கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் சூழலிலும், கந்து வட்டி போல மின்கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகிறது. அரசு கைதேர்ந்த வட்டிக் கடைக்காரனைப் போல மக்களை சுரண்டி வருகிறது. தற்போது குறைந்த பட்சமாக இருக்கும் கட்டணங்களையே கட்ட முடியாமல் மக்கள் திணறி வரும் சூழலில், புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதன் மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது மோடி அரசு.

மின்துறையில் தனியார்மயம் புகுத்தப்படுத்தப்பட்ட பிறகு, மின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது. அன்றாடம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோராக இருக்கும் மக்களிடம் கட்டணக் கொள்ளை மூலம் பணம் பிடுங்கப்படுகிறது. தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மின் மசோதா, விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் இலவச மின்சாரத்தை முழுவதுமாக ரத்து செய்யச் சொல்கிறது.

இன்றைக்கு இலவச மின்சாரத்தை நம்பி தமிழகத்தில் 30 லட்சம்  விவசாயிகள் உள்ளிட்டு சிறுதொழில், நெசவுத்தொழில், வீடுகளுக்கு பயன்படுத்தபடும் இலவச இணைப்புகள் என நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய மின் மசோதா ஒட்டு மொத்த  மக்களின்  வாழ்க்கையையும் இருளில் தள்ளியுள்ளது. இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயம் முற்றிலும் கைவிடப்படும் என்பது தான் விவசாயிகளின் ஒட்டு மொத்தக் கருத்தாகும்.

அரசை குலைநடுங்க வைத்த டெல்லி விவசாயிகள் போராட்டம்

ஏற்கனவே விவசாய இடுபொருட்களுக்கு மானியம் இல்லை. விளை பொருளுக்கு விலை இல்லை என்ற சூழலில் விவசாயம் குற்றுயிரான நிலையில், மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளை மொத்தமாக கொன்று விடும் என்பதால், அச்சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஏழு மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை மீட்பதற்கு பதிலாக அவர்களை, மேலும் மரணக்குழியில் தள்ளுவதை நோக்கியே இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருகின்றனர். ஆனால், மீட்டர் பயன்பாட்டில் நடக்கும் முறைகேடுகளையும், திருட்டையும் தடுப்பதற்குத் தான் மீட்டர் பொருத்துகிறோம் என்று திமுக அமைச்சர் ’அணில்’ பாலாஜி கூறுவது ஒரு மோசடி நாடகமே.

உண்மையில், 1991-ல் புதிய தாராளவாத கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எல்லா துறைகளையும் தனியார்மயமாக்குவது என்று தீவிரமாக இறங்கியது காங்கிரசு அரசு. இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததோடு, இந்திய விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் வேலையை செய்தனர். இந்த போக்கில், 2003-ல் மின்சார திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்கிற மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புதான் இனி மின்சார உற்பத்தி, வினியோகம், மின்சாரத்தை கொண்டு செல்லுதல் என்ற வேலைகளை தீர்மானிக்கும் என்று கூறியது. இதன் அடிப்படையில் அத்துறை மூன்றாக பிரிக்கப்பட்டு தனியாரிடம் கொடுக்கப்பட்டன. தனியார் உற்பத்தி, மற்றும் அரசு உற்பத்தி செய்த மின்சாரம் இரண்டையும் குறைவான விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்பது போன்ற நடவடிக்கைகளால், அரசின் மின்சார வாரியம், மின் உற்பத்தி திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

இந்த கேடு கெட்ட நடவடிக்கையின் காரணமாக அது வரையில் லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டு நட்டம் அடைய வைக்கப்பட்டது. இந்த நட்டத்தையே காரணமாக காட்டி மின்கட்டணத்திற்கு முறையான கணக்கின்றி தாறுமாறாக உயர்த்தி வருகிறது. இனி, இலவச மின்சாரம் என்பது யாருக்கும் தராமல் ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மின் துறையை கார்ப்பரேட்டுகளின் முழு ஆதிக்கத்தில் கொண்டு வருவது தான் இந்தப் புதிய மின் மசோதா 2020-ன் நோக்கம்.

