அங்கம் இரண்டு :
” ஊர்உலகம் கவனிக்கத்தான் செய்கிறது ” என்று அங்கம் ஒன்றை முடித்திருந்தோம்.. கோணங்கியின் திருவிளையாடல்களை மணல்மகுடி பூபதி மட்டுமல்ல, நாடகக்குழு இளைஞர்களும் அறிந்திருப்பதால், இந்த இயக்கம் அனிச்சைச் செயலாக, மறைமுக உடன்படிக்கையாக இயங்கி வந்திருக்கிறது என்பதைக்கேட்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ” இதுகுறித்து ‘எனக்கு அதிர்ச்சிஒன்றுமில்லை ” என்று சொல்கிறார் ஜெயமோகன். ஸ்ரீலஸ்ரீ மஹாமுனியாக அவதரித்திருப்பதால் ஜெயமோகனுக்கு மட்டுமே தைரியம் வரும் என்று வைத்துக் கொள்ளலாம் !
ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்கள் பக்கம் நிற்கின்றவர்களோ முன்வைக்கும் ஒன்றிரண்டு வாதங்களில் இதேபோல ஒரு தொனி வந்திருப்பது நெருடலாக உள்ளது. இளங்கோ கிருஷ்ணன் ” கோணங்கி விவகாரம் அதிர்ச்சியாக இல்லை. முன்பே தெரியும் ” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்படி மௌன சாட்சிகளும் இருந்துள்ளார்கள் ; வெளியே சொல்லமுடியாத அளவு ஒருவித கூச்சமோ, விட்டேற்றித்தனமோ, அச்சமோ பீதியோ செயல்பட்டுள்ளது என்று ஊகிக்கத் தோன்றுகிறது. இதுதான் நெருடலாக உள்ளது.
இப்போது இவர்களே கூட எதிர்த்து அம்பலப்படுத்துகிறார்கள் ; பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம் என்று அறிக்கை அளிக்கிறார்கள் ; ” நானும் பாதிக்கப்பட்டேன் ” என்று சொந்தப் பெயர்களோடு பிராது கொடுக்க முன்வந்து நிற்கிறார்கள்; அப்படிப்பட்டவர்கள் சேர்ந்து கூட்டறிக்கையும் விட்டுள்ளார்கள். இது வரவேற்கத் தக்கதுதான். இவர்கள் தொடர்ச்சியாக நியாயத்துக்காக நின்று போராடவேண்டும், ஓடிவிடக் கூடாது. கூடவே, இப்போதே சில எச்சரிக்கைகளையும் இவற்றோடு சேர்த்துப் பரிசீலிக்கவேண்டும் என்றுமட்டும் கூடுதலாகச் சொல்லத் தோன்றுகிறது. அவை என்னென்ன?
வாசுதேவன் இப்படி எழுதுகிறார் : ” ( கோணங்கி ) என் வீட்டிற்கு அடிக்கடி வருகிறவர். அந்நியோன்யமாக இருப்பார்… எந்த அத்துமீறலையும் நான் பார்த்ததில்லை …. தற்பால் விருப்பமுள்ளவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதைப்பற்றி நான் அவரிடம் பேசியதில்லை. இது அவரவர் சொந்த விருப்பம்….” அப்படியானால் எப்போதோ அவர் குறுக்கிட்டிருக்கமுடியும் ஆனால் குறுக்கிடவில்லை; கவனியுங்கள். அந்நியோன்யம், ஆனால் அந்நியோன்யமில்லை. அவர் பொறுப்புடன் நடந்துகொள்ளாமல் தயங்கியிருக்கிறார் . ஏன் தயங்கினார்? புரியவில்லை, தெரியவில்லை.
இவரைப்போலவே கவிஞரும் பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன் “கோணங்கி இப்படி இப்படி என்று எனக்குத் தெரியும் ” என்று சொல்லும்போது, இத்தனை ஆண்டு கழித்து இப்போது ஏன் ? — என்று வேறுசிலர் கேள்விகேட்கிறார்கள்.
