிகார, தொல்காப்பிய காலத்திற்கும் முந்தைய சங்க காலத்திலும் வள்ளிக்கும்மி இல்லை; வள்ளைப் பாட்டு இருந்திருக்கிறது. வள்ளைப் பாட்டு என்பது, வேறு ஒன்றுமில்லை. தானியத்தை உலக்கையிலிட்டு இடிக்கும் பெண்கள், களைப்பு தெரியாமலிருக்க பாடும் பாடல்தான். இன்றைய குத்துப் பாடலின் முன்னோடி.

வள்ளைப் பாட்டு, வள்ளிக்கூத்தாகவும் இன்றைய வள்ளிக்கும்மியாகவும் உருமாறியிருக்கலாம்.

எவ்வித கூச்ச உணர்வுமின்றி சத்தியத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்தவரின் காதைப் பிடித்துத் திருகி கலித்தொகையின் 42, 43வது பாடல்களைக் கேட்க வைக்க வேண்டும்; காதல் மனம் கொண்ட பெண்களின் கவலை புரியும்.

தானியத்தை இடித்தபடி இரு இளம் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டு. திரும்பி வந்து மணமுடிப்பதாகச் சொல்லிச் சென்ற காதலன் திரும்பி வராத வெறுப்பு பாடலாக வெளிப்படுகிறது

மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை
துன்னான் துறந்தான் மலை
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

அதற்கு தோழி, ‘நாம் இங்கு வள்ளைப் பாட்டு பாடியதை அவன் மறைந்திருந்து கேட்டு உன் மீது இரங்கி உனது தந்தையிடம் அந்த வேங்கை மரத்தின் கீழ் நின்று தனது விருப்பத்தை தெரிவித்தான். உன் தந்தையும் மலை நாட்டானுக்கு உன்னை மணமுடிக்க சம்மதித்து விட்டார்’ என்று தலைவியின் துயரத்தை ஆற்றுவதோடு பாடலையும் முடிக்கிறாள்

நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும்
மன்றல் வேங்கை கீழ் இருந்து
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே

அடுத்த பாடலும், தன்னை காண வராமல் போன காதலனையும் அவனது மலை நாட்டையும் திட்டியபடியே பாடும் வள்ளைப்பாட்டுதான்.

பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா

அடர்ந்த பெரிய சோலையையுடைய நல்ல மலை நாட்டினைச் சேர்ந்தவன் நம்மை மறந்துவிட்டான், ஆனாலும் எனக்கு அவன் நல்லவன்தான்

எனவே அவனுடைய சிறப்புக்களை, நாம் யானைக் கொம்பைக் கொண்டு மூங்கில் நெல்லைக் குத்தியவாறு வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம் தோழி என்கிறாள் அந்த அபலைப் பெண். வார்த்தைகளின் கடுப்பு மேலும் ரெண்டு குத்தாக உலக்கையில் இடித்திருக்கும். குத்துவதற்குப் பயன்பட்ட உலக்கை, யானைத் தந்தமா அல்லது ஒரு வகைப்பட்ட மரமா என்று தெரியவில்லை.

இந்தப் பாடலின் இறுதியிலும் ‘வள்ளைப் பாட்டை மறைந்து நின்று கேட்ட காதலன், தோழியை ‘விலகு’ என்று கையால் சைகை செய்து விட்டு தலைவியை பின்புறமாகத் தழுவிக் கொள்வதாக முடிகிறது.

என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனி பசப்பு

சத்தியம் கேட்டவருக்கு என்னவோ சத்தியம் செய்தாலும், பல இளம் பெண்களின் நமுட்டுச் சிரிப்பு, குவியக்குறையையும் மீறி வீடியோவில் உணரமுடிந்தது. சிலர், ‘போய்யா பெரிசு’ என்றிருக்கலாம். சங்ககாலப் பெண்ணும் வள்ளைப் பாட்டுக்கிடையே ‘முட்டாப்பய ஊரு இது, இந்த ஊர் மக்கள் என்னைப் பற்றி கேவலமாய்ப் பேசினால் பேசட்டும், எனக்கு என்ன’ என்று ஊர்காரர்களை வள்ளைப்பாட்டால் திட்டியபடியே பருத்த அடிப்பாகத்தைக் கொண்ட உரலைக் குத்தியதாக குறுந்தொகை 89ம் பாடலில் பரணர் கூறுவது அழகு.

பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன் கொல் இ பேதை ஊர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இ
மெல் இயல் குறு மகள் பாடினள் குறினே

பரணரின் தலைவி சிலர் தலையில் வள்ளைப் பாட்டால் குத்த வேண்டிய தேவை இன்றும் தொடர்கிறது…

000

வள்ளிக்கும்மி ஆடிய இளம் பெண்களிடம் வாங்கப்பட்ட சத்தியத்தைப் பற்றி நான் எழுதியது, பாரதீய ஜனதா வழக்குரைஞர் ஒருவரை கோபப்படுத்தி விட்டது. வழக்கமாக ‘கிறிஸ்தவக் கைக்கூலி’ என்ற கிண்டலுடன் நின்று விடுபவர், இந்த முறை எனது பெண்களையும் இழுத்து, கவுண்டர்களிடம் கூறி என்னை என்ன செய்கிறேன் பார்’ என்ற மிரட்டல் வரை சென்று விட்டார்.

தொடர்ந்து, ‘சத்தியம் வாங்கினால் உங்களுக்கு என்ன பிரச்னை’ என்ற தோரணையில் சில செய்திகள். அவர்களின் அறியாமையைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர என்னால் செய்யக் கூடியது வேறு இல்லை.

இதையும் படியுங்கள்: வள்ளிக்கும்மி  ஒரு நண்பரின் அனுபவம்!

சுயமாக முடிவெடுக்கக் கூடிய வயதை அடைந்து விட்டார்கள் என்று நினைத்த மறுகணம் என் பெண்களிடம் நான் கூறியது, அவர்களுக்கான துணைகளைத் தேடுவதோ அல்லது கலியாணம் செய்து வைப்பதோ என் வேலையில்லை என்பதுதான். இதை எல்லாம் எப்படி அவரிடம் விளக்குவேன் என்ற ஆயாசத்தில் சற்று வேதனையடைந்தது உண்மை.

அடுத்த நாள் வழக்குரைஞர் முகமது முஹைதீன் தனது வழக்கமான கிண்டல் பாணியில் புத்தகத்தைப் பற்றி பேசியது, வேதனைக்கு ஆறுதலாக இருந்தது. என்னிடம் கூறியதை அவரது முகநூல் பக்கத்திலும் எழுதியிருக்கிறார்.

//அரேபியன் ஒரு உருவத்திலும், சீனன் வேறு ஒரு தோற்றத்திலும், கிரேக்கன் அவனுக்கே உண்டான உயரத்திலும் இப்போதும் பார்க்க முடிகிறது. ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களை பார்க்கும்போது எல்லா உருவத்திலும் எல்லா நிறத்திலும் எல்லா உயரத்திலும் தென்படுகிறார்கள். பிரபு அவர்கள் இதற்கான விடையை நம் பண்டைய வாணிபத்தில் இருந்து தேடிப் பிடித்து சொல்லி இருக்கிறார்//

முகமது முஹைதீன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கோர்வையாகப் பேசக் கூடியவர். நகைச்சுவைப் பேச்சுக்கு சொந்தக்காரர். சினிமா வாய்ப்பு தேடியும் ஒரு சுற்று சுற்றி விட்டு தற்போது நீதிமன்றங்களில் சிறந்த வழக்குரைஞராகவும், வழக்குரைஞர் சங்கங்களில் பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முஹைதீனின் சந்தேகம் எனக்கும் இருந்த ஆர்வத்தில், அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் எனது டி என் ஏவை ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த முடிவு என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. பெருவாரியாக தென்னிந்திய டி என் ஏதான் என்றாலும் 11 சதவீதம் ரஷ்ய சைபீரியா வரை செல்கிறது. சத்தியம் வாங்குபவர்களும் சோதித்துப் பார்க்கலாம்.

