ஊழல் ஒழிப்பு: இந்தியன் தாத்தாக்களின் புதிய அவதாரம்!

திமுகவை விமர்சிக்கின்றேன் என்ற போர்வையில் பலவித மட்ட ரகமான மீம்ஸ்களை உருவாக்குவது, நியூஸ் 24 என்ற சேனல் மூலம் தொழில்நுட்ப குழு ஒன்றை உருவாக்கி மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் தொழில்நுட்ப கூலிப்படையை உருவாக்கி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது ஆர் எஸ் எஸ் பாஜக.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, அமலாக்கத்துறை சோதனை ஊழலை ஒழிக்கவா? திராவிட இயக்கத்தை ஒழிக்கவா? என்ற கேள்விக்கு ஊழலை ஒழிக்க என்று சண்டமாருதம் செய்பவர்கள் அனைவரும் திரைப்பட இயக்குனர் சங்கர் பாணியில் இந்தியன் தாத்தா அவதாரம் எடுத்துள்ளது வேடிக்கையானது.

இந்தியாவில் 1947 போலி சுதந்திரம் முதல் தனது இயற்கை வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டு, தனது மாநில மக்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை கொடுக்காத, மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகளையும், கல்வி நிறுவனங்களையும் உருவாக்காத இந்திய ஒன்றிய அரசை எதிர்த்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த போது, காஷ்மீர் மன்னரான ஹரிசிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுதந்திர வாக்கெடுப்பு மூலம் இந்தியாவுடன் இணைந்து இருப்பதா? பிரிந்து போவதா? என்பதை முடிவு செய்யலாம் என்று வாக்குறுதி கொடுத்த இந்திய ஒன்றிய அரசு மற்றும் அரசாங்கங்கள் அந்த வாக்குறுதியை முறையாக அமல்படுத்தவில்லை. இதனை எதிர்த்து இந்திய ஒன்றிய அரசை விட்டு வெளியில் செல்கிறோம் என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளை உருவாக்கி போராட துவங்கினர்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் நீண்ட காலமாக போராடி வந்த மக்களை ஒடுக்குகின்ற வகையில் லட்சக்கணக்கான ராணுவத்தை குவித்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது ஆர்எஸ்எஸ் பாஜக. அங்கு செயல்பட்டு வந்த ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு அனைத்தையும் கட்டுப்படுத்தி இந்தப் பிரிவினைக்கு எதிரான காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வெளி உலகத்திற்கு தெரியாமல் அடக்கி ஒடுக்கியது.

அப்போதே இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாங்கள் தலைக்கு வைத்தியம் பார்த்து விட்டோம். காலுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியதுதான் பாக்கி உள்ளது” என்று பச்சையாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் தலைப்பகுதியில் காஷ்மீர் என்றால் அதன் கால் பகுதியில் உள்ளது தமிழகம். தமிழகத்தில் பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு ஆதரவாக எந்த ஒரு குழலும் இல்லாத சூழலில் குறிப்பாக திராவிட இயக்கத்தின் பின்னால் அணி திரண்டு உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆரிய பார்ப்பன ஆட்சியினை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா ஆர்எஸ்எஸ்.

அந்த நோக்கத்தில் ஆளுகின்ற திமுக அரசின் மந்திரிகள் மீது அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்துவதும், துணை ராணுவப்படையை கொண்டு வந்து வைத்துக் கொண்டு மிரட்டுவதும் அப்பட்டமான பாசிச சர்வாதிகார ஒடுக்குமுறை ஆகும்.

திமுக அரசின் மீது பாஜக கொண்டுள்ள வெறுப்பு என்பது வெறும் ஊழல், தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் உருவானது அல்ல. மாறாக ஊழல் ஒழிப்பு போன்ற நாடகங்களுக்கு பின்னால் மிகப்பெரும் இனவெறுப்பு அரசியல் உள்ளது என்பதை புரிந்து கொள்ளாத யாரும் செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் சிறை போன்றவற்றை புரிந்து கொள்ள முடியாது.

திராவிட இயக்கத்தின் மீது ஆரிய பார்ப்பன கும்பலுக்கு இருக்கின்ற இனவெறுப்பு அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவராக உருவான கருணாநிதி மீது எப்போதும் பாஜகவிற்கும் ஆர் எஸ் எஸ்க்கும் இணக்கமான உறவு இருந்தது கிடையாது. தவிர்க்க முடியாமல் சில சந்தர்ப்பங்களில் கூட்டணி அமைத்திருக்கலாமே ஒழிய திராவிட இயக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதன் மூலமே இந்தியா முழுவதும் ஆரிய பார்ப்பன (இந்து) சாம்ராஜ்யத்தை நிறுவ முடியும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் பாஜகவினர்.

இன்று செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த ஒடுக்கு முறையானது நாளை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் கூட்டணி சேர விரும்பாத அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்ற கட்சித் தலைவர்கள் அனைவரின் மீதும் பாயும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை இல்லை.

Senthil balaji

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த மணிஷ் சிசோடியா, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, பீகாரில் அகிலேஷ் யாதவ் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மகள் கவிதா வரிசையில் தற்போது தமிழகம் திமுகவின் செந்தில் பாலாஜியும் இணைந்துள்ளார்.

கார்ப்பரேட் நலனுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கின்ற வகையில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்வதையும், கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காக கொடுக்கப்படும் கமிஷன் தொகையை தேர்தல் பண்டுகள்(Fund) மூலம் வாங்கிக் கொள்வதும், வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துக் குவித்து கொள்வதும் இவர்களுக்கு ஊழலாக தெரியவில்லை.

