சென்னை ஐஐடியில்  பயின்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடன் பயின்ற கிங்சோ தேப் சர்மா, சுக்தீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ணா மக்தோ ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் மனமுடைந்த மாணவி மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னை ஐஐடி ஏற்கனவே பார்ப்பனர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்பது குற்றச்சாட்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கேராளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற  மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு இன்னும் விடை தெரியவில்லை. சென்னை ஐஐடியில் குறிப்பிட்ட சமுதாயத்தை தவிர யாரும் படிக்கக் கூடாது என அரிய வகை ஏழைகள் கருதுகின்றனர். ஐஐடியும் கிட்ட தட்ட அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இந்த நிலையில் தான் மேற்கு வங்க மாணவியின் பாலியல் புகார் எழுந்துள்ளது.2017 ஆம் வருடம் நடந்த சம்பவத்திற்கு 2021 ஆம் வருடம் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த புகாரில் இரண்டு பேராசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக போலீசால் அமைக்கப்பட்ட தனிப்படை மேற்வங்கம் சென்று கிங்சோ தேப் சர்மாவை கைது செய்தது. ஆனால் உடனே அவன் ஜாமீனில் வெளிவந்து விட்டான்.

இந்நிலையில் இதற்கு நீதி கிடைக்க வேண்டி தொடர்ந்து போராடி வருகிறார்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர். இதன் ஒரு முன்னேற்றமாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதற்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கவுள்ள நிலையில், ஐஐடி உயர்மட்ட குழு விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறது. மாணவியை வளாகத்தைவிட்டு வெளியேற்றவும் நிர்பந்திக்கிறது.

இதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புகள் இன்று (28.04.2022) சென்னை ஐஐடி முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு அனைத்து தரப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். சூத்திரர்களை படிக்க விடாமல் செய்ய பார்ப்பனர்கள் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறார்கள். சட்ட ரீதியாகவும் தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கிறார்கள். இதனை அனைவரும் சேர்ந்து எதிர் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் ரோகித் வெமுலா, அனிதா, பாத்திமா லத்தீப் போன்றோரை தொடர்ந்து இழக்க நேரிடும்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here