“அனுமான் என்ன செவிடா? ஏன் இவ்வளவு சத்தத்துடன் அனுமன் ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள்” என்று 2015 ஆம் ஆண்டு ட்விட்டரில் பதிவு போட்டுள்ளார் ஆதிபுருஷ் டைரக்டர் ஓம் ராவட்.

காலக்கொடுமை 2021 அவரை பிடித்தாட்டியதால் அனுமனையும், அனுமனது கதாநாயகன் ராமனையும் வைத்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பிரபாஸை ராமன் ஆகவும், கீர்த்தி சோனம் என்பவரை சீதையாகவும், சைஃப் அலி கான் என்பவரை ராவணனாகவும், தேவ் தத்தா என்பவரை அனுமனாகவும் வேடம் தரிக்க வைத்து கல்லாகட்ட திட்டமிட்டது திரைப்பட குழு.

ராமாயணம் என்றால் அது ஒரே ராமாயணம் என்று புரிந்து கொள்வதே மூடத்தனமாகும். பார்ப்பன (இந்து) மதத்திற்கு ஒரு ராமாயணம் இருப்பதைப் போல பௌத்த ராமாயணம், ஜைன ராமாயணம், என்று 24 வகையான ராமாயணங்கள் உள்ளதாக 1928 ஆம் ஆண்டிலேயே ஆராய்ச்சி செய்து முன் வைத்துள்ளார் சீனிவாச ஐயங்கார்.. இந்தியா மட்டுமின்றி சீனா, மலேசியா போன்ற நாடுகளிலும் ராமாயணம் நடந்ததாக அந்தந்த நாட்டு புராணக் கதைகள் உலா வருகின்றன.

இதில் பிரபலமாக நடப்பில் உள்ள ராமாயண கதையை எடுத்துக்கொண்டு அதில் பிரபாஸையும், கீர்த்தி சோனத்தையும் நடிக்க வைத்து திரைப்படத்தை கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக அசைவ உணவு தின்பதையே கைவிட்டு விட்டதாக திரைப்பட கதாநாயகி கீர்த்தி சோனம் அளந்து விட்டதை பத்திரிகைகளில் எழுதி கிளுகிளுப்பூட்டியது திரைப்படக் குழு..

ஆதி புரூஷ் டீசராக வெளிவந்த போது மூன்று கோடியே 45 லட்சம் 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளதாக திரைப்படம் பற்றிய மசாலா பாணியிலான திகிலை கிளப்பியது ஆதிபுருஷ் திரைப்படக் குழு.

திட்டமிட்டபடியே ஜூன் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகி தியேட்டர்களை சூறாவளியாக தாக்கும் என்று கனவு கண்டிருந்த வேலையில் படம் ஊத்திக் கொண்டது. உடனே மத உணர்வை தூண்டுகின்ற வகையில் ஆதி புரூஷ் வெளியாகின்ற தியேட்டர்கள் அனைத்திலும் அனுமனுக்கு ஒரு சீட்டு போட வேண்டும் என்ற திரைப்படப் குழு ட்விஸ்ட் வைத்தது.

படம் வெளியாவதற்கு முன்பே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டது பாக்ஸ் ஆபிஸ் என்று சொல்லக்கூடிய முதல் நாள் வசூல் 95 கோடி என்றெல்லாம் உசுப்பேற்றி ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு பார்த்தது.

ஆனாலும் படம் தம்பிடி பைசாவிற்கு தேறாது என்று நெட்டிசன்களும், படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பாமர இந்துக்கள் முதல் படித்த இந்துக்கள் வரை அனைவரும் கொதிப்படைந்தனர்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு செயற்கையாக ப்ரமோஷன் கொடுத்து, வரி விலக்கும் கொடுத்து காஷ்மீரை பற்றிய ஒரு கேடுகெட்ட அபிப்பிராயத்தை இந்தியா முழுவதும் உருவாக்க எண்ணிய பாரதிய ஜனதா கட்சி ஆதி புரூஷ் படத்திற்கு அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்ற எரிச்சலில் அனுமார் தியேட்டரை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

பயபக்தியுடன் பட்டையை போட்டுக்கொண்டு கையில் தண்டத்தை எடுத்துக்கொண்டு தியேட்டர்களுக்குள் புகுந்த இந்து மத அமைப்பினர் அதிர்ச்சி அடைந்து திரைப்பட குழுவினர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

ராமாயணத்தை மாற்றி சில காட்சிகளை இயக்குனர் எடுத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக புராணக் கதையில் உள்ள அனுமர் சீதையை சந்திக்கும் போது இந்து முறைப்படிதான்  வணங்குவார். ஆனால் இந்த படத்தில் இஸ்லாமிய முறைப்படி தன் நெஞ்சில் கை வைத்து அனுமர் பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக இந்துமத வெறியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ராமர் ஒரு காட்சியில் இயேசு கிறிஸ்து போல் தோன்றுவதும், சீதா பிராட்டியை போர்க்களத்திற்கு கொண்டு வருவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது ராமாயணத்தில் இல்லாத ஒன்று என்று  குற்றச்சாட்டி உள்ளனர்.

இதையும் படியுங்கள்: ‘ஜெய்பீம்’ சினிமா மீதான பார்வை

இதேபோன்று அனுமார் இந்திரஜித்திடம் பேசும் போது மூன்றாம் தர நபர்கள் பேசும் வசனத்தை இயக்குனர் பயன்படுத்தியிருப்பதும் இந்துமத வெறியர்களை கொதிக்க வைத்துள்ளது. இது அனுமாரை கேவலப்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி  உள்ளனர். அதுமட்டுமின்றி இராவணன் வேடத்தில் உள்ள சைப் அலி 2 கே கிட்ஸ் போல இருக்கிறார் என்ற விமர்சனமும் பக்தர்களின் நெஞ்சை பிளந்துள்ளது. இப்படியாக ஆதி புரூஷ் திரைப்படம் வந்ததிலிருந்து ராமருக்கும், அனுமருக்கும் கடும் சோதனையாக உள்ளது.

14 ஆண்டுகள் காட்டில் வனவாசம் சென்ற பிறகு நாட்டுக்கு திரும்பி ராமராஜ்ஜியத்தை நடத்தியதாக புராணக் கதைகள் வலம் வருகின்றன. இந்த ராம ராஜ்ஜியத்தை கட்டி அமைக்கப் போவதாக ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எப்படியாவது 2025 க்குள் ‘இந்து ராஷ்டிரம்’ என்று அழைக்கப்படும் ராம ராஜ்யத்தை அமைக்க படாத பாடுபடுகின்றனர்.

அவர்களின் செயலை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்ற நப்பாசையில் ஆதி புரூஷ் வெளியாகி அதற்கு எதிராக ஊற்றிக் கொண்டதன் மூலம் ராம ராஜ்ஜிய கனவே கற்பனையோ என்ற உதறலில் இந்து மத வெறியர்கள் படத்தை திரையிடாதே என்று ஊளையிட்டு வருகின்றனர். ஹரியானாவில் படம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் தியேட்டரில் அனுமருக்கு ஒரு சீட்டை ஒதுக்குவதற்கு பதிலாக பல சீட்டுகளை (இந்து மத வெறி வானரங்களுக்கு) ஒதுக்க வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள்ளது என்பதுதான் ஆதி புருஷ் திரைப்படத்தின் இன்றைய நிலவரம்.

  • பார்த்தசாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here