ஏற்கனவே மாநிலத்துக்குள்ளேயே மக்கள் பயன்பாட்டுக்கு முறையான மின் விநியோகம் தரப்படாத நிலையில், வெளிமாநிலங்களுக்கு மின் பாதைக்கான உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் விவசாயிகள். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு  மின்சாரத்தை  ஏற்றுமதி செய்வதற்கான திட்டப்பணிகளையும் தொடங்கியுள்ளது. மேலும் கொச்சி மற்றும் போர்பந்தர் நகரிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள் அமைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப கடற்கரை வரை லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து  உயர்மின் கோபுரங்களை அமைக்கப்படுகின்றன. உள்நாட்டு மக்கள் சேவை என்பதை விட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க இச்சட்டத்திருத்தம் வழிவகை செய்வதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

அது மட்டுமல்ல இயற்கை பேரிடர்களான புயல், மழை எனப் பாராமல், தொழிலாளிகளின் இடையறாத உழைப்பாலும், மக்களின் வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட மின்துறை, ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் போனால், இலவசங்களையும், மானியங்களையும் நம்பியுள்ள விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் என பல கோடி அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவர்.

மின் துறை மக்களுக்குச் சேவை செய்வது என்பது போய் கார்ப்பரேட்டுகளது லாபத்திற்கானதாக மாற்றப்படும். கார்ப்பரேட்டுக்களின் லாப இலக்கிற்கு ஏற்பவும், கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகளால், அல்லது முறையான பராமரிப்பின்றி விடப்படுவதால் ஏற்படும் கம்பி வழித்தடம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மின் இழப்பிற்கும் சேர்த்தே முதலாளிகளுக்கு தண்டம் அழ வேண்டியிருக்கும்.

இவ்வாறு வகைதொகையின்றி உயர்த்தப்படும் மின் கட்டணங்கள் கட்ட முடியாதவர்களது மின் இணைப்புக்கள் துண்டிக்கப்படும். மின்சாரம் இன்றி வாழும் நிலை என்பது இன்றைய சூழலில் எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று. ஏனெனில், 2013-14 பாசிச ஜெயா ஆட்சிக் காலத்தில், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை கடும் மின்வெட்டு ஏற்பட்டது கொளுத்தும் வெயிலில் கடும் துயரத்தை அனுபவித்தார்கள் மக்கள். ஆனால் அதே சமயம் பன்னாட்டு கம்பனிகள், பெருவணிக நிறுவனங்கள் என்று கக்கூஸ் வரை ஏசி போட்டு குளுகுளுவென இருப்பதற்கு தடையில்லா மின்சாரம் வழங்கினார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 1954 ல் தொடங்கப்பட்டது முதல் சுமார் 1கோடியே 71 லட்சத்து 55 ஆயிரம் பேர் மின் இணைப்பு பெற்று பயன்பட்டு வருகிறார்கள். இது தவிர 11,83.000 குடிசைகளுக்கு, ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் 3,00,000,  உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் 5,500 , 71,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 17,000 தனியார் கல்வி நிறுவனங்கள், 1,08,000 மத நிறுவனங்கள், 87,000 குடிசை தொழில் – குறுந் தொழில் நிறுவனங்கள், 1,30,000 விசைத்தறிகள், 20,47,000 விவசாய பம்பு செட்டுகள், 17,03,000 வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த பிரிவின் கீழ், 2,628 நிறுவனங்களுக்கு உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

