ழக்கமாக வேலைக்காக செல்லும் ஒரு அலுவலகத்தில் ஒரு புதிய பெண் ஊழியர் புதிதாக சேர்ந்திருந்தார். அறிமுகத்திற்காக பெயரை கேட்ட பொழுது, “குயிலி” என்றார். ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம் இருந்தது. “குயிலியா?” என்றேன். “குயினி” என திருத்தினார். வித்தியாசமான பெயர், புரியாத பெயர் என்றால் பெயர் காரணம் கேட்பது வழக்கம். நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படும். மருத்துவம் பார்த்த மருத்துவரின் பெயர் ராசாத்தியாம். அவருடைய பெயர் வைக்கவேண்டும். அதை “நவீனப்படுத்தி” குயினி என வைத்துவிட்டார்களாம்.

சமீபத்தில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன். எல்.கே.ஜி வகுப்பு அது. அங்கிருந்த கரும்பலகையில் இருபது பெயர்களை வரிசையாக எழுதிப்போட்டிருந்தார்கள். அக்‌ஷயா, சாதனா, சந்தோசிகா, தீப்ஷிகா, வருண்காந்த், பிரார்த்தனா, வித்யா, முக்தாஸ்ரீ என நீண்டு போய்க்கொண்டு இருந்தது. எந்த பெயரும் தமிழில் இல்லை. ஆச்சர்யமாக இருந்தது.

சில வீடுகளில் சிலருக்கு இரண்டு பெயர் இருக்கும். சான்றிதழில் ஒரு பெயர். அழைப்பது ஒரு பெயராக இருக்கும்.  பக்கத்து வீட்டு நண்பனை ”கண்ணா” என அழைப்போம். சான்றிதழில் ”முத்துக்கிருஷ்ணன்” என இருக்கும். அவனின் தங்கையை ”பாலா” என அழைப்போம்.  சான்றிதழில் ”நல்லதாய்” என இருக்கும்.

பெயர் வைப்பது என்பது தன் குடும்பத்தின் மூத்தவர்களின் பெயரை, தனது குலசாமிகளின் பெயரை, கடவுளர்களின் பெயரை வைத்த தமிழ் மக்களுக்கு என்ன ஆயிற்று? எப்பொழுதிலிருந்து இப்படிப்பட்ட ”நவீனத்திற்கு” மாறினார்கள் என தெரியவில்லை. குழந்தை பிறந்ததும், நேரத்தை, நாளைக் குறித்துக்கொண்டு, ஜாதகக்காரர்களிடம் போய் என்ன எழுத்தில் பெயர் வைப்பது என ”பொறுப்பாய்” கேட்கிறார்கள்.  எல்லா ஜோசியக்காரர்களும் சமஸ்கிருதமயமாதலுக்கு ஆதரவானவர்களாக எப்பொழுது மாறிப்போனார்கள் என தெரியவில்லை.  அவர்கள் சொல்கிற முதல் எழுத்தே சிக்கலானதாக இருக்கிறது.  அதன் வழி பெயர் வைப்பவர்களும் மேலே உள்ள பெயர்கள் போல வைக்கமுடியும்.

மலையாளத்தில் தொலைக்காட்சியில் ஒருவர் பிரபலம். உலகில் எங்கோ இருக்கும் ஒரு பிரபலத்தை நீங்கள் மனதில் நினைத்துக்கொள்ளவேண்டும். அவர் 25 கேள்விகள் கேட்பார். அதற்கு நீங்கள் ஆம், இல்லை என சொன்னால் போதும். 25 கேள்விகள் முடிவதற்குள் அவர் நீங்கள் யாரை நினைத்தீர்கள் என்பதை பெரும்பாலும் சரியாக சொல்லிவிடுவார். அப்படித்தான் பெயரும். பலரின் இயற்பெயரை சொன்னால், மூன்றே கேள்விகளில் அவர் எந்த மண்ணைச் சார்ந்தவர் என அடையாளப்படுத்திவிடலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த படம் ”எதிர்நீச்சல்”. படத்தில் நாயகனுக்கு பெயர் குஞ்சிதபாதம். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜருக்கு அணிவிக்கப்படுவது. இந்த குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை)  அந்த பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் சுருங்குவான். சொல்ல தயங்குவான். பிறகு ஒரு சமயத்தில் பெயரையே மாற்றிக்கொள்வான். தனக்கென ஒரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பெருமுயற்சி செய்து, வெற்றி அடையும் பொழுது, எல்லா ஊடககாரர்களும் மைக்கை முன்னால் நீட்டும் பொழுது… தன்னுடைய இயற்பெயரையே சொல்லுவான். அதற்கு காரணம் சொல்லும் பொழுது ”பெயர் என்பது மற்றவர்கள் அழைப்பதற்கு மட்டுமல்ல! அது ஒரு தலைமுறையின் அடையாளம்” என்பான்.