இத்தனை அழுத்தம் சமூகப் பழக்கத்தின்மீது விழுந்துகிடந்து .அதை மீறித் திமிறிவரவே இத்தனைக் காலம் பிடித்திருக்கிறது என்று ஒருவர் நியாயமாகப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் இப்போதும் இந்தக் கேள்வி ஏன் கேட்கப்படுகிறது ? ஒருவேளை, கோணங்கியை வீதியில் நிறுத்தி மக்கள் விசாரிப்பதையே தள்ளிப் போட முயற்சி நடக்கிறதோ?
இதையும் படியுங்கள்: கல்விக்கூடமா? பாலியல் கூடாரமா? பாலியல் பொறுக்கிகளுக்கு முடிவு கட்டுவோம்! புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அறைகூவல்!
கவிஞர் பெருந்தேவி சொல்வதைக் கேளுங்கள் : ” சட்டரீதியான நடவடிக்கைகள் பல சமயம் சாத்தியப்படுவதில்லை. ” இதற்கு மறுதலையாக, கோணங்கியின் செயல்/ குற்றச் செயல் எத்தகையது என்பதற்கு ஷ்யாம் சுந்தர் பதிவதைப் பாருங்கள் :”(இவை) ஆள்பார்த்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ,” என்கிறார் அவர். இதுதான் உள்ளூர நகர்ந்து வேலை செய்து சட்டரீதியாகச் செயல்படுவதைத் தடுக்கிறது என்று பெருந்தேவி புரிந்துகொள்ளவேண்டும். த.மு.எ.க.ச, மற்றும் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன் , எஸ்.ராமகிருஷ்ணன், கவிதாபாரதி , குமரேசன், கி.வே.பொன்னையன், கனல்மைந்தன், சிவகுமார், சுந்தர், ரூபி ஆகிய பலரும் கண்டித்திருக்கிறார்கள் ; இவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள் அல்ல. சிலர் வாசகர்கள். இவர்கள் அனைவருமே தாங்கள் பாதிக்கப் பட்டவர்கள்பக்கமே என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அரவிந்த் சிவா என்பவர் இளைஞர். கோணங்கி மற்றும் தமிழ்ச்செல்வனின் குடும்ப உறுப்பினர். ” தனக்கும் நடந்தது ” என்று அவர் முன்வந்து கண்டித்ததும் ச.தமிழ்ச்செல்வன் ஆடிப்போயிருக்கிறார், அவரது திகைப்பு அவர் அறிக்கையில் தெரிகிறது. கம்யூனிசப் பரப்புரையாளரும் எழுத்தாளருமான கி.நடராசன் கோணங்கிமீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கண்டித்துவிட்டு, பிறகு நிதானமாக யோசித்துவிட்டு அடுத்து விளக்கமாகவும் அறிக்கை விட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நிற்பவர்கள் — கோணங்கியைக் கண்டிக்கிறார்கள்; முன்பே தெரிந்திருந்தும் பேசாமலிருந்துவிட்ட இளங்கோ கிருஷ்ணனுக்கு , இப்போது விவாதிக்கப்படும் கோணங்கியின் “தவறான வகையில் பயன்படுத்தும் ” செயல் பாலியல் அத்துமீறல் ( ஆங்கிலத்தில் அப்யூஸ் — abuse ) என்று உணரத் தோன்றுகிறது; வாசுதேவனிடம் தொலைபேசி மூலமாகப் பாதிக்கப்பட்ட இளைஞன் பேசும்போது உடைந்து அழுதது நெஞ்சத்தை அசைத்துவிடுகிறது . முதலில் அவர் பார்க்கும் தனிநபர் விருப்பம் என்ற கோணமும், வேறு சிலர் முன்வைக்கும் ‘ மற்றவர் சம்மதம் ‘ என்ற கோணமும் பிறகு மாற்றம் அடைகிறது, அது சரியானதே. ஆணாதிக்கச் சமூகத்தின் மரபு வழியாக கோணங்கியின் லீலைகள் மற்றவர் சுதந்திரத்தில் தலையீடாவதைப்பற்றி அவர்கள் யோசித்திருக்கக் கூடும்.