இந்த இடத்தில் தான் இந்தியன் தாத்தாக்கள் உருவாகிறார்கள். பூசணிக்காய் சைசில் நடந்த மெகா ஊழல்கள் அவர்களின் பூதக்கண்ணாடி போட்ட கண்களுக்கு தெரிவதில்லை

நீரவ் மோடி முதல் விஜய் மல்லையா போன்ற வெளிநாட்டுக்கு ஓடிய பொருளாதார கிரிமினல் குற்றவாளிகள், நாட்டிலேயே இருந்து கொண்டு குறுகிய காலத்தில் மூன்றாவது உலக பணக்காரனாக உருவெடுத்த அதானி இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் கேந்திரமான நிறுவனங்களை சூறையாடி பல ஆயிரம் கோடிகளை குவித்துள்ள அம்பானி போன்ற பொருளாதாரக் கிரிமினல்கள் குற்றவாளிகள் வரை சட்டப்படியே மக்களின் சொத்தை, நாட்டின் சொத்தை சூறையாடி வருகின்றனர். அவையெல்லாம் ஊழல் என்றோ, நிதி மோசடி, பண மோசடி, அந்நிய முதலீடு மோசடி என்ற வரிசையில் கொண்டு வருவதில்லை என்பதாலேயே அவர்கள் உத்தமர்கள் கிடையாது.

ஆர்எஸ்எஸ் என்ற பார்ப்பன பாசிசத்தை முன்வைக்கின்ற பயங்கரவாத இயக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் முன்னிலையில் இருப்பதால் அவர்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முதலாளித்துவம் தூக்கிப் பிடிக்கிறது.

இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்ற நிலப்பரப்பு தான் என்பது நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, கண்டிக்க வேண்டிய உண்மை ஆகும். சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் அமைப்புச் சட்டம் பல தேசிய இனங்களை கொண்ட மாநிலங்களின் ஒன்றியம் என்று தான் இந்தியாவை வரையறை செய்துள்ளது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் எடுபிடிகளான எடப்பாடி தலைமையில் செயல்பட்ட அண்ணா திமுக கும்பல் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவுடன் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்த திமுக தனது வர்க்க அடிப்படையை தாண்டி பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளையும், கருத்தியல் தளத்தில் திராவிட சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி போராடிக் கொண்டிருக்கிறது.

 

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இத்தகைய சீர்திருத்த கருத்துகளுடன் எவ்வாறு ஒன்றிப்போவது என்பதை பற்றி தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி கருவறை நுழைவு போராட்ட காலம் முதல் கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாடு வரை பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள், கட்சிகள் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து போராடுகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்.

பாசிச அடக்குமுறை இரண்டில் ஒன்றை தீர்மானிக்கின்ற நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது அமைப்பு ரீதியாக செயல்படாத குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள், திமுகவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அறிஞர்கள், புரட்சிகர அமைப்புகளில் இருந்து தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிப்போன காரியவாதிகள் உள்ளிட்ட சிலர் மூன்றாவது ஏதோ ஒன்று இருப்பதைப் போல பம்மாத்து காட்டுகின்றனர்.

திமுக மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்பது அரசியல் கட்சி என்ற வரம்பை தாண்டி தமிழகத்தின் மீது குறிப்பாக திராவிட இயக்கங்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்பதும் திராவிட இயக்கத்தை முற்றாக துடைத்து எறிவதன் மூலம் எதிர்ப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் புரிந்துகொண்டு எதிர்த்து முறியடிக்க வேண்டிய அம்சமாகும்.

இதையும் படியுங்கள்: அரங்கேறும் காவி பாசிசம்! அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!

திமுகவை விமர்சிக்கின்றேன் என்ற போர்வையில் பலவித மட்ட ரகமான மீம்ஸ்களை உருவாக்குவது, நியூஸ் 24 என்ற சேனல் மூலம் தொழில்நுட்ப குழு ஒன்றை உருவாக்கி மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் தொழில்நுட்ப கூலிப்படையை உருவாக்கி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது ஆர் எஸ் எஸ் பாஜக. இதற்கு பலியான முன்னாள் புரட்சியாளர்கள் சிலரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நிலைப்பாடுகளை கிளி பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கம்யூனிசம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து கொள்கிறார்கள்.

இவை போதாது என்று சமூக ஊடகங்களில் சவுக்கு சங்கர் துவங்கி தமிழ் ஆதன் வரை மிகப்பெரும் கூலிப்படை பாஜகவிற்காக வேலை செய்கிறது. மைய ஊடகங்களில் பாஜகவை எதிர்த்து வேலை செய்கின்ற ஊடகங்கள் ஏறக்குறைய இல்லை என்றே கூற முடியும்.

இத்தகைய கருத்து பிரச்சாரத்திற்கு எதிரான கடும் அடக்குமுறை நிலவுகின்ற காலத்தில் வீதிகளில் இறங்கி போராடுவதும், பள்ளிகள், கல்லூரிகள், ஆலை வாயில்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நேரில் இறங்கி பாசிசத்திற்கு சவால் விட்டு போராடுவது ஒன்று மட்டுமே பாஜகவை திருப்பி அடிக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கக் கூடாது.

ஊழலை எதிர்த்து முறியடிப்பது என்ற போர்வையில் புதிதாக அவதாரம் எடுத்துள்ள இந்தியன் தாத்தாக்களை புறக்கணிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு உரிய முறையில் பதிலடி தரவும் வேண்டும். திமுகவை விமர்சித்தால் பாசிசம் உள்ளே வந்துவிடும் போன்ற நக்கல் ஆன நரகநடை பேச்சுகளுக்கு பதில் அளித்து நேரத்தை விரயமடிப்பதை விட பாசிசத்தை எதிர்த்து அனைத்து தளங்களிலும் போராடுவதற்கு மக்களை திரட்டி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தயாராவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here