அன்பார்ந்த பெரியோர்களே நண்பர்களே வணக்கம்!
சுற்றுச்சூழலை ஒழித்து மக்கள் வாழ முடியாத அளவிற்கு தங்கள் மாவட்டத்தை அழிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தில் வேதாந்தாவின் அகர்வால் போன்ற இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அன்றைய எடப்பாடி அரசு போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரைப் படுகொலை செய்தது.
பட்டப்பகலில் போலீஸ் வேன் மீது ஏறி குறிபார்த்து சுடுகின்ற ஸ்னைப்பர் கொலைகார போலீசு மூலம் அமைதியாக ஊர்வலம் சென்ற மக்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது. ஸ்னோலின் என்ற மாணவியை வாயிலேயே சுட்டுப் படுகொலை செய்தது. மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இத்தகைய கொடூரங்களை நிகழ்த்திய கார்ப்பரேட் கைக்கூலிகளான அதிமுக, பாஜக இரண்டும் இணைந்துகொண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்களின் மீதும் புரட்சிகர ஜனநாயக அமைப்புகளின் மீதும் பல்வேறு வழக்குகளை போட்டு இழுத்தடித்து வருகிறது.
திமுக ஆட்சி செய்த போது அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை போலீசுக்காரர்களின் மீது பல்வேறு குற்றங்களை சுமத்தியதுடன் அவர்களை கைது செய்யவும், பதவியில் இருந்து நீக்கவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தது. ஆனால் திமுக அரசனது தனது ஆட்சிக் காலத்தில் இந்த கொடூரர்கள் மீது போதுமான நடவடிக்கையை எடுக்காமல் கார்ப்பரேட்டுகளின் மனம் குளிருகின்ற வகையிலே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
படிக்க: அருணா ஜெகதீசன் அறிக்கை| தோழர் வாஞ்சிநாதன் பேட்டி!
தற்போது அதே திசைவழியில் இந்த கொடூர படுகொலைகளுக்குக் காரணமான கொலைகார போலீஸ்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை என உயர் நீதிமன்றத்தில் பாசிசக் கோமாளி ஜோசப் விஜய் அரசு அறிவித்துள்ளதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காமல் கொலைகார போலீஸ்காரர்களை பாதுகாக்க முனைகிறது தற்போதுள்ள தவெக அரசு. போராடும் பொதுமக்களை எப்படி வேண்டுமாணாலும் சுட்டுக் கொலை செய்யலாம் என்பதை ஆதரிக்கும் வகையில் தவெக ஜோசப் விஜய் அரசு நீதிமன்றத்தில் பேசியது அம்பலமாகியுள்ளது. இதை அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
• அணில் அகர்வால் என்ற கார்ப்பரேட் முதலாளிக்கு ஆதரவாக, பாசிச பாஜக-அதிமுக கும்பலின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை நிகழ்த்திய அந்தக் கொலைகார போலீசார் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி கொலை வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
• போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்தத் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
• ஸ்டெர்லைட் ஆலையை அதன் கட்டிடம் முதற்கொண்டு சுத்தமாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தோழர் திருச்சி செழியன்
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை.
தொடர்புக்கு : 95971 38959.







