“ப்ளீஸ் செக் த ஜீரோ” – திருட கற்றுத்தரும் முதலாளிகள் கூட்டம்!

பெட்ரோல் நிரப்பும் ஊழியர்கள் ஜீரோவை பாருங்கள் என தவறாமல் கூறுகின்றனர்.   அதாவது நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் அல்ல என்று அறிவிக்கும் அவலம்!

0

“ப்ளீஸ் செக் த ஜீரோ”

– திருட கற்றுத்தரும் முதலாளிகள் கூட்டம்!

    ப்ளீஸ் செக் தெ ஜீரோ என்ற அறிவிப்பை நம்மில் பெரும்பாலோர் கேட்டது நினைவிருக்கும். எங்கே கேட்டுள்ளோம்?

நாம் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறோம். அதற்கு பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்கிற்கு செல்லும்போது தான் கேட்டிருக்கிறோம்.

புதிதாக ஒரு பங்கிற்கு பெட்ரோல் போட செல்ல வேண்டி வந்தால், அப்போதெல்லாம் இந்த பங்கில் ஒழுங்காக போடுவார்களா என  சந்தேகத்துடன் மீட்டரை பார்க்கிறோம். அருகில் உள்ள பங்குகளை புறக்கணித்து, நான்கு கிலோமீட்டர் தாண்டி சென்று இங்குதான் சரியாக போடுகிறார்கள் என்று பெட்ரோல் போட்டுக்கொண்டு திரும்புவதும் நடக்கிறது.

எல்லா இடங்களிலும் இப்படி சந்தேகிக்கிறோமா?

இல்லை. நாம் டீக்கடையில், தள்ளுவண்டி கடைகள், ஹோட்டல் கடைகளிலும் பணம் தரும் போது இப்படி சந்தேகிப்பதில்லை . அவர்களும் வாங்கிய பொருட்களுக்கான சரியான விலைதான் போடுகிறார்களா என்று செக் செய்து கொள்ள அறிவிப்பதும் இல்லை. ஆனால் பெட்ரோல் பங்கை மட்டும் ஏன் இப்படி அறிவிப்பு – சந்தேகம்?

“ திறமைக்கேற்ப சம்பாதித்துக்கொள்!”- உபதேசம்

இதைப் புரிந்துகொள்ள எனது நண்பன் சொன்ன சொந்த அனுபவத்தை பகிர்கிறேன். இந்த சம்பவம் நடந்தது சுமார் 10 ஆண்டுகள் இருக்கும்.

படிக்க:  

♦  பெட்ரோல் டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமாம்!
  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம்? | வழக்கறிஞர் பாலன்

ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து உரிமைக்காக குரல் கொடுத்ததால் வேலையை இழந்திருந்தான். நியாயம் கேட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அலைவதோடு  குடும்பம் நடத்தவே முடியாமல் கடன் வாங்கியபடி கடும் பணக் கஷ்டத்தில் என் நண்பன் இருந்தான். அவனுடைய குடும்ப தேவைக்கும் மேலாக நோகாமல் சம்பாதிக்க ஒரு வாய்ப்பும் கிடைத்தது.

தெரிந்தே குறைந்த கூலிக்கு ஆளெடுத்த பங்க் முதலாளி!

சென்னையில் தற்காலிகமாக ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு மாத சம்பளமாக 4 ஆயிரம் மட்டுமே தர முடியும் என்று அந்த பங்கின் முதலாளி சொல்லியுள்ளார். மேற்கொண்டு எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை கற்றுக்கொள் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி வேறு வேலை கிடைக்கும் வரை தற்காலிகத்திற்கு கிடைக்கும் வேலையை செய்வோம் என்று எனது நண்பனும் வேலையில் சேர்ந்து விட்டான்.  சேர்த்த முதல் நாளிலேயே கையில் 600 ரூபாய் கிடைத்துள்ளது.

எப்படி கிடைத்தது இந்தப் பணம்!

எனது நண்பன் விளக்கினான். அதாவது  ஒருவர் பெட்ரோல் போடும் பொழுது கஸ்டமரின் கவனத்தை இன்னொருவர் திசை திருப்பினார். கூட இவனையும் நிற்கவைத்து ‘தொழில் ‘ கற்றுத் தந்துள்ளனர். அன்று ஒரு லிட்டர்  பெட்ரோல் 70 ரூபாய் இருந்திருக்கும்.  மீட்டரை ஜீரோவுக்கு கொண்டுவராமல் அடுத்த கஸ்டமர் 2 லிட்டர் கேட்டபோது ஏமாற்றி ஒரு லிட்டரை மட்டும் போட்டுள்ளனர்.

மற்றொருவர் 100 ரூபாய்க்கு போடச் சொல்ல அவர்கள் 70 ரூபாய்க்கு மட்டும் போட்டுவிட்டு மீண்டும் நியூட்ரல் செய்து 30 ரூபாய்க்கு போட்டு பணம் வாங்கினர். அடுத்து வந்தவர் 70 ரூபாய்க்கு போட சொல்லும் போது நியூட்ரல் செய்யாமலேயே வெறும் 40 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோலை நிரப்பி அனுப்பியுள்ளனர். ( அன்றைய சரியான பெட்ரோலின் விலை நினைவில் இல்லை: உதாரணத்திற்காக சொல்லப்பட்டுள்ளது )  தொழில் தெரியாமல், கஸ்டமரின் கவனத்தை திசை திருப்பாமல், வெறுமனே துணைக்கு நின்றதற்காக மட்டும் பங்கு பிரிக்கும்போது 600 ரூபாயை சக நண்பர்கள் தந்துள்ளனர். நாம் இப்படி சம்பாதிப்பது முதலாளிக்கும் தெரியும் வாங்கிக்கொள் என்று திணித்துள்ளனர்.

நேர்மையாக உழைத்து வாழ்ந்த ஒருவனை மோசடியில் இறக்கிவிட்டு சம்பாதித்துக் கொள் என பெட்ரோல் பங்க் முதலாளிகளே தூண்டிவிட்டுள்ளனர். ஆனால் எனது நண்பன் சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து இப்படி ஏமாற்றிக் பிடுங்குவது வெறுத்து, அன்றோடு அந்த வேலையையும் விட்டு விட்டான்.

படிக்க: 

♦  எச்சரிக்கை – விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல!

முழுக்க அம்பலப்பட்டதன் விளைவே பெட்ரோல் பங்கில் ஒலிக்கும் அறிவிப்பு!

இன்று சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் தானியங்கி முறையில் “செக் த ஜீரோ” என்று குரல் ஒலிக்கிறது. அல்லது பெட்ரோல் நிரப்பும் ஊழியர்கள் ஜீரோவை பாருங்கள் என தவறாமல் கூறுகின்றனர்.   அதாவது நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் அல்ல என்று அறிவிக்கும் அவலம்!

வாகன ஓட்டிகள் பங்க் முதலாளிகளுக்கு தங்கள் புறக்கணிப்பின் மூலம் பாடம் புகட்டியுள்ளார்கள்!  ஆனால் 40 ரூபாய் பெட்ரோலை 110க்கு பகிரங்கமாக விற்று, நம் பாக்கெட்டில் கை வைக்கும் அம்பானி உள்ளிட்ட கொள்ளையர்களுக்கும், பாசிச மோடி உள்ளிட்ட கார்ப்பரேட் கையாட்களுக்கும் பாடம் புகட்டுவது எப்போது?

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here