பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக வலம் வந்து கொண்டுள்ள, கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவரும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளில் ஒருவரான திருவாளர் செங்கோட்டையன் “ஆண்டுதோறும் மாணவர்கள் ஜாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். மாணவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார். அந்த அடையாள அட்டையில்,
மாணவர் பெயர்
முகவரி
மாணவரின் ஜாதி சான்றிதழ் விவரம்
பிளட் குரூப்
ஆதார அட்டை
தொலைபேசி எண்
அனைத்தும் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஐடெண்டிட்டி கார்டு நீங்கள் வைத்திருப்பதைப்போல ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10, 12-லேயே படிக்கின்ற மாணவர்களுக்கும் முதல் கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்”. என்று தெரிவித்துள்ளார்.
‘பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் குறளை அடிப்படையாகக் கொண்டு தான் ஆட்சி நடத்தி வருவதாக தமிழ் சமூகத்தின் மீது பொய், பித்தலாட்ட அரசியலை கட்டவிழ்த்து விட்டு வருகிறார் பாசிசக் கோமாளி விஜய். அவரது ஆட்சியில் சாதி ஒழிந்து விட்டதாகவும், சமத்துவம் வளர்ந்து வருவதாகவும் கூறிக்கொண்டு அவரது பிழைப்புவாத அணி வரிசையில் ஒவ்வொருவராக சேர்ந்துக் கொண்டு களமாடுகின்ற சூழலில், பாசிசக் கோமாளியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது மேற்கண்ட அறிவிப்பு.
இளம் பருவத்தில் மாணவர்கள் மத்தியில் சாதி மற்றும் தீண்டாமை வன்கொடுமைகள் ஒரு நஞ்சாக புகுத்தப்படுவதற்கு எதிராக ஒரு நூற்றாண்டாக போராடி வருகின்ற தமிழகத்தில் துணிச்சலுடன் சாதியை கழுத்தில் அடையாள அட்டையாக போட வேண்டும் என்ற முடிவை அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழகத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜகவின் பினாமி கும்பலானது தனது உண்மை முகத்தைக் காட்டிக் கொண்டுள்ளது.
பாசிச பாஜகவே செய்ய தயங்குகின்ற இத்தகைய வன்மமான, கொடூர சிந்தனையை அமல்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். முற்போக்கு முகாம்களில் இருந்தும் போலி இடதுசாரிகள், நாடாளுமன்ற இடதுசாரிகள் மற்றும் மாஜிப் புரட்சியாளர்கள் விஜய் அரசாங்கத்தை ஆதரிப்பதை வைத்துக் கொண்டு துணிச்சலுடன் இத்தகைய முடிவுகளை பாசிசக் கோமாளி விஜய் அறிவித்துள்ளார்.
கல்வித்துறையில் ராஜ்மோகன் மற்றும் விசுவநாதன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருக்கின்ற நிலைமையில் பள்ளிக் கல்வித் துறைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வருவாய்த் துறையில் இருந்து அதிகாரம் செலுத்துகின்ற திருவாளர் செங்கோட்டையன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
அந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், இரட்டை நிலைப்பாடு எடுக்கின்ற போலி இடதுசாரிகள் மற்றும் நாடாளுமன்ற இடதுசாரிகள் மனவருத்தம் அடைகின்றனர். சாதி உணர்வு அதிகரித்து விடும் என்று ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் பாசிச பாஜகவின் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டுகின்ற சனாதன தர்மத்தையும், இந்து மதம் என்ற போர்வையில் பார்ப்பன பாசிசத்தையும் திணிக்கின்றது என்ற கோணத்தில் அதனை எதிர்த்துப் பேசவில்லை.
ஏனென்றால் அவர்களின் வர்க்க கண்ணோட்டத்தின் காரணமாக பாசிசத்தை இன்னமும் ஆழமாக புரிந்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, பாசிச எதிர்ப்பு என்பதை கேலிக்கூத்தாக்கி வருகின்ற சமரச, பிழைப்புவாத தலைமையாக செயல்படுகின்றனர் என்பதும் தான் மறுக்க முடியாத உண்மை.
