ந்தியாவில் மோடியின் எஜமானர்களுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு சட்டமாக திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பாசிச பாஜக கும்பல். அந்த வேலையின் ஒரு பகுதியாக கடந்த திங்கள் கிழமை மின்சார சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தான் கார்ப்பரேட்டுகளின் நன்றியுள்ள ஜீவன் என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளில் மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என்ற கோரிக்கையும் ஒன்று. அவர்களுக்கு பொய்யான வாக்குறுதியை தந்துவிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தால் விவசாயிகளின் தலையில் மண்ணை போட்டுள்ளது மோடி அரசு.

மின்மசோதா என்ன சொல்கிறது?

இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின்சாரதுறை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் செல்லும். ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட விநியோக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும். மக்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரை தேர்ந்தெடுக்கலாம். அதாவது நாம் நகர பகுதியில் வாழ்பவராக இருந்தால் பல விதமான கேபிள் நெட்வொர்க்குகள் இருக்கும். நாம் விரும்புவதை தேர்ந்தெடுப்போம் அல்லவா. அது போல நாம் மின் விநியோகஸ்தரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என இந்த சட்டம் சொல்கிறது.

இச்சட்டம் மாநில அரசுகளின் அனுமதியுடன் நிறைவேறுகிறதா?

இல்லை. மாநில உரிமையை பறிக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. மின்சாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது. மாநிலத்திடம் கருத்துக் கேட்காமல் இதனை செயல்படுத்த முடியாது. ஆனால், ஒன்றிய அரசு இதுவரை மாநிலங்களிடம் கருத்துக் கேட்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் தான் மின்சார வாரியம் செயல்படுகிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இனிமேல் ஒன்றிய ஆணையங்களின் கீழ் மின்சார வாரியம் செயல்படும். அதனை மீறி மாநில ஆணையத்தால் செயல்பட முடியாது. இது மாநில உரிமையை பறிக்கும் பாசிச செயல் என்பதாலேயே மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்கின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மேலும், ஒன்றிய ஆணையங்கள் சொல்வதை தான் மாநில ஆணையங்கள் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க தவறினால் 100 மடங்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் சொல்கிறது. 100 மடங்கு என்றால் இன்று 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றால் இனிமேல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இது தனியார்மய கொள்ளை என ஏன் சொல்கிறோம்

மின்சார சட்டத்திருத்தம் 2022-ல் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய செலவில் மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தியே மின்சாரம் வழங்கப்போகிறது. இதற்காக பெரிய அளவில் முதலீடு செய்யப் போவதில்லை.

அதில் “தனியார் நிறுவனங்கள் ஒரு கட்டணத்தை (Wheeling Charges) தரும் என்றாலும் அது போதுமானதாக இருக்காது. இதனால் மிகப்பெரிய லாபத்தை தனியார் நிறுவனங்கள் ஈட்டும். அரசு நிறுவனங்கள் நிதி திவாலாகும் வாய்ப்பு உள்ளது ”AIPEFன் சைலேந்திர துபே கூறுகிறார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடும் மின்வாரிய ஊழியர்கள்

புதிய சட்டத்தின் படி அதிகம் மின் விநியோகம் உள்ள நகரங்களையோ, தொழிற்பேட்டை பகுதிகளிலோ தான் மின் விநியோகத்தை வழங்கும் உரிமத்தை தனியார் நிறுவனங்கள் பெறப் போகிறது. இங்கு தான் அதிகமான லாபமும் அவர்களுக்கு கிடைக்கும். இதனால் கிராமப் புற பகுதிகளையோ அல்லது மக்கள் குறைவாக உள்ள பகுதிகளையோ தனியார் நிறுவனங்கள் கண்டுக் கொள்ள போவதில்லை. இந்த பகுதிகளில் வருமானம் இருக்காது என்ற காரணத்தினால் இங்கு தடையில்லா மின்சாரமோ, கட்டமைப்போ இருக்குமா என்பது கேள்விக் குறியாகிவிடும். உதாரணமாக பேருந்து தடங்களில் லாபம் ஈட்டக்கூடியவற்றில் தான் தனியார் பேருந்துகள் ஒடுகிறது. லாப வாய்ப்பு இல்லாத குக்கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் தான் ஓடுகிறது. லாபம் (தனியார்) கார்ப்பரேட்டுகளுக்கு; நஷ்டம் அரசுக்கும் மக்களுக்கும்.

