வரி விதிப்பு: வர்த்தகப் போரை தொடங்கும் ட்ரம்ப் !

அமெரிக்காவின்  ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட மோட்டார் பைக்குகள் மீதான வரி 50% என்று இருந்ததை 40% ஆக்கியது. மேலும், போர்பன் விஸ்கிக்கு 150% இருந்த வரியை 100 % என்று குறைத்தது.

0

ரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்றது முதலே முந்தைய ஆட்சியாளர்களின் நடைமுறைகளை விமர்சிப்பதோடு அண்டை நாடுகளுடன் வர்த்தகம், அயல் உறவு உள்ளிட்டவற்றை தலைகீழாக மாற்றவும் துடிக்கிறார் .

பரஸ்பர வரி விதிப்பு முறை !

உலக நாடுகள் அமெரிக்காவின் ஏற்றுமதி பொருளுக்கு தமது நாடுகளில் எத்தகைய வரியை விதிக்கின்றனவோ அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்தந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார்.

அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சீனா, கனடா, மெக்சிகோ போன்ற   நாடுகள் அமெரிக்கா எந்த அளவு வரியை உயர்த்துகிறதோ அதே போல் அமெரிக்க பொருட்களுக்கு தம் நாட்டில் மேலும் கூடுதல் வரியை விதித்து வருகின்றன.

டிரம்ப்பின் பரஸ்பர வரியைத் தவிர கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும்  தனியாக 25% வரிவிதிப்பும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரிவிதிப்பு முறை மூலமும், தனிச்சிறப்பாக தனக்கு பணியாத நாடுகளின் மீது போடப்படும் கூடுதல் வரியையும் சேர்த்தால் ஆண்டுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரிவசூலாக அமையும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

இந்தியாவின் மீதான வெறுப்பு!

மோடியின் ஆட்சி காலம் முழுவதும் இந்தியாவானது அமெரிக்காவின் எடுபிடியாகவும், விசுவாசியாகவும், அடியாளாகவுமே இருந்து வந்துள்ளது.

இந்திய மக்களின்  உழைப்பையும், இந்தியாவின் கனிம வளங்களையும், இந்தியாவின் சந்தையையும் பயன்படுத்தி அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கொழுத்து தான் வந்துள்ளனர். ஆனால் அதை மறுத்து ஏதோ நாம் அமெரிக்கர்களை வஞ்சிப்பதாக வாய்கூசாமல் அவதூறும் செய்கின்றனர்.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் அளித்துள்ள பேட்டியில் இந்தியாவை சாடியுள்ளார். “இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக நீண்ட காலமாக நமது நாட்டை கொள்ளை அடித்து வருகின்றன. அதன் மூலம் அவர்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான வெறுப்பை மிகவும் தெளிவாக காட்டியுள்ளனர்” என சேற்றை வாரி இறைத்துள்ளார். ஆஹா, என்ன ஒரு திசை திருப்பும் நாடகம் !

ஒரு நாடு இன்னொரு நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது வரியை விதிப்பது எப்படி அந்நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் மீதான வெறுப்பாக இருக்க முடியும். நேரடியாக அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளின் மீதான வெறுப்பு என்று சொல்ல வேண்டியது தானே!

மண்டியிட்ட மோடி!

அமெரிக்காவின் குறிப்பாக ட்ரம்பின் விசுவாசியான  மோடி அரசோ ஏகாதிபத்தியத்தின் வரி விதிப்பு தாக்குதலுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. மாறாக மண்டியிடவே செய்துள்ளது.

அமெரிக்காவின்  ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட மோட்டார் பைக்குகள் மீதான வரி 50% என்று இருந்ததை 40% ஆக்கியது. மேலும், போர்பன் விஸ்கிக்கு 150% இருந்த வரியை 100 % என்று குறைத்தது. உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து அமெரிக்க அரசுடன் தாஜா செய்யும் பேச்சுவார்த்தையையும் கடந்த ஒரு மாதமாக  நடத்தியது.

ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் மீது வரிவிதிப்பு ஏன் அவசியம்?

இன்றைய கார்ப்பரேட் உலகில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உலக நாடுகள் சமநிலையில் இல்லை.