இவ்வாறு பாலியல் சம்பந்தமான முற்றுமுழுதான தனிநபர் உரிமை, முற்றான தனிநபர் சுதந்திரம் பற்றிய தங்களது தவறான கருத்துக்களை இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மறுபரிசீலனை செய்கிறார்கள். ஒழுக்கம் பற்றிய தங்கள் குழப்பங்களுக்கு, ஊசலாட்டத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். அவை சரியே. மேலே இவற்றைத்தான் சில எச்சரிக்கைகள் என்று குறிப்பிட்டிருந்தோம். தனிநபர் சுதந்திரம் பிரதானம் , அது தனி ஓர் ஆளுக்கானது என்று பிரித்துவிட்டால் ஒரே நேரத்தில் அது மற்றவரின் சமூகச் சுதந்திரத்தை மறுப்பதாகும். அது எப்படியும் வாழ்ந்துகொள்ளலாம் என்ற பாலியல் அராஜகமாகவும், ஒழுக்கக் கேட்டை ஆதரிப்பதாகவும் ஆகிவிடும்தானே ?
இனி, வெளிவந்துள்ள கூர்மையான முக்கிய விமரிசனப் பார்வைகளையும் பார்க்கலாம்.
சற்று ஆழமாக விவாதித்த விநாயக முருகன் — சொந்தமாக வாழ்க்கை அனுபவமோ, வாசிப்பு அனுபவமோ இல்லாத புதிய இளைஞர்கள் கோணங்கி போன்று, குருகுல ரசிகர்களானால் சீக்கிரம் கற்றுக்கொண்டு எழுத்தாளராகிவிடலாம் என்று இப்படிப் பொறியிலும் சிக்குகிறார்கள் என்று விவாதித்துக் கண்டிக்கிறார் .
மேலும் சித்தாந்த ஆய்வுவரை சென்று பாரதூரமாக விளக்கி விமரிசிக்கும் இரா.முருகவேள் இதனை குருகுலவாதப் பண்பாடு என்று சாடி, இணையாக “கலை கலைக்காக ” ஆளுமையான சுந்தர ராமசாமி என்ற ‘ ஆண்டை ‘ யின் பிரபுத்துவ ” வழிபாட்டு மரபை “ப் போல ( கல்ட் என்ற ஆங்கிலச் சொல்லை இங்கே முருகவேள் பயன்படுத்துகிறார் ) கோணங்கியைச் சுற்றிப் பின்னப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எழுத்தாளர்கள்தான் மக்கள் வாழ்க்கையின் முக்கியப்பகுதிகளை, அரசியல் மாற்றங்களை, சீர்கேடுகளை, மதவாதத்தை, போரை, அரசுபயங்கரவாதத்தை, முதலாளித்துவச் சீர்கேடுகளைப் பதிவுசெய்து விமரிசன – சுயவிமரிசனக் கருவிகளோடு பரிசீலித்து வாழ்கிறார்கள். எனவே, தமிழ் இலக்கியம் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த கல்ட் முறையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் தீர்வை விவாதிக்கிறார் ; கோணங்கியைக் கண்டிக்கிறார்.
இதையும் படியுங்கள்: கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் வெல்லட்டும்!
இவையல்லாமல் ஆண் பெண் இரு பிரிவிலும் தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணம் செய்துகொள்வதை உச்சநீதிமன்றமும் அரசாங்கமுமே அங்கீகரித்துவிட்டதே, பிறகு கோணங்கி எப்படிக் குற்றவாளி ஆவார் என்று கேள்வி கேட்கிறார்கள். கோணங்கியே தான் எந்தத் தவறும் செய்யவில்லை, தான் பப்பா என்கிறார்; கோணங்கி எந்த ஆணோடும் வெளியே பகிரங்கமாக அறிவித்துக் குடும்பம் – குடித்தனம் நடத்தவில்லை ; அறிவிக்காமல் ஆண் – பெண் சேர்ந்து குடித்தனம்நடத்துவதை சட்டம் அங்கீகரிக்கவில்லை — அதில் ஏராளமான வேசைத்தனங்கள் உருவாவதை, தொடருவதை கிசுகிசுவாகவோ அல்லது விமரிசனமாகவோதான் பார்க்கிறார்கள் ; தன்பால் சிந்தையோடு ஆணோ, பெண்ணோ மற்றொருவரோடு ” போய் வருவதை “, சேர்ந்துவாழ்வதை சமூகம் இன்னமும் ஏற்கவில்லை. சட்டமும் அப்படி ஏற்கவில்லை.
