ணிப்பூரின் மக்கள் தொகையில் 55% உள்ள, சமூகத்தில் ஆதிக்க வகுப்பினரான மெய்டீஸ் இனமக்கள் தங்களை பழங்குடியினராக (Scheduled Tribe) அங்கீகரிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகால்மாக கோரிவந்தனர். இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து 4 மாதத்துக்குள் முடிவு எடுக்குமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை இனகுழுக்களான குக்கி-நாகா-சோமி ஒருங்கிணைந்து நடத்திய பழங்குடியினர் பாதுகாப்பு பேரணியைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கலவரம் மூண்டுள்ளது.

ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றுதான் இந்தியாவில் மியான்மாரை ஒட்டி உள்ள மாநிலம் மணிப்பூர். முடியாட்சியின் கீழிருந்த இம்மாநிலம் சுதந்திரத்திற்குப்பின் 1949 அக்டோபர் 15-ஆம் தேதி இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. வடகிழக்கு மாநில மக்கள் இந்தியாவின் பிறபகுதி மக்களான திராவிடர், இந்தோ-ஆரியன் இனக்குழுக்கள் அன்றி மங்கோலிய இனவகைப்பாட்டில் வருபவர்கள். தங்களுக்கென்று தனி மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று தனிச்சிறப்பான அடையாளங்களுடன் வாழ்ந்து வருபவர்கள்.

மிகச்சிறிய மாநிலங்கள், குறைந்த மக்கள்தொகை, ஒன்றிரண்டு மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் இந்திய ஆளும்வர்க்கங்களாலும், அரசாளும் பலகாலமாகக் கண்டுகொள்ளப்படாமல் உள்ளவைதான் இந்த வடகிழக்கு மாநிலங்கள். அதன் காரணமாகத்தான் தனிநாடு கோரிக்கையுடன் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் அந்தமாநிலங்களில் இயங்கி வந்தன. மணிப்பூரிலும் 1961 முதல் ஆயுதமேந்திய குழுக்கள் தோன்றி தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்துப் போராடிவந்தன. அதைத்தொடர்ந்து 1980-இல் அக்குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக “யாரைவேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் கைது செய்யலாம், எந்தவித விசாரணையின்றி எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம், இராணுவத்தின்மீது எந்தவித விசாரணையும் கிடையாது” என்ற கொடூரமான ஆயுதப்படைகளுக்கான சிறப்புச் சட்டம் (AFSPA-Armed Forces Special Powers Act) கொண்டுவரப்பட்டு பல்வேறு அரசு வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

 

அதோடு மட்டுமல்லாமல் பேருந்துக்காக காத்திருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேர்களை படுகொலை செய்தது; தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாக்கி அவரின் பிறப்புறுப்பில் துப்பாக்கியின் கத்தியை சொருகி படுகொலை செய்து சாலையோரத்தில் வீசிச்சென்றது என பல்வேறு கொடுமைகள் அரங்கேறின. மனோரமாவின் படுகொலையைத் தொடர்ந்து மணிப்பூரின் வீரபெண்கள் இராணுவ தலைமையகத்தின் முன் தங்கள் ஆடைகளை அவிழ்த்து “இந்திய ராணுவமே எங்களை வன்புணர் செய்” என்று போராட்டம் நடத்தினார்கள். ஐரோம் ஷர்மிளா என்ற போராளி ஆயுதப்படைகளுக்கான சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஏறக்குறைய 16 வருடங்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது என மணிப்பூரின் போராட்ட வரலாறு எளிதில் மறக்கமுடியாதவை.

28 லட்சம் மக்கள்தொகை கொண்ட மணிப்பூரில் 55% மெய்டீஸ் இன மக்களும் 42% குக்கி-நாகா-சோமி உள்ளிட்ட 32 இனக்குழுக்களும் உள்ளனர். மணிப்பூரின் நிலப்பரப்பில் 10% சமவெளிகளும் 90% அடர்ந்த மலைக்காடுகளும் உள்ளன. மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் இனமக்கள் 10% சமவெளி பகுதியிலும் மற்ற இனகுழுக்கள் மீதமுள்ள 90% மலைக்காடுகளிலும் வாழ்கின்றனர். அம்மாநிலத்தில் உள்ள வனபாதுகாப்பு சட்டங்களின்படி மலைக்காடுகள் உள்ள பகுதிகளில் பழங்குடியினர் தவிர வேறுயாரும் நிலங்களை வாங்க முடியாது.

