மிழ்நாட்டில் கடந்த 2 தினங்களில் 7க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதில் கும்மிடிபூண்டியை சேர்ந்த 3 வயதேயான குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளது. இந்த கொடுமைக்கு எதிராக அங்கு வசிக்கக் கூடிய மக்கள் காலை முதலே தொடர் போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.

கும்மிடிப்பூண்டியின் புதுப்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவரின் மூன்று வயது குழந்தைதான் கொல்லப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவராக குற்றம் சாட்டப்பட்டவரும் பீகாரை சேர்ந்தவர் தான். இதுபோன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கும் குறிப்பிட்ட மாநில மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சீரழிந்த சமூக சீர்கேட்டின் தொடர்ச்சி. இதே நாளில் தமிழ்நாட்டில் நடந்துள்ள பல்வேறு பெண்கள் மீதான வன்முறை குற்றங்களில் தொடர்புடையவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான்.

ஆகையால் தனது அரசியல் லாபத்திற்காகவும், பிரச்சினையை திசை திருப்புவதற்காகவும் சிலர் வெளிமாநில மக்கள் தான் காரணம் என்பது போலவும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பேசுகிறார்கள். அவர்களின் பிரிவினை பேச்சுக்களை புறந்தள்ளி உண்மையான பிரச்சினை குறித்தும் தமிழ்நாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலை குறித்தும் பார்ப்போம்.

கும்மிடிப்பூண்டி குழந்தை கொலையில் மக்கள் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது அவசர அவசரமாக மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பின்னர் பொன்னேரி இடுகாட்டில் சடலத்தை எரித்துள்ளனர். இதனை கண்டித்தும் அப்பகுதி மக்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தான் கோவை சிறுமி கொலையிலும் தாய்க்கு தெரியாமல் சிறுமியின் உடலை காவல்துறையின் உதவியுடன் எரித்தது அரசு. இது பொதுவெளியில் விமர்சனமானவுடன் கொல்லப்பட்ட சிறுமியின் தாயுடைய நடத்தையை ‘நண்பா, நண்பீஸ்’ விமர்சனம் செய்து கேவலமான ரீல்ஸ் வெளியிட்டார்கள். இது அரசின் கையாலாதனத்தை மறைக்க எடுக்கப்படும் மோசமான நடவடிக்கையாகும்.

படிக்க:

 ஹத்ராஸ் சிறுமியை மீண்டும் கொன்ற நீதித்துறை

 விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் – கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்

இந்த செய்திகள் உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் சிறுமி பாலியல் வல்லுறவு கொலையை ஞாபகப் படுத்துகின்றன. ஹத்ராஸில் சிறுமியின் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரச்சினை பெரிதாகி பாஜக அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுமின் சடலத்தை அவசரஅவசரமாக காவல்துறையை கொண்டு தீயிட்டு கொளுத்தியது. இது பாசிச பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் சகஜமான விசயம். ஆனால் இந்த நோய் தமிழகத்திலும் பரவுவதை தான் ஆபத்தான போக்காக பார்க்கிறோம்.

இத்தனை சம்பவங்கள் நடந்தாலும் ‘எல்லாத்தையும் மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான்’ என்பது போல் ரீல்ஸ் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். காலை 9 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்குச் சாப்பாட்டு மூட்டையுடன் வருபவருக்கு இடைவிடாத வேலை பாவம் அவர் என்ன செய்வார்?

அவருக்கு நடிகை சிம்ரனையும் அவரது குடும்பத்தையும் சந்திக்கவே நேரம் சரியாக உள்ளது. அவரிடம் குழந்தைகள் பாலியல் வல்லுறவு செய்திகளை சொல்லி ஜாலி மூடை கெடுக்க வேண்டாம் என அதிகாரிகள் கருதி விட்டார்கள் போல.

நேற்று தன்னுடன் நடித்த சக நடிகர்களையும், நடிகைகளையும் சந்திக்க நேரமிருந்த தமிழக முதல்வருக்கு, குழந்தைகள் மீதான கொடூர சம்பவத்தை கண்டிக்கவோ குறைந்தபட்சம் முதல்வராக அறிக்கைவிடவோ கூட நேரமில்லாமல் போய்விட்டது. இதைப்பற்றி யார் விமர்சனம் செய்தாலும் அவர்களை சகட்டுமேனிக்கு தகாத வார்த்தைகளால் விமர்சிக்க தனது ‘நண்பா நண்பீஸ்’ இருக்கிறார்கள் என்பதால் அவருக்கு எந்த கவலையும் இல்லை போல.

பொதுவெளியில் மைக்கை பிடித்து விட்டால் எழுதிக் கொடுக்கும் வசனங்களை வைத்து ஆவேசமாக பேசும் முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிரான கேள்விகளைக் கண்டு பங்கருக்குள் பதுங்கிக் கொள்கிறார். மக்களின் கோபத்தை மடைமாற்ற பாலியல் ஜல்சா கட்சியின் கொள்கைகளை பாலோவ் செய்கிறார். இப்படியே தமிழ்நாட்டின் நிலைமை தொடர்ந்தால் ஹத்ராஸ் போல பல சம்பவங்களை தமிழ்நாட்டில் நிகழ்த்துவார்கள் இவர்கள்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here