எப்படி பெயர் வைக்கவேண்டும் என மனுதர்மம் சொல்கிறது என்றால்… பிராமண சாதியில் பெயர் மங்களகரமான பெயராக, சத்திரியர் என்றால் வீரம் கொப்பளிக்கிற மாதிரி, வைசியர் என்றால் செல்வம் கொழிப்பதாக, சூத்திரர் என்றால் அடிமைத்தனம் கொண்ட பெயராக இருக்கவேண்டுமாம். பஞ்சமர்களுக்கு முழுப்பெயரும் தாங்குகிற உரிமை கிடையாது என்கிறது.

இதையும் படியுங்கள்: பெயர் வைப்பதில் ஆயிரம் பிரச்சினை இருக்குது, கேள் மகளே !

இதெல்லாம் அந்த காலம். இப்பொழுது அப்படி இருக்கிறதா? எனக் கேட்டால்… குப்புசாமி என்றால், இப்பொழுதும் குப்பு என அழைக்கிறார்கள். இசக்கியம்மாள் என பெயர் வைத்தால்… இசக்கி என்று தான் அழைக்கிறார்கள். அது இயல்பாக வருவதில்லை. இப்படி அழைக்கும் வழக்கம் வருணாசிரமத்திலிருந்து வருகிறது. ஒடுக்கப்பட்டவரை பாதிப் பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும் என்கிறது மனு தர்மம்.

பெரியார் இதை உடைப்பதற்கு முயற்சி செய்தார். குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பொழுது “கும்பிடறேன் சாமி” என பெயர் வைத்தார். சுருக்கினாலும், ”கும்பிடறேன்” என அழைக்கவேண்டும். அல்லது ”சாமி” என அழைக்கவேண்டும். ஆதிக்கசாதிக்காரர்கள் மரியாதை குடுத்து பழகட்டும் என்றார். ஆனால் ஆதிக்கச்சாதி புத்தி குரூரமானது. “கும்பிடறேன் சாமி”யை சுருக்கி ”கும்பிடு” என அழைத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு செத்த பிறகு சொர்க்கம் என போதிக்கும் இந்து மதம், வாழும் பொழுதே இந்த மண்ணில் அவர்களுக்கான “சொர்க்கத்தை” படைக்க பார்க்கிறார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி பாசிஸ்டுகள். காவி இருளை சாத்தியமான எல்லா வழிகளிலும் பரப்ப முயல்கிறார்கள். காவி இருள் மொத்தமாக சமூகத்தின் மீது கவிழ்ந்துவிட்டால், அதில் இருந்து மீள்வது பெரிய போராட்டமாகிவிடும்.

ஆக பெயரில் என்ன இருக்கிறது? நம்மைச் சுற்றி உள்ள அனைத்திலும் அரசியல் இருக்கிறது. பெயரிலும் அரசியல் இருக்கிறது. பெயரில் நமது பண்பாடு இருக்கிறது. நமது அடையாளம் இருக்கிறது.  மொழியியலில் மக்களால் பேசப்படாத மொழியை ”செத்த மொழி” என்பார்கள், அப்படி செத்துப்போன மொழியான சமஸ்கிருத மொழிக்கு செம்மொழிக்கு சொந்தக்காரர்களான நாம் ஏன் உயிர்கொடுப்பானேன்.

ஆகையால் சமஸ்கிருத, வடமொழிப் பெயர்களை கவனமாக தவிர்ப்போம். அழகு தமிழில் நல்ல பெயர்களை நம் குழந்தைகளுக்கு சூட்டுவோம். அழைப்பதில் கூட முழுப்பெயரை சொல்லி அழைப்போம். பட்டப்பெயர் வேண்டாம். பெயர் வைப்பதிலும், அழைப்பதிலும் புதிய பண்பாட்டை கடைப்பிடிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here