இந்த உலகில் மனிதர்களின் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. சிலர் எழுதுவார்கள்; சிலர் பாடுவார்கள்; சிலர் வரைவார்கள்; சிலர் நடிப்பார்கள்; பலர் வேர்வை சிந்தி உழைப்பார்கள்.

ஆனால், இந்தச் சமூகத்தின் கசப்பான உண்மை என்னவென்றால், அல்லும் பகலும் பாடுபடும் உழைப்பாளர்களை விட, கலையையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கே இங்கு மதிப்பும் சந்தை மவுசும் அதிகம். அதனால்தான் பாடுபவர்களும், ஆடுபவர்களும், எழுதுபவர்களும், மேடைகளில் பேசுபவர்களும் தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு அதைத் தங்களின் வாழ்வாதாரமாகவும், பிழைப்புக்கான ஆதாரமாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

யார் இந்த “பிழைப்புக் கலைஞர்கள்”?

இவர்களது நோக்கம் கலையின் வழியே சமூகத்தைச் சீர்திருத்துவதோ அல்லது தற்போதைய சீரழிந்து போன அரசமைப்பை மாற்றுவதோ அல்ல; தங்களின் பிழைப்பை நடத்துவதும், சுய லாபம் ஈட்டுவதும் மட்டுமே!

திரைத்துறையில் உச்சத்திலிருந்த பிரபலமானவர்கள், வயதான பிறகு அல்லது இனி அங்கே நீடிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் சின்னத்திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இங்கேயும் அவர்கள் “கலைப்பணி” செய்வதாகப் பூச்சுற்றினாலும், உண்மையிலேயே தங்களுக்கான பிழைப்புக்கான தளத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்கள் என்பதே உண்மை!

இன்னும் சிலர் திரைத்துறை மூலம் கிடைத்த பிரபலத்தைப் பயன்படுத்தி, வணிக விளம்பரங்களில் முகத்தைக் காட்டி அங்கும் கோடிகளைக் குவித்து வாரிச் சுருட்டுகிறார்கள்.

மறுபுறம், சின்னத்திரையில் வரும் ரியாலிட்டி ஷோக்கள், ‘ச ரி க ம ப’, ‘பிக் பாஸ்’, ‘டான்ஸ் டான்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைபவர்கள், தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு மேடைகளில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்; திரைத்துறைக்குள்ளும் நுழைகிறார்கள். இவையெல்லாம் கலைச்சேவைக்காக அல்ல… தங்கள் பிழைப்புச் சேவைக்காகத்தான் என்பதை மக்களும் மறந்து போகிறார்கள்!

இவர்கள் மேடைக்கு ஏற்றபடி வேடம் போடுவார்கள். ஒரே ஆள் நாத்திக மேடையில் பெரியாரையும் பாடுவார்; அடுத்த நாள் சனாதன மேடையில் பஜனையும் பாடுவார். இவர்களுக்குக் கருத்தியல் தெளிவோ, கொள்கை உறுதியோ கிடையாது. எந்த மேடையில் காசு கிடைக்கிறதோ, எந்த மேடையில் கைதட்டலும் அதிகார வர்க்கத்தின் தயவும் வருகிறதோ, அதற்குத் தகுந்தாற்போலத் தங்களின் குரலையும் கலை வடிவத்தையும் மாற்றிக் கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் கலையைக் காசாக்கும் “வியாபாரக் கலைஞர்கள்”.

மக்களின் பலவீனமும் பிழைப்புவாதிகளின் பலமும்

சமூகத்தில் மக்கள் பல இரசனைகளுடன் வாழ்கிறார்கள். தங்களிடம் இல்லாத ஒரு திறமை மற்றவர்களிடம் இருக்கும் போது, அதைப் பார்த்து மக்கள் மயங்கி மண்டியிடுகிறார்கள். மக்களின் இந்த உளவியல் பலவீனம்தான் பிழைப்புக் கலைஞர்களின் மிகப்பெரிய பலம்!

படிக்க:

♦ கலை யாருக்காக? நிலவுடைமைக் கலைகளும் மக்களுக்கான கலையும்!

♦ மக்கள் கலை இலக்கியக் கழகமும் தமிழ் மக்கள் இசை விழாவும்: ஒரு வரலாற்றுப் பார்வை!

பிழைப்புக் கலைஞர்கள் இந்த இரசனையைத் துல்லியமாகக் கணித்து, ஒரு வணிகப் பொருளாகவே தங்களின் கலையைச் சந்தைப்படுத்துகிறார்கள். முதலாளித்துவச் சந்தைதான் மக்களின் இந்த இரசனையைத் தீர்மானிக்கிறது. மக்களை அரசியல் ரீதியாகச் சிந்திக்க விடாமல், வெறும் பொழுதுபோக்கிலும் போதை போன்ற மன மகிழ்ச்சியிலும் மூழ்கடித்து வைப்பதே இந்த வணிகக் கலையின் முதன்மை வேலை. மக்களும் தங்களின் தற்காலிக மனமகிழ்விற்காக இவற்றை இரசித்துவிட்டு, கைதட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்.

கலை சமூகத்தை மாற்றுமா?

இங்கேதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: இத்தகைய பிழைப்புக் கலைஞர்களால் சமூகம் ஒருபோதும் மாறப்போவதில்லை!

கொள்கையற்ற, பிழைப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கலை என்பதும், கலைஞர்கள் என்பதும் வெறும் பொழுதுபோக்குச் சாதனங்கள் மட்டுமே. அவை தற்காலிகமான ஆறுதலைத் தருமே தவிர, மக்களிடம் வர்க்க உணர்வையோ, சாதிய-சனாதன எதிர்ப்பையோ, சமூக விழிப்புணர்வையோ ஒருபோதும் உருவாக்க முடியாது.

உண்மையான சமூக மாற்றத்திற்கான கலைஞர்கள்

ஆனால், சமூக மாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற புரட்சிகரக் கலைஞர்கள் வறுமை சூழ்ந்திருந்தாலும் வசதியைத் தேடி ஓடுவதில்லை! வசதிக்காகத் தங்கள் திறமைகளை விற்பதும் இல்லை. மாறாக, உழைக்கும் மக்களிடம் புரட்சிகரக் கருத்துகள் செறிவாகச் சென்று சேர வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர்கள் தங்கள் கலைத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

சமூக மாற்றம் என்பது பிழைப்புக்காகப் பாடும் கலைஞர்களால் வருவதல்ல; உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தாலும், தெளிவான சித்தாந்தக் களப்பணியாலும் மட்டுமே சாத்தியமாகும்!

“கலை என்பது சமூக மாற்றத்திற்கான கூர்மையான ஆயுதம்” என்பதை உணர்ந்தால் மட்டுமே அவர்கள் சமூக மாற்றத்திற்கான கலைஞர்களாகத் தொடர்வார்கள். இல்லையேல், அவர்களும் பிழைப்புவாதிகளாகச் சீரழிந்து போகவே நேரிடும்.

கலை கலைக்காகவே என்ற முதலாளித்துவ மாயையை உடைத்து, கலை உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே என்ற புரட்சிகரக் பண்பாட்டுத் தளத்தை உயர்த்திப் பிடிப்போம்!

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

– தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here