கலாச்சார ரீதியில் பழங்குடி தெய்வங்களை வணங்கிக்கொண்டிருந்த மெய்டீஸ் மக்கள் கிபி1500 ஆண்டு கால கட்டங்களில் அப்பகுதியின் அரசரால் கங்கைக்கரை பகுதிகளிலிருந்து வருவிக்கப்பட்ட பார்ப்பனர்களின் மூலமாக இந்துக்களாக மதம் மாற்றப்பட்டனர். அது முதல் அவர்கள் தங்களை “வைஷ்ணவ இந்துக்களாக” அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். சமவெளியில் வசிப்பதால் கல்வி, பொருளாதாரம், அரசியல், அரசு பணிகள் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர். அம்மாநில முதல்வர் பிரேன்சிங் முதல் அரசு அதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் என அனைத்து பதவிகளிலும் மெய்டீஸ் இனத்தார்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் 40 பேர் அவ்வினத்தைச் சேர்ந்தவர்களே.

மேலும் இவர்கள் கடந்த காலங்களில் தங்களை பழங்குடிகள் என அடையாளப்படுத்தாமல் முன்னேறிய வகுப்பினராக ஆதிக்கசாதியினராக அடையாளப்படுத்திக்கொண்டு OC, BCபோன்ற வகுப்புகளில் சேர்ந்துகொண்டனர். 32 மலைவாழ் இனக்குழுக்களை சேர்ந்தவர்களோ மேற்கண்ட துறைகளில் மிக குறைந்த அளவே பங்கு வகிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்களுக்கு தான் இப்போது ST (Scheduled Tribe) அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சனையின் மூலவேர்

தங்களைப் பழங்குடிகளாக முன்னெப்போதும் கருதிக்கொள்ளாத மெய்டீஸ் இனமக்கள் கடந்த 2013-க்குப் பிறகு நாங்களும் இம்மாநிலத்தின் பழங்குடிகள்தான் எனவே எங்களுக்கும் ST அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போதுதான் நாங்களும் மலைப்பிரதேசங்களில் நிலங்கள் வாங்கமுடியும் என்றனர். ஏற்கனவே 2015-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது கொண்டுவந்த மூன்று வனப்பாதுகாப்பு சட்ட முன்வடிவுகளை எதிர்த்து குக்கி இனமக்கள் ஏறக்குறைய 600 நாட்களுக்கும் மேலாகப் போராடி அவற்றைக் கைவிட வைத்திருந்தனர்.

இந்நிலையில்தான் 2017-ல் அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக 21 சீட்டுகளை வென்று ஆட்சி அமைத்தது. அதுமுதல் தனது நம்பகமான இந்து ஓட்டுவங்கியான மெய்டீஸ் இனமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தது. பின்னர் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 32 சீட்டுகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் பிரேன்சிங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது.

நிர்வாக அளவில் இக்கோரிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பிரேன்சிங் அரசாங்கம் மெய்டீஸ் இனகுழுக்களை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடுமாறு தூண்டிவிட்டது. மாநில உயர்நீதிமன்றம் நான்கு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கெதிராக  பழங்குடியினர் பாதுகாப்பு பேரணி என்று குக்கி-நாகா-சோமி உள்ளிட்ட பழங்குடியினர் ஒருங்கிணைத்த பேரணியைத் தொடர்ந்து குக்கி மக்களின் கிறிஸ்தவ தேவாலயங்களை மாவட்ட நிர்வாகம் இடிக்க முற்பட்டபோது கலவரம் வெடித்தது.

பற்றி எரிந்த மணிப்பூர்,
தேர்தல் பரப்புரையில் பாசிச கோமாளிகள்

இந்துமத வெறியர்களாலும், மோடியின் அடிவருடி ஊடகங்களாலும் “90% நிலங்களை அனுபவிக்கும் கிறிஸ்துவப் பழங்குடிகள், நிலங்களை வாங்க முடியாத இந்துப் பழங்குடிகள்” என்று சமூக ஊடகங்களில் விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டது.  மே 3-ஆம் தேதிமுதல் பாசிச இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டும், 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும், குக்கி மக்களின் 1700-க்கும் மேற்பட்ட வீடுகளும் எரிக்கப்பட்டு அம்மக்களை காடுகளை நோக்கி விரட்டியடிப்பதும் நடந்தேறின. சுமார் 9000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் அடைக்கலம் ஆகியுள்ளனர். 350-வது சட்ட பிரிவு அமல்படுத்தப்பட்டு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை மத்திய அரசின் கையில் எடுத்துக்கொண்டு துணை ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்னும் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டு கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: காவிகளால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்!

