விக்கிரவாண்டியில் எல்.கே.ஜி சிறுமி பலி! உயிர்பலி வாங்கும் தனியார் பள்ளிகள்!

0
செப்டிக் டேங்கில் விழுந்து பலியான குழந்தை

விக்கிரவாண்டி அருகே செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் LKG படிக்கும் மாணவி லியா லட்சுமி செப்டிக் டேங்குக்குள் விழுந்து பலி. இதை விபத்து என்பதா? – படுகொலை என்பதா?

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் உயிரிழப்பது அவ்வப்போது நடந்தே வருகிறது. ஒவ்வொரு விபத்துக்கு பின்னும் ஒவ்வொரு வகையான அலட்சியமும், கல்வி நிறுவனத்தின் பொறுப்பின்மையும், அவர்களின் கண்ணை மறைக்கும் லாப வெறியுமே காரணமாக இருந்திருக்கிறது.

தனியார் பள்ளிகள் சங்கம் தொடங்கி, அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளை வானளாவ புகழ்ந்தது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

500 அரசு பள்ளிகளை தத்தெடுப்பதாக தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் தலைப்பிட்டு செய்திகள் வெளிவந்த நிலையில், தனியார் பள்ளிகளின் சங்கம் அதை மறுத்தது. தனியார் பள்ளிகளின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் சில உதவிகள் மட்டுமே செய்யப் போவதாக கூறியது. இப்படி எழுதிய மை காய்வதற்குள் விக்கிரவாண்டி துயரத்தின் மூலம் தனியார் பள்ளியின் உள்கட்டமைப்பே விவாதத்திற்கு உரியதாகி விட்டது.

ஒரு நிறுவனத்தை, கல்விக்கூடத்தை நடத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன. அந்த விதிப்படி தான் உள்கட்டமைப்பு இருக்கிறதா, இயங்குகிறதா என்பதை சோதித்து முறைப்படுத்த கல்வித்துறை துறையில் அதிகாரிகளும் ஊழியர்களும் இருக்கின்றனர். இதற்கு மேல் மாவட்ட ஆட்சியர் உள்ளார். தமிழக அரசின் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

இதை எல்லாம் மீறி ஒரு எல்கேஜி மாணவி ஏறி நின்றாலே செப்டிக் டேங்க் இடிந்து விழுகிறது என்றால் யாரையெல்லாம் இதற்கு பொறுப்பாக்குவது? பள்ளியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளை மட்டுமா கொலை குற்றத்தில் வழக்கு பதிவு செய்வது? நேர்மையும் நாணையமும் இருக்கும் பட்சத்தில் அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

தனியாரின் தரம் இதுதான்!

பொதுவாக அரசுப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளில் சில குறைபாடுகள் இருக்கவே செய்கிறது. தற்போது கூட ராணிப்பேட்டையில் அரசுப் பள்ளியின் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து எட்டாம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்த செய்தியும் வந்துள்ளது.

இதையெல்லாம் ஊதிப் பெருக்கி எதிர்மறை பிரச்சாரம் செய்த தனியார் பள்ளிகளின் கைங்கரியத்தால், மக்களின் பொதுப் புத்தியில் தனியார் என்றால் உயர்தரம் என்ற மதிப்பீடு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொய் பிரச்சாரத்திற்கு பலியாகும் சாமானிய மக்களும் கூட தமது வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் கல்விக்கட்டணமாக கொட்டி அழுது, தமது பிள்ளைகளை இத்தகைய தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க முண்டியடிக்கின்றனர். தற்போது விக்கிரவாண்டியில் பலியாகியுள்ள மாணவி லியா லட்சுமியின் பெற்றோர்களின் பின்னணி குறித்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.

அடிமைகளைக் கொண்டு அடிமைகளாக பயிற்றுவிப்பது!

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் கூட அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். பெற்றோரிடமிருந்து கட்டணங்களை பிழிந்து எடுப்பதில் கறார் காட்டும் தனியார் பள்ளிகள் தமது ஊழியர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ போதிய சம்பளத்தை தருவதில்லை.


படிக்க: பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்! பிஜேபியின் ஆட்சியில் நடக்கும் கொடூரம்!!


தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளமாக தருவதற்கும் கூடுதலாக மடங்குகளில் வேலைகளை திணித்து பிழிந்து எடுக்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் கூட பள்ளி வேலைகளை செய்யும்படி நிர்பந்திக்கின்றனர். இது குறித்து எல்லாம் வாயை திறக்க அவர்களுக்கு சங்கம் எதுவும் கிடையாது.

ஹோம் ஒர்க் ப்ராஜெக்ட் வொர்க் என்ற பெயர்களில் பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்களையும் சேர்த்து வதைப்பதும், ப்ராஜெக்ட்டுகள் எங்கே விற்கும் என கடைத்தெருவில் மெனக்கெட வைப்பதும் பெருமைக்குரியதாக மாற்றப்பட்டு விட்டது. நிர்வாகத்தின் அதிகாரத்துவத்திற்கு கீழ்படிய நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களால் கீழ்ப்படிய மட்டுமே பழக்கப்படுத்தப்படுகிறார்கள் மாணவர்கள்.

இப்படி லாப வெறி பிடித்து சட்டங்களை வளைத்து கல்வி சாம்ராஜ்யங்களை கட்டி எழுப்பும் கல்வி கார்ப்பரேட்டுகளிடமிருந்து மாணவர்களை பாதுகாப்பது எப்படி? 3 வயது மாணவியின் மரணத்தை சில நிமிட துக்கமாக கடந்து செல்லாமல், நாம் நின்று நிதானமாக அணுக வேண்டிய இடமும் இதுதான். இதற்கு முன் கும்பகோணம் தனியார் பள்ளி தீவிபத்து, பள்ளி வேனில் இருந்து மாணவி விழுந்து இறந்தது எனப் பல மரணங்கள் நடைபெற்ற போது எழுந்த எதிர்ப்புகளை சமாளிக்க ஒருசில நடவடிக்கைகளே எடுக்கப்பட்டது.

சங்கம் இல்லாமலேயே படுகொலைகளை செய்து விட்டு தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொண்டு சுரண்டலை தொடரும் கல்வி முதலைகள் தற்போது சங்கமாகவும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இந்த நிலைமையின் கீழ் விக்கிரவாண்டி சிறுமி லியாயின் மரணத்திற்காவது நீதி கிடைக்குமா?

கல்விக் கூட படுகொலைகளை தடுக்கவும் தவிர்க்கவும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டுப் போராட்டம் அவசியம். எதிர்கால தலைமுறையின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணையுங்கள். மாணவர் அமைப்புகளே அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here