“கஜானா காலி!” இந்த இரண்டு வார்த்தைகள்தான் இப்போது தூய்மைப் பணியாளர்களிடம் அரசாங்கம் சொல்லும் மிகப்பெரிய பொருளாதாரக் கொள்கையாகத் தெரிகிறது. சென்னையைச் சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ரிப்பன் மாளிகைக்கு எதிரே 15 நாட்களாக போராடுகிறார்கள்.
15 நாட்கள்! மழையிலும், வெயிலிலும், சாலையோரத்திலும் நின்று நிரந்தர வேலை, ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள், தனியர் மயமாக்கும் நடவடிக்கைகளை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அரசாங்கத்தின் பதில் என்ன? “நிதி இல்லை… கஜானா காலியாக இருக்கிறது… நிதியை ஏற்படுத்திவிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்!”
அடடா! கஜானா காலியாகிவிட்டதாம். ஆனால் ஒரு சின்ன சந்தேகம்… கஜானா காலி என்றால், இதற்கெல்லாம் மட்டும் கஜானாவில் பணம் இருக்கிறது? மேட்டூர் பாரிகார்டுக்கு ₹4.5 கோடி செலவு செய்ய முடிகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்கு ரூ.1200 கோடி பற்றி பேச முடிகிறது. எம்.எல்.ஏக்களுக்கு புதிய கார்கள் வாங்குவது பற்றியும் பேச முடிகிறது.
இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை வந்தவுடன் மட்டும் அந்தப் பணம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகிறதே… ஏன்? கஜானாவுக்குள் பணம் இல்லையா? அல்லது கஜானாவுக்குள் ‘முன்னுரிமை’ என்ற ஒரு கதவு இருக்கிறதா?
போட்டோவுக்கு முன் ஒரு முகம்… பதவிக்குப் பிறகு இன்னொரு முகமா?
2025 ஆகஸ்ட் 11 அன்று, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு போராட்டத்தில் இருந்த தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின. அவர்களின் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து ஆதரவு தெரிவித்தார்.
பதவியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசுவது எவ்வளவு எளிது! அவர்களுடைய குறைகளைக் கேட்பது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அவர்களைப் பாராட்டுவது, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, அப்போது அவர்கள் முக்கியமானவர்கள். ஏனென்றால் அன்று அவர்களது ஓட்டு தேவை.
ஆனால், ஆட்சிப் பொறுப்பு வந்த பிறகு? அதே தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து 15 நாட்களாகப் போராட வேண்டிய நிலை. அவர்களுடைய குரல் தலைமைச் செயலகத்துக்குப் போகாமல், 15 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்களின் காதில் போயிருக்கிறது.
தவெக அரசின் போக்கிற்கு போராட்டக்களத்தில் இருக்கும் போராட்டக்காரர்களின் இந்த பதிலே போதும். இதுதான் களயதார்த்தமும் கூட. “அப்போது எங்களை உள்ளே கூப்பிட்டு… எங்களுக்கு டீ கொடுத்தார். பிஸ்கட் கொடுத்தார். தோள் மேலே கைபோட்டு போட்டோ எடுத்தார். ‘நீங்க எல்லாம் என் தாய்குலம்’ என்று சொன்னார். ஆனால் இன்னைக்கு எங்களை யார் என்றே அவருக்குத் தெரியவில்லை.”
“கஜானாவை துடைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!”
இன்று செப் 4 போராடும் தூய்மைப்பணியாளர்களை நேரில் சந்தித்து பேசிய அமைச்சர்கள் புட்சட்னி ராஜ்மோகன், காக்கி டவுசர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், லாட்டரி புகழ் ஆதவ் அர்ஜூனா, சாராயக் கடை புஸ்ஸி ஆனந்த் கஜானா காலி கதையை சொன்னதோடு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்துள்ளனர்.

“கஜானா காலி” இந்த கதையை இன்னும் 5 வருட காலமும் விஜய் சொல்லப்போவது உறுதி. ஒன்றியத்தை ஆளும் மோடி எல்லாவற்றிற்கும் நேரு தான் காரணம் என்று சொல்வதைப் போல அவரது கள்ளக் குழந்தையான கோமாளி ஜோசப் விஜய் திமுகவை காரணம் காட்டிக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறார்.
முந்தைய ஆட்சி கஜானாவைத் துடைத்துவிட்டுப் போயிருந்தால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த நிலை தெரியாதா? அரசாங்கத்தை நடத்துவதற்கான கணக்குகள் தெரியாதா? வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு? கடன் எவ்வளவு? எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தேவை? இவையெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரிந்ததா? அப்படியானால் ஒரு சாதாரண குடும்பம் கூட மாதச் செலவை முன்கூட்டியே கணக்கிடுகிறதே. ஒரு அரசாங்கத்துக்கு மட்டும் பட்ஜெட் தெரியாமல் போனது எப்படி?
படிக்க:
♦ இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் – தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!
♦ தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்
மேலும், கஜானா உண்மையிலேயே காலியாக இருந்தால், புதிய செலவுகளுக்கான திட்டங்கள் எப்படி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன? அங்கே மட்டும் கஜானா கதவு திறக்கிறதா?
எம்.எல்.ஏவின் கார்… தூய்மைப் பணியாளரின் கோரிக்கை!
எம்.எல்.ஏவுக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்றால், உடனே ஒரு விளக்கம் வரும். அவர்களுக்கும் வசதி வேண்டும்; அவர்கள் தொகுதிக்குச் செல்ல வேண்டும்; அவர்களின் பணிக்குத் தேவையானது; சரி. வாங்குங்கள். ஆனால் ஒரு கேள்வி மட்டும். நகரத்தைச் சுத்தம் செய்யும் மனிதனுக்கு அடிப்படை உரிமை கேட்கும்போது மட்டும் ஏன் ‘நிதி இல்லை’? ஒரு கார் வாங்குவதற்கான பணம் அரசின் செலவாக இருக்கலாம். ஒரு தூய்மைப் பணியாளரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான செலவு மட்டும் ஏன் சுமையாகத் தெரிகிறது? கார் ஓடும் சாலையைச் சுத்தம் செய்பவனுக்கு பணம் இல்லை; அந்தச் சாலையில் ஓடுவதற்கான காருக்கு பணம் இருக்கிறது! இதுதான் “கஜானா காலி” என்ற அரசாங்கத்தின் கணக்குப் புத்தகத்தில் நமக்குப் புரியாத அத்தியாயம்.
முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தூய்மைப் பணியாளர்களின் பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பு தீவிரமானதும் அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “உங்களுக்கு ஒரு பிரச்சினைனா அண்ணன் நா வரேன்னு” சொன்ன விஜய் இன்று கார்ப்பரேட்டுகளின் பின்னாள் ஓடிவிட்டார். போராடும் தூய்மைப்பணியாளர்களும் மக்களும் இவர்களின் கவர்ச்சி வாக்குறுதிகளை கண்டு ஏமாந்தது தான் மிச்சம்
- நந்தன்