மேல் நாடுகளில், மேற்குப் பண்பாட்டுச் சிக்கல்களில் இவை நிகழ்ச்சி நிரலில் வந்துவிட்டது. ஆண் உறவு அப்படி உள்ளதை ஹோமோ என்பர் ; பெண் உறவு அப்படி உள்ளதை லெஸ்பியன் என்பர் ; இவை தவிர ஆண் – பெண் உறவைக் கலந்தோ, விருப்பம் போலவோ சேர்ந்து வாழ்வதை அங்கும் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். அவை வேசைத்தனங்கள் என்றும் விமரிசிக்கிறார்கள். குறிப்பாக, ஆண்களிடமிருந்து எயிட்ஸ் மற்றும் பிற பால்வினை நோய்கள் பரவுவதை மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள், கண்டிக்கிறார்கள். இந்த வகையிலேயே அராஜகத் திருமண வாழ்க்கை தொடங்கி , ஒரே நேரத்தில் ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவு கலந்து வாழ்வது, டைவர்ஸ் அராஜகம் வரை பெருகுவதைச் சுட்டிக்காட்டி வேறு வன்முறை மீறல்கள், சண்டைகள், கொலைகள் வரை பெருகுவதை சமூக ஆய்வாளர்கள் அங்கே விவாதித்து விமரிசிக்கிறார்கள். சட்டப்படியான திருமணத் தம்பதியாக வாழ்வது கட்டாய ஒழுங்காக்கப்பட வேண்டும் என்றும் விவாதிக்கிறார்கள்.
‘தனிநபர் உரிமை ‘ என்ற விதத்தில் அங்கிருந்து ‘ கடன் ‘ பெறப்பட்டதை மட்டும் ஒரு அரூபப் பரவசத்தில் இந்தியமேட்டுக்குடி இளைஞர்கள் இரு பத்தாண்டாகவே நடமுறைப்படுத்தி, ரகசியமாக வாழ்ந்து பிறகு சமூக வலைத்தளங்களிலும், சட்டரீதியாகவும் ‘ தனிநபர் உரிமைப் ‘ பிரச்சினையாகவும் எழுப்பி உரிமையை வாங்கியுள்ளனர். இதையே கோணங்கி விசயத்திலும் சம்பந்தப்படுத்தி சிறு அளவில் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள் ; அவர்களுக்கு — உறவுக்கும், பந்தத்திற்கும், உரிமைக்கும், அப்யூஸ் என்ற பாலியல் அத்துமீறலுக்கும் இருக்கிற — நியாய வித்தியாசம் எதுவும் உறைக்கவில்லை. ஆனால் இந்த உரிமை ‘உதிரி உழைப்பாளி’ப் பிரிவினரிடம் பரவியுள்ளதையும் வாழ்வியல் பிரச்சினைகள் எழுந்துள்ளதையும் பார்க்கிறோம். இந்த இரண்டு தளங்களிலுமே விதிவிலக்குகளாகவே இவை நடந்தாலும், வக்கிரமாக வேசைத்தனம் வேர்விட்டுள்ளதையும் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் வெளிப்படையாகவே தெருக்களில் இரவுநேரங்களில் நடமாடுவதையும் பார்க்கிறோம்.
அரசாங்கத்துறைகளிலும் நேரடி அரசுத் துறையிலும், குறிப்பாக நீதித் துறையில் குடியேற்றப்பட்டு, பாசிசம் என்ற வெறி பரவிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்
‘ நீதித்துறை ‘ பாலியல்துறையில் ஜரூராக நகர்கிறதே, வேடிக்கைதான் என்று விமரினக் குரல் எழத் தொடங்கிவிட்டது ; அரவான் களப்பலி போல , பாசிசத்திற்குக் களப்பலியாக இவை உருவெடுக்கிறதோ என்றும் கேட்கிறார்கள்.
