பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !

அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் அவர்களது கட்டளையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் தான் இந்தியா இருக்கிறது என்றாலும் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமான நபரான மோடியிடம் நாம் என்ன எதிர் பார்க்க முடியும்.

1
அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியளிக்க வேண்டும் என்கிறார் ட்ரம்ப்.

ந்தியா உட்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு வர்த்தகமும் செய்ய முடியாமல் தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் எனப்படுவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட அமைப்பாகும்.

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் ஏற்கனவே துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகியவை உறுப்பினர்களாகச் சேர விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில் டிரம்ப் இதுபோல கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச அளவில் இப்போதும் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலர் தான் உள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தகத்திற்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து வர்த்தகத்திற்கும் டாலர் தான் பயன்படுத்தப்படும். அதாவது நாம் ஜப்பானில் இருந்து மின்சாதன பொருட்களை வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் ஜப்பானுக்கு இந்திய ரூபாய் அல்லது ஜப்பானிய யென் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்த மாட்டோம். மாறாக அமெரிக்க டாலரிலேயே பணம் செலுத்துவோம்.

இதுபோல உலகில் எந்த இரு நாடுகளுக்குள் நடக்கும் வர்த்தகமாக இருந்தாலும் பொதுவாக டாலர் தான் பயன்படுத்தப்படும். கடந்த காலங்களில் பல சிக்கல்கள் வந்தாலும் அதைத் தாண்டி சர்வதேச வணிகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலரே இருக்கிறது. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பில் அமெரிக்காவின் இந்த ஆதிக்கம் உலகின் பல நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் டாலருக்குப் பதிலாக வேறு பொது கரன்சியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. கடந்த அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “அமெரிக்கா தனது டாலரை கூட ஆயுதமாக்குகிறது. இது மிகப் பெரிய தவறு. சர்வதேச அளவில் நாங்கள் வர்த்தகம் செய்யும் போது நாங்கள் ஒன்றும் டாலரை பயன்படுத்த மறுப்பது இல்லை. ஆனால், அமெரிக்கா தான் எங்களை டாலரை பயன்படுத்த விடாமல் முடக்கியுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.


படிக்க: ஆட்டம் காணும் அமெரிக்க டாலர், புதிய BRICS நாணயம் வருமா?


குறிப்பாகச் சர்வதேச வங்கி நெட்வொர்க்கான SWIFTக்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்க வேண்டும் என்பதை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்துகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு SWIFTஇல் இருந்து ரஷ்யா விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வதில் ரஷ்யா பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இதில் இருந்து தப்பவே ரஷ்யா புதிய முறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில் தான் டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு கரன்சியை பிரிக்ஸ் பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் அதை யாராவது செய்ய முயன்றால் அமெரிக்காவுடன் அவர்கள் எந்தவொரு உறவையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பிரிக்ஸ் புதிய நாணயத்தை உருவாக்க மாட்டோம் அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியளிக்க வேண்டும். இல்லை என்றால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும். மேலும், அமெரிக்கா உடன் எந்தவொரு வர்த்தகத்தையும் செய்ய முடியாது” என்று சாடியுள்ளார்.


படிக்க: உலக மேலாதிக்கப் போட்டி! அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை! சீனாவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு!


அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இல்லை. அமெரிக்கக் கொள்கைகள் சில நாடுகளுடனான வர்த்தகத்தை அடிக்கடி சிக்கலாக்குவதாகவும், வேறு சில நாடுகளைப் போலல்லாமல், டாலரைப் பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல எண்ணாமல் இந்தியா சுமுகமாக நாடுகிறது என்றும் அக்டோபரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இது நாம் அறிந்ததே.

அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் அவர்களது கட்டளையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் தான் இந்தியா இருக்கிறது என்றாலும் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமான நபரான மோடியிடம் நாம் என்ன எதிர் பார்க்க முடியும். இந்தியாவை பொருத்தமட்டில் வழக்கம் போல் தன் எஜமானருக்கான (அமெரிக்கா) சேவகத்தை செவ்வனே செய்யும் என்பது தான் நாம் அறிந்தவை.

மொத்தத்தில் ட்ரம்பின் இந்த மிரட்டலானது உலக மேலாதிக்கத்தை கைவிட அமெரிக்கா தயாராக இல்லை என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. ட்ரம்பின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளத் துணியுமாயின் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தக போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்காவுக்கு அது பலத்த பொருளாதார நெருக்கடியைக் கொடுக்கும்.

அதேவேளை, அமெரிக்கா-ரஷ்யா- சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்கப் போட்டியில் அதிகம் பாதிக்கப்படப்போவது நம் நாட்டைப் போன்ற வளர்ந்து வரும் பின்தங்கிய நாடுகள் தான்.  இந்த ஏகாதிபத்திய கட்டமைப்பை உடைத்துக் கொண்டு தற்சார்பு பொருளாதாரம் கொண்ட நாடாக கட்டியமைப்பதே நம்முன் உள்ள தீர்வாக உள்ளது.

  • பரூக்

1 COMMENT

  1. நான் உங்கள் அடிமை என்று திரைப்படங்களின் பூதம் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
    அதே போல் தான் அமெரிக்கா என்ன உத்தரவிட்டாலும் நான் உங்கள் அடிமை, நீங்கள் கூறியதை அப்படியே நிறைவேற்றுகிறேன் என்று மண்டியிட்டு ஏற்றுக் கொள்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here