இவ்வளவு களேபரங்கள் நடந்த பின்பும் கர்நாடகவில் 19 பேரணிகள், 6 ஊர்வலங்கள் என்று குறளிவித்தை காட்டி ஓட்டுப்பொறுக்கிக் கொண்டிருந்தனர் நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும். எதிர்க்கட்சிகள் மற்றும் பலதரப்பிலிருந்தும் வந்த கடுமையான விமர்சனத்தை அடுத்து மணிப்பூர் சென்ற அமித்ஷா “ஒரு 15 நாள் சும்மா இருங்கள்” என்று கலவரக்காரர்களிடம் கேட்டு வன்முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அதே சமயத்தில், அம்மாநிலத்தில் மின்சாரம், இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதிலும் சிக்கல் உள்ளது. கலவரங்கள் குறித்து பேட்டியளித்த முதல்வர் பிரேன்சிங், “இதுவரை 40 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டோம்” என்று இக்கலவரம் ஏதோ ஒரு தீவிரவாத தாக்குதல் போல பேசினார்.

ஆனால் அம்மாநிலத்தில் முகாமிட்டிருக்கும் துணைராணுவப் படைகளின் தளபதி இது இனமோதலால் நடந்த கலவரம் என்று உண்மையை கூறினார். கலவரத்தின் போது ஏறக்குறைய 1500 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் இருந்து திருடப்பட்டதாகவும் இல்லை. அவை மெய்டீஸ் இன போலீசாரால் மெய்டீஸ் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

நிர்வாக சிக்கலை இன/மத மோதலாக
வளர்த்தெடுக்கும் பாஜக

ஒரு மாநிலத்தில் உள்ள சாதியினரை, இன குழுக்களை எந்த பட்டியலில் சேர்ப்பது என்பதை முற்றுமுழுதாக அம்மாநிலமே துறைசார்ந்த ஒரு அதிகாரியை நியமித்து ஆய்வு நடத்தி முடிவு செய்ய வேண்டும். ஆனால் மணிப்பூரில் இந்த நடைமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு நீதிமன்ற உத்தரவாகப் பெறப்பட்டதுதான் பிரச்சனையை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பட்டியலிலுள்ள குக்கி-நாகா-சோமி உள்ளிட்ட பழங்குடியினரின் உரிமையைப் பறித்தெடுக்கும் வகையில் மெய்டீஸ் இனமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் 55 சதவீதம் உள்ள இந்து வாக்குவாங்கியை தக்கவைத்துக்கொண்டு அம்மாநிலத்தில் நிரந்தரமாக ஆட்சி செய்வதே பாஜக-வின் நோக்கம். அது மட்டுமல்லாமல் மெய்டீஸ் மக்களுக்கு நிலத்தின் மீதான உரிமை என்ற பெயரில் அவர்களையும் இதர பழங்குடியினரும் மோதவிட்டு இறுதியில் மலைகளையும், காடுகளையும் சுற்றுலா ரிசார்டுகளாகவும், கனிமவள கொள்ளைக்கு வேதாந்தா, அதானி, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதுதான் இதன் பின்னாலுள்ள சதியாகும்.

ஆனால் மணிப்பூரிலுள்ள இந்து மதவெறி கும்பல்களும், ஊடகங்களும் சிறுபான்மை பழங்குடியினர் மலைச்சரிவுகளில் கஞ்சா பயிரிடுகின்றனர், போதைமருந்து கடத்துகின்றனர், வந்தேறிகள் என்று தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கும் மெய்டீஸ் மக்கள் மத்தியில் பழங்குடியினர் மீதான வெறுப்புணர்வு தொடர்ந்து ஊட்டப்படுகிறது. அதனால்தான் டெல்லியில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் NRC (National Register for Citizenship)-யை உடனடியாக மணிப்பூரில் அமல்படுத்தி வந்தேறிகளை வெளியேற்றவேண்டும் என்று பழங்குடியினருக்கெதிராக போராடுகின்றனர். 1971-ஆம் ஆண்டு முதல்தான் ஓட்டுப்போடும் குக்கி-நாகா-சோமி பழங்குடியினர் NRC அமல்படுத்தப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் NRC-யை எதிர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: காவிகளால் பற்றியெரியும் மணிப்பூர் மாநிலம் பாகம் 2