உயிரை பணயம் வைத்து உழைக்கும் தொழிலாளி

இவ்வளவு மகத்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்த இத்துறையில் சுமார் 1.5 லட்சம் பேர் இருந்தால் தான் சிறப்பாக நிர்வகிக்க முடியும். போதிய ஊழியர்களை நிரப்பாமல் வெறும் 74,000 தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கி வருகிறது. இதில் 24,000 பேர் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத அதிகாரிகள், பொறியாளர்கள். மீதமுள்ள 50,000 பேர் மட்டுமே மின் பணிகளைச் செய்யும் ஊழியர்கள். இவ்வளவு குறைவான ஆட்களைக் கொண்டு இத்துறையை நிர்வகிப்பது கடினம் என்கிறார், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி (NDLF) சங்கத்தின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 20 ஆயிரம் களப்பணியாளர் உள்ளிட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  இப்பணியிடங்களை நிரப்பாமல் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி வாரியம் உழைப்புச் சுரண்டல் செய்கிறது. அனல், புனல் மின் உற்பத்தி, பொதுகட்டுமானம், மின் விநியோகப் பிரிவு போன்ற நிரந்தர தன்மை வாய்ந்த இடங்களில் கூட ஒப்பந்த / அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தொழிலாளிகளின் அனைத்து சலுகைகளையும் பறிப்பதையே மின்துறை வாரியம் கடைப்பிடித்து வருகிறது என்றும், குற்றம் சாட்டுகிறார்.

2001-02ம் ஆண்டில் ரூ 183 கோடி லாபம் சம்பாதித்ததாகவும், அடுத்த ஆண்டில் ரூ 4,851 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள். ஒரே ஆண்டில் லாபம் நஷ்டமாக மாறியதற்கு காரணம் அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு,  தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததே என்பதைப் பல்வேறு புள்ளி விபரங்கள் அம்பலடுத்தின.

தமிழ்நாட்டில் அதானியின் சோலார் பவர் பிளாண்ட்

குறிப்பாக, தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06  இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர்  ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58.  யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06  இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை  கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு  நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்ந்தது.

இதே போல், 2013-14 ல் ரூ. 10,344 கோடி நட்டத்தில், அரசு ஏற்கும் கட்டண உயர்வு மானியமான ரூ. 973 கோடி போக எஞ்சிய ரூ. 9371 கோடியை எதிர்கால கட்டண உயர்வுக்கான கடனாக அடுத்து வந்த நிதியாண்டில் (2014-15) மக்கள் தலையில் சுமத்தியது. இந்த காலகட்டத்தில் மின்வாரியத்தின் மொத்த கடன் சுமை 74,113 கோடியாக அதிகரித்திருந்தது. 2012-15 இந்த இடைப்பட்ட காலத்தில்  சுமார் 16,000 கோடி அளவிற்கு மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.

ஆனால், பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு விலையாக சுமார் ரூ.9,000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கிய அதே அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.21,000 கோடிக்கு மின்வாரியம் வாங்கியிருக்கிறது என்பதிலிருந்தே அதற்கு எவ்வளவு கூடுதல் விலை தரப்படுகிறது; அதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை பாமர மக்கள் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு தொடர்ச்சியாக அரசின் மின் உற்பத்தி நிறுவனங்களைப் பராமரிப்பின்றி கைவிட்டு விட்டு, தனியார் கொள்முதலை அதிகரித்து வந்ததால் தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தே அரசு கஜானா காலியானது.

மறுபுறம், “மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. எனவே, மின் துறை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுக்களிடம் சிக்கிக் கொண்டால், திவாலாகப் போவது மக்கள் மட்டுமல்ல, மக்களது சேமிப்புக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளும் தான். எனவே, புதிய மின் மசோதா அமுலானால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருளில் மூழ்க வேண்டி வரும்.

மக்களது பாதிப்புக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், கார்ப்பரேட்டுக்களின் கொள்ளைக்காவே ஆட்சி செய்யும் கார்ப்பரேட் அடிமையான மோடி அரசை வீழ்த்த வேண்டுமானால், மின் துறையை உருவாக்கிய தொழிலாளர்களோடு, மின்சாரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர் மின் நுகர்வோர் என ஒட்டுமொத்த மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அப்போது தான் சுதந்திர ஒளியால் நாடும், மக்களும் பிரகாசிக்க முடியும்.

சமர்வீரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here