
2 நாட்களுக்கு முன்பு பல்லடம் பகுதியில் நடந்த ஆணவக் கொலைக்கும் இந்த இளைஞனின் பேட்டிக்கும் நிறைய தொடர்புள்ளது. இந்த ஆணவக் கொலையானது சமூகத்தில் நிலவும் சாதிய மனோநிலையால் கட்டமைக்கப்பட்ட ஒன்று.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற பெண் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்ததில் வித்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.
இதனிடையே வித்யாவும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். வெண்மணி பெண்ணின் பெற்றோரிடம் தான் வித்யாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு வித்யாவின் பெற்றோரும் அவரது அண்ணனும் உடன்படவில்லை என்று தெரிகிறது. இதன் பின்பு தான் இந்த கொலை நிகழ்ந்துள்ளது.
வித்யாவுக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்ற சந்தேகத்தில் வெண்மணி அவரது தோழிகளை விட்டு பார்க்க சொன்ன போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வெண்மணி இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வெண்மணியின் புகார் அடிப்படையில் இதனை சந்தேக மரணமாக கருதி புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி உடல்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளது காவல்துறை. அதில் தலையில் பலமான காயம் ஏற்பட்டது தான் வித்யாவின் இறப்பிற்கு காரணம் அறிக்கை அளித்துள்ளர்கள் மருத்துவர்கள்.
அறிக்கையின் அடிப்படையில் வித்யாவின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தான் தான் கொலை செய்ததாக வித்யாவின் அண்ணன் ஒத்துக் கொண்டான். இது ஊடகங்களில் வெளியாகி ஆணவப்படுகொலை என்று பேசிக் கொண்டிருக்கையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ்குமார் இது ஆணவப்படுகொலை அல்ல என்று கூறியுள்ளார். “கல்லூரி மாணவி கொலை வழக்கில் வித்யாவை நன்றாக படிக்குமாறு அவரது அண்ணன் தெரிவித்து வந்ததாகவும், அதனால் அண்ணனுடன் கடந்த 2 மாதங்களாக வித்யா பேசவில்லை என்றும் இந்நிலையில் காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்த போது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த சரவணன் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளான்” என்று தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழில் வெளிவந்த செய்தியில் வித்யாவை சரவணன் அரிவாளால் தலையில் வெட்டியதால் தான் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒருவர் ஆத்திரத்தில் அரிவாள் எடுத்து தான் வெட்டுவாரா? தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கொலை செய்யலாமா? மற்ற கொலைகளுடன் இதனையும் ஒன்றாக ஒப்பிடுவது பொருத்தமாகுமா? என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இதனை ஆணவக் கொலை இல்லை என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணம் இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தான். ஆனால் வித்யாவின் குடும்பம் வெண்மணிக்கு திருமணம் செய்து கொடுக்காததற்கு அவர்கள் சொன்ன காரணம் வெவ்வேறு சாதி செட் ஆகாது என்பது தான். ஆணவக்கொலைக்கான அடிப்படை என்று இவர்கள் எதைக் கூறுகிறார்கள் என்பதே பிரச்சினையாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரும் ஆதிக்கசாதியை சேர்ந்தவரும் காதலித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் கொலை மட்டும் தான் ஆணவக் கொலையா?
ஆணவக்கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினர், அவர் அந்த குடும்பத்திற்கு இழிவைக் கொண்டு வந்தார் என தவறாக கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் கொலை செய்வதை குறிக்கிறது. பொதுவாக இவர்கள் தங்கள் வீட்டு பெண்களையே கொல்கின்றனர். இந்த வரையறையுடன் ஒப்பிட்டால் வித்யாவின் கொலை ஆணவக் கொலை என்று புரிந்துக் கொள்ளலாம்.
தான் சொல்வதை கேட்காதா தங்கையோ அல்லது மகளோ பெண்ணாக இருப்பின் அவள் தனது உடமை அல்லது பொருள் என்பதாக கருதிக் கொண்டு கொலை செய்கிறார்கள். இது பெரும்பாலும் ஆதிக்க சாதி குடும்பத்தினாரால் நிகழ்த்தப்படுவதுண்டு. சில சமயங்களில் சனாதனவெறிக்கு பலியான சூத்திர சாதி குடும்பங்களிலும் நிகழ்கிறது.