காஷ்மீரில் துப்பாக்கிமுனையில் 370-வது சிறப்பு பிரிவை நீக்கி, மாநிலத்தை மூன்றாக கூறு போட்டு, மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், சமூக போராளிகளையும் சிறையிலடைத்து அம்மாநிலத்தில் இனி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று பாசிச பாஜக 2019-இல் திறந்து விட்டது. அதைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. உட்பட பல சங்கிகளும் இனிமேல் காஷ்மீரின் பெண்களையும், நிலங்களையும் யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வக்கிரமாக கொண்டாடினர். ஆனால் இதுவரை 1559 கார்ப்பரேட்டுகள்தான் அங்கு நிலங்களை வாங்கியிருப்பதாக விவரங்கள் வெளிவந்துள்ளன. அதேபோன்று ஒருநிலைதான் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் வரப்போகிறது. நாடு முழுவதும் மதரீதியாக மக்களை பிரித்து மோதவிட்டு அதானிக்கும் அம்பானிக்கும் நாட்டையே அடகுவைக்கும் பாசிஸ்டுகள் மணிப்பூரில் இனக்குழுக்களுக்கிடையே இந்து கிறிஸ்தவ மோதலாகக் கொம்பு சீவிவிட்டு மோதவிட்டுள்ளார்கள். தற்போதைய கலவரத்துக்கு முழுக்காரணம் அம்மாநில முதலமைச்சர்தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.-வே அம்பலப்படுத்தியுள்ளார்.

வர்க்கமாய் ஒன்றுபடுவோம்!
பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம்!

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான 4% உள்ஒதுக்கீட்டைப் பறித்து லிங்காயத்துகளுக்கும் ஒக்கிலியர்களுக்கும் தலா 2% கூடுதல் ஒதுக்கீடாக பகிர்ந்தளித்து சித்துவிளையாட்டு நடத்திய பாஜக-வை கடைசியில் அந்த சமுதாய மக்களே தேர்தலில் மண்ணைக் கவ்வவைத்தனர். அதைப்போன்ற விழிப்புணர்வுதான் தற்போது இந்திய மக்கள் அனைவருக்கும் தேவையானதாக உள்ளது. நாட்டின் இயற்கைவளங்களை, காடுகளை, மலைகளை, மக்களின் சேமிப்புகளை, வங்கிகளை, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் பாசிஸ்டுகளின் சதியை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தக்கபடி பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது.

அதுவல்லாமல் “டபுள் இன்ஜின் சர்க்கார்,” “வளர்ச்சி,” “மோடி” என்ற பம்மாத்துகளுக்கு மயங்கி பாஜக பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பு வழங்கிய மணிப்பூர் மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது. இன்னும்கூட பாஜக-வின் சசித்தனத்தை குறித்த சரியான புரிதல் இல்லாமல் இன/மத வேறுபாடு கடந்து ஓட்டு போட்டுவிட்டு தற்போது அமித்ஷாவை வரவேற்க சாலையின் இருமருங்கிலும் மணிப்பூரின் மக்கள் காத்திருப்பதையும், கலவரத்துக்குக் காரணமானவர்களிடமே தம்மை காப்பாற்றுமாறு சரணாகதி அடைவதையும் என்னவென்று சொல்வது?

“ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது” என்பது போல பாசிச பாஜக நுழைந்த மாநிலமும் விளங்காது என்பது உண்மையாகிவருகிறது. “எங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, எங்கள் வீடுகள், உடைமைகள் பெரும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் நாங்கள் முன்புபோல மெய்டீஸ் மக்களுடன் சேர்ந்துவாழ முடியாது. எங்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய யூனியன் பிரதேசம் வேண்டும்” என்று மணிப்பூரில் பழங்குடியினர் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

ஏற்கனவே மேலோட்டமாக இருந்த பிரிவினை பாஜக-வின் சூழ்ச்சியால் தற்போது மேலும் ஆழமாக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பிலும் இருக்கும் ஆயுத குழுக்கள் தற்போது மீண்டும் ஆயுதங்களை தூக்கியுள்ளனர், ஒருவரையொருவர் தாக்கத்தொடங்கியுள்ளனர். பாஜக-வின் இந்து பெரும்பான்மைவாத ஓட்டுவங்கி அரசியலால் இனிவரும் காலம் மணிப்பூரின் மக்களுக்கு நிம்மதியை தொலைத்த காலமாகவே இருக்கப்போகிறது. இந்நிலைமை மாறவேண்டுமானால் கார்ப்பரேட் சேவகர்களாகிய காவி பாசிஸ்டுகளே நமது எதிரி என்றுணர்ந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து அவர்களை மணிப்பூர் மாநிலத்தை விட்டே ஓட ஓட விரட்டியடிப்பதுதான் ஒரே வழி.

  • மதியழகன்

புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஜூன் 2023 இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here