முந்தைய திமுக அரசாங்கம் யூனிட் மின்சாரம் 21 ரூபாய்க்கு வாங்கியதையே ஊழல் என்று விமர்சித்து, ஆட்சியைப் பிடித்துள்ள த.வெ.க.வினர் தற்போது ரூபாய் 37-க்கு மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். 

மத்திய தொகுப்பிலிருந்து (ஒன்றிய அரசு) தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மின்சார ஒதுக்கீட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அக்டோபர் 2026 நிலவரப்படி, ஒன்றிய மின் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

அதிகரிக்கும் மின் நுகர்வு!

எல் நினோ’ (El Niño) விளைவினால் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் 16,800 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை, தற்போது 21,000 முதல் 21,700 மெகாவாட் வரை (சுமார் 30% சதவீதம்) கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒன்றிய தொகுப்பு மின்சாரக் குறைவு மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி சரிவு (3,500 MW-க்கு பதிலாக 500 MW மட்டுமே கிடைப்பது) ஆகியவற்றால் ஏற்படும் மின்வெட்டைத் தவிர்க்க, வெளிச்சந்தையில் உள்ள தனியார் எரிவாயு மின் நிலையங்களிடமிருந்து ஒரு யூனிட் ₹31.99 முதல் ₹37 வரையிலான அதிக விலைக்கு தற்காலிகமாக (அக்டோபர் 12 முதல் 31 வரை) மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) போன்ற ஒன்றிய தொகுப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உற்பத்தி குறைப்பு காரணமாக, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் சுமார் 1,850 மெகாவாட் வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

என்எல்சி– யார் யாருக்கு பலன்?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 47.40% பங்கு (அலோகேஷன்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிலையான மின் பகிர்வு முறை (Fixed Power-Sharing Formula) அடிப்படையில் இந்த மின்சாரம் தென் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சப் பங்கு தமிழ்நாட்டிற்கே கிடைக்கிறது.

தமிழகத்தின் மின் தேவையில் இதன் பங்கு: என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் சுமார் 50%-ஐ நேரடியாகத் தமிழ்நாட்டிற்கு வழங்குகிறது. இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் சுமார் 10% தேவையைப் பூர்த்தி செய்கிறது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் என்.எல்.சியின் தற்போதைய பங்களிப்பு சராசரியாக 2,000 மெகாவாட் ஆகும்.

மோடி அரசின் கபடத்தனம்!

நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து விடுகிறது. எந்த ஒரு மாநிலமும் தமக்கு மின்சாரம் தேவை என்றால் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடியாது ஒன்றிய அரசிடமிருந்து மட்டுமே வாங்க முடியும்.

படிக்க:

♦ மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!

♦ மின்சார திருத்த மசோதா 2022: தனியார் முதலாளிகளுக்கு வாலாட்டும் மோடி அரசு!

பாசிச மோடி அரசு தமிழ்நாட்டின் என்எல்சி யில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய பங்கை தராமல் பற்றாக்குறையை தூண்டி, மின் வெட்டால் மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.

நமக்குரிய நம் மின்சாரத்தை கேட்டு வாங்க தயாராக இல்லாத விஜய் அரசு, மின் தட்டுப்பாட்டை காரணமாக்கி ஒன்றிய அரசிடமிருந்து அநியாய விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு ஆதாயம் தேடுகிறது.

காற்று வீச வில்லையாம்!

எல்நினோ என்பது இயற்கையின் சுழற்சியில் தீவிரமாக குறுக்கிட்டு தலைகீழாக மாற்றிப் போடும் ஒரு நிகழ்வு. ஆட்சியாளர்கள் தீவிரமாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய அவசியம் குறித்து ஆய்வாளர்கள்  எச்சரித்தது, செவிடன் காதில் ஊதிய சங்காகவே  மாறியது. “தற்போது தமிழ்நாட்டில் காற்று வீசவில்லை.அதனால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டது” என்று பொறுப்பை தட்டியும் கழிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் 50 சதவீதம் கோவை மண்டலத்திலும், மீதம் தென் மாவட்டங்களிலும் உள்ளது.

அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள்  சங்க முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கையன் கூறுகையில், ‘’கடந்த கால சிக்கல்களை தவிர்த்து ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும். ‘’காற்றாலை, சோலார் மண்டல பகுதிகளை அறிவித்து, சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். குஜராத்தை போல ‘கிப்ட் சிட்டி’ உருவாக்கி, கடன் வசதியை துரிதப்படுத்தி, உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். காற்றாலையுடன், சோலார் உற்பத்தியையும் அதிகப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், “மின்பற்றாக்குறைக்கு காற்றாலை உற்பத்தி குறைந்தது மட்டுமே காரணமல்ல. 2025 ஆகஸ்ட், செப்டம்பர் காலத்தில் நாம், 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தினோம். வெப்பம் காரணமாக இந்தாண்டு, 21 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. தேவை கூடும்போது, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான கொள்கைகளை வகுத்து உற்பத்தியை அதிகரிக்கின்றன. நாம் சரியான கொள்கைகளை வகுத்து செயல்பட்டால் காற்றாலை வாயிலாகவே, 30 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்,’’ என்றார். இதுவெல்லாம் முன்னணி ஊடகங்களில் செய்தியாக ஏற்கனவே வெளிவந்துள்ளன.

