
இன்று முதல்வர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையை சம்பா சாகுபடிக்காக திறந்து வைத்துள்ளார். இதனை சாதனையாக அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு விவசாயிகளின் வேதனையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. குறுவை ஒன்றுமில்லாமல் போனதுபோல் சம்பாவும் பொய்த்துவிடுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள்.
மேட்டூர் அணையின் கொள்ளளவு தற்போது 90 அடியாக உள்ளது. அதுவே ஜூன் மாதம் 69 அடியாக இருந்தது. ஒருபுறம் கர்நாடகாவில் பருவமழை பொய்த்து போனது. மறுபுறம் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. முதல்வர் விஜய்யும் கண்டுக் கொள்ளவில்லை. கர்நாடக முதல்வரை சந்திக்காமல் தன்னுடைய கடைசிப் படமான ஜனநாயகன் கர்நாடகாவில் வெளியாவதற்கு எந்த பாதிப்பும் வந்துவிடாமல் இருப்பதற்காக காவிரி விவகாரம் குறித்து வாய்கிறக்காமல் மௌனம் (அவர் என்றைக்கு பேசினார் என கேட்க வேண்டாம்) காத்தார்.
இன்று மேட்டூர் திறக்கப்பட்டது செய்திதான். ஆனால் சமூக வலைதளங்களில் அது செய்தியாகவில்லை. விஜய்யை நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் துள்ளிக் குதித்ததும், எம்.ஜி.ஆர் பாணியில் வயதான பாட்டியை சந்தித்து போட்டோசூட் செய்யப்பட்டதும் தான் இன்றைய ஹாட் டாப்பிக். ஆனால் நாம் விவசாயிகளின் துயரத்தை பேசியாக வேண்டும்.
மேட்டூர் அணையின் தண்ணீரை திறந்துள்ளது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கலாம். அரசின் நடவடிக்கை செய்தியாகவும், விளம்பரமாகவும் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் காவிரி டெல்டாவின் கடைமடை விவசாயிக்கு இது கொண்டாட்டத்திற்கான தருணமா?அல்லது இன்னும் ஒரு கவலையின் தொடக்கமா?
மே மாதமே வயலை உழுதுப் போட்டு தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயி “மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்டார்கள். ஆனால் அந்தத் தண்ணீர் எங்கள் வயலை வந்தடையுமா?” என்ற கேள்விதான் இன்று கடைமடை விவசாயியின் மனதில் நிற்கிறது.
110 நாள் பயிருக்கு 45 நாள் தண்ணீர் போதுமா?
சம்பா சாகுபடியை நம்பியிருக்கும் விவசாயியின் முன் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஒரு நீண்டகால நெற்பயிருக்கு 45 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்துவிட்டு, அதன் பிறகு நிலைமை என்ன என்பது குறித்து அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டாமா?
தண்ணீர் திறப்பது வேறு. பயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான காலம் முழுவதும் தண்ணீர் கிடைப்பது வேறு. 45 நாட்களுக்கு தண்ணீர் வந்துவிட்டால் விவசாயி நிம்மதியாகிவிடுவாரா? இல்லை. அந்த 45 நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து எப்படி இருக்கும்?
படிக்க:
♦ மேகேதாட்டுவில் ‘புதிய அணை’; காவிரி நீர் கானல் நீராவதை தடுத்திடு?
♦ தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்
மேட்டூர் அணையில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கும்? காவிரி நீர்வரத்து எப்படி இருக்கும்? மழை எவ்வளவு கிடைக்கும்? இவற்றுக்கான பதில்கள்தான் விவசாயியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. இதுபற்றி முதல்வர் ஜோசப் விஜய்க்கு எந்த கவலையும் இல்லை.
குறுவை கைவிட்ட நிலையில் சம்பாவும் கேள்விக்குறியாகிவிட்டால்?
ஏற்கனவே ஜூன் 12 திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி இல்லாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இப்போது அவர்களின் நம்பிக்கை சம்பா. சம்பாவும் கைவிட்டால் என்ன ஆகும்? பயிர் மட்டும் வாடப்போவதில்லை. ஒரு குடும்பத்தின் வருமானமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். விதை வாங்கிய பணம், உரம் வாங்கிய பணம், நிலத்தைத் தயார் செய்த செலவு, விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி, இயந்திரச் செலவு, வாங்கிய கடன், குடும்பத்தின் அன்றாடச் செலவு, அடுத்த பருவத்திற்கான முதலீடு, இவை அனைத்தும் ஒரு விவசாயியின் பொருளாதாரச் சங்கிலியில் இணைந்திருக்கின்றன.
ஒரு பருவம் தோல்வியடைந்தால், அதன் தாக்கம் அடுத்த பருவத்திற்கும் தொடரும். அதனால்தான் சம்பா சாகுபடியைக் காப்பாற்றுவது என்பது வெறும் நெல் உற்பத்தியை காப்பாற்றுவது அல்ல; ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவது.
மேட்டூரில் தண்ணீர் இருப்பது மட்டும் போதாது மேட்டூர் அணையின் மதகு திறக்கப்படுகிறது. அது முதல் படி மட்டுமே. அங்கிருந்து தண்ணீர் கால்வாய்கள் வழியாக செல்ல வேண்டும். கால்வாய்களில் அடைப்பு இருக்கக்கூடாது. உடைப்பு இருக்கக்கூடாது. மதகுகள் சரியாக இயங்க வேண்டும். நீர்வழிகள் போதுமான கொள்ளளவுடன் இருக்க வேண்டும். மேல்பகுதியில் நீர் அதிகமாகப் பயன்படுத்தப்படாமல் முறைப்பாசனம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகுதான் கடைமடை விவசாயியின் வயலுக்கு தண்ணீர் சென்றடையும்.
