கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்முறைகள்!

பாலியல் குற்றங்களை தடுக்க, பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் ஒன்றிணைந்து போராடுவோம்!

அன்பார்ந்த மாணவர்களே!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சென்னை PSBB, சுசில் ஹரி, கோவை சின்மயா, கரூர் பரணிபார்க், திண்டுக்கல் நர்சிங் கல்லூரி, விருதாச்சலம் அமலா பள்ளி, ஈரோடு அரசுப்பள்ளி, சென்னை மாங்காடு பள்ளி என அந்த பட்டியல் நீள்வது கல்வி நிறுவனங்கள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவதையே காட்டுகிறது. இவற்றில் பெரும்பாலும் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தாளாளர்களுமே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது இந்த துயரத்தின் பாரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுட்டோரை தண்டிக்கவோ பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது.

கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் தொல்லையால் பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்டார். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியரின் குற்றத்தை மறைக்க முயன்று, மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்ச்னையும் கைது செய்யக் கோரி பல முற்போக்கு அமைப்புகள் போராடிய பிறகே அவர் கைது செய்யப்பட்டார். அடுத்த ஒரே வாரத்தில் மீரா ஜாக்சன் ஜாமீனில் வெளிவந்தார். கரூர் பரணிபார்க் பள்ளி மாணவி தற்கொலையில் கரூர் அரசு கல்லூரி மாணவர்கள், அமைப்புகள் போராடியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை. தமிழக அரசோ ஹெல்ப்லைன் எண், பள்ளி பாதுகாப்பு குழு அமைப்பது என இப்பிரச்சினைகளை கடந்து செல்கிறது.

கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த பாலியல் பிரச்சினைகள் பொது சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது. பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே அவரின் உயரதிகாரி பாலியல் தொல்லைக்குள்ளாவது தொடங்கி, பெற்ற தந்தையே மகளை பாலியல் வல்லுறவு செய்வது, பொதுவெளியில் இயங்கும் பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் தொடுப்பது, தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் பாலியல் வன்முறை செய்து கொல்வது, தன்னுடன் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசப் படங்கள் அனுப்புவது எனப் பல தளங்களில், பல பரிமாணங்களில் பரவியுள்ள புற்றுநோயாக இந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் நாசமாக்கி வருகிறது.

தேசிய மகளிர் ஆணையம் கணக்குப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு 16618 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 19153 குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் ஜூலையில் மட்டும் 3248 என புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பாலியல் சீண்டல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறது என்கிறது. இது பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே, பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு இருக்கும் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

இத்தகைய எண்ணிக்கையில் பாலியல் குற்றங்கள் பரவி வளர நமது நாட்டின் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பும், தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் அமலுக்கு வந்தபின் பெருகிய ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவுகளும், பெருகி இருக்கும் நுகர்வுவெறியுமே போதை கலாச்சாரமுமே அடிப்படையாக இருக்கின்றன. இவற்றை வீழ்த்துவது மிகப்பெரிய நீண்ட போராட்டம் ஆகும். எனினும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான, பாலியல் குற்றங்களை சகித்துக் கொள்ளாத மனநிலையை சமூகத்தில் உருவாக்க வேண்டியுள்ளது. பொதுவாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ’ஆண்’ என்ற அதிகாரத்தைத் தாண்டி ஆசிரியர், பள்ளி தாளாளர், நிறுவன மேலாளர், உரிமையாளர், உயரதிகாரி, ஆதிக்க சாதி எனக் கூடுதலான அந்தஸ்திலும் அதிகாரத்திலும் இருப்பவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது என பாதிக்கப்பட்ட பெண்களும் அவர் குடும்பத்தாரும் கருதுவது உள்ளது.

மேலும், பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதலை வெளியே கூறினால், “தன்னை இழிவாகக் கருதுவார்கள்; குடும்பத்துக்கு அவமானம்” எனப் பெண்களும் அவர்களது குடும்பங்களும் கருதுவது குற்றங்கள் மறைக்கப்படுவதற்கும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைகளுக்கும் காரணமாக உள்ளன. சமூகத்தில் படித்த, வசதி படைத்த பெண்கள், தங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களை வெளிப்படையாகப் பேச #MeToo இயக்கம் உதவியது. அதே போல் சாதாரண பெண்களும் மாணவிகளும் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளிப்படையாகப் பேசும் நிலையை உருவாக்குவோம். பாலியல் குற்றமிழைப்பவரே இந்த சமூகத்திற்கு அவமானம்; பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதை உரக்கக் கூறுவோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி சமூகம் முழுமையும் பாலியல் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் திரள்வோம்.

மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டு மொத்த சமூகமும் உறுதியாகப் போராடினால்தான் குற்றமிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களை திரட்டி களத்திலும், நீதிமன்றத்திலும் RSYF அமைப்பு தொடர்ந்து போராடியதன் விளைவாக, கரூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்த இளங்கோவன் என்ற பாலியல் குற்றவாளி தண்டிக்கப்பட்டது நடந்தது. அத்தகைய உறுதிமிக்க போராட்டங்களே நம் முன்னிற்கும் ஒரே தீர்வு!

தமிழக அரசே!!

பாலியல் குற்றங்களில் குற்றச்சாட்டுக்குள்ளாகும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை உடனே பணிநீக்கம் செய்! குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய் ! சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்கு!

கல்வி நிறுவனங்களில் வர்மா கமிசன் பரிந்துரைகளை உடனே அமல்படுத்து!

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்து! மாணவர் பிரதிநிதகளைக் கொண்ட பாலியல் குற்றத் தடுப்புக் குழுக்களில் பள்ளி, கல்லூரிகளில் அமைத்திடு!

பாலியல்வெறியைத் தூண்டும் ஆபாசப் படங்களை, இணைய தளங்களை தடை செய்! அவற்றை பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடு!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தமிழ்நாடு.
9445112675.
புமாஇமு. RSYF.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here