இனி, முகமது முஹைதீனின் பதிவிலிருந்து

“படி, படி எப்பாடு பட்டாவது படி ..”….. புத்தகத்தின் கடைசி 301 வது பக்கத்தில் புத்தக ஆசிரியர் மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் கல்வி ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதனை புத்தகத்தின் மூலமாகதிரு பிரபு ராஜதுரை அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

சங்க கால பாடல்களுக்குள் சென்று சமகால நிகழ்வுகளோடு அதனை பொருத்தி அற்புதமான புத்தகத்தை தந்துள்ளார் பிரபு ராஜதுரை

நும்மினும் சிறந்தது நுவ்வை…….

(நினைத்தேன் வந்தாய் படத்தில் அந்த கதாநாயகிக்கு மரம் தங்கையாக தோழியாக காட்டப்படும்…,)

அகநானூறு புறநானூறு கலித்தொகை…… அவ்வையார் பாரி ஓரி….. எனத் துவங்கி சுஜாதா வரை தொட்டு விட்டுள்ளார்.

தமிழர் வரலாறை நிமிர்ந்து அமர்ந்து வாசிக்க வைத்துள்ளார் என்று சொல்லலாம்.

முதலில் சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் எளிமையான நடையில் பொருத்திப் பார்த்திருக்கிறார். மணிரத்னம் படம் போல் இல்லாமல் எளிதாக புரியக்கூடிய பாலச்சந்தர் படம் போல் உள்ளது.

அரேபியன் ஒரு உருவத்திலும், சீனன் வேறு ஒரு தோற்றத்திலும், கிரேக்கன் அவனுக்கே உண்டான உயரத்திலும் இப்போதும் பார்க்க முடிகிறது.

ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களை பார்க்கும்போது எல்லா உருவத்திலும் எல்லா நிறத்திலும் எல்லா உயரத்திலும் தென்படுகிறார்கள்.

இதை பல நேரங்களில் சிந்தித்துப் பார்த்ததுண்டு. பிரபு அவர்கள் இதற்கான விடையை நம் பண்டைய வாணிபத்தில் இருந்து தேடிப் பிடித்து சொல்லி இருக்கிறார்..,

வெவ்வேறு இடங்களில் புலால் உணவு பற்றிய செய்திகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது I am a pure non vegetarian என்று அந்த காலத்தில் சொல்லி திரிந்து இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

காதலை தொட்டு பேசும் போது…. பிரபு அவர்கள் தற்போது உள்ள ஆணவக் கொலை முதல் அனைத்தையும் அலசி உள்ளார். சங்க காலத்தில் காதலுக்கான எதிர்ப்பு இப்போது உள்ளது போல் இல்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

சில கிறுத்துவ செய்திகளை அவர் பதிவு செய்துள்ளது அவ்வளவு எளிதில் எங்களுக்கு புரியவில்லை. அந்தப் பெயர்களோடு பயணிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது. அதிலும் விவிலியத் தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தியா டுடேவில் வரக்கூடிய தமிழ் போல கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.

ஒரு பக்கம் சங்க கால பாடல்கள் இன்னொரு பக்கம் விவிலியம் சார்ந்த விஷயங்கள், நடப்பில் உள்ள அரசியல் நிகழ்வுகள், அங்கங்கே தேவைப்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு ஓரத்தில் இளையராஜா என அனைத்து பகுதிகளையும் மிக அழகாக தந்திருக்கிறார்.

இந்த புத்தகத்தில் அணிந்துரைப் பகுதி ஆராய்ச்சி கட்டுரை போலவே அமைந்துள்ளது.

திரு பிரபுராஜ துரை அவர்களின் சில பதிவுகளில் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. மிகவும் குறிப்பாக இனம் சாதி பற்றிய பதிவுகளில் அவர் தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற வட்டத்திற்குள் அதை அவர் பொருத்திக் கொண்டால்….. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை°

நல்ல புத்தகம்.

டி எஸ் முகமது முகைதீன்

முகநூல் பதிவு : பிரபு ராஜதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here