கடந்த திமுக ஆட்சியில் மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வு அதிகரிப்பதை தடுப்பதற்கு பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தது.
சாதிப் பெயர்களும் அடையாளங்களும்: அவற்றின் பங்கும் முக்கியத்துவமும்
சாதிப் பெயர்களும் அடையாளங்களும், ஒரு தனிநபரின் சாதி அடையாளத்தைக் குறிக்கும் சின்னங்கள் ஆகும். இந்த அடையாளங்கள், குறிப்பிட்ட நிறங்கள், சின்னங்கள் அல்லது அணிகலன்களை அணிவது போன்ற வெளிப்படையானவையாகவோ, அல்லது சாதிப் பிணைப்பைக் காட்டும் நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்ற மறைமுகமானவையாகவோ இருக்கலாம். தமிழ்நாட்டில், மாணவர்கள் தங்கள் சாதிப் பெருமையையும் அடையாளத்தையும் வெளிப்படுத்த இந்த அடையாளங்களைப் பயன்படுத்துவது, கல்விச் சூழல்களில் பிளவுகளுக்கும் பாகுபாட்டிற்கும் வழிவகுக்கிறது.
இத்தகைய அடையாளங்களுக்கான எடுத்துக்காட்டுகளில் வண்ணக் கைப்பட்டைகள், தலைப்பாகைகள், பொட்டுகள் (குங்குமப் பொட்டுகள்) மற்றும் குறிப்பிட்ட வகை ஆடைகள் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வண்ணக் கலவையும் அல்லது அணிகலனும் ஒரு குறிப்பிட்ட சாதியுடன் தொடர்புடையது. உதாரணமாக, தேவர் சாதியினர் சிவப்பு மற்றும் மஞ்சள் கைப்பட்டைகளை அணியலாம், அதே சமயம் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் நாடார் சாதியினரின் அடையாளமாக இருக்கலாம் . இந்த அடையாளங்கள் சாதி அடையாளத்தின் காட்சி வடிவமாகச் செயல்படுகின்றன, மேலும் மற்ற சாதிகளின் மீது ஆதிக்கம் அல்லது மேன்மையை நிலைநாட்ட இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
சாதிப் பெயர்களும் அடையாளங்களும், தனிநபர்களுக்கு சாதி அமைப்பில் அவர்களின் நிலையைத் தொடர்ந்து நினைவூட்டுவதன் மூலம் சமூகப் படிநிலையை நிலைநிறுத்துகின்றன. இந்த வலுவூட்டல், பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை இயல்பாக்குவதற்கு வழிவகுக்கிறது.
படிக்க:
♦ மக்களுக்கு ஆதார்! மாணவனுக்கு அபார்! பாசிச ஆர்எஸ்எஸ் மோடியின் டிஜிட்டல் அட்டாக்!
♦ நாங்குநேரி- பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல்! |பத்திரிக்கை செய்தி
மாணவர்கள் வண்ண மணிக்கட்டுப் பட்டைகள், தலை நாடாக்கள் அல்லது குறிப்பிட்ட வகை ஆடைகள் போன்ற சாதி அடையாளங்களைப் பயன்படுத்தும்போது, அது அவர்களை வெளிப்படையாக வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கிறது. இந்தக் காட்சிப் பிரிவினை, ‘நாம் vs. அவர்கள்’ என்ற சூழலை வளர்த்து, சாதிகளுக்கு இடையேயான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும். சாதி அடையாளங்களின் பயன்பாடு, ஒரு சாதியின் மீது மற்றொரு சாதியின் ஆதிக்கத்தையோ அல்லது மேன்மையையோ நிலைநாட்டும் நடத்தைகளுடன் பெரும்பாலும் கைகோர்த்துச் செல்கிறது. இது, கொடுமைப்படுத்துதல், உடல்ரீதியான வன்முறை மற்றும் பிற சமூகப் புறக்கணிப்பு வடிவங்களில் வெளிப்படுகிறது. சாதி அடையாளங்கள், பள்ளிகளுக்குள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் உருவாவதைத் தடுக்கின்றன.” என்றும் இதற்கு தீர்வாக பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை பற்றியும் பரிந்துரைகளை முன் வைத்திருந்தது.
