உரைவீச்சு:
தல
தலை காலில் விழுந்த
தலபுராணம்
(உ.பி. ‘ யோகி ‘ ஆதித்யநாத் காலில் ரசினி விழுந்தார் ; இதையொட்டி இங்கே அரசியல் விவாதம் தூள் பறக்கிறது ; அதுவும் ” யோகி ஆதித்யநாத்+ ஆர்எஸ்எஸ் பாஜக+ ரசினிக்கு “விளம்பரம்தான் என்பது ஒருபுறமிருக்க, பத்திரிக்கையாளர் கேள்விக்கு அவர் ஏதோஒரு சமாளிப்புக்கு ” மவுத் டாக் “-கில் உளறலைக் கொடுத்த பிறகும் எரிந்துகொண்டே இருக்கிறது………)
***
( பீடிகை )
காசெல்லாம் இழந்து இளைத்தும் — சனங்க
நடிகனை ” தலைவா ! ” ஆக்கிட்டாங்க ;
காசெல்லாம் கொட்டி இழைத்து இழைத்து
‘சத்திரியச் சாமியார ‘ முதல்வரா ஆக்கிட்டாங்க !
எங்கிருந்தோ வந்தபந்தம்
இரண்டு பேரையும் ஒன்றுசேர்த்தது எப்படியோ ?
***
1.
வடக்கே இமயமலைக்கு டூர்போன இந்த ஆளுக்கு
சட்டீஸ்கரிலும் உ.பி-யிலும் என்ன வேல ?
“இவுரு சாமி!” -ன்னு
கை நீட்டிக் காட்டுற காலில் எல்லாம்
விழுந்துகும்பிடும் இந்த ஆள்
என்ன அப்பாவிங்களா ?
இன்றைய ‘ஜெயிலர்’ வரை
கண்ணாடியச் சுழற்றிச் சுழற்றிப் போடுவது;
ஒருமீட்டர் தூரம் இப்படி அப்படி நடப்பது
(அந்த நடையின்போதே கூட
ஒரேஒரு அப் அல்லது டவுனில்
எங்கே ஒரேஒரு மைக்கேல் ஜாக்சன் நடை
போடச்சொல்லுங்கள் பார்க்கலாம்);
மேல் கோட்ட இப்படி, அப்படித் திருப்பிவிடுவது;
ஒரு பீடி சிகரெட்ட தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது……
இப்படில்லாம் நம்ம சனங்கள
அப்பாவிங்களாக ஆக்கினாங்களே தவிர,
இவருல்லாம் அப்பாவியா, நோ சான்ஸ் !
அப்படீன்னா எப்படீங்க
இப்படிச் சந்திப்பு நடந்தது ?
புலிவருது புலிவருதுன்னு
அரசியல்ல குதிக்கிறதா
இங்க வேடிக்கை காட்டி இருந்தவருக்கு
உ.பி–யில திடும்னு என்னாங்க வேல?
அதுவும் சந்திக்கிறவங்க எல்லாம்
பாஜக கூட்டாளிங்களா இருக்கறப்ப,
சந்தேகம் வருமா வராதா….?
***
சரி, உ.பி-யில ‘மொட்டச் சாமி’ கால்ல
ஏனுங்க உழுந்தாரு?
“நட்பு, உறவு பாக்குறாரு” என்று
ஒரு தபா பேசிய சீமான்
“அதெல்லாம் ஒரு மனித மாண்பு!”
என்றெல்லாம் விளக்கம் பேசினவரு ;
அடுத்த சில நாட்களிலேயே–
“ஆன்மீகத்துல சிறந்தவர் காலில்
விழுவது என் பழக்கம்” என்ற
ரசினி பேச்சைக் கேட்டு,
“அவ்வளோதான் அவுரு அறிவு!” என்று
செயின் பல்டி அடிக்கிறார்.
நாளொரு வாய், வாய்க்கொரு வரலாறு
சொல்லும் சீமான், இப்படித்தான் பேசுவார்.
மனித மாண்பு மனித மூடனாகும் விந்தை இது,
இதுதான் சீமானின் வித்தை, சரக்கு!
இன்னொருத்தரு சித்ரா லட்சுமணன்னு
படத் தயாரிப்பாளர், அவர் கணக்காச் சொல்றாரு :
“சினிமா வித்தை தெரிஞ்சவங்க
ஒன்னாச் சேந்து படம் செஞ்சாலும்,
பத்து கோடி தேறாது.
கோயில்னா கடவுள் இருக்கணும், இல்லேன்னா
அது வெத்து நினைவுச் சின்னம்தான்!”
அதாவது, அவர் சொல்லாம சொல்ல வர்றது,
“ரஜினி கடவுள் போல…..”,
“அவர் படத்துல இருந்தாத்தான் லாபம்.”