தவிர, இவ்வித வழக்குகளில் மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்ட ஓரளவு எச்சரிக்கைகள்- விசாரணை உள்கட்டுமானம் இங்கே ஆரம்ப அளவில்கூடச் செய்யப்படவேயில்லை. இது விமரிசனத்துக்கு உள்ளாகவில்லை. இவற்றில் ஆழமான பரிசீலனையோ, துணைசரத்துக்களோ, வழிகாட்டுதல்களோ நிச்சயம் இருக்காது என்பது நிச்சயம். இப்போதுள்ள நிலையில் “தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை ” , ” கெடுவழியில் பயன்படுத்தப்படுவதை ” விசாரிக்க, தண்டனை வரையறுத்துக் கொடுக்க, கண்காணிக்க எந்த உத்தரவாதமும் இல்லை ; இதில் மேல்நாடுகளிலும்சரி, இந்தியாவிலும் சரி எல்ஜிபிடிகியூ ‘ஆண் குற்றவாளிகள்’ சிறுவர்-சிறுமியரைப் பாலியல் கொடுமை செய்வதைஎப்படி நிறுத்துவது என்று விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். முக்கியமாக, இந்தியாவில் இதுவே ஒரு நெருக்கடியைச் சென்று தொட்டால்தான் கொஞ்சமாக அசைந்து கொடுப்பார்கள்.
அப்படியானால் கோணங்கி நழுவிவிடலாம், தப்பிவிடலாம் என்பதுதான் நிலைமையா ? இங்குள்ள ” இன்றைய ஜனநாயக” த்தில் எதை அறுதியிட்டு நாம் சொல்லமுடியும் ?
இதையும் படியுங்கள்: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி நிர்வாகம்!
அடக்குமுறைக் கருவி பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உட்பட வெவ்வேறு கட்டங்களில் என்னசெய்தது எப்படிக் கையாண்டது என்ற விவாதம் வந்தது. 19- ஆம் நூற்றாண்டுத் தண்டனைகள் தொடங்கி நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதாகச் சொன்ன இக்கால ஃபூக்கோவின் ( விசாரணை, தண்டனைகள், சிறை, அரச ஆதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய ) விமரிசன – வடிவங்கள் வரை விவாதிக்கப்பட்டது.
19- ஆம் நூற்றாண்டுக்கு முன், அதற்கெல்லாம் முன்னால் கிரேக்கத்தில் கி.மு- வில் ஒருபால் உறவு நடந்து கொண்டிருந்ததாகவும், இந்தியப் புராணங்களின் “சாட்சிப்படி ” வர்ணங்களோடு வக்கிரங்களும் கலந்த பாலியல் வாழ்க்கை திணிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறோம். அன்று அது வர்க்க ஒழுக்கம். உலகில் இன்று பொதுவில் சமூக விழிப்புணர்வு பரவிவிட்டது. முதலாளித்துவ ஒழுக்கமென்று அறியப்படுவதில்கூட அத்துமீறல் தண்டிக்கப்பட்டது, தண்டிக்கப்படுகிறது. “இங்கிலாந்தி”ன் ஆஸ்கார் ஒயில்டு என்ற கவிஞனும் நாடகாசிரியனும் விமரிசகனுமான எழுத்தாளருக்கு ( ” அரண்மனை மூலம் விசாரிக்கப்பட்டு ” ) கடும் உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. இன்றும் பாலியல் அத்துமீறல்கள் தண்டிக்கப்படுகின்றன. இது வர்க்கத் தண்டனை, வர்க்கச்சிறை. விசாரிப்பது வர்க்கச் சமூகம் என்பதை நாம் கவனத்தில் வைக்கவேண்டும்.
கோணங்கியை போலீஸ் விசாரிக்கட்டும் என்று முதலில் சொல்லிவிட்டுத் தடுமாறினர் சிலர். பின்வாங்கவும் செய்தனர். ஏன்? இந்தப் போலீசுக்கு, அரசுக்குத் தகுதி இல்லை என்று மறு ஆய்வுக்கு அவர்கள் உடனே வந்துவிட்டார்கள் என்பதே உண்மை.
