கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்காக கொண்டு வரப்படும் கார்ப்பரேட் பாசிசமும், பார்ப்பன பயங்கரவாதிகளின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக கொண்டு வரப்படும் காவி பாசிசமும் வீரிய ஒட்டு ரக முறையில் ஒன்றிணைந்து கார்ப்பரேட் காவி பாசிசமாக தலைவிரித்தாடி வருகிறது.

நாட்டில் நடப்பது பாசிச பயங்கரவாத ஆட்சி என்பதை விளக்குவதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்ற போதிலும் வகைக்கு ஒன்றை பட்டியலிடுகின்றோம். பொதுவாக செய்திகளைப் படிப்பதை போல இதையும் படித்து விட்டு கடந்து செல்வது நீண்ட எதிர்காலத்தை சூனியமாக்கி, நாட்டை படுகுழிக்குள் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது என்பதை மட்டும் எச்சரிக்கின்றோம்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது.. நிலவில் சந்திரயான்-3  தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்று நாட்டின் மூத்த சங்கியை போல சட்டபூர்வமாக அறிவிப்பு செய்துள்ளார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பார்ப்பன மதக் கடவுளர்களின் பெயரை சூட்டுவதற்கு என்ன பெயர். அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற அரசு என்று கூறிக் கொள்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நடைமுறையோ அப்பட்டமான இந்துராஷ்டிரம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவே விழித்தெழு!  கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்து!

பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது கொண்டுவரப்பட்ட சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றியும், பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் வழிவகை செய்கிறது.

இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக்  சுரக் ஷ சங்ஹீத மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக் ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.  நாடாளுமன்றத்தின் மிருகத்தனமான பெரும்பான்மையை கொண்டு சட்டத்தின் பெயர்கள் மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான நீண்ட கால வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டுவதற்கான 2022 ஆம் ஆண்டு மாதம் 5 ஆம் தேதி  பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமானத்துக்காக நாடுமுழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே 3 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலானது.

இந்த நிலையில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை முடித்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் முழுமையான கட்டுமானப் பணிகள் 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவே விழித்தெழு!  கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்து!

இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், 360 தூண்கள் என மிக பிரமாண்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது.

இதேபோல, ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, பயணிகள் வசதிக்காக அயோத்தியில் அதி நவீன விமான நிலையம் திறக்கப்படும் என்றும், இதற்காக 224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராமன் இந்தியாவின் தேசிய நாயகன் என்ற முறையில் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று சர்ச்சையை உருவாக்கி, நீதிமன்றத்தின் மூலமாக பார்ப்பன இந்து மத வெறியர்கள் சாதகமான தீர்ப்பையும் பெற்றனர். தற்போது கோவிலை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு நாள் குறித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டின் பூர்வ குடிமக்களான பழங்குடிகள் தங்களின் காடுகளில் இருந்தும், மலைகளில் இருந்தும் கனிமவள வேட்டைக்காக விரட்டியடிக்கப்பட்டு வருகின்றார். நியாம்கிரி மலையில் வேதாந்தாவின் கனிமவேட்டை துவங்கி மணிப்பூரில் உள்ள மலைகளில் கிடைக்கின்ற கனிமங்களை சூறையாடுவது வரை பழங்குடி மக்களின் மீதான ராணுவ தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இம்மண்ணின் மைந்தர்களாகவும் பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக வீரம் செறிந்த முறையில் போராடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த நாட்டை விட்டு விரட்டுவதற்கும் அல்லது பார்ப்பன இந்து மதத்தின் ஆதிக்கத்திற்கு கட்டப்பட்டு வாழ்வதாக இருந்தால் உயிருடன் வசிப்பதற்கும் பகிரங்கமான மிரட்டல்கள் விடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய களம் அமைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாதிகள்!

பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை கொடூரமான நிலைமையாக மாறியுள்ளது. உத்தர்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய வியாபாரிகள் வியாபாரம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. ஹரியானாவில் பஜ்ரங்தள் என்ற குண்டர் படை மூலம் இஸ்லாமியர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்படுகிறது. சிஏஏ, என்ஆர்சி போன்ற கணக்கெடுப்புகளின் மூலம் இஸ்லாமியர்களை குறி வைத்து நரவேட்டையாடுவதற்கு திட்டமிட்டு வருகிறது ஆர்எஸ்எஸ் – பாஜக.

இந்த நாட்டின் சொந்தக்காரர்களான பட்டியலின மக்களின் மீது அவர்களின் உணவு பழக்கம் துவங்கி அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆதிக்க சாதி வெறியர்களின் தீண்டாமை குற்றங்கள் தலை விரித்து ஆடுகிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களைப் போலவே தலித்துகளுக்கும் வாழ்வதற்கான உரிமையோ வசிப்பதற்கான உரிமையோ மறுக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி நிறுவனங்களில் பிறப்பால் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இழிவு படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர் அல்லது அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் ஹைதராபாத் ரோஹித் வெமுலா துவங்கி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில், சென்னை ஐஐடியில் என்று பல்வேறு உதாரணங்கள் மலிந்து கிடக்கிறது.

இதையும் படியுங்கள்: பூணூல்களின் ஆதிக்கத்தில் இருந்து ஐஐடிகளை விடுவிப்பது எப்போது?

நாடு முழுவதும் சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் மீது ஆதிக்க சாதி வெறியர்களின், வெறியாட்டங்கள் தலை விரித்து ஆடுகிறது. சாதி சங்கங்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்புகளும், கோடிக்கணக்கான ரூபாய் நிதியும் ஆர்எஸ்எஸ் மற்றும் துணை அமைப்புகளால் வாரி வழங்கப்படுவதால் புத்துணர்ச்சி பெற்ற ஆதிக்க சாதிகள் சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

தான் விளைவித்த பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள் தனது வேலைக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஆர்.எஸ்.எஸ் பாஜக அடுத்தடுத்து கொண்டு வருகின்ற சட்ட திருத்தங்களை கண்டு அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள் தொழிலாளிகள்.

ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் உழைக்கும் மக்கள் ரத்த வேர்வை சிந்தி உருவாக்கிய பொது சொத்துகளான நாட்டின் பொதுத்துறைகள் அனைத்தும் தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானிக்கும், அம்பானிக்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய குஜராத் மார்வாரிகள், சேட்டுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே நாட்டை ஏகாதிபத்திய, மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கத்திற்கு உட்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி வேகமாக வேலை செய்து வருகிறது. இதன் அபாயங்களை உணர்ந்து கொண்டு தடுத்து நிறுத்துவதற்கு வீதியில் இறங்கி போராடுவதற்கும், கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு முடிவு கட்டுவதற்கும் கோடிக்கால் பூதமாக கிளர்ந்தெழ வேண்டியுள்ளது.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here