தயாரிப்பாளர் ரசிகனுடைய வாழ்க்கை ஜெயிக்கணும்னு எப்பவும் சொல்லவேமாட்டார். அவங்களுக்கு
தங்கள் கஜானா ரொம்பினாப் போதும்.
இவுங்க எல்லாம் உசுப்பி உசுப்பி
கூடிக் கும்மியடிச்சி விளம்பரப்படுத்தி
பேனைப் பெருமாளாக்கி
உருவேத்திவிட்ட இமேஜ் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி–
இவுங்கெல்லாம் இல்லேன்னா
ரஜினியே இல்லே,
இது பொதுப்புத்தி ஏற்பாடு!
இதோ, இன்னொரு சப்போர்ட் வருது பாருங்க.
இது ‘அவாளது சமூக ஏற்பாடு’ —
பேரு ஒய்.ஜி.மகேந்ரன்னு ஒரு சங்கி,
அவுரு அவுத்து விடறாரு கேளுங்க —
“ஆன்மீகம் என்பது முக்தி அடைய ஒருவழி,
அந்த ஸ்பேஸ ###
நாம கொடுத்தே ஆகணும்,
என் செயல், என் விருப்பம்,
அத எந்த நபரும் கேள்விகேட்க முடியாது.
உனக்குப் புடிச்சதத் தான் நான் செய்யணுங்கிறது,
இதெல்லாம் பயித்தியக்கார மடத்தனக் கேள்வி….
அது ரஜினியின் மதம், நம்பிக்கை சார்ந்த
சொந்த விஷயம், அதுக்குள்ள நீ நொழையமுடியாது…”
சோழியன் குடுமி சும்மா என்னமா ஆடுது?
என்ன தர்ம ஆவேசம் பாருங்கோ அவாளுக்கு ?
சந்தை தாறுமாறாய்ப் போய் சிக்கல்னு வந்தாலோ, உழைப்பாளிகள் நியாயம் கேட்டுப் போராடினாலோ, “கலிமுத்திடுத்து, லோகமே
கெட்டுப் போச்சு பாருங்கோ”-ன்னு
வாயில வயித்துல அடிச்சிக்குவான் !!
***
திரும்ப ஆரம்பிச்ச எடத்துக்கு வாங்க.
‘யோகி’ கால்ல விழுந்தாரு,
நம்மைப் பொறுத்தவரை “சிஎம் கால்ல விழுந்தாரு”,
“உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் சத்திரிய
மடத்துமேனேஜர் கால்ல ரசினி விழுந்தாரு ” ;
(அவங்கெல்லாம் முதல்ல ஒரு மேனேஜர்,
‘யோகி’ என்னவகைன்னு யாருக்குத் தெரியும் ?
அடுத்தது, பெரும்பாலும் போலிச் சாமிங்கதான்.
தமிழகத்தில் மேனேஜர் நடுசங்கரன் கதை
சிரிப்பாய்ச் சிரித்தது சமீபத்து வரலாறல்லோ!)
அவங்களுக்குள்ளே ஆயிரமோ,ஆயிரங் கோடியோ,
முதலீடு — மூலதனம் இருக்கலாம்,
அதனால விழுந்திருப்பாரு, அதெல்லாம்
” லதாம்மாவுக்கே வெளிச்சம் .”
அது போகட்டும்,
‘சத்திரிய ராஜா’ பய்யாவப் போய்ப்பாத்துருக்காரு,
அவரு பரிசுத்தவான், ” ரொம்ப நல்லவரு “ன்னு
இந்தியாவே பேசுது,
அதாவது, அவர் “ராஜ ரவுடி”ங்கிறது எல்லாருக்கும்
தெரியும்! அவரது கும்பல் கொலை — கற்பழிப்பு கேஸ் வாங்கியது இன்னமும் தீரவில்லையே!
இதெல்லாம் போக
“ரசினியோட ஒரிஜினல் பேரே சிவாசி கெய்க்வாடு,
சத்திரிய வீரசிவாசின்னு” ஒரு தரப்பும்,
“மகாராட்டிரத்திலிருந்து கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்த
தலித் குடும்பமுன்னு ” இன்னொருதரப்புமா நின்னு
லாவணிக் கச்சேரியும் இங்க தொடங்கிட்டாங்களே….
ஒருவேளை சத்திரிய வருணச் சங்கமத்துக்கான
யோசனையாகவும் இருக்கலாம்……….
அதனால்தானோ என்னவோ மறக்காம சத்திரிய ராசா– அவதார ராமனையும், ராம தூதன் அனுமனையும்
பார்த்து விட்டு வந்திருக்கிறார்… இருக்கலாம்…..
***
நாம் திரும்ப ‘யோகி ஆதித்ய நாத்’
புராணத்துக்கே திரும்புவோம்.