அது வேண்டாம். சமூகம் விசாரிக்கட்டுமே. விசாரித்தால் என்ன ? உழைப்பாளிகள் தம் மண்டைகளைச் சேர்த்து யோசிக்கட்டும். தண்டனை “கடின உழைப்போடு சேர்த்துக் கொடுக்கப்படுவதாக ” அமையட்டும்; கண்காணிப்பும் உழைக்கும் மக்களுடையதாகவேஇருக்கட்டும் ; இன்றைய துப்புக் கெட்ட போலீஸ், சிறை நீங்கலாக — அவற்றைத் தவிர்த்த — இப்போதைக்கு இப்படி இந்த அளவில் இருக்கவேண்டும் என்று சொல்லலாமே.பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் குழு அங்கே நியாய தர்க்கத்தோடு வாதாடட்டும். இந்த அளவு, நியாயமான அளவுக்கு ஜனநாயகக்காற்று நிறைந்து இருக்குமல்லவா ? இந்த இடங்களில் ” மாய யதார்த்தம் ” எதுவும் துண்டுகட்டி நிற்கவேண்டிய அவசியமுமில்லை ; மாயா என்கிற மாயம் நீக்கப்பட்டு யதார்த்தம் முழுதாக இங்கே இருக்கும்.
(ஏன் மாயா என்ற சொல்லை நாம் நீக்குகிறோம் ? அதற்கொரு வரலாற்றுக் காரணம் உண்டு. ” மாயா ” என்பதே “வசீகர மருட்டுதல் ” தான். அது இருக்காது. ஒழிந்துபோகும். ” மாயா ” என்ற சொல்லுக்கே கி.மு- வில் ” உண்மையைத் தேடுதல் ” என்று பொருள் இருந்து, பின் வைதீகக் கருவியாகி எதிர்மறையை ஓதும் சொல்லாகி, அதுவே பின்னால் , ” கயிற்றில் தற்கணம் பாம்பாகத் தெரிந்து பின் அடுத்தொரு கணத்தில் மறைந்தது ” என்று சங்கர அத்துவைத விளக்கமும் ஆகிவிட்டது. ஆக,) எனவேதோழர்களே, இப்படிச் செய்தால் என்ன, மக்களுக்குப் பொறுப்பான விசாரணை இவ்வாறு நடத்தப் படுவது சரிதானே ? என்ன கருதுகிறீர்கள் ? நிற்க. ஒரே ஒரு வெங்கொடுமையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியுள்ளது. இந்தியச் சமுகத்தில் பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்கவேண்டிய கட்டத்தில், அதற்காகத் தயாரிக்கவேண்டிய கட்டத்தில் இருக்கும்போது அரசியல் முன்னோடியான தமிழகத்தில்” கோணங்கிகளை ” நாம் முன்நிறுத்தி விசாரணை செய்து, விவாதிக்க நேர்ந்துள்ளதே!
மேலும் தற்போது தமிழகச் சூழ்நிலைமை பற்றி அவசரமாக கட்டுரையின் மூன்றாவது அங்கத்தில் இரு குறிப்புகளைப் பார்த்து விசாரிக்க வேண்டியுள்ளது. அவற்றை உற்றுக் கவனித்துவிட்டு முடிப்போம். ஒன்று: ஆர்எஸ்எஸ் பீட ஞானகுரு ஜெ என்கிற, ஜெமோ என்கிற, ஜெயமோகன் கோணங்கி பிரச்சினையில் ஓதியிருக்கின்ற விவகாரம் ; மற்றொன்று, புதிதாக சிரீ ( ஸ்ரீ ) என்ற சேனலில் இரு ஆர்எஸ்எஸ் தடியர்கள் விவாதித்திருப்பதை ஒட்டிய தாவா. பார்ப்போமா ?
தொடரும்…
முந்தைய பதிவு: கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே ! – பாகம் 1
பீட்டர்






