அங்கம் ஒன்று :
கோணங்கி இளம் ஆண்கள் மீது, அடுத்த தலைமுறை மீது பாலியல் வன்கொடுமையைச் செய்திருக்கிறார். நாம் அவரை விசாரணைக்கு உட்படுத்துகிறோம்; ஓரளவு சமூகப் பொறுப்புள்ள கலைஞர்கள், அமைப்புக்கள், “பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ஒருசிலர் “இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே…. தெரிந்திருந்தால் விசாரித்துத் தடுத்திருக்கலாமே!” என்று புலம்பியிருக்கிறார்கள்.
கோணங்கி இயங்குகின்ற தளம் , அகம் மற்றும் புற உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப இத்தனைக் காலமும் வடிவமைத்து வார்க்கப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் கோணங்கியே ஒருபங்கு பொறுப்பு என்று குற்றஞ்சாட்டும், வாசுதேவன் (முகநூல்) சொல்லில், உண்மை உள்ளது. யூடியூப் ஆய்வாளர் வில்லவன் ராமதாஸ் ஆய்வில் உண்மை உள்ளது. கோணங்கித் தளத்தின் வார்ப்பு அவரைச்சுற்றி கட்டுக்காவல் போலச் செயல்பட்டுள்ளது; இப்போது அதன் பரப்பெல்லைக்குள்ளே ‘உலை வெடிக்கின்ற அளவு’ அழுத்தம் கூடிவிட்டது, வெடித்துச் சிதறி வெளியே வந்துவிட்டது என்பதே நிலைமை.
எனவே தோழர்களே, நாம் குற்றஞ்சாட்டி விசாரிக்கும் முதல் குற்றவாளி, முதல் மரியாதையோடு தான் சொல்வோமே, ‘கலைக்’ குற்றவாளி கோணங்கியே.
தரம் உயர்ந்ததாகச் சொல்லப்படும் இலக்கியப்பீடங்கள், மடங்களில் அவர் ஒருவர். நவீன இலக்கியம் என்று அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் (இனி ‘கார்ப்பு’ என அழைக்கலாம் ) கும்பல்களில் ஒன்று; புராணக் கந்தல் – குப்பைகளைக் கலந்து ‘ புனைவு – அபுனைவு – கற்பனை ‘,
‘ஃபேன்டஸி’,
“மாய ‘யதார்த்தம்” என்று பலவிதமாக விளக்கி, கடைச்சரக்காக விற்கப்படுபவர்; கோணங்கி அவரது ரசிகர்கூட்டத்துக்கு ஓர் அதிசயப் படிமம்; இது ஒரு சாதா ரகம். ‘ஜெ’ என்கிற ஜெயமோகன் இன்னொரு ரகம், பணப் புரவலர்களின் செல்லக் ‘கார்ப்பு’. இவர் ஆர்.எஸ்.எஸ். ‘நவீன இலக்கியப்’ பிதாமகர், மடாதிபதி, எளிமையாகச் சொல்வதானால் மேனேஜர்; தற்சமயம் கோணங்கி விவகாரத்தில் ‘கலை’க்கு ஒரு புது விளக்கம் மற்றும் புது ஒழுக்க (ங்கெட்ட) கோட்பாட்டோடு அவதாரம் எடுத்துள்ளார். இது மசாலா ரகம்.
இதையும் படியுங்கள்: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி நிர்வாகம்!