படிக்க:
♦ பசி போக்கும் விவசாயம் உயிர் போகுது கண்ணெதிரே | மகஇக பாடல்
♦ கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம்! தொடரும் மக்கள் திரள் போராட்டம்!
எனவே அரசின் வெற்றியை அளவிட வேண்டிய அளவுகோல்: “மேட்டூரில் எத்தனை கனஅடி தண்ணீர் திறந்தோம்?” என்பது அல்ல. “கடைமடை விவசாயியின் வயலுக்கு எவ்வளவு தண்ணீர் சென்றது?” என்பதுதான்.
மராமத்து பணிகள் சரியாக நடந்ததா?
இங்கேதான் விவசாயிகளின் சந்தேகம் இன்னும் தீவிரமாகிறது. கால்வாய் மராமத்து பணிகள் முறையாக நடைபெற்றிருந்தால், அரசு அதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
எந்தக் கால்வாயில் என்ன பணி நடந்தது? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எவ்வளவு செலவு செய்யப்பட்டது? பணிகள் எப்போது முடிக்கப்பட்டன? தரச் சோதனை நடந்ததா? கடைமடை வரை தண்ணீர் செல்லும் அளவுக்கு கால்வாய்கள் தயாராக உள்ளனவா? இவற்றுக்கான முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும். “மராமத்து செய்துவிட்டோம்” என்று கூறுவது மட்டும் போதாது. தண்ணீர் சென்ற பிறகு தான் அரசின் செயல்பாடுகள் சநாதி சிரிக்கும்.
₹4.5 கோடி தெண்டச் செலவு
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்புகள் அமைப்பதற்காக சுமார் ₹4.5 கோடி செலவாகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ செலவுக் கணக்குகள் முழுமையாக பொதுமக்களிடம் வெளியிடப்பட வேண்டும்.
Really 6 crore rupees people’s money spent on Vijay’s visit to Mettur dam ? pic.twitter.com/ABKMyZa88K
— முத்து (@muthuhere3) August 31, 2026
அது உண்மையில் அரசு நிதியாக செலவிடப்பட்டிருந்தால், ஒரு கேள்வி எழுவது இயல்பானதே: “பல கோடி ரூபாயை ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கு செலவிட முடியும் என்றால், விவசாயியின் வயலுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் மராமத்துக்கு அதே அளவு முன்னுரிமை ஏன் வழங்கப்படக்கூடாது?” இது முதல்வரின் பாதுகாப்பை எதிர்க்கும் கேள்வி அல்ல. இது “ஊரான் வீட்டு நெய்” குறித்த கேள்வி. ஒரு நிகழ்ச்சி சில மணி நேரங்களில் முடிந்துவிடும். ஆனால் ஒரு கால்வாய் சரியாகப் பராமரிக்கப்பட்டால், அதன் பயன் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு பருவம் முழுவதும் கிடைக்கும். அரசு எதை முன்னுரிமையாகக் கருதுகிறது?
நிகழ்ச்சியா? விவசாயியா? ஆனால் விஜய்யை கேட்டால் தயங்காமல் நிகழ்ச்சியை தான் என்பார். அதற்காக யாரும் அவரிடம் மைக்கை நீட்டி விடாதீர்கள்.
விளம்பரத்தில் தண்ணீர் ஓடக்கூடாது; வயலில் ஓட வேண்டும்
இன்று சமூக ஊடகங்களில் தண்ணீர் திறப்பு காட்சிகள் பரவலாம். முதல்வர் மதகைத் திறக்கும் புகைப்படங்கள் வெளியாகலாம். அரசின் சாதனைப் பட்டியலில் இன்னொரு வரி சேரலாம். ஆனால் கடைமடை விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லையென்றால் அந்த விளம்பரத்தால் அவருக்கு என்ன பயன்?
ஒரு முதல்வர் வந்து மேட்டூர் அணையின் மதகைத் திறந்து வைப்பது ஒரு நிகழ்வு. ஆனால் அந்தத் தண்ணீர் கடைமடை வரை சென்று, விவசாயியின் வயலில் நெற்பயிராக வளர்ந்து, அறுவடையாக அவரது வீட்டை அடையும் வரை அரசு தனது பணியை முடித்ததாகக் கூற முடியாது.
குறுவையை இழந்த விவசாயி இன்று சம்பாவை நம்பி நிற்கிறார். அந்த நம்பிக்கையும் பொய்த்துவிட்டால், அதன் விலை ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு அரசோ மட்டும் செலுத்தப் போவதில்லை. ஒரு விவசாயக் குடும்பம் செலுத்த வேண்டியிருக்கும். அவர்களின் வருமானம் பாதிக்கப்படும். அவர்களின் கடன் சுமை அதிகரிக்கும். அவர்களின் அடுத்த பருவமும் கேள்விக்குறியாகும்.
அதனால் தமிழக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்த்துவிட்டு கடைமடை பகுதி வரை காவிரி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெற்று உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
- நலன்