இவற்றையெல்லாம் நிராகரித்துள்ள பாசிச கோமாளி விஜய் ஆட்சி பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது என்ற கேடான ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக சாதி தீண்டாமை அடக்குமுறையின் கீழ் பட்டியலின மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை கழுத்தில் கலயம் கட்டிக்கொண்டு எச்சில் துப்ப வேண்டும்; ஏனென்றால் அவர்களது எச்சில் மூலமாக தீட்டு பரவிவிடும் என்ற வன்மமும், அவர்கள் எதிரில் வருகிறார்கள் என்பதை அறிவிப்பதற்கு சத்தமிட்டு கொண்டே செல்ல வேண்டும் என்றும்; தனது கழுத்துக்குப் பின்னால் தொடப்பத்தை கட்டிக்கொண்டு தான் நடந்த பாதையில் தீட்டு உருவாகி விடாமல் அதை துடைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பதெல்லாம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்த நடைமுறைதான்.
இதனைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி பார்ப்பன (இந்து) மதத்தின் உண்மை முகத்தை திரை கிழித்துக் காட்டியுள்ளார். அவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.
சாதிய உணர்வுகளை கட்டுப்படுத்த நீதியரசர் சந்துரு பரிந்துரைகள் மூலமாக வழிகாட்டுதல்கள், பார்ப்பன மதக் கொடுங்கோன்மைக்கு எதிராக போராடத் துவங்கிய சித்தர்கள் முதல் டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்ற பார்ப்பன மத எதிர்ப்பாளர்கள், பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் போராடிவரும் புரட்சிகர அமைப்புகள் வரை சாதி-தீண்டாமைக் கொடுமைகள் குறித்த அம்பலப்படுத்தல்கள் ஆகியவை இருந்தபோதிலும் துணிச்சலுடன் கழுத்தில் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிட வேண்டும் என்று பாசிச கோமாளி விஜய் அறிவித்துள்ள அறிவிப்பு கொடூரமான முறையில், ஒவ்வொருவரின் பிறந்த சாதியைப் பற்றி அனைவருக்கும் வெளிக்காட்டுகின்ற வழிமுறையாகும். அதை வைத்துக்கொண்டு மீண்டும் கொடூரமான முறையில் சாதி- தீண்டாமை அடக்குமுறைகளை ஏவுவதற்கு வழிவகுக்கும்.
எனவே இத்தகைய கேடுகெட்ட சட்டங்களையும், நடைமுறைகளையும் அதன் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக ஒன்று திரண்டு வீதியில் இறங்கி அரசை நிர்பந்திக்க வேண்டும்.
இந்த பிரச்சினையில் சமூக வலைதளங்களில் அடி பலமாக விழ ஆரம்பித்ததும், எங்கள் கருத்தை தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என மீடியாவில் பேசியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். ஆனால் இந்துத்துவ கும்பலின் அஜண்டாவை அமல்படுத்தும் பாசிச கோமாளிகள் அது அம்பலமானதும் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
மென்மையாகவும், பாசிசக் கோமாளியின் மனம் கோணாத வகையிலும் விஜய் அரசை கண்டிப்பதன் மூலமாகவும், கோரிக்கைகளை வைத்து கெஞ்சிக் கேட்பதன் மூலமாகவும் இத்தகைய சட்டங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மட்டுமின்றி அதற்கு அடிப்படையாக உள்ள பார்ப்பன பாசிசத்தையும், சனாதனத்தையும் அமுல்படுத்துகின்ற அரசியல் அதிகாரம் இத்தகைய கேடுகெட்ட பாசிச கோமாளியின் கையில் உள்ளது, இதுதான் பாசிச பாஜகவின் பினாமி கும்பலின் ஆட்சி என்பதையும் அம்பலப்படுத்தி தூக்கி எறிய தயாராக வேண்டும்.
◾மருது பாண்டியன்.