மின் ஊதாரித்தனத்தைத் தடு!

மின்சாரத் தட்டுப்பாடு என்றால் வாட்டர் தீம் பார்க்குகளை, கேளிக்கை பூங்காக்களை, ஸ்னோ வோர்ல்டுகளை தற்காலிகமாக மூட வேண்டும். இரவில் நடத்தப்படும் விளையாட்டுக்கள், கேளிக்கை கொண்டாட்டங்களை பகலில் நடத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  மின்சார ஊதாரித்தனத்துக்கு தற்காலிகமாகவாவது கடிவாளம் போட வேண்டும்.

எல்நினோவின் தாக்கம் என்பது முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்த ஒன்று அல்ல. மின் தேவையை கட்டுப்படுத்தவும், மின் ஊதாரித்தனத்தை தடுக்கவும் விஜய் அரசு முன்வரவில்லை. அதேபோல் ஒன்றிய அரசிடமிருந்து நம்மூரில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நமக்குரிய பங்கை போராடி பெறவும் தயார் இல்லை.  ஒவ்வொரு அடி வைப்பிலும்  மோடியின் விருப்பத்தை அறிந்து செயல்படும் சீடராகவே விஜய் அவதாரம் எடுக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்தும், மின்னுற்பத்தி செய்தும் மின்சார கார்ப்பரேட்டுகள் தங்கள் விருப்பம் போல் விலையை தீர்மானித்துக் கொள்ள அரசு அனுமதிக்கிறது. குறிப்பாக மோடியின் நண்பரான அதானி கோலோச்சும் துறை ஆயிற்றே!

தமிழ்நாடு மின் மிகை மாநிலம். இங்கு இரு அணு மின் நிலையங்கள், பல அனல் மின் நிலையங்கள், காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள், சூரிய ஒளி மின்சக்தி நிலையங்கள், நீர் மின்சார உற்பத்தி நிலையங்கள் என உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இப்படி தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் விலை குறைவான (யூனிட் ஒன்றுக்கு ரூ.5 -10 மதிப்பிலான) மின்சாரத்தை ஒன்றிய தொகுப்பிற்கு வாங்கிவிட்டு, அதானி பவர் போன்ற கார்ப்பரேட்களிடம் இருந்து (யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 30 முதல் 37 வரை தந்து) பெறப்படும் மின்சாரத்தை  அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகிறது மோடி அரசு.

படிக்க:

♦ மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!

♦ புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா ; 2020 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து! மக்கள் மீது கட்டணக் கொள்ளை!

“இது எரிவாயுவிலிருந்து பெறப்படுவதால் விலை அதிகமாக இருக்கிறது. இதுவே நாப்தாலில் இருந்து (எண்ணூர் அனல் மின் நிலையத்தில்) உற்பத்தி செய்வதாக இருந்தால் அதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும்” என்று பயமுறுத்துகிறார் நிர்மல் குமார்.

கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மக்களின் மின்சார கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளிக்கிறார். அக்டோபர் 30ஆம் தேதி வரை தான் அதிக விலை மின்சாரத்தை  வாங்க உள்ளோம் என்று நிர்மல் குமார் சமாளிக்கிறார். இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?

விலைக்குப் போகப்போகிறது மின்சார வாரியம்!

தற்போது மின்தட்டுப்பாட்டையே காரணமாக்கி ரூ.37 என்ற அநியாய விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம், உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலுக்கு போகும் (அது ஏற்கனவே மீள முடியாத கடன் நெருக்கடியில் திவால் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்). நீண்ட கால நோக்கில் மின்சாரத் துறையையே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதில் போய் முடியும்.

அனைத்து துறைகளிலும் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது போன்று தான் மின்சார கணக்கீடு உள்ளிட்ட வேலைகளில் ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். அதாவது சிறுகச் சிறுக அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் பிடிக்கு போய்க் கொண்டுள்ளது. பாசிச மோடி அரசின் பாணியில் கார்ப்பரேட்டுகளுக்கு தொண்டூழியம் செய்வதற்கு  தீவிரமாக உள்ளது  த.வெ.க அரசு. நமக்கு கரண்ட் பில் ஏறவில்லை என்று தமிழக மக்கள் இதை கடந்து போகக்கூடாது; களமிறங்க வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here