டிரம்ப் 2.0: வெடிக்க காத்திருக்கும் அபாயங்கள்!

ட்ரம்ப் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்கு முகேஷ் அம்பானி அமெரிக்காவிற்கு பயணம் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0

லகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு மற்றும் அது ஏற்படுத்த போகும் தாக்கங்கள் குறித்து கடந்த ஒரு வார காலமாக எழுதி குவித்து வருகின்றன.

உலகப் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொள்ள துடித்துக் கொண்டுள்ள கிழட்டு நரியின் பதவியேற்பு உற்சவத்தை பற்றி தாராளவாத ஜனநாயக பத்திரிகைகள் முதல் தீவிர வலதுசாரி பத்திரிகைகள் வரை குதூகலித்து தனது செய்திகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

“செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை அதிகரிக்கவும், அரசாங்கத் திறன் துறையை (Doge) உருவாக்கவும் , 1963 இல் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான பதிவுகளை கிடைக்கச் செய்யவும், அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க இராணுவத்தை வழிநடத்தவும் மற்றும் பன்முகத்தன்மையை அகற்றவும் உத்தரவுகளை போடுவதற்கு டிரம்ப் உறுதியளித்துள்ளார். , இராணுவத்தின் சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) கொள்கைகள் அமலாக்கப்பட உள்ளன.” என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது மட்டுமின்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சிக்கல் முதல் சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போர் வரை அமெரிக்காவை மீண்டும் ஒரு மேல்நிலை வல்லரசாக நிலை நாட்டுவதற்கு பாசிச பயங்கரவாதியான ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார் என்பதுதான் இன்றைய தருணத்தின் உலகை அச்சுறுத்தக்கூடிய மிகப்பெரிய அபாயமாகும்.

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்பின் திட்டம் நிறைவேறினால் அது அவமானமாக இருக்கும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன.

2024 தேர்தல் பிரச்சாரம் துவங்கியவுடன் டொனால்ட் டிரம்ப்பிற்கு வாக்களிப்பதா அல்லது அவருக்கு எதிரானவர்களுக்கு வாக்களிப்பது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “மனசாட்சி படி குறைந்தபட்ச தீமைக்கு வாக்களியுங்கள்” என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க குடிமக்களாக உள்ள கருப்பினத்தவர்கள், திருநங்கையர்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள், மதத்தினர் மீதான தாக்குதல்கள் டிரம்ப்பின் வருகையினால் அதிகரிக்கப் போகிறது என்ற அச்சம் ஒரு பக்கம் தலை விரித்தாடுகிறது என்ற போதிலும் அதற்கு நேர்மாறாக இந்திய பங்கு சந்தை முன்னேற்றத்தை கண்டுள்ளது.

படிக்க: ♦ பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !

பிஎஸ்இ சென்செக்ஸ் 604.54 புள்ளிகள் அல்லது 0.79 சதவீதம் குறைந்து 77,223.87 ஆக இருந்தது. நிஃப்டி 132.15 புள்ளிகள் அல்லது 0.57 சதவீதம் அதிகரித்து 23,335.35 ஆக இருந்தது. அமெரிக்காவின் பங்கு சந்தை தலால் ஸ்ட்ரீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதலாகவே உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்து இருக்கிறது.

S&P 500 ஒரு சதவீதமும், டவ் ஜோன்ஸ் 334 புள்ளிகள் அதிகரித்து அதாவது 0.8 சதவீதமும் நாஸ்டாக் 1.5 சதவீதமும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

அமெரிக்காவின் ’மெக்னிபிசியன்ட் செவன்’ என்று அழைக்கப்படும் ஆல்பாபெட், அமேசான், ஆப்பிள், மெட்டா, மைக்ரோசாப்ட், நிவிடியா, டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தனது பங்கு சந்தை வர்த்தகத்தில் உச்சத்தை தொட்டுள்ளன.

இந்த அலப்பறைகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நிர்வாக கொள்கை முடிவுகள், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ஏற்கெனவே உலக வங்கி எச்சரித்துள்ளது என்பதையும் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

படிக்க: ♦  அமெரிக்க ட்ரம்புக்கு பாசிச முன்னோடி அர்ஜென்டினாவின் மிலே!

அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் “ அமெரிக்கா முதலில் “ என்ற ட்ரம்பின் கொள்கை, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சவாலாக அமையும் என்றாலும், இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என்று இந்திய ஆளும் வர்க்கமும் பாசிச மோடி கும்பலும் காத்திருக்கிறது..

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடக்கின்ற வர்த்தக போட்டியானது இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்று நாக்கில் எச்சில் ஒழுக இந்தியாவில் உள்ள அதானி, அம்பானி, அகர்வால் ,ஷிவ் நாடார் போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் காத்துக் கொண்டுள்ளனர். இதற்காகவே ட்ரம்ப் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்கு முகேஷ் அம்பானி அமெரிக்காவிற்கு பயணம் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகை சூறையாடுவதற்கு கொடூரமான பாசிச மனோபாவம் கொண்ட ஆட்சியாளர் ஒருவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், அது எரிசக்தி துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி துறை, ராணுவம் மற்றும் போர் சாதனங்கள் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகாசூர கார்ப்பரேட்டுகள் ட்ரம்பின் 2.0க்காக தனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் உலகை போர்களற்ற, சமாதானமற்ற சூழலையும் தொடர்ச்சியான பதட்டத்தையும் அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களுக்கு உயிர் வாழும் அச்சுறுத்தலையும் உலகம் முழுவதும் உள்ள காலனிய நாடுகளுக்கு மிகப்பெரும் சவாலையும் உருவாக்கியுள்ள டிரம்ப் 2.0 வெடிக்க காத்திருக்கும் எரிமலை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here