சுல்தான் மகாராசா , யோகி ஆதித்யநாத்தின்
குரு கோரக்நாத்துக்கு ( ஒரு விசித்திரம், இவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை) உவந்தளித்ததாகச்சொல்லப்பட்ட
“வட கோரக்பூர் ஜங்கமச் சொத்தில் போய்” அது நிற்கும்.
ராஜா, அதிலும் முசுலீம் மகாராசா என்ன செய்தார்,
கோரக்நாத்துக்கு வடகோரக்பூரையும்,
இவரது ஆன்மீகப் போட்டியாளர் சூஃபி மஸ்னவிக்களின் குரு பாபா ரோஷன் அலிக்கு (இவர் பற்றி பல ஆதாரம் கொடுக்கிறார்கள்) தென்கோரக்பூர் என்று சாசனம் எழுதிவைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆன்மீகத் தேடலுக்கு ஞானகுரு கோரக்நாத்தின்
அடிப்படை ராஜயோகம் என்று சொல்வதுண்டு ; நிலம் தவிர மற்ற பரம்பரை வாசனைகளை விட்டுவிட்டு உடம்பு, யோகப் பயிற்சி என்று அக்கறைப்படும் ‘ ஹடயோக ‘ பரம்பரையை எடுத்த ‘ யோகி ஆதித்யநாத் ‘ ஆர்எஸ்எஸ் அரசியலைக் கலந்தார். 1998-ல் பாஜக எம்எல்ஏ ஆனார்; 2017-ல் பாஜக சிஎம் ஆனார்.
அரசியல் கலந்த பிரிவை உருவாக்கிய ‘ நாத யோகி ‘ ஆதித்யா தங்கள் ‘ வட பகுதிச் சொத்தை ‘க் காத்ததுபோக, ‘ தென்சொத்தைக் களவாட பாபா ரோஷன் அலியின் பரந்து விஸ்தரிக்கப்பட்ட மியான் பஜார் என்ற தூலமான அடையாளத்தை அழித்து மாற்றி ‘ மாயாபஜார் ‘ என்று கயிறு திரிக்க ஆரம்பித்துள்ளார் ஆதித்யா. இது ‘ யோகி ‘யின் கிரிமினல் நடவடிக்கைக்கு சாட்சி.
இனி, ‘ நாத யோகி ‘ ஆதித்யா மற்றும்
‘கதம் கதம், பாபா ரசினி ‘பற்றியும் கொஞ்சம் பேசுவோம்.
***
2.
‘யோகி ஆதித்யநாத் ‘ என்ற இந்தத் தல
சாட்டையால் தலித்தின் தோலுரிக்கும் ஊரின் தல.
வருண, வர்க்க பேதத்தால்,
நாளும் அறிவு நீக்கத்தால்
வடக்குப் பிராந்தியத்தையே முட்டாளாக்கும் தல.
ஆர்எஸ்எஸ் திட்டத்தால்
வருங்கால ‘பிரதான் மந்திரி ‘பதவிக்கு
வருவாரோ என ஏலம் விடப்படும் தல.
சாட்சி: கர்நாடகத் தேர்தலை
மோடி தொடங்கியபோது சொன்ன முழக்கம்,
“பஜ்ரங் பலி வாழ்க! ” என்ற ஆதித்யநாத் முழக்கமே !
இலவசமா அவுத்துவிடப்படும்
‘கும்பமேளா’:
(உலகிலேயே மிஞ்சியிருக்கிற
அம்மண ஊர்வலம் இது ஒன்றே)
இந்த ஆட்டத்தை அனுமதித்துள்ள
ஒரே ‘ நாகரிகப் புகழ் ‘ ஓங்கிய தல.
மூளைக்காய்ச்சலில்
ஆயிரம் சாவுகளைக் கமுக்கமாய் மறைத்த
‘சர்வாதிகாரக் கொடி ‘கட்டிப்
பறக்கும் ஆட்சியின் தல.
மட்டுமல்ல, வேண்டாதவங்கன்னு
முசுலீம்க வீடாப் பார்த்து புல்டோசரால்
நொறுக்கிய சம்பவம் தல ஆட்சியில் தானே ?
இப்படியே……
மொட்டை எப்படி
மழித்திருக்கிறதோ அதே அளவு
உண்மைகளை எல்லாம்
மழித்துப்போட்ட ஆளே
தல ஆதித்யநாத், தல ‘சாமி’.