இந்த சட்டம் அமலானால்…

தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கும் மேல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறர்கள் அதற்கு இந்த சட்டம் ஆப்பு வைக்கும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் இனி கிடைக்காது. இதனால் விவசாயத்திற்கான செலவு அதிகரிக்கும். போட்ட காசை எடுக்க முடியாத விவசாயிகள் தற்கொலையை தேடிச் செல்லும் நிலை ஏற்படலாம்.
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் இனி கிடைக்காது.,
சிறு,குறு தொழில் செய்பவர்களுக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது நிறுத்தப்படும்.


இதையும் படியுங்கள்: புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா ; 2020 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து! மக்கள் மீது கட்டணக் கொள்ளை!


 

இலவச மின்சாரம் ரத்து இல்லை என்று சட்டம் சொல்கிறதாக பாசிச அடிமைகள் சொல்கிறார்களே??

இலவச மின்சாரம் ரத்து இல்லை என சட்டத்தில் சொல்லப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால் மின்சாரத்திற்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்வதை சட்டம் வலியுறுத்துகிறது. மறைமுகமாக இலவச மின்சாரம் கிடையாது என்பதை சட்டம் சொல்கிறது. மேலும், இதுவரை தொழிற்சாலைப் பிரிவினருக்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்து, அதில் கிடைக்கும் உபரி வருவாயை இலவச மின்சாரம், சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் போன்றவற்றுக்கு மாநில மின் வாரியங்கள் பயன்படுத்துகின்றன.

இது தனியார் கையில் செல்வதால் இதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது. ஒரே பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் உரிமம் பெறுவதால் அவர்களுக்குள் போட்டி உருவாகும். அதாவது ஜியோ ஆரம்பத்தில் உள்ளே வந்த போது மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இலவச இணைப்பை தந்தார்கள் அல்லவா. அதே போல் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவார்கள். ஆணையம் தான் குறைந்தபட்ச கட்டணத்தையும், அதிகபட்ச கட்டணத்தையும் தீர்மானிக்கும். அதனால் குறைந்த விலையில் மாநில அரசுகளால் மின்சாரத்தை தர இயலாமல் போகலாம். இது மாநில மின்வாரியத்தின் நிதியிழப்புக்கு வழிவகுக்கும். பின் எப்படி இலவச மின்சாரத்தை மாநில அரசால் வழங்க முடியும்.

இந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்க்கு எதிராக சுமார் 27 லட்சம் மின்துறை தொழிலாளர்கள் மற்றும் மின்பொறியாளர்கள் கடந்த திங்கள் கிழமை நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

AIPEF சைலேந்திர துபே கூறும்போது; “நாடாளுமன்ற மரபுகளை மீறி மின்சார திருத்த மசோதா 2022-ஐ மத்திய அரசு அறிமுகப் படுத்தப்போகிறது, இதனால் நாடு முழுவதும் உள்ள மின்சார ஊழியர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது” என்கிறார்.

நம்முடைய போராட்டங்கள் ஏன் பாசிஸ்டுகளை அசைப்பதில்லை?

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான BSNL, LIC, INDIAN RAILWAY, DEFENCE தொழிற்சாலைகள், உள்ளிட்டவைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதில் குறியாய் உள்ளது. தற்போது மின்வாரியத்தில் தனியார்மயத்திற்க்கு எதிராக போராட்டம். பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு ஏற்ப வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் ஒரு பக்கம் போராடுகிறார்கள். இந்த போராட்டங்கள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசை இம்மியளவும் அசைக்கவில்லை என்பதே உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவும், தனியார்மய கொள்ளையில் இருந்து தடுக்கவும் நம்முன் இருப்பது ஒருவழி தான் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து அரசை குலைநடுங்க வைக்கும் போராட்டத்தின் மூலம் தான் பாசிஸ்டுகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here