ஃபேன்டஸி என்று கோணங்கி உருவேற்றுகின்ற முறைக்கு அவரது பேச்சிலிருந்தே இரண்டு எடுத்துக்காட்டுகள் தருகிறோம். ஒன்று : ஒரு பயண அனுபவம் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்ஒரு கூட்டத்தில் அவர் பேசியது ; அது பவா செல்லதுரை என்ற இலக்கிய புரமோட்டரின் ‘உண்டாட்டு’ நிகழ்ச்சியில் அவர் பேசினார் :
” திருவண்ணாமலை மணப்பட்டு அருகே கார்ல போனப்ப ஸ்பேஸே ( வெளி என்பதே ) உயிரோடு இயங்கி நம்மள தொட வருதுங்கிற நிலைமை, மில்கி வேயில பால்வீதியில பயணிச்சிக்கிட்டு இருந்தோம்…..” அடுத்தது, மற்றொரு கூட்டத்தில், செக்கோஸ்லோவாக்கிய எழுத்தாளர் காஃப்கா பற்றிப் பேசும்போது
“காஃப்கா நிழல் சந்திரனில் விழுகிறது, ஏன் என்றால் அந்த அளவுக்கு சாவோடு சம்பந்தப்பட்டிருப்பதால் …” ” …காஃப்காவின் மரபணுத் துகள்களும் பொருள்களின் மீது படிந்த நிழல்களும் …”என்று ‘ அரூபமாக ‘ ப் பேசிவிட்டு அடுத்து வேறு சொற்களுக்குத் தாவிக்கொண்டு போயிருப்பார். இவை அறிவியல் போல, மனோதத்துவம் போல தோற்றம் கொடுப்பதும் ரசிகர்களை ‘மயக்குவதும் ‘ வழக்கம், வாடிக்கை.
அப்படியானால் கற்பனை என்பது இப்படி மருட்டக்கூடியதா ?
இல்லை, எதார்த்தத்தை ஒட்டி கற்பனை போகும். ஒரு பாத்திரத்தின் குணத்தை, பண்பை வெளிப்படுத்தும் ஒரு நெசவாக இருக்கும். ஆனால், கோணங்கி இந்த மொத்த நிலையையும் பித்துநிலைக்குத் தள்ளிவிடுவார். எனவே, எழுத்தின் இயங்குதளம், உத்தி எல்லாவற்றையும் ஒரு போதை டிரிப்புக்கு உங்களை அழைத்துக்கொண்டு போவது போன்று இருக்கும், அவரது விவரிப்பு முறை. இதில் ரசிகர்களை ஒருவித வலைக்குள் வீழ்த்தி ஏமாற்றுவது அவர் தந்திரம்.
எழுத்துக்கு அப்பால் அவரது பழக்கவழக்கத்திற்கு எச்சரிக்கப்படாதவர்கள், எழுத்துக்கு மேலே உடலியல்/பாலியல் பிரச்சினையில் வன்முறைப்பட்டுச் சிக்கிக் கொண்டார்கள். இளங்கலைஞர்கள் கலைஇலக்கியத் துறையில் கால் ஊன்ற குறுக்குவழியில் இறங்கிவிடும்போது இப்படி பிரச்சினைகள் பலதிலும் மாட்டுகிறார்கள். கோணங்கி போன்றவர்கள் கலை, ரசனை, பகிர்வுகள், ‘ பழகுவதில் அன்னியோன்னியம் ‘ என்று ஏதாவது ஒரு தூண்டிலை வீசிவிடுகிறார்கள் ; குறிப்பாக, காட்டின் சூழலுக்குப் புதிதான இளம் விலங்குகள் பிரச்சினைகளில் சிக்குவதுபோல, இளம் கலைஞர்கள் கோணங்கியின் திட்டமிட்ட ‘ மாய யதார்த்தத்தில் ‘ மாட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.
இதையும் படியுங்கள்: பாலியல் குற்றவாளிகளை மக்கள் மத்தியில் தண்டிக்கவேண்டும்!