அவரது ‘ கொள்கை ‘ யின் மூன்று அம்சங்கள்
இதோ கேளுங்கள் :
ஒன்று,
பரம்பரை மடச்சாமி பெருமை தொடங்கி,
வைதீக – வருண – சாதிய
“இந்துமதப் பரிணாமக் கொடி “;
இரண்டு,
சத்திரிய – பார்ப்பனக் கூட்டில்
தேர்தல் அரசியலில் அச்சாரம் போட
வீரிய ஒட்டுச் சாதிக் கொடி ;
மூன்று,
முசுலீம் வெறுப்புக்குப்
பாரம்பரிய வரலாற்றுத் தடம் போட்ட கொடி;
இந்த மூன்றுக்கும்
பிற்போக்குப் பாதுகாப்புக் கோட்டைதான்
‘மொட்டைச் சாமி’!
இந்தத் தல காலில்தான்
ரசினி விழுந்து எந்திரிச்சார் ;
புரட்டிப்பேசும் சீமான் மட்டுமல்ல,
பொய்களே உருவான
பாசிஸ்டு பாஜக தலைகள் மட்டுமல்ல,
இந்தத் ‘ தலைவா ! ‘ தலைக்கும்
புரட்டிப் பேசுவது, பொய் சொல்வது,
ஏமாத்திப் பிழைப்பது கைவந்த கலை!
“காலில் விழுவதும் பிடிக்காது,
காலை வாருவதும் பிடிக்காது! ”
— இது ரசினி;
“கடவுள், தாய் – தந்தை, பெரியவங்க
காலில் விழுவேன்! ”
— இப்போது பேசிச் சமாளிப்பதும்
ரசினிதான்.
உழைக்கும் தன்மானமுள்ள தோழர்களே,
“என்னை வாள வைக்கும் தெய்வங்களே!”
என்று தல கூவினால் பின்னால் செல்ல
அந்த ஆளுக்கு நாமென்ன அடிமைகளா?
ரசினி சொல்கிற குட்டிக் கதைகள்,
ஒழுக்க உபதேசங்கள் நமக்கு,
அதாவது உங்களுக்குமட்டும்.
அவர் உங்களைக் கொள்ளையடித்துச்
சேர்த்த தனம், மூலதனம் லட்சம் கோடி;
இப்போது அது உ.பி-யிலும் பேசும்,
சிங்கப்பூர் என்ன , துபாய் என்ன
உலகம்பூராப் பேசும்.
நாமெல்லாம் உழைப்பவர்கள்.
நமக்கென்று உலகம் கட்டும்வரை
கிணற்றுத் தவளைகள் தான்,
எடுப்பார் கைப் பிள்ளைகள்தான்.
நமக்கே நமக்கென்று உள்ளது
பகுத்தறிவு, ஒழுக்கம்,
உலகம்பூராச் செல்லுபடியாகும் உழைக்கும் மதிப்பு,
பிழைசெய்தால் வெட்கம்,
சொரணையோடு சுயபரிசீலனை,
இதில்தான் நாளைய நம் உலகம்
ஆழவேரூன்றியிருக்கிறது,
பெரிய ஆலமரம் போல.
***
இதையும் படியுங்கள்: உரைவீச்சு : (மகாராஷ்டிரா விழாவில்) நரபலி நாயகர்கள்!
இனி நாம்
கவனம் பிசகாமல் பரிசீலிக்கமுடியும் ;
ரசினி ‘தலைவா’வாக இருந்தாலும் சரி,
அவர் விழுந்தெழுந்த காலுக்குரிய
தலயாக இருந்தாலும் சரி, ஆராயமுடியும்.
இப்போது
ரசினி சொன்ன தவளை கதை
நினைவுக்கு வருகிறதா ?
“ஒருமலை, பெரிய பாறை.
மூணு தவளைங்க மேல ஏறுச்சாம்–
மேல எத்தனையோ கொடிய
பாம்பு தேளு விஷப் பூச்சிங்க…
ரெண்டு தவளைங்க பாதில விளுந்துடிச்சாம்,
மூணாவது தவளமட்டும்
கீழே இருந்து மத்தவங்க
அபாயத்தச் சொல்லி எச்சரிச்சும் கேக்காம
மேல மேலபோய்
உச்சியை எட்டிடுச்சாம், ஏன் தெரியுமா?
அந்தத் தவளைக்குக் காது கேட்காது.”
” இந்த ரஜினிகாந்த்
காது கேக்காத தவளை …..”
— “யார் என்ன சொன்னாலும்
காதுல வாங்காம போய்க்கிட்டே இருப்பேன்”
என்று ரஜினி கதை சொல்லக் கேட்டுக்
கைகொட்டிச் சிரித்தோமே, நண்பர்களே,
நம்மைப் பார்த்து நாமே சிரிப்பதற்குப்
பொருளென்ன, நண்பர்களே !?
நாலுபேர் நாலுவிதமா என்னான்னு கூப்பிடுவாங்க
சொல்லுங்க நண்பர்களே !
- புதிய திருமூலன்.