படிக்க:
♠ சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?
♠ மாணவன் தேவேந்திர ராஜா மீதான சாதிவெறி தாக்குதல்! அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் தடுக்கும் வழி என்ன?
ஆணவக்கொலை செய்யப்பட்ட வித்யாவை எடுத்துக் கொண்டால் அவர் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார். தான் என்ன செய்யலாம் என முடிவெடுக்கும் வயதை கொண்டிருக்கிறார். முக்கியமாக படித்திருக்கிறார். இளங்கலை படிப்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வெண்மணிக்கும் வித்யாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தங்கள் காதலுக்கு படிப்பை இடையூறாக கருதாததினால் தான் முதுகலை படிப்பு வரை சென்றிருக்கிறார்கள். வெண்மணியும் நன்றாக படித்து தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். அடுத்து JRF (Junior Research Fellowship) தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுவிட்டதால் மாதம் 45,000 ரூபாய் உதவித் தொகையாக வரும் என்பதனால் தான் வித்யாவை தனக்கு திருமணம் செய்து தருமாறு வித்யாவின் அண்ணனிடம் பேசியுள்ளார்.
இந்த ஆணவக் கொலையை பொறுத்தமட்டில் தான் சொல்வதை கேட்காத தங்கை தனக்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறார். தனது கட்டுப்பாட்டில் இல்லாத கருவியை உடைத்தெறிவது போல் ஒரு பெண்ணை கொலை செய்திருக்கிறான். இந்த கொலைக்கு வித்யாவின் அண்ணன் மட்டும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளதை போல் இந்த சீரழிந்த பார்ப்பனிய வர்ணாசிரம கட்டமைப்பை பாதுகாக்கின்ற திரௌபதி போன்ற படங்களும், அதை உருவாக்கிய அரை சங்கிகளும், ஊருக்கு ஒரு சாதி என சாதி சங்கங்களின் மூலம் இளைஞர்களிடையே வெறியூட்டும் சாதி தலைவர்களும், சாதிய கட்சிகளும் இவையெல்லாம் இருந்தால் தான் தன் பிழைப்பு ஓடும் என்று இதனை பாதுகாத்து ஊக்கப்படுத்தும் பாசிச பாஜகவும் அதன் இன்னபிற அமைப்புகளும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாய் இருப்பது பார்ப்பன சனாதன சாதிய கட்டமைப்புமே. இந்த கும்பலின் வர்ணாசிரம சாதிவெறியை இல்லாமல் செய்ய அதன் அடிப்படையைத் தகர்க்கும் புதிய ஜனநாயகப் புரட்சியே நடத்தப்பட வேண்டும்.
அதே வேளையில், பண்பாட்டு ரீதியாக மாமன்னன் திரைப்படத்தில் வரும் சாதிவெறிப் பிடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தையும் சாதிவெறி ஆணவக்கொலை செய்துவிட்டு சிறை சென்ற யுவராஜையும் கொண்டாடுவதற்கு மாறாக இழிவானவர்களாக, வெறுத்தொதுக்க வேண்டியவர்களாக இந்த சமூகம் பார்க்க வேண்டும். அதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். சாதிய மனநோய் பீடித்துள்ளவர்களைத் தனிமைப்படுத்தாமல் ஆணவக் கொலைகளுக்கு முடிவுக் கட்ட முடியாது.
- நந்தன்







சனாதன பார்ப்பனியம் தோற்றுவித்துள்ள சாதிய அடுக்குகள் ‘ஆழ விருட்சகமாய்’ படர்ந்து விரிந்து நீடிப்பதன் விளைவே இப்படிப்பட்ட ஆணவப் படுகொலைகளை
சாதி வெறியர்களால், பெண் அடிமை போற்றும் ஆணவம் பிடித்தவர்களால் தொடர்ந்து அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் வித்தியா படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டிக்கும் முகத்தான் தோழர் நந்தன் எழுதியுள்ள கட்டுரை, சுருக்கமானதாக இருந்தாலும், மக்கள் எத்தகைய
நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதனை படம்பிடித்துக் காண்பிப்பதாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!