ஒப்பீட்டு அளவில் முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் தான் மிக மலிவான விலையில் தமது உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு சந்தையில் குவிக்க முடியும். அதே நேரம் பின்தங்கிய தொழில்நுட்பத்தில், குறிப்பாக அதிக மனித உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகமானதாகவே சந்தைக்கு வரும்.

படிக்க:

 பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !

 உக்ரைன் முதுகில் குத்தி கனிம வளங்களைச் சுருட்டும் அமெரிக்கா!

அதாவது வளரும் பின்தங்கிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையானது ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்களது உற்பத்தி செலவுகளை விட அதிகமானதாக இருக்கும்.

வளரும், பின்தங்கிய ஏழை நாடுகளின் உற்பத்தி பொருட்கள் ஏகாதிபத்தியங்களின் உற்பத்தி பொருட்களோடு சந்தையில் போட்டி போட முடியாததாகவும் இருக்கும். இதை சமப்படுத்தவே ஒவ்வொரு பின்தங்கிய நாடும் தமது நாட்டுக்குள் ஒப்பித்தளவில் குறைவான விலையில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது வரிகளை போடுகின்றன.

ஒவ்வொரு துறையிலும் குறிப்பாக எந்த பொருட்கள் ஏகாதிபத்தியங்களிடம் இருந்து இறக்குமதி ஆகிறதோ அந்தத் துறையில் அந்தப் பொருட்களின் உற்பத்தியானது நம் நாட்டின் நுகர்வுச் சந்தையை முழுமையாக ஆக்ரமித்து விடுகிறது.

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் முன்னணி பிராண்டுகளுடன் போட்டி போட முடியாத நிலையில், நம்நாட்டின் சொந்த பொருளுற்பத்தி  சுயமாக வளர்வதற்கான வளர்ச்சி வாய்ப்பை தடுப்பதாகவும் இவை அமைகின்றன. உதாரணமாக கோக், பெப்ஸி, லேஸ் சிப்ஸ் போன்றவற்றின் ஆதிக்கமே இதை புரிய வைக்கிறது அல்லவா. ஆல மரங்களை வளர்த்து விட்டபின் அதன் அடியில் செடி கொடிகள் வளர வாய்ப்பு இருக்காதல்லவா.

இப்படி வசூலிக்கப்படும் வரிப் பணமும்  புதிய விமான நிலையங்களுக்காகவும், 6,8 வழி சாலைகளுக்காகவும், புதிய சரக்கு வழித்தட ரயில்வே ட்ராக்குகளுக்காகவும், புதிய துறைமுகங்களுக்காகவும் செலவிடப்படுகிறது. அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சாரத்தை கொண்டு செல்லும் பவர் கிரிட்கள், தடையில்லா உயர் அழுத்த  மின்சாரத்தை வழங்கும்  துணை மின் நிலையங்களுக்காக என உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கே  முழுமையாக செலவிடப்படுகிறது.

அதாவது இந்தியாவுக்கு வரியாக தருவதை காட்டிலும் பல மடங்கு அதிகமாக தமக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் செலவு செய்ய நிர்பந்திக்கிறது அமெரிக்கா.

விவசாயம், சிறு தொழில்கள், சில்லறை வர்த்தகம் உள்ளிட்டு  அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் அகோரப் பசிக்கு இரையாக்குவதற்காக நம் நாட்டில் நடப்பில் உள்ள சட்டங்களையும் மாற்ற வைக்கிறது அமெரிக்கா.

இந்த நிலையில் அனைத்து நாடுகளும் ஒரே சமமான அளவில் தான் வரி போட வேண்டும் என்ற டிரம்பின்  கொக்கரிப்பு  எந்த வகையில் நீதியானது.

உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசின்  அடக்கு முறைக்கு எதிராக  போராடும் உலக நாடுகளுடன், உலக நாடுகளின் ஜனநாயக சக்திகளுடன், உழைக்கும் மக்களுடன்  ஒன்றிணைவோம். பாசிஸ்ட்டுகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிப்போம்.

  • இளமாறன்

1 COMMENT

  1. வர்த்தகப் போர் எப்படி உருவாகும்? அதன் பரிமாணம் நாடுகளுக்கு இடையேயான போட்டி போன்றவை முரண்பாடுகள் கூடுதலாக தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here