உலகப் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X (முன்பு டிவிட்டர்) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வரும் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளி ஆவார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்கான ஸ்டார்லிங்கின் சேவையை 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கி வருகிறது.
இந்தியாவில் கால் பதிக்க இன்னும் உரிமம் கிடைக்கவில்லை என்பதால், இந்திய அரசின் விதிமுறைகளை ஐந்து ஆண்டுகளாக தாம் பின்பற்றி வருவதாகவும், ஆனாலும் தமது நிறுவனத்துக்கு இந்தியாவில் சேவையை தொடங்குவதற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார். இதன் பின்னணியில் ஏதேனும் பெரு நிறுவனங்களின் தலையீடு இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தனது X பக்கத்தில், “மதிப்புக்குரிய பிரதமர் அம்பானி அவர்களுக்கு, இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்களிடம்தான் உள்ளது என்பதை தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நக்கலடித்துள்ளார். மேலும் “இந்தியாவின் மகத்தான மக்களை உங்கள் ஏகபோக உரிமையாளர் பயன்படுத்திக் கொள்வதையே நீங்கள் விரும்புவீர்கள். இருப்பினும் எமது ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தொழில் போட்டியில் இறங்க நீங்கள் அனுமதிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்தியாவிலும் மற்ற நாடுகளைப் போலவே இணைய வசதியே இல்லாத பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன. இதனால் அங்குள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும், சிறு தொழில் அதிபர்கள் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. எமது ஸ்டார்லிங்க் சேவை அவர்களுக்கு கிடைத்தால் அது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையை நேர்மறையான திசையில் மாற்றியமைக்கும்” என்றும் பதிவிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
மேலும் படிக்க: 5ஜி ஏலம் அம்பானியின் ஜியோ ஏகபோகம்!
இதற்கு முன்னதாக “துரதிஷ்டவசமாக இந்திய மக்கள் மீதான தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள சில பெரு முதலாளிகள் எங்களை தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இப்படி செய்வது இந்திய மக்களுக்கு எதிராக செய்யப்படும் ஒரு குற்றம்” என்றும் பதிவிட்டிருந்தார் அவரது இத்தகைய பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
எலான் மஸ்கின் கிண்டல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பிரதமர் மோடியோ, அம்பானியோ பதிலளிக்கவில்லை. அமெரிக்க தொழிலதிபர் என்பதால் அத்தனை பயமோ?
இவர்களுக்கு பதிலாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா “எந்த ஒரு துறையிலும் இந்தியா ஏகபோகத்தை அனுமதிக்காது. மேலும் இத்துறையில் நுழைய ஆர்வமாக உள்ள மூன்று நிறுவனங்களுக்குமான வருவாய்க் கட்டண முறையை அரசாங்கம் வகுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
கொள்ளையடிப்பதில் கார்ப்பரேட்டுகள் இடையே கடும் போட்டி!
பாரம்பரியமான மொபைல் நெட்வொர்க் என்பது தரையில் செல்ஃபோன் கோபுரங்களை சார்ந்து இருக்கும் நிலையில், ஸ்டார்லிங்க் போன்றவை பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பை சார்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள கிராமப்புற இணைய இணைப்பு சந்தையை செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் கைப்பற்றுவதில் கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடக்கும் மோதலைத்தான் இந்த விவகாரம் வெளிக்காட்டுகிறது.
செயற்கைக்கோள் இணைய சேவைத் துறையில் ஏற்கனவே காலூன்ற ரிலையன்ஸின் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தயாராக உள்ளன. இந்தியாவில் அனுமதிக்காக காத்திருக்கும் மூன்று நிறுவனங்களில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் 2022 முதலே இந்திய சந்தையில் நுழைய முயன்று வருகிறது. அந்த நிறுவனம் வான்வெளியில் 7000 செயற்கைக்கோள்களை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றையை (Satellite broadband spectrum) ஏலம் விட வேண்டும் என்று அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் வெளிநாட்டு நடைமுறைகளின் படி நிர்வாக ரீதியாக உரிமம் வழங்க வேண்டும் என்று மஸ்க் வலியுறுத்தி வருகிறார். ஏலம் விடுவது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும் கூறி வருகிறார்.
எலான் மஸ்க்குக்கோ, அம்பானிக்கோ இந்திய மக்களுக்கு, குறிப்பாக இணைய சேவை என்னும் சரிவர கிடைக்காத மக்களுக்கு சிறந்த இணைய வசதியை வழங்குவது நோக்கம் அல்ல. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்தியாவின் இணைய சந்தையை கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே அவர்களது உண்மையான நோக்கம். ஏற்கனவே இந்தியாவில் 106 கோடி இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர்.
இந்தியாவில் 11,256 கிராமங்கள் இன்னும் 4ஜி இணைய சேவை கிடைக்காமல் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள 100 பேரில் 48 பேர் தான் இணைய சேவையை பெற்றுள்ளனர். மீதி உள்ள 52% மக்களுக்கு இணைய சேவை வழங்கத்தான் இந்த மூன்று நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவின் உண்மையான “பாஸ்” யார் என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்புகிறார்.
பாசிச மோடியின் ஆட்சியில் உண்மையான எஜமானர்கள் அதானியும், அம்பானியும்தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்திய ஒன்றிய அரசு இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போலவே அமெரிக்க அரசும் எலான் மஸ்க் போன்ற கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே உள்ளது. பாசிச மோடியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றும் போராட்டம் இன்று நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. நாம் அதில் வீரியமாக பங்கேற்போம். மக்கள் நலனுக்கான ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்.
குரு