இவற்றை உணர்ந்து அதிர்ச்சியடைந்தவர்கள் அனேகம் பேர். பாதிக்கப்பட்ட கார்த்திக் அம்பலத்தில் கொண்டு வந்ததும் , பலரும் அடுத்தடுத்துப் பேசினார்கள். தமுஎகச அறிக்கை விட்டது. கோணங்கியின் சகோதரர் அறிக்கை தந்தார். பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கேட்டனர்.விசயம் அம்பலமானாலும் , ஏழைக்கான வாதம் எடுபடுமா, தாமதத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கலை – கலைஞன் – தனிவாழ்க்கை – ஒழுக்கம் பற்றிய தப்பும் தவறுமான பிரபுத்துவ ஆணாதிக்க, முதலாளித்துவக் கண்ணோட்டங்கள் கலந்த – மனித உடலியலில் சமூகப் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழ்நாட்டுக்குள்ளே கடை விரிக்கப்படுவதைப் பார்க்கிறோம். தற்போது நிலவும் சமூகக் கூட்டுணர்வில் ஒழுக்க ஈனமும், (அமாரல் வாதம் , அதாவது, சரி – சரியல்ல என்று இரண்டையும் கலந்து வைத்திருக்கும் ஈனம், முடிவெடுக்காமல் வைத்திருக்கும் குணம்) சமூகப் பொறுப்பின்மையும் பேசவைக்கிறது ; அது மட்டுமல்ல, கார்த்திக்கைத் தான் வளர்த்ததாகவும், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் அதற்கு விளக்கம் கொடுத்தார் கோணங்கி. இது மறுப்புப் பேட்டியில் அவர் கொடுத்த விளக்கம்.
இந்த நேரத்தில், மூளைக் கணக்குப் போட்டு எதையாவது உளறுவதோ, ஆய்வுகளில் இறங்குவதோ நமது நோக்கமல்ல; ஆனால், அவரோ இதையும் சேர்த்து ஒரு கணக்குப்போட்டு “தப்பு செய்தாயா, தாக்கினாயா ? ” என்று விசாரிக்கப்படும்போது ” மறுக்கிறேன் ” என்று ரௌடிகள் சர்வசாதாரணமாக மறுப்பார்களே அதுபோல, ” என்மீதான பாலியல் குற்றச் சாட்டை மறுக்கிறேன்… ” என்று ஆனந்தவிகடன் பேட்டியில் மட்டையடியாக அடித்துள்ளார் கோணங்கி. அதுபோலவே முதல்வாக்கு மூலத்தை ஸ்ட்ராங்காகப் போட்டுள்ளார் ; மணல்மகுடி வெள்ளிவிழாவைக் கெடுப்பதற்காகவே இப்படி வேறு ஒரு ( நாடகக் ) குழு ( ! )அவதூறைப் பரப்புவதாகவும் ஒரு துண்டை எடுத்து வலுவாக இணைப்புப் போட்டுள்ளார். கார்த்திக்கின் குற்றச்சாட்டை மறுத்து அவரை தான் வளர்த்துவிட்ட முறை பற்றிய குரு – சிஷ்ய படலத்தையும் தன்னிரக்கத்தோடு விளக்கியுள்ளார். மணல் மகுடி இளம் நடிகர்களை மடக்கியதில் பூபதி சார்வாள், அண்ணன் கோணங்கி சார்வாளோடு கூட்டு.
” விசயத்தை வெளியே விவாதிக்காதீங்க, எதிர்கால நாடகக் கலையே அழிந்துபோகும் …” என்று செல்ல மிரட்டல்மூலம் அட்வைஸைஇலவசமாக வழங்கியுள்ளனர் அவரது சிஷ்ய கேடிகள். இவர்களும் விவகார விஸ்வரூபங்களுக்கு கள்ளக் கூட்டு ! இவற்றை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலும் கோணங்கி சிக்கியதும், சிக்குவதும் நிச்சயமே ; இதை யார் எப்படிப்பட்ட பொறுப்போடு விசாரிப்பார்கள்?,அவர்மீது நடவடிக்கை என்ன? என்பதையும் ஊர் உலகம் கவனிக்கத்தான் செய்கிறது.
(தொடரும்)….
பீட்டர்